28.2.12

மாயம் செய்கிறாய் ஆதிரா!


ஆதிரா கோடம்பள்ளி. 

இந்த அற்புதமான இசைக்குச் சொந்தமான பெயர் இது. 
தன் மிக இளம் வயதிலேயே இசையோடு தன்னைப் பிணைத்துக்கொள்ள கேரளாவின் ப்ரபலங்களான கோடம்பள்ளி கோபாலன் பிள்ளை இவர் தாத்தாவாகவும் வித்வான் கோடம்பள்ளி கோவிந்தன் பிள்ளை இவர் அப்பாவாகவும் இருக்க வேண்டியதிருக்கிறது. 
அப்பா வாய்ப்பாட்டிலும் வீணையிலும் வல்லவர். 
வீட்டில் இறைந்து கிடக்கும் வாத்தியங்களும் லயம் ஸ்ருதியால் நிறைந்த தருணங்களும் ஆதிராவை வயலினுக்கு அருகில் கொண்டுவந்திருக்கின்றன. இவரின் குழந்தைப் பருவத்தில் இவர் விளையாடிய விருப்பமான பொம்மை வயலின் தான். 
9 வயதில் முதல் கச்சேரி கேரளாவில். 
புல்லாங்குழல் ரமணியிடமும் மேற்கத்திய சங்கீதத்தை வி.எஸ்.நரசிம்மனிடமும் கற்று வருகிறார்.

இவருடைய தாத்தாவின் மறைவுக்காக திருவனந்தபுரத்தில் இவர் செலுத்திய அஞ்சலி 32 மணி நேரம் நீடித்து அது ஒரு கின்னஸ் சாதனையானது. தொடர்ச்சியாக வெவ்வேறு ராகங்கள்-கிட்டத்தட்ட 900 ராகங்களுக்கு மேலாக வாசித்ததாக ஆதிரா சொல்கிறார். 
லிம்கா சாதனையும் புரிந்து மிக முக்கியமான இளம் சாதனையாளருக்கான விருதை இந்தியாவின் எல்லா முக்கியமான ஆளுமைகளிடமும் பெற்றிருக்கிறார். 
பிஸ்மில்லாஹ் ஃகான் தொடங்கி அம்ஜத் அலி ஃகான் வரைக்கும் அப்துல் க்லாம் தொடங்கி பாலமுரளி கிருஷ்ணா - இளையராஜா வரைக்கும் எல்லோர் கண்களையும் காதுகளையும் தொட்டிருக்கிறது ஆதிராவின் வயலினும் இசையும்.

இது கோழிக்கோடில் இடம்பெற்ற ஒரு இசை நிகழ்ச்சி. 
இவரின் சாதகம் எத்தனை அசுர சாதகம் என்பது அவர் வில்லையும் வயலினையும் எத்தனை அலட்சியமாகப் பிடித்திருக்கிறார் என்பது வயலின் வாசிக்கத் தெரிந்த கைகளுக்கும் வயலின் வாசிப்பவர்களை உற்று அவதானிக்கும் கண்களுக்கும் நிச்சயம் தெரியும்.

அவர் போகவிருக்கும் பாதை மரபு ரீதியான சாஸ்த்ரீய இசையின் பாதையல்ல. உலக இசை எனும் வடிவத்தில் எல்லா இசை வடிவங்களையும் இணைத்து புதிய அவதாரத்தோடு நம்மை உலுக்க இசையை மேலும் மேலும் கற்றுவருகிறார். 

மாயங்கள் செய் ஆதிரா. 
எங்கள் காதுகள் கொடுத்து வைத்தவை.

26.2.12

சிரிக்காமல் படிங்க பாப்போம்- ஒரு சவால்!எனக்குச் செல்லமாக கோபாலியேவிச் அல்லது கோபாலி.
அவரோடு 27 வருட நட்பு என்னைப் பலவிதங்களில் செழுமைப் படுத்தியிருக்கிறது.
ப்ரகாஷ் எனும் நதியின் இரு கரைகள் நாங்கள்.
அவரின் அளவு ஆளுமை உள்ள- பரந்த வாசிப்பனுபவம் உள்ள- அகந்தை அற்ற எழுத்தாளர்கள் வெகு சிலரே. 
எல்லோரையும் இவருக்குத் தெரியும். என்றாலும் இவரை எல்லோருக்கும் தெரியாது என்பதுதான் சமரசமற்ற இவர் எழுத்தின் பெருமை. 
ஒரு ஆழ்ந்த தேர்ந்த கவிஞர். 
மொழிபெயர்ப்பாளர். 
கீழைத் தத்துவங்களின் ஆர்வலர்.
சிறுகதாசிரியர்- 
இவருக்கும் எனக்கும் பல விஷயங்களில் ஒத்த அலைவரிசை என்பதால் பல கேள்விகளுக்கும் புதிர்களுக்குமான எங்கள் இருவரின் விடைகளும் ஒன்றாகவே இருக்கும். 
அவர் என் நண்பன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமையும் நான் அவருடைய நண்பன் என்று அவர் என்னைக் கைகாட்டுவதில் கர்வமும் உண்டு. 
எழுத்துக்காரத் தெரு என்ற கவிதைத் தொகுதி இவரின் கடந்த காலம்.
வளையல் வம்சம் என்ற அடுத்த கவிதைத் தொகுதி வரும் வாரம் வெளியாகிறது.
தஞ்சாவூர்க்கவிராயர் என்ற காலாண்டுச் சிற்றிதழ் வெளியிட்டு வருகிறார்.
எல்லாப் பத்திரிகைகளிலும் பல வருடங்களாக எழுதி வரும் கவிராயர்   
ஒரு நாவல் எழுதிவருகிறார். 

எங்களுக்குள் பொதுவான பல ஆர்வங்களில் ஹாஸ்யமும் ஒன்று. ஹாஸ்யம் கரை புரண்டோடும் எங்கள் உரையாடல்களில். 
நல்ல நகைச்சுவைக்கு இந்தச் சிறுகதை ஒரு உதாரணம். நகைச்சுவையாய் சிறுகதை எழுதுவதாய்ச் சொல்பவர்கள் இந்தக் கதையை படித்த பின் அந்த அபிப்ராயத்தை மாற்றிக் கொள்வார்கள்.

சென்னை வாசி.
என் நண்பனின் கைகளைச் சிரித்தபடிக் குலுக்குகிறேன்.

அவரின் வலைப்பூ "பெரிய எழுத்து". www.thanjavurkavirayar.blogspot.in

இனி சிறுகதை. 


-நான் ஜிப்பா தரித்த முதல் தினம்- 
-சிறுகதை- 
-தஞ்சாவூர்க்கவிராயர்


நான் ஜிப்பா தரித்த முதல் தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது.

25 வருஷங்களுக்கு முன்னால்- அன்று என் கவிதை “தாழம்பூ” இலக்கிய இதழில் பிரசுரமாகியிருந்தது. கருந்தட்டாங்குடியில் ஒரு கவிஞன் உதயமாகியிருப்பதை அறியாமல் உலகம் தன் பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருந்தது.

