31.5.11

மற்றுமொரு நல்ல கவிதை-சன்னல் வழி உலகம்

தமிழின் சிந்தனையிலும் மொழியிலும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மற்றொரு கவிஞர் திருநாவுக்கரசு பழனிசாமி.
 
மே மாதத்தில் நான் வாசித்த வரை எழுதப்பட்ட மிகச் சிறப்பான கவிதைகளுள் சன்னல் வழி உலகம்  மிக முக்கியமானதாகப் படுகிறது. 
 
ஒரு சாளரத்தின் வழியே அசையாமல் காட்சிகளைக் காண்பதற்கு ஒரு மனிதன் நோயாளியாக இருந்தால் மட்டுமே முடியுமென்கிற அளவிற்கு வெறுமனே ஒரு வெளியைச் சன்னலூடே பார்க்கும் பொறுமை யாருக்கும் இல்லை. 
 
ஒரு சன்னல் வழியே விரியும் வானத்தின் காட்சி எத்தனை பிரமிப்பான கற்பனையை கவிஞருக்குக் கொடுத்திருக்கிறது என்று பொறாமை கொள்ள வைக்கும் கவிதையிது.
 
மிகச் சிறப்பான கவிதையின் அடையாளம் எதுவெனில் அதை நாம் எழுதியிருக்கமுடியும் என்கிற ஒரு சொந்தம் கொண்டாடலை அது நமக்குத் தருவதுதான்.
 
இனி மிகப் பொறுமையாக மலர்ந்து கொண்டிருக்கிற ஒரு மலரின் அருகில் இருப்பதான பாவனையுடன் இந்தக் கவிதை வரிகளை நெருங்குங்கள். அந்த அனுபவம் ஒப்புமையற்றதாய் உங்களுக்கு இருக்கும்.
 
அடிக்கடி இது போல நல்ல கவிதைகளை வாசிக்கக் காத்திருக்கிறோம் திருநாவுக்கரசு பழனிசாமி. வாழ்த்துக்கள்.
 
 சன்னல் வழி உலகம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சற்றே நீள்சதுரமான உலகமொன்றை
இன்று தரிசிக்க நேர்ந்தது
முடிவற்றுச் சுழலும் பூமிப்பந்திலிருந்து
வேறுபட்டு இயங்கும் அவ்வுலகம்
தேர்ந்த வேலைப்பாடுகளையுடைய
மரச்சட்டங்களால் சூழப்பட்ட
பெரும் தீவாய் இருந்தது
மனிதர்களின் பாதைகளும்,
பறவைகளின் வானமும்
ஓர் முனையில் துவங்கி
மற்றொரு முனையில் திடீரென
முடிவதாய் இருந்தது .
இந் நீள்சதுர உலகம், சூரியன்
உள்நுழைய இயலாக் கோணத்தில்
அமைந்திருந்ததால் காலங்களற்று
இயங்கிக்கொண்டிருந்தது..ஆயினும்
பகல்களும், இரவுகளும்
வசந்தங்களும், கோடைகளும்
கடந்து கொண்டுதானிருந்தன.
காலங்களற்ற பெருவெளியில்
இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகம்
சிறு திரையொன்றின் அசைவில்
எப்போது வேண்டுமானாலும்
மறைய நேரிடலாம்..அப்போது
நீள்சதுர வானமும், வானில்
பறக்கும் பறவைகளும்
முடிவற்றதாய் தங்கள் அகலங்களை
மாற்றிக்கொள்ளும், அப்போதும்
மனிதர்கள் ஓரிடத்தில்
நின்றுதான் ஆக வேண்டும்
காலமும், சன்னல்களும்தான்
மனிதர்களை கட்டுக்குள் நிறுத்துகின்றன

28.5.11

நல்ல கவிதை-பகடை


மிருணா எழுதும் சைக்கிள் வலைப்பூவில் நேற்று இந்தக் கவிதையை வாசித்து அதிர்ந்து போய் நின்றேன்.

கடைசியாக என்னை இப்படியான அதிரும் உணர்வுகளில் மூழ்க வைத்தது கமலேஷின் கதவாயுதம்.

தெருவின் பகல்நேரப் பரபரப்பின் யாரும் பொருட்படுத்தாத உலகத்திலும் இரவின் யாருமற்ற தனிமையின் யாரும் காணாத சூன்யத்தின் வெளியிலும் நாட்களைத் தொலைக்கும் ஒரு மனநிலை பிறழ்ந்தவளின் உலகத்தைக் காண மனதில் எத்தனை கருணையும் பரிவும் வேண்டும்?

இந்தக் கவிதையின் ஒவ்வொரு வரியும் வார்த்தைகளும் திரும்ப வைக்கின்றன மொழியின் ஆளுமையாலும் புதிதான உவமைகளாலும்.

தனியே ஒரு கவிதைக்குப் பொழிப்புரை எழுதுவதை விட ஒரு கவிதையைப் பெரிதாக அவமதிக்க முடியாதென்பதால் பாராட்டுக்களுடனும் வாழ்த்துக்களுடனும் நேரே கவிதையின் அனுபவத்துக்கு இட்டுச் செல்கிறேன்.

பகடை.

வெளிச்சம் பற்றிய நினைவுகளறியா
பிறவி இருளெனக் கவிழ்கிறது காலம்
இருள் படிந்திருக்கும் தெருக்களில்
உத்தேசமாய் நடந்து செல்கிறாள் பிச்சி
திரை அரங்கின்  எதிர்பாராப் படிகளாய்
எந்த நேரமும் தட்டுப்படலாம்
நம்பிக்கையின் மின்னல் தடயங்கள்
எனக் காதுகளுயர்த்திய கால்களோடு.
 
திறந்து விடக் கூடிய ஜன்னல்கள்
எதிர்ப்பட்டுவிடக் கூடிய  பூக்கள்
காற்றில் ஒலிக்கும் மணிச்சரங்கள்
கடந்து  செல்லும் பட்டாம்பூச்சிகள்
அல்லது
மரணத்திலிருந்து மீண்ட உயிரின்
ஒரு ஜீவ பார்வை என்று
மீண்டும் மீண்டும் 
தனக்குள் உச்சரித்தபடி  நடக்கிறாள்.

நேற்றின் பச்சைய நினைவுகளை 
இன்றின் பாலை கருக்க
உற்றுப் பார்த்தபடித் தேடுகிறாள்
அவள் மட்டுமே அறிந்த சாலைகளின்
மறைந்து போன  சக்கரத் தடங்களை.
ஒரு மொழிபெயர்க்கப் படாத நூலை
இறுகப் பற்றிக் கொண்டு இருக்கும்
நரம்புகள் தெறிக்கும் விரல்களை
மரணம் ஒருக்கால் தளர்த்தலாம்.

உடையவர் கைவிட்ட மிரண்டு மெலிந்த
நாயொன்றும் அவளது இறுதி நினைவுகளில்
பின் தொடர்ந்தபடி இருக்கிறது.

ஒரு கனவு கூட அவளை
மீட்டு விடும் சாத்தியங்கள் இருக்க
புதிர் வட்டப் பாதையை
நினைவின் சரடு கொண்டு
கடக்கும் பிச்சியின் எத்தனிப்பைக்
கண்கொட்டாமல் பார்க்கிறது காலம்
மந்திரப் பகடையைச் சுழற்றியபடி.

ராமனும் தேரையும்வனவாசத்தின் நடுவே தனக்கு உண்டான தாகத்தைத் தணிக்க சரயு நதியின் கரையில் மண்ணில் வில்லைக் கிடத்திவிட்டு அருகில் அம்பைக் குத்தி வைத்துவிட்டு ராமன் நீர் பருக ஆற்றில் இறங்கினான்.

