31.5.11

மற்றுமொரு நல்ல கவிதை-சன்னல் வழி உலகம்

தமிழின் சிந்தனையிலும் மொழியிலும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மற்றொரு கவிஞர் திருநாவுக்கரசு பழனிசாமி.
 
மே மாதத்தில் நான் வாசித்த வரை எழுதப்பட்ட மிகச் சிறப்பான கவிதைகளுள் சன்னல் வழி உலகம்  மிக முக்கியமானதாகப் படுகிறது. 
 
ஒரு சாளரத்தின் வழியே அசையாமல் காட்சிகளைக் காண்பதற்கு ஒரு மனிதன் நோயாளியாக இருந்தால் மட்டுமே முடியுமென்கிற அளவிற்கு வெறுமனே ஒரு வெளியைச் சன்னலூடே பார்க்கும் பொறுமை யாருக்கும் இல்லை. 
 
ஒரு சன்னல் வழியே விரியும் வானத்தின் காட்சி எத்தனை பிரமிப்பான கற்பனையை கவிஞருக்குக் கொடுத்திருக்கிறது என்று பொறாமை கொள்ள வைக்கும் கவிதையிது.
 
மிகச் சிறப்பான கவிதையின் அடையாளம் எதுவெனில் அதை நாம் எழுதியிருக்கமுடியும் என்கிற ஒரு சொந்தம் கொண்டாடலை அது நமக்குத் தருவதுதான்.
 
இனி மிகப் பொறுமையாக மலர்ந்து கொண்டிருக்கிற ஒரு மலரின் அருகில் இருப்பதான பாவனையுடன் இந்தக் கவிதை வரிகளை நெருங்குங்கள். அந்த அனுபவம் ஒப்புமையற்றதாய் உங்களுக்கு இருக்கும்.
 
அடிக்கடி இது போல நல்ல கவிதைகளை வாசிக்கக் காத்திருக்கிறோம் திருநாவுக்கரசு பழனிசாமி. வாழ்த்துக்கள்.
 
 சன்னல் வழி உலகம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
சற்றே நீள்சதுரமான உலகமொன்றை
இன்று தரிசிக்க நேர்ந்தது
முடிவற்றுச் சுழலும் பூமிப்பந்திலிருந்து
வேறுபட்டு இயங்கும் அவ்வுலகம்
தேர்ந்த வேலைப்பாடுகளையுடைய
மரச்சட்டங்களால் சூழப்பட்ட
பெரும் தீவாய் இருந்தது
மனிதர்களின் பாதைகளும்,
பறவைகளின் வானமும்
ஓர் முனையில் துவங்கி
மற்றொரு முனையில் திடீரென
முடிவதாய் இருந்தது .
இந் நீள்சதுர உலகம், சூரியன்
உள்நுழைய இயலாக் கோணத்தில்
அமைந்திருந்ததால் காலங்களற்று
இயங்கிக்கொண்டிருந்தது..ஆயினும்
பகல்களும், இரவுகளும்
வசந்தங்களும், கோடைகளும்
கடந்து கொண்டுதானிருந்தன.
காலங்களற்ற பெருவெளியில்
இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகம்
சிறு திரையொன்றின் அசைவில்
எப்போது வேண்டுமானாலும்
மறைய நேரிடலாம்..அப்போது
நீள்சதுர வானமும், வானில்
பறக்கும் பறவைகளும்
முடிவற்றதாய் தங்கள் அகலங்களை
மாற்றிக்கொள்ளும், அப்போதும்
மனிதர்கள் ஓரிடத்தில்
நின்றுதான் ஆக வேண்டும்
காலமும், சன்னல்களும்தான்
மனிதர்களை கட்டுக்குள் நிறுத்துகின்றன

9 கருத்துகள்:

எல் கே சொன்னது…

பகிர்வுக்கு நன்றி ஜி

G.M Balasubramaniam சொன்னது…

எளிய தமிழ் நடையில், சரளமான சிந்தனை ஓட்டத்தை வெளியிடும் கவிதை. பகிர்வுக்கு நன்றி, சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

இந் நீள்சதுர உலகம், சூரியன்
உள்நுழைய இயலாக் கோணத்தில்
அமைந்திருந்ததால் காலங்களற்று
இயங்கிக்கொண்டிருந்தது..

sabaash!
Enjoyed it!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஒருசில கவிதைகளை 10 முறையாவது படித்தால் தான், அதன் அர்த்தத்தை முழுவதுமாக உணரமுடியும்.

தங்களின் அருமையான வர்ணனையைப்படித்த பிறகு கவிதையைப்படிக்கும் போது, அது ஒரே முறை படித்ததும் மிகச்சுலபமாக மனதில் அர்த்தம் ஆகிவிட்டது.

//மிகச் சிறப்பான கவிதையின் அடையாளம் எதுவெனில் அதை நாம் எழுதியிருக்கமுடியும் என்கிற ஒரு சொந்தம் கொண்டாடலை அது நமக்குத் தருவதுதான். //

மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
நான் இதுபோல பலசமயங்களில் சொந்தம் கொண்டாடியுள்ளேன்.

முதல் முறையாக சொந்தம் கொண்டாடியது:

“ரோஜா” என்ற சினிமாப் படத்தில்

//சின்னசின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்துமுத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை

வெண்ணிலவைத்.....தொட்டு
முத்தமிட ஆசை .........
என்னை ..... இந்த பூமி
சுற்றிவர ..... ஆசை//

என்ற பாடலை இசையுடன் கேட்டு மகிழ்ந்தபோது.

பகிர்வுக்கு நன்றி, ஜி.

ஹேமா சொன்னது…

எத்தனை சந்தோஷமான உலகம்.இப்படி ஒரு உலகம் வேணுமே !

Harani சொன்னது…

சுந்தர்ஜி...

அருமையான பதிவு. நீங்கள் செய்வதோடு நாமும் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். பல நல்ல கவிதைகளை அறிமுகம் செய்வதுகூட ஒரு படைப்பாளனின் தரத்தை அடையாளப்படுத்துவதாகும். திரு நாகா..சைக்கிள்..இரா.எட்வின்..திரு...போன்று பலருடைய வலைத்தளங்களுக்குப் புகுந்து அள்ளிக்கொண்டு வந்து கடைபரப்புவோம் அவை விலையற்றது. தொடர்ந்து நானும் உங்களைத் தொடர்கிறேன் இனி. நன்றிகள்.

இரசிகை சொன்னது…

rusi....:)

நிலாமகள் சொன்னது…

க‌டைசி இரு வ‌ரிக‌ளின் காத்திர‌ம் வாச‌லுக்கு செல்ல‌ விடாம‌ல் சாள‌ர‌த்திலேயே அமிழ்த்துகிற‌து. ந‌ல்ல‌ க‌விதை; ந‌ல்ல‌ க‌விஞ‌ர்; ந‌ல்ல‌ அறிமுக‌ம் ஜி!

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

''மனம் உற்சாகமடைந்துள்ளது''நன்றி சுந்தர்ஜி..உங்கள் புரிதலுக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி
..வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...