நான் தெற்கு வீதியில் இருந்த காதிக்ராஃப்டில் ஒரு கதர் ஜிப்பா ரூ. 50க்கு வாங்கினேன். டைப்ரைட்டிங் பரீட்சை ஃபீஸ் கட்ட அப்பா கொடுத்த பணம். வீட்டுக்கு வந்து முகம் அலம்பி, தலைசீவி, சந்தனப் பௌடர் பூசிக் கொண்டு, ஜிப்பாவைத் தலைவழியாக நுழைத்தபோது ஆனந்தமாக இருந்தது.

“ஐயோ! அண்ணா! இது என்ன வேஷம்?” என்றார்கள் என் தங்கைகள் கோரஸாக.

கண்ணாடியில் பார்த்தேன். அவர்கள் சொன்னது உண்மை போலத் தெரிந்தது.

ஏதோ நாடகக் கம்பெனியில் இருந்து தப்பித்து வந்தவன் போல்தான் இருந்தேன்! ஆனால் ஜிப்பா என்பது கவிஞர்களின் தேசிய உடை அல்லவா?

இதெல்லாம் இந்த மண்டூகங்களுக்கு எப்படிப் புரியும்?

நான் ஜிப்பாவை அணிந்து கொண்டு வேட்டியைத் தழையத் தழையக் கட்டிக்கொண்டு “அம்மா! காலைச் சிற்றுண்டி என்ன தயாரித்திருக்கிறாய்?” என்று கேட்டேன்.

“பழையது இருக்கு. சாப்பிடு போ” என்றாள் அம்மா, என் ஜிப்பாவால் பாதிக்கப்படாதவளாக.

“பழையமுது என்று சொல்” என்ற என்னை அம்மா பயத்துடன் பார்த்தாள்.

நான் ஜிப்பாவுடன் வெளியே கிளம்பினேன்.

எப்போதும் என்னைப் பார்த்து வாலாட்டும் தெருநாய் “வள்” என்றது. பிறகு முகத்தைப் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு “ஸாரி” என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டது.

குழாயடியில் பெண்கள் கூட்டம். அதில் பரிச்சயப்பட்ட ஒரு பெண் வாயைப் பொத்திக்கொண்டு சிரிப்பது போல் பட்டது. நடையை எட்டிப்போட்டேன்.

தெருமுனை இஸ்திரி வண்டிக்காரன், என்னைப் பார்த்து ஏதோ சொல்லவந்தது போல் தயங்கினான். ஆடைகளின் பெருமை தெரிந்தவன். அணிபவர்களின் அழகை உணர்பவன். அவன் சொன்னான்.

“ஸார்! உங்க ஜிப்பா பின்பக்கம் கசங்கியிருக்கு”.

நான் பதில் பேசாமல் உள்ளுக்குள் கத்தினேன்.

“முன்னே பாரடா முட்டாள்! கவிஞனின் ஜிப்பா கசங்கித்தான் இருக்கும்! க்ஞ்சி போட்டு விறைப்பா நிற்கும் கதர்ச்சட்டை போட நான் என்ன அரசியல்வாதியா?”.

தெருவைக் கடந்துவிடலாம். ஜிப்பாவைக் கடப்பது கஷ்டம் என்று தோன்றியது.

குதிரை கட்டித் தெருவில் நுழைந்தேன். அங்கேதான் என்னைக் ’கவிஞன்’ ஆக்கியவள் இருந்தாள். பச்சை பெயிண்ட் அடித்து கம்பி அடித்து வைத்த வீடு. பார்வையை விலக்கினேன். என் இதயம் அந்தக் கம்பிகளுக்கிடையே சிக்கிக் கொள்ளும்.

நெஞ்சை நிமிர்த்தி, வேஷ்டியின் ஒரு முனையைத் தூக்கிப் பிடித்தபடி நடந்தேன்.

பாரதி இப்படித்தான் நெஞ்சை விடைத்துக் கொண்டு நடப்பாராம்! பாரதிக்குச் சரி. எனக்கு? எனக்கே இந்த நடை விபரீதமாகப் பட்டது.

கிளை நூலகம். தாழம்பூ இங்கு வருகிறதா? என்று கேட்டுப் பார்க்கலாம். நூலகர் இனிய நண்பர். நேராக உள்ளே நுழைந்து “வணக்கம்” என்றேன்.

“இந்த ஜிப்பா உங்களுக்கு” அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பாகவே ‘ஹிண்டு’வுடன் ஒரு கிழம் குறுக்கிட்டது. கிளை நூலகர் கவிஞனைக் கைவிட்டு கிழவரிடம் கரிசனம் காட்டினார். அவருக்குத் தெரியும். கிழவர் பொல்லாதவர்.

"Sir, The indifferent attitude of librarian is totally condemnable and I hope that the authorities...' என்று நீளமாக ஒரு கடிதம் ஹிண்டுவுக்கு எழுதிப் போட்டுவிடுவார்.

கிழவர் அகன்றதும் “தாழம்பூ வருகிறதா?” என்றேன்.

“வெள்ளைப் பிள்ளையார் கோயில் பக்கம் சட்டிபானை விற்கிறார்கள் இல்லையா? அந்த இடத்துல ஒரு ஆள் விற்கிறான்!” என்றார்.

கிளைநூலகரின் இலக்கிய அறிவுக்காக ஒரு நிமிடம் துக்கம் அனுஷ்டித்துவிட்டு வெளியேறினேன்.

தாழம்பூ ஒரே பிரதி தபாலில் வந்தது. தஞ்சாவூரில் யார் கையிலும் இந்தப் பத்திரிக்கையைப் பார்த்ததில்லை. கீழராஜ வீதியில் ரப்பர் ஸ்டாம்ப் கடை வைத்திருக்கும் ப்ரகாஷ் படித்திருப்பார். அவரைச் சுற்றி இலக்கியக் கும்பல் ஒன்று எப்போதும் இருக்கும். ப்ரகாஷைத் தவிர இந்தப் பெரிய நகரத்தில் என்னைக் கவிஞனாக அங்கீகரிக்க ஒரு நாதியும் கிடையாது. நேராகக் கடையை நோக்கிச் சென்றேன். போகின்ற வழியில் டாக்டர் நரேந்திரன் க்ளினிக்கைப் பார்த்தேன். அவரும் ஒரு இலக்கிய ரசிகர். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி உள்ளது. அவரிடம் கட்டியைக் காண்பிப்பதா? கவிதையைக் காண்பிப்பதா?

அதற்குள் அவர் க்ளினிக்கைக் கடந்து விட்டேன்.

செல்லும் வழியெங்கும் நெடுக ஒரு மலையாளப் படத்தின் போஸ்டர்களை வரிசையாக ஒட்டியிருந்தார்கள். அதில் தெருவைப் பார்த்துத் திரும்பி நின்று கொண்டு ஒரு காமவெறி பிடித்த பெண் ( அப்படித்தான் போஸ்டர் சொன்னது) ‘ப்ரா’வின் ஹூக்கைக் கழற்றிக் கொண்டிருந்தாள். அவளுடைய இரண்டு மார்பகங்களும் போஸ்டரை முழுவதுமாக அடைத்துக்கொண்டிருந்தன. நிலவிலிருந்து விண்கலம் எடுத்து அனுப்பிய அபூர்வ ஃபோட்டோ போல தொப்புள் துல்லியமாக அச்சிடப்பட்டிருந்தது.