தன் தாகமெல்லாம் தணிந்து மறுபடியும் கரையில் விட்டுச் சென்ற அம்பையும் வில்லையும் மீட்கக் குனிந்தபோது கண்ட காட்சி அவன் மனதைக் கரைத்தது.

கால்களை உடைத்தபடியே தன் உயிரின் கடைசிச் சொட்டை குருதியுடன் சிந்தியபடி அம்பு தைத்திருக்க ஒரு தேரையைக் கண்டான் ராமன்.

சீதையைத் தேடிக் காட்டில் அலைந்து கொண்டிருந்தவனின் மனநிலையை யாரால் யூகிக்க முடியும்? யார் தன் வாழ்நாளின் இறுதிவரை துணையென நம்பினானோ அவளே இல்லாது பகிர யாருமற்று இரவும் பகலும் அவனை வதைப்பதை அவன் மட்டுமே அறிவான்.

அந்த மனநிலையில் அந்தத் தேரையின் உயிர்வதை ராமனை எப்படி வதைத்திருக்கும்?

அம்பு தைக்க நேரும்போது ஒரு குரல் கொடுத்திருந்தால் போதுமே? என்னையுமறியாமல் இந்த உயிர்வதை நேர்ந்திருக்காதே? என்ன செய்வேன்? எது உன்னைக் குரலெழுப்ப விடாது தடுத்ததோ புரியவில்லையே? என்று தேரையிடம் மனம் கசிந்து வருந்தினான் ராமன்.

யார் என்னைத் துன்புறுத்தினாலும் உன் பெயரை நானழைப்பேன் ராமா!  நீயே என்னைத் துன்புறுத்தும் போது யார் பெயரால் அழைப்பேன் ராமா?

உலகமே என்னை தண்டிக்கும்போதும் தாமரைக்கொப்பான உன் திருவடிகளில் சரணடைவேன். தண்டனையே உன்னால் எனும் போது வேறு யாருண்டு என் வசம்?

கடவுள் என்னோடு இருக்க யாரென்னை வதைக்க?
கடவுளே என்னை வதைக்க யாரென்னைக் காக்க? என்றது தேரை.

வேறேதும்
வழியின்றி
உயிர் துறந்தது
தேரை.
வேறேதும்
வழியின்றி
உயிர் சுமந்தான்
ராமன்.

27.5.11

தாமரை இலை நீர்ஹகுய்ன்.

இதுதான் அந்த ஸென் துறவியின் பெயர். அக்கம்பக்கத்திலெல்லாம் அவருடைய தூய்மையான வாழ்க்கைக்கு நற்பெயர் பெற்று வாழ்ந்துவந்தார்.

அவருடைய மடாலயத்துக்குப் பக்கத்தில் ஒரு உணவு விடுதி வைத்து நடத்தி வந்த பெற்றோருக்கு மிக அழகான ஒரு ஜப்பானியப் பெண் இருந்தாள்.

திடீரென ஒருநாள் அவர்கள் வீட்டில் ஒரே கூச்சல். அந்த இளம் பெண் கர்ப்பமுற்றிருந்த விவரம் அவள் பெற்றோர்களுக்குத் தெரிய வந்தது.

கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று பலவந்தமாய்ப் பலமுறை கேட்டும் வாயைத் திறக்க மறுத்துவிட்டாள் அந்தப் பெண். மிக நீண்ட வற்புறுத்தலுக்குப் பின் அவள் அந்தத் துறவி ஹகுய்னின் பேரைச் சொன்னாள்.

படு பயங்கரக் கோபத்துடன் நேரே அந்தத் துறவியிடம் போனார்கள். நடந்ததைச் சொல்லி அவர் மேல் பழி சுமத்தினார்கள். எல்லாவற்றையும் பொறுமையுடனும் புன்சிரிப்புடனும் கேட்ட அந்தத் துறவி “அப்படியா நடந்தது?” என்று மட்டுமே சொன்னார்.

பேறுகாலம் முடிந்து குழந்தையும் பிறந்தது. குழந்தையை எடுத்துக் கொண்டுவந்து ஹகுய்னிடம் ஒப்படைத்தார்கள். துறவியின் இந்தச் செய்கையைக் கேள்விப்பட்டதிலிருந்தே மக்களின் மரியாதையை இழந்து யாரின் கவனிப்பும் இன்றி தன் போக்கில் எப்போதும் போல் வாழ்ந்து வந்தார் சிறிதும் சலனமின்றி.

குழந்தைக்குக் காட்ட வேண்டிய எல்லா அக்கறையையும் கவனமாய்ப் பின்பற்றினார் அந்தத் துறவி.அந்தக் குழந்தைக்குப் பால் புகட்டுவதில் தொடங்கித் தாலாட்டி உறங்க வைப்பது வரைக்கும்-மூத்திரத் துணிகளை மாற்றி மலசுத்தி செய்வது வரைக்கும் இரவிலும் பகலிலும் ஒரு தாயுமானவனாகத் தன்னை மாற்றிக்கொண்டார் அந்தத் துறவி.

ஒரு ஆண்டு உதிர்ந்திருந்தது. அந்தக் குழந்தையின் தாயால் அதற்கு மேலும் தன் மனதோடு போராட முடியாது போகவே தன் பெற்றோர்களிடம் அந்தக் குழந்தையின் உண்மையான தகப்பன் மீன் அங்காடியில் வேலை செய்யும் ஒரு இளைஞனே என்ற உண்மையைச் சொல்லி ஏதும் அறியா அந்தத் துறவியைப் பழித்ததற்காக அழுதாள்.

அந்தப் பெண்ணின் பெற்றோர்களும் என்ன ஏது என்று விசாரிக்காமல் தாங்கள் செய்த தவறு எத்தனை மன வருத்தத்தையும் அவப்பெயரையும் அவருக்குத் தந்திருக்கும் என்று அந்தத் துறவியின் முன்னால் நின்று நெடுநேரம் தங்கள் தவறை எடுத்துரைத்துத்  தங்களை மன்னித்தேயாக வேண்டும் என்றும் அந்தக் குழந்தையைத் தாங்களே எடுத்துச் செல்வதாகவும் மன்றாடினார்கள்.

இத்தனையையும் அதே பொறுமையுடனும் புன்னகையுடனும் கேட்டபடியிருந்த அந்தத் துறவி,” அப்படியா நடந்தது?” என்று கேட்டபடியே உள்ளே உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை மென்மையாய்த் தூக்கி வந்து அவர்களிடம் ஒப்படைத்தார்.

முழு நிலவு
மேகத்தின்
மோகத்தால்
மறைந்துவிட
கண்கள்
காத்திருக்கும்
களியூட்டும்
நிலவுக்காய்.
மேகம் நழுவும்
அவிழும்
மறைத்த
தன் செயல்
வெட்கி.
மீண்ட நிலவு
பால் பொழியும்
என்றென்றும்
சலனமின்றி. 

நுட்பச் சிக்கல்


நான் தொடர்ந்து வாசிக்கும்-பின்னூட்டமிடும் பல தளங்களில் ஏதோ நுட்பக் காரணங்களால் பின்னூட்டமிட முடிவதில்லை. அநானிமஸ் என்கிற தலைப்பைக் காட்டி மறுபடியும் கூகிள் கணக்குக்குள் நுழைய வைக்கிறது. மறுபடியும் அநானி. மறுபடியும் கூகிள். கிடைக்கும் அல்பசொல்ப நேரத்துக்குள் இயலாது போய் பின்னூட்டமிடும் ஆர்வம் இதனால் தடைப்பட்டுவிடுகிறது.