சாணித்தாளில் அச்சடித்த, யாருமே படிக்காத இலக்கியப் பத்திரிகையில் என் கவிதை. வழவழ போஸ்டரில் நடிகையின் தொப்புள். வயிறு எரிந்தது.

திருவையாறு போகிற நகரப் பேருந்தில் சன்னல் ஓரம் ஒரு தேவதை. சரியாகப் பார்ப்பதற்குள் பேருந்து என் முகத்தில் புகையைத் துப்பிவிட்டுப் போனது.

கணேஷ் பவனிலிருந்து நெய் தோசை வாசனை வந்தது. இப்போதைக்கு வாசனையை மட்டும்தான் சாப்பிட முடியும். கையில் மூன்று ரூபாய் எழுபத்தைந்து காசு இருந்தது.

கையிருப்பை வைத்து செல்வ நிலையைக் கணக்கிட்டால் சாலை ஓரப் பிச்சைக்காரன் என்னை விடப் பணக்காரன். ச்சே! ப்ரகாஷ் கடை களை கட்டியிருந்தது. கல்லாவில் ப்ரகாஷ் உட்கார்ந்திருந்தார். தாடி. வழுக்கை....சந்தேகமில்லை. தமிழ்நாட்டு சாக்ரடீஸ்தான்!

என்னைப் பார்த்து “தாழம்பூ படிச்சேன். உன் கவிதை பிரமாதம்” என்றார். இதுதான் ப்ரகாஷ். பக்கத்திலிருந்த ஒருவர் “ அண்ணே! நீங்க இப்படிச் சொல்லிச் சொல்லியே நாட்ல கவிஞனுங்க கூட்டம் பெருத்துப் போச்சுண்ணே” என்றார்.

எதோ நாய்களின் தொல்லை தாங்க முடியாமல் நகராட்சி அதிகாரியிடம் புகார் சொல்லும் அந்த தொனி கோபமூட்டியது.

“நீ எழுதின கவிதைய சொல்லிக் காட்டேன். எல்லோரும் கேட்கட்டும்!”

நான் தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னேன்.

“ஜில்லென்ற தொடுதலில்
உஷ்ணங்கள் ஜனிப்பது
என்ன 
ரசாயனம்!”
”மூணு வரியில் முப்பது வட மொழிச் சொற்களா?” என்றார் அருகிலிருந்த ஒரு தூய தமிழ் அன்பர்.

“பெரும்பிடுகு அண்டபகிரண்டக்கவிராயர்! என்னய்யா இது பெயர்? கவிதையை விடப் பெருசா இருக்கே!”

நான் பதிலே பேசவில்லை. புத்தர் மாதிரி பொத்தாம் பொதுவாகப் புன்னகைத்து வைத்தேன். பேசினால்தான் பிசகு. குட்டு வெளிப்பட்டு விடும். புன்னகை ஒரு புதிர் போல இருக்கும்.

என் கவிதையைப் பாராட்டி ப்ரகாஷ் எல்லோருக்கும் “டபுள் ஸெவன்” கூல்ட்ரிங் வாங்கிக் கொடுத்தார். எல்லோரும் டபுள் ஸெவனை ரசித்துச் சாப்பிட்டார்கள்.

வெயில் சுகமாகக் காய்ந்தது. நான் ப்ரகாஷுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினேன். எனக்குப் பின்னால் கடையிலிருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது. என் கவிதைக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்காது என்று மனசைத் தேற்றிக் கொண்டேன்.

நேராக பூங்காவுக்குச் சென்றேன்.

மரங்கள் தரையில் நிழல்கவிதை எழுதியபடி இருந்தன. கிளைகளில் குருவிகள் கவிதை பாடிக்கொண்டிருந்தன. காற்று ஒரு கவிதை போல வீசிக் கொண்டிருந்தது. ஜகத் சர்வம் கவிதை மயம்.

ஒரு பென்ச்சின் மீது படுத்தேன். மேலே மரக்கிளைகளில் காகங்கள். இந்தக் காக்கைகளின் அழகை எத்தனை பேர் ரசிக்கிறார்கள்? அடடா! அவற்றின் சிறகு கோதும் அழகு. கறுப்பே அழகு...

‘சொத்’தென்று என் மீது ஒரு காக்கை எச்சமிட்டுப் பறந்தது!

‘சீ, சனியனே!’ -காக்கைகளை விரட்டினேன்.

புதிய ஜிப்பா பாழாகி விட்டது. தோள்பட்டை ஓரம் பச்சையும் மஞ்சளுமாய் கோடாக வழிந்தது. சற்றுத் தள்ளி இருந்த செயற்கை நீரூற்றுத் தொட்டியில் ஜிப்பாவை அலசினேன்.

எங்கிருந்தோ ‘வாட்ச்மேன்’ முளைத்தான்.

“சார், இங்கே குளிக்கப் படாது”

“இல்லப்பா! சட்டைல காக்கா அசிங்கம் பண்ணிட்டுது. அதான். இதோ முடிச்சுட்டேன்..”

“அப்படியா சார்! தாராளமா அலசிக்குங்க...” -போகாமல் தலையைச் சொறிந்தான்.

“என்ன?”

“டீ குடிக்கக் காசு கொடு சார்!”

ஜிப்பாவுக்குள் கையை விட்டேன். அடக்கடவுளே! ரூபாய்த் தாள் நனைந்திருந்தது. சில்லறைக் காசுகளைக் கொடுத்தேன். போய்விட்டான்.

கவிஞனிடமே லஞ்சமா!

’ஈரமான ஜிப்பாவுடன் பூங்காவில் இப்படி நனைந்த கோழி மாதிரி உட்கார்ந்திருப்பது சந்தேகத்துக்கு இடமாகும். மரியாதையாகக் கிளம்பு’ என்று என் மனக்குறளி உத்தரவிட்டது.

திடீரென்று ஒரு பட்டாம் பூச்சிகள் கூட்டம் பூங்காவுக்குள் நுழைந்தது. -கல்லூரி மாணவிகள்! மந்தமடைந்திருந்த என் மூளையின் செல்கள் உயிர் பெற்று நியூரான்கள் கூச்சலிட்டன.

“உட்கார்!” -கூட்டம் என்னை நெருங்கியது.

கூட்டத்தில் ஒரு பெண் என்னைக் காட்டி, “ உதயா! அத பாருடி, உன் ஆளு” என்றாள். கடவுளே! அந்தக் கூட்டத்தில் உதயா இருப்பாள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. சட்டென்று எழுந்தேன்.

குரோட்டன்ஸ் ஓரமிருந்த முட்செடியில் என் ஜிப்பாவின் பக்கவாட்டுப் பை சிக்கி டபார் என்று மார்பு வரை கிழிந்தது. கண்ணிமைக்கும் நேரம். ஜிப்பா கிழிந்து தொங்குகிறது. தலை கலைந்து கிடக்கிறது. இந்த மாதிரி சமயங்களில் புன்னகைப்பது நிலைமையை மோசமாக்கும் என்று அறிவேன். ஆயினும் புன்னகைத்தேன்.

உதயா என்னை நெருங்கி ஒரே ஒரு சிறிய வாக்கியத்தை சொல்லிவிட்டுப் போனாள்.

“ஜிப்பாவும் உங்க மூஞ்சியும்!”.

சென்னையின் அதிநவீன ஆயத்த அங்காடியில் வண்ண வண்ணமாக ஜிப்பாக்கள் தொங்கின. என் மனைவி அவற்றை சுட்டிக்காட்டி “ஏதாவது எடுத்துக்குங்களேன்! உங்களுக்கு நல்லா இருக்கும்!” என்றாள். பிடிவாதமாக மறுத்துவிட்டேன். நான் ஜிப்பா தரித்த முதல் தினம் நினைவுக்கு வந்தது.

என் மனைவி பெயர் உதயா இல்லை.

நன்றி -ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2008-

24.2.12

வற்றாத குளம்


”நாம எங்க போறோம்”
”வெளீல போறோம்”
”வெளீல எங்க?”
:”குளத்துக்கு”
”ஏன் குளத்துக்கு?”
“ குளத்துல மீனைப் பாக்கலாம்”
“ஏன் மீனைப் பாக்கணும்?”
”சரி. வாத்தைப் பாப்போம்?”
“ஏன் வாத்தைப் பாக்கணும்?”
“ம்.ம்.வாத்தைப் பாத்தா ..
 சந்தோஷமா இருக்கும்”
”ஏன் சந்தோஷமா இருக்கணும்?”

சிரித்தபடி
குழந்தை
கேள்விகளைப் பிடித்து
மேலேறிக்கொண்டிருக்க
விழி பிதுங்கும்
பதில்களில்
ஆனந்தமாய்
சறுக்கி
கீழிறங்கிக் கொண்டிருந்தேன்
நான்.

23.2.12

வாலுடன் நடக்கும் மீன்எப்போதெல்லாம்
நீந்தமுடியவில்லையோ
அப்போதெல்லாம்
நடக்கும்.

எப்போதெல்லாம்
நடக்கமுடியவில்லையோ
அப்போதெல்லாம்
பறக்கும்

எப்போதெல்லாம்
எதுவும் முடியவில்லையோ
அப்போதெல்லாம
மகளின் கைக்ளுக்குள்
நுழைந்து

ஓய்வெடுத்துக்
கொண்டிருப்பதாக
அறிவுறுத்தப்பட்டு
ஓவியத்தில் தலைகீழாகத்
தொங்கும்

விதிகளை மாற்றி
வரையப் பட்ட
அந்தப் பரிதாப மீன்.

20.2.12

வாழ்வெனும் சங்கீதம்


எப்போதாவது உங்களை நீங்களே கேட்டுக்கொண்டதுண்டா- விலைமதிப்பில்லா வாழ்க்கை என்றால் என்னவென்பதை? 

இந்தப் பெண்ணின் பெயர் தோய் - கணவனால கைவிடப் பட்ட ஏழை.

இவள் கிட்டி- வீட்டை இழந்தவள்

இது மேக்- இளம்பிள்ளை வாதத்தால் பீடிக்கப்பட்டவன்.

டோர் - ஒரு அரைகுறைத் திருடன்.

இவர்களுக்கு ஒரே அம்மா.

அந்த அம்மா தோய்

அவர்களைத் தெருக்களில் இருந்து தத்தெடுத்துக்கொண்டாள்.

அவர்களைக் கவனித்துக்கொண்டாள்

தோய்க்குப் புற்று நோய்.

மருத்துவர்கள் இரண்டு வருஷங்களுக்கு மேல் அவள் வாழ்வது சாத்தியமில்லை என்று கைவிரிக்க-

அவளோ-

ஹா! எத்தனை அதிர்ஷ்டசாலி நான். 

அந்த இரண்டு வருஷங்களில் நான் செய்ய எவ்வள்வோ இருக்கிறது

என்றாள்.

அவள் அக்குழந்தைகளுக்கு

விலைமதிப்பிலா வாழ்க்கை என்பது

தனவந்தர்களுடையதோ-

ப்ரபலமானவர்களுடையதோ-

நீண்ட காலம் வாழ்பவர்களுடையதோ அல்ல.

பிறரை நாம் எப்படி மதிக்கிறோம் எனும் 

அடிநாதமே வாழ்க்கை

என்பதைக் கற்பித்தாள்.

தானோன்ச்சாய் சார்ஸ்ரிவிசாய் (Thanonchai Sorsriwichai) எனும் இயக்குனரால் இயக்கப்பட்டு ஒகில்வி மற்றும் மேதெர் தாய்லாந்தால் (Ogilvy & Mather, Thailand)  தயாரிக்கப்பட்டு ஆசிய ஸ்பைக்ஸ் விருது விழாவில் ( Spikes Asia Awards) க்ராண்ட் ப்ரிக்ஸ் விருதையும் ஆட்ஃபெஸ்ட் விழாவில் ( Adfest ) தங்கத்தையும் உலுக்கிய மென்மையான மற்றுமொரு விளம்பரம் இது.

வாழ்வின் மென்மையான அர்த்தமுள்ள சாரத்தை வடித்தெடுக்கும் கலையுள்ளம் கொண்ட தாய்லாந்தின் விளம்பரக் குழுவினரின் பாதங்களுக்கு என் முத்தங்கள். 

17.2.12

மௌனத்தின் மொழி.

தாய்லாந்தின் மற்றொரு அற்புதமான விளம்பரம். அன்பின் ஆழத்தை வெகு காலமாகப் பேசி வரும் இம்மாதிரியான விளம்பரங்களின் ஆஸ்தான சிருஷ்டிகர்த்தர்கள் தாய்லாந்தின் கலைஞர்கள் மட்டுமே.

இதற்கு முன்பும் இதே மாதிரியான விளம்பரங்களைத் தொகுத்து ஒரு இடுகையில் எழுதியிருந்தேன் அன்-பூ என்னும் தலைப்பிலும் விளம்பர போதை எனும் இடுகையிலும்.

இந்த விளம்பரத்தின் பலமே உரையாடலை மறுத்து இசையின் பின்னணியில் காட்சியாய் விரியும் உணர்ச்சிக் குவியல்கள்தான்.

மறுபடியும் மறுபடியும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

16.2.12

மொழியின் வேலி


அவரவரின்
மொழியில்
உருப்பெறுகிறது
கவிதை.

சிலருக்குக்
கோர்க்கப்பட்ட
எழுத்துக்களின்
பள்ள்ங்களில்
பருகக் காத்திருக்கிறது
கவிதையின் லாகிரி.

வடிவமைக்கும்
சவப்பெட்டியிலேயோ
ஆடைகளின் 
பின்னல்களிலேயோ
பிறருக்கு.

அசையும் காற்றின்
வெவ்வேறு
கோர்வைகளில்
உயிருறுகிறது இசை.

உனக்கு
வாய்க்கிறது
கடவுளின் சங்கீதம்.

எனக்குக்
கீரைவிற்பவளின் குரலாகவோ.
வானொலி அறிவிப்பாளனின்
விடாத பேச்சாகவோ.

அதிர்வின் 
ஒவ்வொரு ஜதியிலும்
வடிவுறுகிறது நடனம்.

அவளுக்கு
அடவிலும் முத்திரையிலும்.

இவனுக்கு
சாலைக்காவலனின்
லாவகத்திலேயோ.
சாணைக்காரனின்
கூரேற்றும் இயக்கத்திலேயோ.

அவரவரின்
மொழி அவரவர்க்கு.