ஒவ்வொரு மனமும் ஒவ்வொரு விதமாய் யோசிக்க வாய்ப்பு இருக்கிறது.

நாம் வாடிக்கையாய் வாசித்துப் பின்னூட்டம் இட்டாலும் இவனுக்குக் கொழுப்பைப் பாரேன் என்கிற கதியில்.

என்னுடைய தளத்தை வழக்கமாக வாசிப்பவர்களுக்கும் இதே போன்ற சிக்கல் இருக்கலாம் என்பதையும் யூகிக்கிறேன்.

இது ஒரு இழப்புத்தான்.

வருந்துகிறேன்.   

26.5.11

தடம்ஒரு அரசன் அவனுடைய அமைச்சர் மற்றும்  சில வீரர்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான். ஒரு சந்தர்ப்பத்தில் மூவரும் வழி தவறித் தனித்துப் பிரிந்தனர். வழி தேடித் திரிந்தனர்.

ஒரு மரத்தடியில் பார்வையற்ற ஒரு முனிவர் அமர்ந்திருந்தார்.

முதலில் அவ்வழியே வந்த ஒரு வீரன் அவரிடம் வந்து குதிரைமீது உட்கார்ந்தவாறே அம்முனிவர் பார்வையற்றவர் என்பதைப் புரிந்து கொண்டு-

"ஏய் குருடா!இந்தப் பக்கம் மனிதர்கள் யாரும் வந்த காலடியோசையைக் கேட்டாயா?" என்றான்.

முனிவர் அதற்கு "இல்லையே வீரனே!" என்றார். அவன் போய்விட்டான்.

அடுத்தது அமைச்சர் வந்தார். குதிரையை விட்டுக் கீழிறங்கி நின்று,

"கண் பார்வையற்ற முனிவரே! இந்தப் பக்கம் மனிதர்களின் காலடியோசை ஏதும் கேட்டதா?" என்றார்.

அதற்கு முனிவர் "யார்? அமைச்சரா? சற்று முன்பு வீரன் ஒருவன்தான் வந்தான்" என்றார்.

அமைச்சர் போய் விட்டார்.

சற்று நேரத்தில் அரசன் வந்தான்.

அவன் குதிரையை விட்டுக் கீழிறங்கி, முனிவர் முன்பு மண்டியிட்டு "மகரிஷி அவர்களே! தயவு செய்து இங்கே மனிதக் காலடியோசை ஏதும் கேட்டதா? என்பதைத் தெரிவித்து உதவ வேண்டும்" என்றான்.

அதற்கு முனிவர் "முதலில் ஒரு வீரனும், பிறகு அமைச்சரும் வந்தனர். இப்போது அரசர் நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றார்.

அரசன் விடை பெற்றான்.

சற்று நேரத்தில் மூவரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர்.

மூவருக்கும் ஆச்சர்யம். 'பார்வையற்ற முனிவர் எப்படி ஓவ்வொருவரையும் இனம் கண்டு கொண்டார்? என்பதுதான்.'

முனிவரிடமே வந்து கேட்டனர்.

முனிவர் சொன்னார்:

குதிரை மீது அமர்ந்தவாறே 'ஏ குருடா' என்றவன் வீரன்.

இறங்கி நின்று 'பார்வையற்ற முனிவரே' என்றவர் அமைச்சர்.

மண்டியிட்டு 'மகரிஷி அவர்களே' என்றவர் அரசர் என்றார்.

பார்வையற்றவருக்குப்
பார்வையைக்
கொடுத்துப்
பாதை காட்டுகிறது
பணிவின் சுகந்தம்.
பார்வையுள்ளவனைக்
குருடனாக்கிப்
பாதையின் பள்ளத்தில்
தள்ளுகிறது  
பணியாமையின்
ஈட்டி.

24.5.11

அஞ்ஞானம்
மெலிதாய்க் கற்களை உருட்டும் ஒலி கூடத் தவிர்த்து ஓடிக்கொண்டிருந்தது அந்த வனத்தின் சிற்றோடை. ஓடையின் கரையில் ஒரு அணில் சோகத்தின் சாயலோடு உட்கார்ந்திருந்தது.

வெயிலின் தாக்கம் எதுவுமில்லாத அடர்ந்த வனத்தின் மையப்பகுதி என்றாலும் யானைக்கும் தாகமாய் இருந்தது. நகரங்களில் கிடைக்காத ஓடையில் இளநீர் போல ஓடிக்கொண்டிருந்த குளிர்ந்த நீரைப் பருக வந்தது.

கரையில் கவலையுடன் இருந்த அணிலைப் பார்த்தது. கவலைக்கான காரணத்தைக் கேட்டது யானை.

“யானை மாமா! வருத்தப்படற மாதிரியான செய்திதான். நேற்றைக்குக் கேள்விப்பட்ட செய்தியை நினைச்சா மனசுக்குக் கவலையா இருக்கு”

“அப்படியென்ன செய்தியைக் கேள்விப்பட்டே இத்தனூண்டுப் பயலான நீ?”

“இந்தக் கிரகத்துல இருக்குற மனுஷங்க எல்லாம் பூமி கொஞ்சங்கொஞ்சமா தன்னோட நல்ல தன்மைகளையெல்லாம் இழந்துக்கிட்டே வர்றதால வேறொரு கிரகத்துக்குப் போறதுக்கான ஏற்பாடுகளையெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்காங்களாம்.”

“அப்படியா சேதி? அப்புறம்?”

“முதல் கட்டமா அந்த கிரகத்துல இங்க இருக்கற மாதிரியே எல்லைகளை எல்லா நாடுகளுக்கும் அவங்கவங்க மக்கள்தொகைக்கு ஏத்தா மாதிரி சமமாப் பிரிக்கறதுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்டியிருக்காங்க”

”அப்படி மாறிப் போறதுல ஏன் இவ்வளவு ஆர்வமா இருக்காங்க?”

“ஆமா!அதுல என்ன தப்பு? இங்க குடிக்கத் தண்ணியில்ல.காத்து எல்லாமே விஷமாயிடுச்சு. தங்கறதுக்கு போதுமான இடமில்ல. மக்கள் தொகையும் கூடிக்கிட்டே இருக்கு. காடுகளே கைவிட்டு எண்ணுற மாதிரி ஆயிடுச்சு. காடுகள் குறைஞ்சதாலே மழையுமில்லாமப் போச்சு.எப்படியிருக்கும் அவங்களுக்கு நிம்மதி?”

“சரி.இன்னும் எத்தனை நாளாகுமோ இதுக்கு?”

“எப்படியும் இன்னும் ஒண்ணு ரெண்டு வருஷத்துல போயிடுவாங்க.”

“நாம இல்லாம இந்த சோம்பேறி மக்களால இருக்கமுடியாது. நம்மளையும் கூட்டிக்கிட்டுதான் போவாங்க. கவலைப்படாதே.”

“என் கவலையே அதுதான். அவங்க தேவையான ஒவ்வொரு விலங்கை மட்டும் கூட்டிக்கிட்டுப் போய் க்ளோனிங் பண்ணிக்கப் போறாங்களாம்”

இதைக் கேட்டவுடன் யானை தன் பூதாகாரமான உடலைக் குலுக்கிக் குலுக்கிச் சிரித்தது.