அவரவரின் வேலியும்.

10.2.12

யாத்ரா- II - எருமேலியில் யானை


யாத்ரா-II ன் தொடர்ச்சியான இடுகைகளை மனதில் எழுதி முடித்துவிட்டேன். ஆனால் உட்கார்ந்து கம்ப்யூட்டரில் எழுத முடியாத அளவு வேலைகள் ஒரு வாரமாக.

எருமேலியை அடைந்து வர்ணங்களை உடலில் பூசிக்கொண்டு பேட்டை துள்ளிக் குதிக்கக் கிளம்பினோம். எருமேலியில் வாவர் வழிபாடு என்பது பிற்காலத்தில் செருகப் பட்ட ஒரு இடைச் செருகல் என்பதை மோகன்ஜி மூளையில் செருகினார். எல்லாப் புறமும் மூடப்பட்டு கண்ணாடிக் கதவுகளுடன் இருந்த மசூதியைச் சுற்றி எல்லோரும் வலம் வந்தார்கள்.


மசூதியை வலம் வந்ததும் மசூதியின் வாயிலில் காவலர் போல் நின்று கொண்டிருந்தவரிடம் ப்ரசாதம் கேட்டதும்தான் ரசனையின் உச்சம். அந்த நபரும் ஒரு மரப் பலகையில் ச்ந்தனத்தைக் கரைத்து வைத்து அதை எடுத்துக் கொள்ளுமாறு கையைக் காட்டிவிட்டு தேமேயென்று ஒதுங்கிக்கொண்டார். மசூதியின் பின்புறம் சிதறு தேங்காய் உடைக்க தப்பான தமிழில் அறிவிக்க எல்லோரும் தேங்காய் உடைத்துக் கொண்டிருந்தார்கள்.

பக்தர்கள் ஆக்ரோஷமான கோஷங்களை எழுப்பி உள்ளே நுழைந்தபின் மூடப்பட்ட மசூதியின் உட்புறம் தரைப் பரப்பில் பாய்கள் விரிக்கப்பட்டு ட்யூப் லைட்கள் வெளிச்சம் போட உருவங்கள் வேறேதும் இல்லாத வெறுமையை விழுங்கி சமனப் படுத்திக் கொண்டார்கள் . இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கும் இந்துக்களின் வழிபாட்டுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் தென்பட்ட விளிம்பில் நான் கவனமாக மசூதியைச் சுற்றி வந்தேன்.


வெளியில் வந்தால் தெருவையடைத்து அம்பலப்புழா மற்றும் ஆலங்காட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெற்றபடி இருந்தது. மகர விளக்கு வழிபாட்டில் ஒவ்வொரு வருடமும் இவர்களின் பாரம்பர்யமான பேட்டை துள்ளும் நிகழ்ச்சியோடு பேட்டை துள்ளல் முடிவுக்கு வரும். உருவத்தில் பெரிய மூன்று யானைகள் முகபடாத்துடன் அலங்கரிக்கப்பட்டு ஐயப்பனின் திருஉருவப் படத்துடன் பவனி வர முன்னால் வெள்ளை வேட்டியுடன் அம்பலப்புழா இளைஞர்கள் செண்டை துந்துபி முழங்க ஒத்த ஜதியுடன் நடனமும் பேட்டை துள்ளலுமாய் வந்தார்கள். அற்புதமான நடனம். அருமையான ஒத்திசைவு.


நானும் நடனமாடிக் கொண்டிருந்தேன். யானைகளும் ஒரே மாதிரியான அசைவுடன் வருவது கண்டு குனிந்து பார்த்தேன். கொடுமை. கால்களுக்கு சங்கிலி போட்டுக் கட்டியிருந்தார்கள். சங்கிலியின் குறைந்த இடைவெளியில் யானை தத்தித் தத்தி நடந்துகொண்டிருந்தது அந்த நிகழ்ச்சியையே ஒதுக்க வைத்தது.

வருத்தமும் வண்ணமும் பூசிய முகத்துடன் மணிமாலா ஆற்றில் குளிக்கச் சென்றேன் நண்பர்களுடன். அங்கு குளித்த பின் இருமுடியுடன் எரிமேலி சாஸ்தாவை வணங்கிவிட்டு எருமேலியிலிருந்து 48 மைல் தொலைவு மலைப் ப்ரதேசங்களைக் கடந்து பம்பையை அடைய வேண்டும். எங்கள் குழுவோடு எரிமேலியிலிருந்து கிளம்ப யத்தனித்துக் கொண்டிருந்தோம்.

இந்த முறை எருமேலியில் அதிக தமிழகப் பதிவு கொண்ட பேருந்துகளோ கார்களோ இல்லையென அங்குள்ள வியாபாரிகள் சொன்னார்கள். ஒன்றிரண்டு மினி வேன்கள் நின்று கொண்டிருக்க கைகளில் கழிகளுடன் வண்டிகளை முரட்டுத்தனமாக தட்டியபடி நுழைவு வரியை மிரட்டலான குரலில் கேட்டுக்கொண்டிருந்தார்கள் எரிமேலி நகராட்சியின் இளைஞர்கள். முல்லைபெரியாறு எததனை தூரம் பொதுஜனங்களின் மனதில் உண்மை நிலை தெரியாது துவேஷத்தை வளர்த்திருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது.  

                             

சபரிமலை யாத்திரையின் கடுமையான உடற்சோர்வூட்டும் அனுபவம் கரிம்லை ஏற்றமும் இறக்கமும். மேலும் மேலும் ஏற்றம் தரும் ஏற்றம், இரக்கம் இல்லாத இறக்கம். இருந்த பெரிய பாதையின் வழியே பயணிக்க முடிவான 60 சொச்சம் பேர்களும் தனித் தனியே 6 சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 6 தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். குழுக்கள் தனித் தனியே கிளம்பின. கிளம்பியது முதல் வேறெதுவும் தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாது ஐயப்பனை மட்டுமே மனதில் நினைத்து அவருடைய நாமங்களைச் சொல்லியபடி நடக்கத் துவங்கினோம். மாலை விடைபெற்று இருள் வரவேற்றது.

9.2.12

எப்படிக் கார் ஓட்டுவது?

ஒரு காரை ஓட்டுவது பற்றி
அவனும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்.

சாலை விதிகளை
மதிப்பது குறித்தும்-

வேகக் கட்டுப்பாடு
குறித்தும்-

எரிபொருள் சிக்கனம்
பற்றியும்-

நீள் அரை வட்டமடிக்காமல்
திருப்புவது பற்றியும்-

எதிரில் வருபவனின்
மனநிலை குறித்தும்-

தேவையான இடங்களிலும் 
ஒலி எழுப்பாமலேயே
சேருமிடம் அடைதல்
பற்றியும்-

பேச்சு வளர்ந்தது.

உயரத்தையெட்ட
விசையை மாற்றுதல்
பற்றியும்-

நெருக்கடி மிகும்போது
தனக்கான சந்தர்ப்பம்
வரும்வரை காத்திருப்பது
பற்றியும் தொடர்ந்தது.

மனதுக்குள் ஓடிக்
கொண்டிருந்த காரை
நிறுத்தி இறங்கியபடியே-

ஒரே பாதையானாலும் 
ஓட்டத் துவங்கிய 
ஒவ்வொருவருக்கும்
ஒரு பாதையை
உருவாக்குகிறது பயணம்
என்றேன்.