‘அடச்சே!இதுக்குத்தான் கவலைப்பட்டியா? பெரிய விடுதலை நமக்கு. இந்த பூமியை ஆராய்ச்சி ஆராய்ச்சிங்கற பேர்ல எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டதா நினைச்சு கடைசில தன் தலைக்கு மேல வெள்ளம் போனவுடனே விட்டுட்டு ஓடற இந்த விஞ்ஞானத்தக் கட்டிக்கிட்டு அழற மனுஷங்க இல்லாமப் போனா நமக்குத் தான் எத்தனை நிம்மதி?

நான் பொறந்ததுலேருந்து யானையாத்தான் இருக்கேன். நீ அணிலாத்தான் இருக்கே. நிம்மதியாத்தான் இருக்கோம். ஆறாவது அறிவ வெச்சுக்கிட்டு இந்த மனுஷங்க எப்படி மாறிப்போய்ட்டாங்க?பெரிய வரம்னு நினைச்ச அந்த ஆறாவது அறிவுதான் அவுங்களுக்கு இப்ப பெரிய சுமை”

“ஹையா! அப்ப நீ சொல்ற மாதிரி சீக்கிரமே நமக்கெல்லாம் விடுதலை.” என்று கவலையைக் கழற்றி வீசி விட்டு அணிலும் யானையோடு சேர்ந்து குதித்தது.

எல்லாமே
தன்னுடையதாய்
எண்ணுபவனுக்கு
எதுவுமே
அவனுடையதாய்
இருப்பதுமில்லை.
அது அவனுக்குப்
புரிவதுமில்லை.
எதுவுமே
வேண்டாதவனுக்கு
எல்லாமே
அவனுடையதாகிவிடுகிறது.
வேண்டாதவனின்
காலடியில்
உடைமை எனும்
பொருளையும்
இழந்து விடுகிறது.   

23.5.11

முளைகுருவும் சீடனும் ஒற்றையடிப்  பாதையொன்றில் நடந்து கொண்டிருந்தார்கள்.

வழியில் துளிர்விட்டிருந்த சின்னஞ்சிறு செடியைப் பிடுங்கும்படி குரு சீடனிடம் சொல்ல அவனும் சட்டென அதை ஒரு நொடியில் செய்து முடித்தான்.

சற்றுத் தள்ளி, நன்கு வளர்ந்திருந்த செடியொன்றைப் பிடுங்கும்படி பணித்தார். சீடன் மிகுந்த பிரயத்தனம் செய்து தனது இரண்டு கைகளாலும் அச்செடியைப் பிடுங்கி எடுத்தான்.

இன்னும் சற்றுத் தொலைவு சென்ற பிறகு, ஒரு சிறு மரமாய் வளர்ந்திருந்த செடி ஒன்றைப் பிடுங்கும்படி அவர் சொன்னபோது, சீடன் தன்னுடைய முழு பலத்தை உபயோகித்தும் அசைக்கக் கூட முடியாமல் போய்விட்டது.

அதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த குரு சொன்னார்-

”பிரச்சினைகளும் இப்படித்தான்!”

உடனே சீடன் கேட்டான்-

“பிரச்சினைகளுக்கும் செடிக்கும் என்ன சம்பந்தம்?”

குரு புன்னகையுடன் அவனுக்கு விளங்கும்படி சொன்னார்:

“பிரச்சினைகள் துளிர் விடும்போதே, அதைத் தீர்க்க முயன்றால் தீர்த்து விடலாம். அதை வளர விட்டால் அது மரம்போல வளர்ந்து பெரிதாகி விட்டால் அப்புறம் அதை அகற்ற ஆயுதங்களும் பெரும் முயற்சியும் தேவைப்படலாம்”.

ஐந்தில்
வளைக்கப்படாதது
மட்டுமல்ல
பிடுங்கப்படாததும்
ஐம்பதில்
வளைக்கப்படவும்
பிடுங்கப்படவும்
முடியாது.
ஐம்பதில்
முடியாதென்றால்
ஆயுசுக்கும் முடியாது.

22.5.11

அக்கரை அக்கறை

1.
அது ஒரு மழைக்காலம்.

இளந்துறவி ஒருவன் ஒரு வேலைக்காகப் பக்கத்து ஊருக்குப் புறப்பட்டான். பயணத்தின் நடுவே ஒரு ஆறு குறுக்கிட்டது. 

ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு சுழித்து ஓடிக் கொண்டிருந்தது.  அகண்ட ஆறு அது.  ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்று கொண்டிருந்தான்.  ஆற்றின் கரையில் துறவி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

உரத்த குரலில் பதட்டத்துடன் அவரிடம் கேட்டான் இளந்துறவி.

“ஐயா! நான்  ஆற்றின் அக்கரைக்குச் செல்வது எப்படி?’’

குரு சொன்னார்.

மகனே! நீ ஆற்றின் அக்கரையில்தான் இருக்கிறாய்.

எதைக் கடக்க
முடியுமோ
அதையே கடக்க
முடிகிறது.
எதைக் கடக்க
இயலாதோ
அதைக் கடக்கத்
தேவையில்லை.

2.
பார்வையற்ற ஒருவன் தன் நண்பனைக் காண பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான். சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இருள் கவிழத் துவங்கியது மாலையின் மேல்.

”ஐயோ! நேரமாகிவிட்டது. நான் கிளம்புகிறேன்” என்று கிளம்ப எழுந்தான்.

”நன்றாக இருட்டிவிட்டது. இதற்கு மேல் கிளம்பி என்ன செய்யப் போகிறாய்? தங்கிவிட்டுக் காலையில் கிளம்பு” என்றான் நண்பன்.

“இருளும் ஒளியும் உனக்குத்தான். எனக்கு எல்லாம் ஒன்றுதான். கவலைப் படாதே. நான் கவனமாகப் போய்விடுவேன்” என்று புறப்பட்டான்.

”எதற்கும் இந்த லாந்தர் விளக்கை எடுத்துப் போ. பயன்படும்” என்றான்.

”இதனால் எனக்கு என்ன பயன்? சொல்லப்பா” என்றான் பார்வையில்லாதவன்.

”உனக்காக இல்லை இது. பார்வையுள்ளவர்களுக்கு நீ வருவது தெரியும் பொருட்டுத்தான்” என்றான் நண்பன் சிரித்தபடி.

”வேடிக்கைதான். கொடு” என்றபடி லாந்தரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

காட்டு வழியே போய்க்கொண்டிருந்தபோது எதிரில் யாரோ வரும் ஓசை கேட்டது.

”தம்பி! எங்க போறப்பா இந்த இருட்டுல. நா வேணா கூட வரட்டுமா துணைக்கு?” என்றார் ஒரு பெரியவர்.

சிரித்தபடியே” வேணாங்க. அதான் லாந்தரை எடுத்துக்கிட்டுப் போறேனே? கவனிக்கலையா?” என்றான்.

”அது அணைஞ்சு போச்சுப்பா. அதைக் கவனிச்சதுனாலதான் கேட்டேன்.வா. நான் கூட்டிக்கிட்டுப் போறேன்” என்று கைகளைப் பற்றி வெளிச்சமான பகுதியை அடையும்வரை அவனை கூட்டிச் சென்றார்.

பார்வை
இருக்கும்போதும்
இல்லாதபோதும்
எதைப்
பார்க்கிறோம்
என்பதும்
எதைப்
பார்க்காது போகிறோம்
என்பதும்
பிறர்
நம்மைப்
பார்க்கும்போதுதான்
நமக்குத் தெரிகிறது.