இயங்குவதில்தான்
இருக்கிறது எல்லா
சூட்சுமங்களும் என்றான்.

7.2.12

கூவல்கள் அற்ற காலம்


எங்கு சங்கீதம்
நிம்மதியின் பள்ளங்களை
நிரப்பத் தவறியதோ
அங்கு ஒருபோதும்
காற்று வீசாதிருக்கட்டும்.

எந்த வனத்தில்
பறவையின் கூவல்கள்
தேய்ந்து நிர்மூலமாகியதோ
அங்கு சூரியன்
நிரந்தரமாய்
உதிக்காதிருக்கட்டும்.

எந்த போதனையின்
படிக்கட்டுக்கள்
அறியாமையின் வாயிலில்
கொண்டு சேர்க்கிறதோ
அந்த வாயில்களில்
புகுந்து
வனவிலங்குகள்
ஓலமிடட்டும்.

எந்தத் தேவாலயங்களின்
சுவர்கள் பேராசையால்
கட்டப் படுகிறதோ
அவற்றின் கூரை
மூடப்பட முடியாது அழியட்டும்.

எந்தக் கவிதையின் மொழி
கூரற்ற வாளிடம்
தோற்றுத் தலைகுனிகிறதோ-
அந்த மொழி
சுருண்டு தொங்கும்
கழிவறைக் காகிதமாய்
மாறட்டும்.

எந்தக் கள்வர்கள்
வியர்வையின் பொற்காசுகளைத்
திருடத் துணிவரோ
அவர்கள் நிரந்தரமாகப்
பசியறியாதிருக்கட்டும்.

6.2.12

நூறு வார்த்தைகளுக்கு மிகாமல்.

தெருவில்
பள்ளம் தோண்டி
தன் தோழர்களுடன்
கிட்டிப்புள்
ஆடிக்கொண்டிருந்தான்
பெரியவன்.

ஆற்றங்கரையில்
விறைக்கும் நீரில்
நீந்திக் குளித்ததோடு
தன் மகனையும்
திக்குமுக்காட்டிக்
குளிக்க வைத்தார்
அப்பா.

புளிக்கோதும்
வற்றலின் காம்பும் ஆய்ந்து
வீடெல்லாம் தும்மவிட்டு
பல்லாங்குழி
ஆடிக்கொண்டிருந்தாள்
பாட்டி.

துணிப்பைகள் 
ஒருகையிலும்
எண்ணைத் தூக்குவாளி
மற்றொரு கையிலும்
மாட்டி சைக்கிள்
ஓட்டிவந்தார்
தாத்தா.

சுற்றிலும் குழந்தைகள்
அமர்ந்திருக்க
கற்சட்டியில் பிசைந்த
பழைய சோற்றைக்
கைகளில் இட்டாள்
பெரியத்தை.

காட்சிப்பிழை 
(அல்லது)
கடந்த காலம்
குறித்து 
நூறு வார்த்தைகளுக்குள்
எழுதும்படிக்
கேட்டுக்கொண்ட
கவிதை
இத்துடன்
நிறைவடைந்தது.

துறவின் புன்னகை.இந்தக் கவிதை
துறத்தல் பற்றியல்ல
துறந்த பின்னும்
வாழ்தல் பற்றி.

சுமையைத் துறத்தலிலும்
சுமையைப் பகிர்தல்
பற்றி.

உறவுகளைக் கடத்தலன்றி
உறவுகளில் உறைதல்
பற்றி.

நிரம்பாத பள்ளங்கள்
பற்றியல்ல.
மேடுகளைக் கரைத்தல்
பற்றி.

அறைகளின் நிசப்தத்தை விடவும்
இலையசையும் வெளி பற்றி.

முடங்குதலின் சோர்வல்ல
கால்ப்பந்தாட்டத்தின் வியர்வை பற்றி.

துறவின் கேள்விகள் பற்றியல்ல
துறவியின் புன்னகை பற்றி.

விடைபெறுதலின் துயரம்
என்பதனினும்
வரவேற்றலின் மேன்மை
பற்றி.

3.2.12

அமெரிக்கா போகும் ரயில்


ரயில்
எந்த ஊருக்குப்
போகுது?

அமெரிக்காவுக்கு.
நீ வரியா?

டிக்கெட் எவ்ளோ?

நெறைய ரூவா.

எப்போ போகும்?

ம்ம்..நேத்திக்கு.

சரி. எனக்கு டிக்கெட் தா

கூழாங்கல்லை
நீட்டியது குழந்தை.

இலையைக் கிழித்துக்
கொடுத்தது
மற்றது.

ரயில் புறப்பட்டது
அமெரிக்காவுக்கு.

அமெரிக்கா
போய்க்கொண்டிருக்கும்
பாதி வழியிலேயே
அம்மா கூப்பிட்டாள்
சாப்பிட.

’ரயில் இங்கியே
நிக்கட்டும்.
சாப்ட்டு வந்து
அமெரிக்கா போலாம்’.

கூழாங்கல்லோடும்
இலையோடும்
குட்டிகள்
ஓடிப் போக

ஏக்கத்துடன்
காத்து நின்றது
ரயிலும்
அமெரிக்காவும்.

2.2.12

யாத்ரா - II - சாப்பாட் முடிஞ்சிரிச்

சூர்யனின் கணக்கில் அடங்காத அற்புதமான மற்றொரு அதிகாலை. கீழே இணைத்துள்ள வீடியோவை சொடுக்கிவிட்டுப் படிப்பீர்களானால் சோட்டாணிக்கரா பகவதி கோயிலுக்குள் நீங்கள் நுழைவீர்கள்.

இதோ சோட்டாணிக்கரா பகவதியை தரிசனம் செய்ய கோயிலின் வெளிப் ப்ரஹாரத்திற்குள் நுழைகிறேன். கோயிலைச் சுற்றி ஏராளமான பக்தர்கள் அப்போதுதான் குளித்த குளுமையுடன் நெற்றியில் மணக்கும் சந்தனத்துடன் பரவசத்துடன் கடந்து கொண்டிருந்தார்கள்.  பகவதியை தினமும் தரிசிக்கும் இரண்டு அணில் பிள்ளைகள் நெடிதுயர்ந்த ஓர் மரத்தில் காலை உணவுக்குப் பின் துள்ளிக் குதித்தபடியிருந்தன.

நானும் மோகன்ஜியும் கோயிலின் ப்ரஹாரங்களில் எழுதப்பட்டிருந்த அறிவிப்புப் பலகைகளின் தமிழில் நனைந்து கொண்டிருந்தோம். எங்கள் வசம் காமிரா இல்லாமல் போனதுக்கு வருந்தினோம். அத்தனை கற்பனையுடன் தப்பான தமிழில் எத்தனை எத்தனை அறிவிப்புக்கள்? மொழியற்றுப் போன ப்ரதேசங்களில் குழந்தையின் மழலை போல இருந்தது இந்த அறிவிப்புகள். என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை சிரித்துக்கொண்டே யூகித்துவிடலாம். 

இவ்விடம் சிருநீர் தெளிக்காதை.

இஙகே குப்பை பொடக் குடாத்.