20.5.11

சுண்டெலி

ஒரு கிராமத்தில் ஒரு குரு வசித்து வந்தார். பலரும் அவரிடம் வந்து ஞானம் பெறுவது வழக்கம்.

இதைக் கேள்விப்பட்ட ஓர் இளைஞன் ஆவலுடன் அவரிடம் வந்தான். அவனை எதுவும் விசாரிக்காமல் அவனை அங்கேயே இருக்கச் சொன்னார். நான்கு வருடங்கள் கழிந்தன.

ஒரு நாள் அவனைக் கூப்பிட்டு குரு விசாரித்தார்.

"எதற்காக வந்தாய்?'' என்று கேட்டார்.

"தீட்சை பெற வேண்டி தங்களிடம் வந்தேன்'' என்றான்.

அங்கிருந்த ஒருவரை அழைத்து ஒரு பெட்டியை எடுத்து வரச் சொன்னார். அதை அவனிடம் கொடுத்து வெகுதூரத்தில் ஒரு விலாசம் கொடுத்து,

"அங்குள்ள ஒரு மகானைச் சந்தித்து இப்பெட்டியை அவரிடம் சேர்த்து விடு. திரும்பி வந்தவுடன் தீட்சை அளிக்கிறேன்'' என்றார்.

அந்த ஊரை நோக்கி இளைஞன் நடந்தான்.

வெயிலில் களைத்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். நடக்கும்பொழுது அவன் மனம் நடை மீதிருந்தது. பெட்டியைப் பற்றி நினைவில்லை. அது பூட்டப்பட வில்லை என்பதையும் அவன் கவனிக்கவில்லை.

உட்கார்ந்தவுடன் மனம் வேலை செய்ய ஆரம்பித்தது.

ஏன் இந்தப் பெட்டியை என்னிடம் கொடுத்தார்? எளிதில் திறக்கலாம் போலிருக்கின்றதே? இதனுள் என்ன இருக்கும்? பார்க்கலாமா? பார்த்தால் என்ன தவறு? என்று மனம் நினைத்தபொழுது,

"அது தவறு. இது குரு இட்ட ஆணை. அவர் பேச்சை மீறக் கூடாது. எதுவாய் இருந்தால் நமக்கென்ன?'' என்று மனத்தைச் சமாதானம் செய்தான். சிறிது நேரம் கழித்து மனம் மீண்டும் அதே கேள்விகளைக் கேட்டது. மீண்டும் அமைதியடைந்தான்.

பல நேரப் போராட்டத்துக்குப் பின், அவன் தோற்று, அவன் மனம் வெற்றியடைந்தது.

பெட்டியைத் திறந்தான். அவன் எதிர்பாராது திடீரென ஒரு சுண்டெலி குதித்தோடியது. இளைஞன் வருத்தப்பட்டான்.

மீண்டும் பிரயாணத்தைத் தொடர்ந்து, அந்த விலாசத்தைத் தேடிப் போனான். அவரிடம் பெட்டியைக் கொடுத்தான். திறந்து பார்த்தார். அவன் முகத்தையும் நிமிர்ந்து பார்த்தார்.

அவனுக்கு உபதேசம் செய்தார்.

"உன் குரு உன்னை நம்பவில்லை. உன் மனோதிடத்தைச் சோதிக்க இதைச் செய்திருக்கிறார். நீ தோற்றுவிட்டாய். உன் மனதை உன்னால் வெல்ல முடியவில்லை.” என்றார்.

வருத்தத்துடன் குருவை நாடி வந்து செய்த தவறையும், நடந்தவற்றையும் இளைஞன் சொன்னான்.

"உன்னால் ஒரு சுண்டெலியைக் காப்பாற்ற முடியவில்லை. ஞானத்தை உன்னை நம்பி எப்படிக் கொடுக்க முடியும்?'' என்றார்.

இளைஞன் தன் இருப்பிடம் சென்றான்.

காலங்கள் கரைந்தன. அவன் எதைத் தேடி நிம்மதியற்றுத் திரிந்தானோ, அது தன்னிடமே இருப்பதை உணர்ந்தான்.

எல்லாமே தேடலுக்குப்
பின்னரே கிடைக்கின்றன.
எவை கிடைக்கின்றனவோ
அவை கிடைத்த பின்னரே
தேடியவை அவையல்ல
என்கிற ஞானத்தையும் -
தேடாமலேயே கண்ணெதிரில்
தட்டுப்படும் ஆச்சர்யத்தையும்
பொதிந்து வைத்திருக்கிறது
இந்த வாழ்க்கை.

18.5.11

உரைகல்தோ-ழர்/ழி-களே!

ஒரு முக்கியமான கட்டமாய் இதை நினைக்கிறேன்.

ஒரு இருபது வருட இடைவெளிக்குப்பின் கடந்த மார்ச் 2010 முதல் கைகளில் அள்ளிய நீரில் எழுதிவருகிறேன். இந்த எழுத்துக்கு நீங்கள் உடனுக்குடன் தந்து வரும் உற்சாகமான எதிர்வினைகளே என் பல படைப்புக்களுக்கும் ஆதார சக்தியென்பதை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தூங்காமல் இருக்கும்போது கேட்டாலும் ஒப்புக்கொள்வேன்.

எனக்குக் கவிதைகளின் மேல் தனித்த ஒரு காதல் துவக்கத்திலிருந்தே உண்டு. நீ யார் என்று என்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு நான் ஒரு கவிஞன் என்றே பதிலளிக்க விரும்புகிறேன்.

ஆனால் அந்த பதிலுக்குப் பொருத்தமானவனாக நான் இருக்கிறேனா? நான் கடந்த தொலைவு என்ன? என் இடம் எதுவாக இருக்கும்? அல்லது என் எழுத்தின் அடிநாதமும், பலமும் பலவீனமும் என்ன? என்றுணரவும் எனக்கு ஆசை இருக்கிறது.

என் தளத்தின் வடிவமைப்பு குறித்தும்-நிறங்களின் தேர்வு குறித்தும்-நான் எழுதியுள்ள பல்வேறு லேபில்களில் எது உங்களின் விருப்பமாக இருக்கிறது? என்றும் விரிவான உங்களின் பின்னூட்டங்களின்  மூலம் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

என்னை மேலும் செழுமைப்படுத்திக்கொள்ளவும் பட்டை தீட்டிக்கொள்ளவும் எனக்கு தாகம் இருக்கிறது.

உதவுங்கள் நான் மேலும் பயணிக்க.

16.5.11

பின்னூட்ட முன்னூட்டம்.


பின்னூட்டங்களுக்குப்
பதில்
எழுதமுடியாத அளவுக்கு
நானே தொடர்ந்து
எழுதவும் படிக்கவும்
நேர்ந்துவிட்டதால்
எல்லோருக்கும்
எல்லாப்
பின்னூட்டங்களுக்கும்
வெகு விரைவில்
பதில் பின்னூட்டமளித்து
விடுவேன்
என்று
உறுதியளிக்கிறேன்.


பி.கு:

1. இதை வழக்கம்போல் கவிதை என்று எண்ணி ஏமாந்துவிடவேண்டாம். சிரமம் பார்க்காமல் லேபிளைக் கவனித்துவிட்டுக் கரையேறவும்.

2. இது ஊட்டம் சம்பந்தப்பட்டிருப்பதால் ஃபீடிங் பாட்டிலுடன். பொருத்தமான படம் எனக் கொள்க.