சாப்பாட் முடிஞ்சிரிச்.

ஹிந்தியின் இலக்கணத்தைத் தமிழுக்குப் பாய்ச்சி திக்குமுக்காட வைத்தார்கள்.இகரத்துக்கும் உகரத்துக்கும் கொக்கி போட்டு மாற்றியிருந்தார்கள். உதாரணத்துக்கு கூ வை எழுத க் போட்டு மேலே கொக்கி போட்டு சுழித்திருந்தார்கள். ஒரு அறிவிப்பை எங்களால் வாசிக்கவே முடியவில்லை. 

”ஸ்ரீறீக்ஷ்ஃண்ட்ப்ஹ்ச்ஜ்குஜ்ஜ்ந்லொஇந்” இப்படி எழுதியிருந்தால் எப்படி வாசிப்பீர்கள்? ஆகவே சிறிது முயற்சி சிறிது போராட்டத்திற்குப் பிறகு நானும் மோகன்ஜியும் அந்தப் பலகையை வாசிக்காமல் ரசித்துவிட்டுத் தாண்டினோம். 

கொஞ்சம் தள்ளி முற்றுப்புள்ளியில் கூட பிழையில்லாத ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தோம். ஆச்சர்யம் ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. விளம்பரம் ஜோசியத்தைப் பற்றியது. தமிழ் பேசாத மாநிலங்களில் மூன்று இடங்களில் கண்டிப்பாக தமிழ் தப்பாகவேனும் உபயோகப்படுத்துவதை உன்னிப்பாக வாழ்க்கையை உற்றுநோக்கும் என் போன்ற வேலையற்றவர்கள் கவனித்திருக்கக்கூடும். கள்-சாராயக் கடை, உண்டியல், கழிப்பறை.

திகட்டும் அளவுக்கு விளம்பரப் பலகைகள் படித்து முடித்துவிட்டு ( காமிரா யார் வசமும் இல்லை; சோட்டானிக்கராவிடம் வருத்தம் சொன்னேன்) கொஞ்சமாவது பகவதியின் அருளைப் பெறலாம் என்று முடிவு செய்துவிட்டு தரிசன வரிசையில் நின்றோம். நடை சாத்தப் பட்டிருந்தது. 
வரிசையில் நிற்கும் அந்த வெயிலுரைக்காத மென்காலையில் ஒவ்வொரு பாடல்களாகப் பாடிக்கொண்டிருந்தோம். கற்பக வல்லி நின், ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி, சின்னஞ் சிறு பெண் போலே, இன்னமும் திருவுள்ளமே இரங்காதா? என்று தொடங்கி சில மலையாளப் பாடல்களுடன் பயணம் தொடர்ந்தது. அப்போதும் நடை திறந்து பகவதி எங்களுக்கு தரிசனம் கொடுத்தாளில்லை. இன்னமும் பாரா முகம் ஏனம்மா? பாடத் துவங்கியவுடன் நடை திறந்தது என்று சொன்னால் நம்புங்கள். அற்புதமான சூழல். பகவதியைத் தொழுது சுற்றி வந்தோம்.கைகளில் சொத்தென்று விழும் இலையில் பொதிந்த ப்ரஸாதங்கள் கேரளக் கோயில்களின் அழகு. கேரளக் கோயில்களில் போன முறை தரிசித்தபோது இதுவே எனக்குக் கோபத்தை உண்டுபண்ணியது. பௌர்ணமி நெருங்கும் வேளை. எப்படி மாறிவிட்டேன் பாருங்கள்?

ஒவ்வொரு பயணத்திலும் குழுவாகப் போனால் சில சௌகர்யங்களும் பல கஷ்டங்களும் இருக்கும். ஒவ்வொருத்தருக்கும் நின்று போக ஆசுவாசப் படுத்திக்கொள்ள சில இடங்கள் தேவையாய் இருக்கும். கவிதையின் முடிச்சு பிடிபடும் இடமும் அவசரமாய் ஒரு தேநீர் பருக விரும்பும் இடமும் ஒன்றாய் அமைதலோ இளைப்பாற வழியின்றிக் கடந்து போதலோ நேரக்கூடும். சில இடங்களில் கவிதை எழுத முடியாமலும் சில இடங்களில் தேநீர் பருக முடியாமலும் போயிற்று.

மோகன்ஜியின் அண்மை ஒரு பெரிய புதையல். எத்தனை ஒருமிப்பு அவருக்கும் எனக்கும் எனப் பல இடங்களில் தோன்றியது. நல்ல பொசுக்கும் மணலில் காலில் செருப்பின்றி நடந்துவிட்டு ஒற்றைப் பனைநிழலில் ஓடிவந்து நின்று ஒரு பாதத்தின் மீது மறுபாதம் பதித்து சூடு தணித்துக் கொள்வதாய் இருந்த்து அவரின் அனுபவ நிழல்.. அவரின் கடந்த காலமாய் நானிருப்பதாகவும் என் எதிர்காலமாய் அவர் இருப்பதாகவும் நான் உணர்ந்தேன். என் மனதில் வரைந்து கொண்டிருந்த பல சித்திரங்களின் பொருத்தமான வண்ணங்களில் மிகச் சரியாக பல நேரங்களில் அவரின் தூரிகை தோய்ந்திருந்தது.

சோட்டாணிக்கரா பகவதியை விட்டுவிட்டுப் புறப்பட்ட போது கண்ணில் பட்டது மீண்டும் அந்த சாப்பாட் முடிஞ்சிரிச்.

1.2.12

தரங்கம்பாடியில் கி.பி.1622ல் ஜான் ஓலஃப்ஸன்


1620 ஆம் ஆண்டு தஞ்சாவூரை ஆண்ட விஜயரகுநாத நாயக்கர் டென்மார்க்கின் மன்னர் நான்காவது க்றிஸ்டின் என்பவருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டார். 
அந்த ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் ஒரு கோட்டையை அமைத்துக் கொண்டு வாணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது தரங்கம்பாடி சுற்றுலா வந்த ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஜான் ஓலாஃப்ஸன் தரங்கம்பாடி கோயிலில் நடைபெற்ற திருவிழா பற்றியும் அங்கு நிலவிய சட்டம் ஒழுங்கு பற்றியும் நேராகப் பார்த்து ஒரு குறிப்பு எழுதிவைத்துள்ளார். 
1593ம் ஆண்டு ஐஸ்லாந்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜான் டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு படிக்கவும் தொழில் செய்யவும் வந்தார். அந்த நாட்டு மன்னரின் பீரங்கிச் சிப்பாயாக பணியில் அமர்ந்தார். 1618ம் ஆண்டு டென்மார்க் மன்னர் க்றிஸ்டின் இந்தியாவுக்கு "ஒவ்கிட்" என்பவரை வர்த்தகத்துக்கு அனுப்பியபோது ஓலஃப்ஸனும் உடன் செல்லவிரும்பினார். ஆனால் அதற்கு மன்னர் அனுமதி அளிக்கவில்லை. அதன் பின்னர் தஞ்சாவூருக்கும் டென்மார்க்கும் 1620ல் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுக்கு பீரங்கிச் சிப்பாயாக சென்றுவர ஜான் ஓலஃப்ஸனுக்கு மன்னர் அனுமதி கொடுத்தார். இவரது கப்பல் டென்மார்கிலிருந்து தரங்கம்பாடி வந்து சேர ஏழு மாதங்கள் பிடித்தன. அது அக்காலத்தில் மிகவும் விரைவான பயணமாக கருதப்பட்டது. தரங்கம்பாடியில் இவர் ஒன்றரை ஆண்டுகள் பீரங்கிச் சிப்பாயாக பணிபுரிந்தார். 
இவருடைய குறிப்புக்களில் எத்தனை நேர்மையும் ஆச்சர்யமும் தெளிவும் இருந்திருக்கிறது? சுமார் 390 வருடங்களுக்கு முந்தைய நமது நாகரீகமும் கலாச்சாரமும் எத்தனை மேன்மையுடன் விளங்கின என்பதற்கு இவருடைய பயணக் குறிப்புகள் சாட்சியாக இருந்திருக்கின்றன.
இனி நேரடியாக ஜானின் மொழிக்குச் செல்வோம்.