11.5.11

எரிந்த இரவுமெழுகின் வெளிச்சத்தில்
இசை உருகிக்கொண்டிருந்த
ஓர் இரவைப் பற்றி
என்னால் சொல்லவும்
சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.

திறந்த சாளரத்தின்
வழியே தவ்விச் செல்லும்
ஓர் அணிலின்
பாய்ச்சலாய் இசை.

அப்படிச் சொன்னபின் தெரிகிறது
அது தெரியாமல்
பூட்டிய வீட்டுக்குள் வந்து தவிக்கும்
ஓர் தவளையைப் போலவும் என்று.

இசைக்கப்படாத இடைவெளிகளில்
தப்பிச் சென்றும் திகிலூட்டும் பாம்பையும்-

இசைத்து முடிகையில்
வெளிச்சத்தின் கிளைகளில்
முட்டிமோதி மடியும் விட்டிலையும்-

நினைவு கூர்ந்தபடியே
இருளில் கரைந்தும்
உயிர்த்திருந்தது இசை
மெழுகோடு மெழுகாய்.

10.5.11

சொற்பிழை
கடிக்கமுடியாத
கம்மர்கட்டை
தம்மர்தட்
என்றே சொல்வான்
சின்னவன்.

எத்தனை சொன்னாலும்
கோககோலா
தோததோலாதான்.

கன்னுக்குட்டியோ
தன்னுத்துட்டிதான்.

தொத்தாகிடும் 
கொக்கு.

வந்தது காக்காவா
தாத்தாவா எனப் 
புரிய
ஆகும் கொஞ்ச நேரம்.

படுக்கும்போதும்
படிக்கும்போதும்
சொல்லிச்சொல்லி

காவன்னாவும் 
தாவன்னாவும் 
பழகிக்கொண்டான்.

தேடிக்கொண்டிருக்கிறேன் 
நான்

சின்னவன் 
பிராயத்தோடு
தொலைத்த 
தாவன்னாவையும்
துணைக்குவந்த
காவன்னாவையும்.

ஓவியச் சிறை


தூரிகையிலிருந்து
வெளிப்பட்ட நாள் முதலாய்
உறைந்து நிற்கிறது
அந்தப் படகும்
அதனடி நீரும்.

அசையாத மரங்களால்
சிறைப்பட்ட காற்றுக்காகவும்
ஒரு நாளும் திறவாத
சாளரங்களுக்காகவும்
துயருறுகிறது இக்கவிதை.


உறைந்த நீரில்
என்றோ துள்ளவும் நீந்தவும்
செய்த மீன்களின்
விடுதலைக்காகவும்
கவலையுறும் என் கவிதை-

கழியுடன் கையுயர்த்தி
இறுகிப்போன மனிதனையாவது
இருட்டுவதற்குள் மீட்டெடுத்து
சந்தடியில்லா வீட்டின் வாயிலில்
கொண்டுசேர்க்க முயல்கிறது.

அவன் மெதுவே திறக்கக் கூடும்
கதவுகளையும் சாளரங்களையும்.

மறுநாளில்
மரங்களும் நீரும் அசையும்.
மீன்களும் துள்ளக் கூடும்.

அதன் பின்னே
ஓவியத்தின் மரங்களின் மேல்
எங்கிருந்தாவது சிறகசைத்து
பறவைகள் வந்தமரும்.

9.5.11

நூற்றாண்டுத் தூக்கம்அதோ அந்த ஓவியத்தின்
சுமைதாங்கியில் முதுகு காட்டி
ஒருக்களித்துத் தூங்குகிறான்
என் நண்பன்.

மடக்கிய கையிலும்
கால் விரலின் இறுக்கத்திலும்
ததும்பிக் கசிகிறது
கனவுகளற்ற அவன் உறக்கம்.

அவன் சாப்பிட்டானா?
தாகத்துடன் உறங்குகிறானா?
குடும்பத்தைப் பிரிந்து
வெகு தொலைவு வந்துவிட்டானா?
அவன் கவலைகள் எந்த மாதிரி?
அவன் முதுகிலிருந்து
கண்டு கொள்ள முடியவில்லை
எதையும்.

ஆனாலும்
கனவுகளும் நம்பிக்கைகளும்
நிரம்பிய அவன் கூடையை
அது களவாடப்படாதிருக்க
எதனோடும் இணைத்துக் கட்டாது
ஆழ்ந்து உறங்குகிறான் அவன்.

சக மனிதர்கள் மேல்
அவன் நம்பிக்கை
அவன் உறக்கத்தைப் போல
அற்புதமானதாக இருக்கிறது.

நிச்சயம்
அவன் பல நூற்றாண்டுகளுக்கு
முந்தையவனாகத்தான் இருக்க வேண்டும்.
சக மனிதர்கள் பால்
அன்பையும் நம்பிக்கையையும்
விதைப்பதற்காக
அவன் உறக்கம் கலைத்து
மீண்டும் எழக்கூடும்
சில நூற்றாண்டுகள் தாண்டி.

(ஓவியர் திரு.சந்தானராஜின் ஓவியம் தஞ்சாவூர்க் கவிராயரின் இரண்டாவது இதழின் அட்டைப்படமாக வெளியானது. அந்த ஓவியம் கிளரச் செய்த கவிதை இது.) 

1 கருத்துரை:

சைக்கிள் said...
(ஓவியம் இணைக்கப்படவில்லை.தேவையும் இல்லை) 

கவிதை தீட்டுகிறது நம்பிக்கையின் சாயல்களை, எழுத்தின் சாயங்களால் வாழ்வை வம்புக்கிழுத்து.

இப்போது இணைக்கப்பட்டு விட்டது.

7.5.11

பொய்யுரு


ஒரு
நிலைக்கண்ணாடியின்
முன்னே

அரைக் கோணலாய்த்
தலை சாய்த்து
வகிடெடுத்து
வாரிக்கொள்ளும்போது

பின்புற நாட்காட்டியில்
ல்ரப்ஏ என்று
மாதமிருப்பதாயும்-

அவசர அவசரமாய்
இடதுகையால் அப்பா
சாப்பிடுவதாயும்-

ஊஞ்சலில் ஆடும்
அம்மா காஃபியை
இடது கை மேலிருக்க
ஆற்றிக்குடிப்பதாயும்

மாற்றிக்காட்டும்
தோற்றப்பிழை
குறித்த இந்தக் கவிதை

தலை வாரி முடித்தபின்
சிறு சிரிப்புடன்
நிறைவு கொள்கிறது.

5.5.11

கீறல் ரெகார்ட்


ஒரு கூட்டத்துக்காக ஒருவாரம் ரேணிகுண்டா போனதில் வீட்டின் எல்லா வேலைகளும் போட்டது போட்டபடிக் கிடக்கின்றன.

மனைவி கேட்கிறாள், வீடென்று எதனைச் சொல்வீர்? இது இல்லை நமது வீடு. குழந்தைகளின் படுத்தலோ சொல்லி மாளவில்லை” என்றாள்.

அதற்கு நான் சொன்னேன்.” கண்ணம்மா! அவை வெறும் குழந்தைகள் அல்ல. கடவுளின் குழந்தைகள்- நீயும் நானும் சிறு வயதில் இருந்தாற்போல. நீயும் குழந்தையாய் மாறிவிடு. உன் கோணம் மாறிவிட்டால் பார்க்கும் காட்சிகளும் மாறிவிடும்”.

என்ன வெய்யில்? என்ன வெய்யில்? என்று இரண்டு தடவை சொல்லிவிட்டுக் குளிக்கக் கிளம்பினேன்.

”அப்பறம் ஜூடுக்கு மற்றுமொரு கவிதைன்னு அனுப்பியிருந்தீங்களே? அது அட்ரஸி நாட் அவைலபிள்ன்னு திரும்பி வந்திடுச்சு. டேபிள் மேல வெச்சுருக்கேன்” என்றாள்.

குளித்துவிட்டு வந்து கண்ணாடியில் எதேச்சையாக என் பிம்பத்தைப் பார்த்தபோது ஷேவ் பண்ணியிருக்கலாமோ? என்று ஒரு யோசனை தோன்றியது. ஒருவார தாடியுடன் ஏதோ ஹரித்வார்-ரிஷிகேஷில் திரியும் சாமியார்களைப் போல உணர்ந்தேன்.

”ஒரு காவிவேஷ்டி கட்டிக்கிட்டு கழுத்தில ருத்ராக்ஷ மாலயும் போட்டுக்கிட்டு ஏதாவது நதிதீரத்துல போய் உக்காந்துட்டீங்கன்னா உங்களைக் கடவுளா தூக்கிவெச்சுக் கொண்டாடுவாங்க” என்று அடிக்கடி சொல்லும் சாரநாத் நினைவுக்கு வந்தான்.

நினைவுகள் சுழன்றபடி இருக்க என்ன சத்தம் என்று திரும்பிப் பார்க்க நீங்கள் எல்லோரும் கையில் கிடைத்த பொருட்களோடு அடிக்க வரும் காட்சி தெரிய வுடு ஜூட் என்று எதிர்திசையில் தாவி ஓடினேன்.

(படத்துக்குப் பொருத்தமாய் எதுவும் கிடைக்காமல் கடைசியில் ஒரு கீறல் ரெகார்டையே போடவேண்டியதாப் போச்சு)

4.5.11

நெல்லூர் கோமளவிலாஸ்


இப்பத்தான் மாதிரி இருக்கு.

அது 1990 .யாருக்காவது தண்டனை கொடுக்கணும்னா மெட்ராஸிலிருந்து(சென்னை கிடையாது) நெல்லூருக்கு பஸ்ல ரெண்டு தடவ போயிட்டு வரச் சொன்னா திருப்பியும் அந்தத் தப்பைப் பண்ணமாட்டாங்க. KVR பஸ் செர்வீஸ்னு ப்ளூ கலர்ல பேஸின் ப்ரிட்ஜ்லருந்து ரெண்டு பஸ் அகால வேளைல கிளம்பி ஆடி ஆடி 5 மணி நேரத்துல 130 கி.மி.யைத் தாண்டி இறக்கி விடுவாங்க.

போகும் வழியிலேயே தமிழ்க் கடலை தெலுகு சணக்காயலுவாகி சந்தேகத்தை ஏற்படுத்தி கடலை போடவிடாமல் தடுத்து விடும். வழியெங்கும் வாழைப்பழம்-முறுக்கு-சுண்டல்-எப்படிச் செய்திருப்பார்கள் என்ற பிரமிப்பை ஏற்படுத்தும் பெரிய ஓட்டை அதிரசம் போன்ற வயிற்றுக்கு குறி வச்சு சேதாரம் உண்டு பண்ணும் பட்சண-பழ வகைகள் தலைக்கு எண்ணை வைத்துக்குளிக்காமல் வியாபாரத்துக்கு வரும் பெருமக்களால் விற்கப்படும். எந்த ஊரில் பஸ் நின்றாலும் உள்ளே ஏறும் பயணிகள்- பெண்களும்- முன் பின் சக்கரத்தின் வழியே உள்ளே தாவி லாவகமாக இருக்கைகளை அடையும் காட்சி இன்னும் நினைவிலிருக்கிறது.

வழியில் நிறுத்தும் சாயாக் கடைகளில் பலஹீனமாக தெலுகில் சினிமா சங்கீதத்தை ரேடியோ முனக என்.டி.ஆரும்-ஸ்ரீதேவியும் விப்ஜியாரில் படு க்ளோஸப்பில் ஸ்டெப்ஸ் போட்டுக்கொண்டிருக்கும் போஸ்டரின் கீழே பென்ச்சில் அமர்ந்து சூடான அந்த டீயை கவனமாகக் குடிக்காவிட்டால் மேலேயே துப்பி விடுவார்கள்.

தடா-நாயுடுபேட்டா-சூலூருபேட்டா-வழியாக ஒரு வழியாக நெல்லூரு வந்து சேரும். வரிசையாகக் குதிரை வண்டிகள்-ரிக்‌ஷாக்கள் எங்கே எங்கே என்று கேட்க விபரம் தெரிந்தவர்கள் கோமள விலாஸ் என்றும் தெரியாதவர்கள் ஒரு செருப்பைத் தொலைத்தவனின் முகபாவத்துடனும் பஸ் ஸ்டாண்டை விட்டுக் கிளம்புவார்கள்.

ட்ரங்க் ரோடில் அந்தப் பிரபல கோமள விலாஸ். போர்டிங்-லாட்ஜிங் ரெண்டும் உண்டு.ஹோட்டலுக்கு மேலே லாட்ஜிங்.லாட்ஜிங் அமைப்பு அந்தக் கால சினிமாக்களை ஞாபகப்படுத்தும் திண்ணை அமைப்புடைய இரும்புக்கட்டில்கள்-மண் கூஜா-அறையின் தங்கும் விதிகள் கொண்ட ஒரு ப்ரேம்-ரெண்டு ஜன்னல்கள்-

மரியாதையில்லாமல் கூப்பிடுவதைப் பொருட்படுத்தாது சிரித்தபடி சேவகம் செய்யும் ரூம் பையன்கள்-ரெண்டு ரூபாய் கொடுத்தால் துணிமணிகளையும் துவைத்துப் போட்டு சாயங்காலம் மடித்துகொடுத்து விடுவான்கள்-தடதடவென த்ண்ணீர் கொட்டும் காமன் பாத்ரூம்கள்-சிலதில் கொக்கி இருக்காது.பாட்டுதான் கொக்கி. ஒரு குளியல் போட்டு ரெடியாகும் போது ஊரையே தூக்கும் சமையல் மணம் நம்மையும் தூக்கும்.

அது கோமள விலாஸின் காலைச் சாப்பாட்டின் மணம். தரை தவிர மாடியும் உண்டு.வாசலில் மாட்டு வண்டியில் உமி வந்து இறங்கும் ஒவ்வொரு வேளையும்.ஒரு நாளைக்கு ரெண்டு நேரமும் சாப்பாடுதான்.சிற்றுண்டி கிடையாது.சமையல் உமியும் விறகும் கொண்டுதான்.சமையல் வாயு வராத நேரம்.

தரையிலும் பெரிய பித்தளை அண்டா பதித்திருப்பார்கள்.சாதத்தை அதிலிருந்தே எடுத்துப் பரிமாறுவார்கள். கூட்டம் அலை மோதும். சாப்பாடு பத்தோ பன்னிரண்டு ரூபாயோ. பாலக்காட்டைச் சேர்ந்தவர்களால் 1936ல் துவக்கப்பட்டு இன்றும் பின் தலைமுறைகளால் கொஞ்சம் கொஞ்சம் மாறுதல்களோடு தொடர்கிறது இவர்கள் பயணம்.