”இங்குள்ளவர்கள் (இந்துக்கள்) தமது விழாக்களைப் பெரும்பாலும் இரவில் கொண்டாடுகிறார்கள். நான் ஒரு நாள் இரவு தரங்கம்பாடி கோட்டையில் பீரங்கிக் கொத்தளத்தில் நின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து பார்த்தால் எதிரே அந்தக் கோயில் தெரியும்.
தரங்கம்பாடி கோயில் ஒரு சதுரமான உயர்ந்த கட்டிடத்தைக் (விமானத்தை) கொண்டது. அதைச் சுற்றிலும் உயர்ந்த சுற்று சுவர்கள் உள்ளன. அதன் நடுவில் ஒரு பரந்த முற்றம் உண்டு. 

அங்கு விவரிக்க முடியாத பயங்கரமான சிற்பக்காட்சிகள் உண்டு. அந்தக் கோயிலின் உள்ளே மிருக வடிவில் ஆறு சிற்பங்கள் இருந்தன. கோயிலின் உள்பகுதியில் தங்கத்தாலான மிகவும் அழகான பீடம் ஒன்றில் மூன்று தெய்வங்களின் உருவங்கள் இருந்தன. இந்த முக்கியமான மூன்று தெய்வங்களும் தான் ஆண்டுக்கு ஒரு முறை வீதிகளில் தேரில் ஏற்றி உலாவாகக் கொண்டு வருகிறார்கள். 


இத்தேரை வீதிகளில் இழுத்துச் செல்கிறார்கள். முப்பது அல்லது நாற்பது கொட்டு வாசிப்பவர்களும், மூன்று நான்கு கொம்பு வாசிப்பவர்களும் தங்கள் கருவிகளை வாசித்துக் கொண்டு வருகிறார்கள். தளியார் என்ற பல வீரர்களும் இதன் முன் செல்கிறார்கள். அன்று கோயில் பசுக்களை எல்லாம் சுதந்திரமாக தெருவில் அவிழ்த்து விட்டு விடுகிறார்கள்.
நான் அன்றிரவு கோட்டை மேல் இருந்து கண்ட காட்சி இதுதான். தீவட்டி வெளிச்சத்தில் காட்சி நன்றாகத் தெரிந்தது. அவர்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவது தெரிந்தது. 

கோயிலின் உள்ளே மற்ற நேரங்களில் தொங்கவிட்டு வைத்திருந்த அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து இவர்கள் ஆடிக் கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. 


ஒரு நடிகர் மீன்போல் வேடம் போட்டுக் கொண்டு எதையோ விழுங்குவது போல் ஆடிக் கொண்டு வந்தார். இது ஏதோ ஒரு கதையைச் சித்தரிக்கிறது என்று தெரிந்தது.  பின்னர் தேவதாசிகள் அத்தெய்வங்கள் முன் நாட்டியம் ஆடுவதைப் பார்த்தேன்.


நான் அங்கிருந்த ஓர் உள்ளூர் இந்துவிடம் ”ஏன் வாய்பேசாத சிலையைப் போய் நீங்கள் கடவுள் என வணங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் ”எங்கள் கடவுளை நாங்கள் கண்ணால் காண முடிகிறது. உங்கள் கடவுளை நீங்கள் பார்க்கக் கூட முடியாதே!” என்று கூறினார். 
ஆனால் இங்கு ஒன்றுமட்டும் மிகவும் வியப்புடன் கூறத்தான் வேண்டும். இவர்கள் (இந்துக்கள்) நம் சமயத்தை பின்பற்றாததால் இருளில் மூழ்கியிருப்பவர்கள் என நாம் நம்புகிறோம். நாமோ ஒளியைக் கண்டவர்கள். இருப்பினும் இவர்களைக் காட்டிலும் நாம் ஏன் மேன்மையாக நடந்து கொள்வதில்லை. கூறப்போனால் மிகவும் கீழ்த்தரமாகத் தான் நடந்து கொள்கிறோம். 

இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பெரும்பாலும் நிலைத்து நிற்கிறது. வணிகர்கள் சரியான எடைகளையும் அளவைகளையும் தான் பயன்படுத்துகிறார்கள். மக்கள் கெட்ட பழக்கங்களை வெறுக்கிறார்கள். 


நம் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் அளவுக்கு மீறி உண்பது, ஏராளமாகக் குடிப்பது போன்ற பழக்கங்கள் இங்கு இல்லை. தரங்கம்பாடியில் உள்ள இந்திய மக்கள் யாராவது குடிகாரனைப் பார்த்து விட்டால் தலையை ஆட்டி மார்பில் அடித்துக் கொண்டு அவன் மீது காறித் துப்புவார்கள். இவனைப் பேய் பிடித்திருக்கிறது என்று கூறுவார்கள்.
டேனிஷ் போர்ட் என்று பெயர் பெற்ற தரங்கம்பாடி கோட்டை மாளிகை மிகவும் அழகான கட்டிடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்லால் ஆன இந்தக் கட்டிடத்தை இந்தியக் கொத்தனார்கள் தான் கட்டினார்கள். இவர்கள் நம் ஐரோப்பிய கட்டு வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும் தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ்கிறார்கள். 

இந்த கோட்டையின் நடுவில் எழிலான ஒரு 'சர்ச்' ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதையும் இந்தியக் கொத்தனார்கள் தான் கட்டினார்கள். நாம் கொடுத்த டேனிஷ் கட்டிடக்கலை சார்ந்த வரைபடத்தினைப் பின்பற்றி இவர்கள் கட்டியிருக்கிறார்கள்" 

எனக்குத் தெரிந்த வரையில் இவருடைய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. தொல்பொருள் ஆய்வுகளின் முன்னோடி டாக்டர். இரா. நாகசாமியின் சுவாரஸ்யமான அறிமுகத்தால் பெற்ற போதையில் "Memoirs of Jon Olafsson" என்ற இந்தப் பயண நூலை எல்லா புத்தக நிலையங்களிலும் விசாரித்து விட்டேன். யாரிடமும் இல்லை. பல பழைய புத்தகக் கடைகளின் கதவுகளையும் தட்டிவிட்டேன். இதைப் படிக்கும் யாரிடமாவது இருக்குமானால் ப்ளீஸ் தாங்களேன். மொழிபெயர்த்துவிட்டு தந்துவிடுகிறேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...