ஒரு நீள இலையைப் பொதுவாக நுனியை இடப்பக்கமாகப் போட்டுத்தான் சாப்பிடுவோம். அங்கேதான் செங்குத்தாக நுனி மேலும் அடி கீழுமாக இலையைப் போட்டு சாப்பிடுபவர்களைப் பார்த்தேன். முதலில் கூட்டு-கறி-ஒரு துகையல் பரிமாறப்பட்டு ஆவி பறக்கும் சாதம் அந்த ஊர் தண்ணீரின் சுவையுடன் பொலபொலவென்று இலையில் வஞ்சனையில்லாமல் கொட்டுவார்கள்.அதன் பின் பருப்புப்பொடி-கொங்குரா சட்னி-வற்றல் குழம்பு-மஜ்ஜிக புள்ஸு(மோர்க்குழம்பு) இதயெல்லாம் தாண்டி புள்ஸுக்கு (சாம்பாருக்கு) வருவதற்குள் வயிறு நிரம்பி விடுகிறது இப்போது. சாம்பார்-ரசம்-கவிழ்த்தவுடன் விழாது அடம் பிடிக்கும் எருமைத்தயிர்-மஜ்ஜிக (மோர்)அப்பளம்-பாயசம்-ஊறுகாய் என்று மெனு அத்தனையும் சாப்பிட்டு முடித்தபின் எதுவும் செய்யத்தோன்றாது.

மற்ற ஹோட்டல்களிலெல்லாம் இன்னும் அதிக அயிட்டங்கள் இருந்தாலும் பரிமாறுபவர்களின் மனது இதுபோலன்றி மாறிவிட்டது. எல்லாவற்றிலும் லாபத்தின் நிழல் விழுந்து இயல்பான உபசரணை குறைந்து விட்டது.

அவர்களின் பிஞ்சுக் கத்தரிக்காயுடன் சின்ன வெங்காயம் இணைந்த புளிக்கூட்டு மிகப் பிரசித்தம். பருப்பு உருண்டையிட்ட மோர்க்குழம்பும்-அலாதி வாசனையுடன் மணக்கும் சாம்பாரும்-ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துகையல்களும் இன்றும் என் மனதின் சுவை நரம்புகளில் தங்கியிருக்கிறது. எதிர்க் கடையில் ஒரு ஸெட் வெற்றிலை பாக்கு போட்டுக் கடித்தபின் கிடைக்கும் லாகிரிக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும் என்னால்?

சாம்பார் காலியான பின்னும்-ரசம் காலியாகிப்போன பின்னும்-என்ன இருக்கிறதோ அதைப்போடுங்கள் என்று சொல்லி சாப்பிட்டுப் போகும் காட்சியையும் நான் வேறெங்கும் பார்த்ததில்லை.

சாப்பாட்டுப் பிரியர்களிடமெல்லாம் எப்போதும் நான் பரிந்துரைக்கும் முதல் இடம் நெல்லூர் கோமள விலாஸ். அதற்கு ஈடாக இத்தனை நாளில் நான் எங்கும் சாப்பிட்டதில்லை. சாப்பிடுவதற்கு மட்டுமே ஒருமுறை என் குடும்பத்துடனும் மற்றொரு முறை என் நண்பர்களையும் கூட்டிக்கொண்டு போன அனுபவங்களும் உண்டு.

திருவிழா மாதிரி ஊரெங்கும் சினிமா த்யேட்டர்கள்-விதவிதமான கோயில்கள்-சத்தமான ஸ்பீக்கர்களோடு சந்தை-அதீத ஒப்பனையுடன் பெண்கள்-ஆளரவமற்ற கடற்கரை-தெருவெங்கும் சாத்துக்குடிச் சாறு பிழியும் மிஷின்கள்-ஒரு ஓரமாய்க் கழைக்கூத்தாடி-

மற்றொரு தெருவில் பாம்பு-கீரிச் சண்டைக் காட்சி-இரவுகளில் பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில் தாதுபுஷ்டி-இனவிருத்தி லேகியம்-சிட்டுக்குருவி லேகியம்-தங்கபஸ்பம்-சமாச்சாரங்களில் களைகட்டும் நெல்லூரை விட்டுப்பிரியும் போது மனதில் ஏதோ பழகிய காதலியை முறை மாமனிடம் விட்டுப் பிரியும் தொண்டைக்கமறல் எப்போதும் எனக்கேற்படும்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எத்தனையோ இடங்களில் சாப்பிட்டு அலுத்தபின்னும் நினைத்தவுடன் ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணும் உன்னை மறக்கமுடியவில்லை என்னால்.

என்னை நினைவு வைத்திருக்கிறாயா கோமள விலாஸ்?

(இது ஒரு மீள்பதிவு. இரசிகை,ஹேமா, ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி மற்றும் பத்மா இவர்களின் பின்னூட்டங்களுடன். தவற விட்டவர்களுக்காக இன்னொரு முறை)இரசிகை said...
:)
சுந்தர்ஜி said...
:)ரசிகை.
ஹேமா said...
வாழையிலையைச் செங்குத்தாகப் போட்டுச் சாப்பிடும் முறையொன்று இருக்கிறதா ?புதுமைதான்.
//ஒரு நீள இலையைப்...... ......முடியும் என்னால்?//
இந்தப் பந்தியில் சாப்பாட்டை ஆலாபனை செய்த லாவகம் பசியைத் தூண்டிவிட்டது சுந்தர்ஜி.
சாப்பாடு போலவே சொன்ன விதமும் அசத்தல்
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...
ரொம்ப ப்ரமாதம்..மாயவரம் காளிகாகுடி ஹோட்டல்..திருச்சி ஆதிகுடி..அடை அவியல் இதைப் போல எனக்கும் பதிவு பண்ண ஆவல்..முடியுமா,உங்களைப் போல்..!!!
சுந்தர்ஜி said...
சாப்பிட்டதற்கு நன்றி ஹேமா.
காளியாகுடியும்-ஆதிகுடியும் துணை செய்யும்.என்னை விட நன்றாக எழுத உங்களால் முடியும் ராமமூர்த்தி ஸார்.காத்திருக்கிறேன் ஆவலாக.
பத்மா said...
தலைக்கு எண்ணை வைத்துக்குளிக்காமல் வியாபாரத்துக்கு வரும் பெருமக்களால்
ஹஹஹா
பாட்டுதான் கொக்கி.
ஐயோ பாவம் ...யார் பாவம்? அதான் தெரில :))
அவர்களின் பிஞ்சுக் கத்தரிக்காயுடன் சின்ன வெங்காயம் இணைந்த புளிக்கூட்டு மிகப் பிரசித்தம்
இதை சிதம்பரத்தில் கொஸ்து என்பார்கள் ..சாப்பிட்டு இருக்கீங்களா ? சம்பா கொஸ்து?
ஏதோ பழகிய காதலியை முறை மாமனிடம் விட்டுப் பிரியும் தொண்டைக்கமறல் எப்போதும் எனக்கேற்படும்.
இது ரொம்ப நல்லாயிருக்கே ...
எங்க colleague ஒருத்தர் நெல்லூர் .இதை படித்தவுடன் அவருடன் இதைப்பற்றி பேசினேன். .அவரும் மிகவும் சிலாகித்து பேசினார். எங்கள் food map இல் இப்போது நெல்லூரும் உண்டு . நன்றி விருந்துக்கு ...
சுந்தர்ஜி said...
ரொம்ப நன்றி பத்மா. அது கொத்ஸு.கொஸ்து இல்லை.சம்பா கொத்ஸு சாப்பிட்டிருக்கிறேன்.அது எதனோடும் துணைக்கு வரும்.கோமள விலாஸின் இந்தப்புளிக்கூட்டின் சுவை வேறெங்கும் நான் கண்டதில்லை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...