குருவைத் தேடி வந்தான் அந்த இளைஞன்.
‘‘குருவே! என்னால் மகிழ்ச்சியாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது.மகிழ்ச்சியை எங்கிருந்து பெறமுடியும்?” என்றான்.
‘‘அப்படியா?அப்படி என்ன கவலை உனக்கு’’
‘‘என் பக்கத்து வீட்டுக்காரன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். எந்தக் கவலையுமில்லை அவனுக்கு.அதுதான் எப்படி என்று தெரியவில்லை.. என்னாலும் அப்படி இருக்க முடியாதா?’’
குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.
‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கின்றன. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன ஆயிற்று? என்று சொல்”
என்றார்.
குரு சொன்னபடியே செய்தான் அந்த இளைஞன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.
‘‘குருவே!அவன் நிம்மதியே போச்சு. ஆனால் அவனை இப்படிப் பார்த்தபின்புதான் எனக்கு நிம்மதி” என்றான்.
”அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே? அப்புறம் எப்படி நிம்மதியிழந்தான்?”
”அதுதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான்.
ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும் கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’
‘‘அவனுடைய தேடல் ஓரிரு நாளில் முடிந்து பழைய நிலைக்கு அவன் திரும்பிவிடுவான். ஆனால் உன் நிலை அபாயகரமானது. அவனை வைத்து உனக்குத்தான் இந்தப்பாடம். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால் நிம்மதி போய் விடும். புரிகிறதா?’’ என்றார் குரு.
சட்டென்று மின்னல் வெட்டியது நிம்மதியைத் தேடி குருவிடம் வந்தவனுக்கு.
எதை இழந்திருந்தாயோ
அதை நீ
பெறுவதும்
எதைப் பெற்றிருந்தாயோ
அதை நீ
இழப்பதும்
இன்னொருவரால்
அல்ல
என்றுணரும்போது
இழக்கவும் பெறவும்
எதுவுமிருக்காது.
ஞானத்தால் பெற்ற
நிம்மதியின் மெத்தையில்
துயிலும்போது
துயர் இருக்காது.
13 கருத்துகள்:
இழப்பதும் பெறுவதும் இன்னொருவரால் அல்ல
ஞான மெத்தையில் துயிலும்போது
துயர் இருக்காது
வெறும் வார்த்தைகள் இல்லை இவை
துயரில்லா வாழ்வுக்கான சூத்திரங்கள்
நன்றும் தீதும் பிறர் தர வாரா, என்ற ரமணி அவர்களின் வலைப்பூ முகப்பு நினைவுக்கு வந்தது.சீரிய கருத்துக்களை வெகு நேர்த்தியாகச் சொல்கிறீர்கள். வாழ்துக்களும் பாராட்டுக்களும், சுந்தர்ஜி.
கொண்டுவந்தோர் எவருமில்லை
என்ன கொண்டுச்செல்வோர்
அவனிடத்தில் அன்பிருக்கும் இடமத்தில்
அவனிருக்க நம்முள் அலைந்தோடி
அலைந்தோடி ஆர்பரிப்பதேனோ ......
பணம் இல்லாதிருப்பவனை விட, நிறையப் பணத்தோடு வாழ்பவன் தான் - அந்தப் பணம் எப்போது தன்னை விட்டுப் போகும் என்ற நிலமையில் ஐயப்பாட்டுடன் இருந்து மனக் குழப்பத்திற்கு ஆளாகிறான்.
உங்கள் இடுகையில் தத்துவக் கதையின் இறுதியில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல துயரங்களைக் களைகின்ற போது தான் வாழ்வில் பல சிறப்புக்களை அடைய முடியும் என்பது தான் இன்றைய அனைவரது வாழ்விற்கும் தேவையான விடயமாக உள்ளது.
நாம்தான் நம்முடைய இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணம்
என்றோ கேட்ட கதையே என்றாலும்
இன்றோ சுந்தர்ஜி நினைவூட்டியது
கதையும் அருமை
கருத்தும் அருமை
//இழப்பதும் பெறுவதும்
இன்னொருவரால் அல்ல
அடுத்தவன் சந்தோஷமாக இருக்கிறான்
அது தான் என் கவலை
அவன் நிம்மதியில்லாமல் ஆனான்
இப்போது நான் நிம்மதி ஆனேன்//
அருமை, அருமை.
//ஞான மெத்தையில்
துயிலும் போது
துயர் இருக்காது//
ஆமாம். ஞானம் வந்துவிட்டால் அல்பத்தனம் தொலைந்துவிடுமே!
பாலிருக்கும் பழமிருக்கும் ...........பசியிருக்காது
பஞ்சனையில் காற்று வரும்
...........தூக்கம் வராது
பாடலை என் வாய் முணுமுணுக்கிஅது.
நல்ல பதிவு. பாராட்டுக்கள். நன்றி.
ஞான மெத்தை! ரசித்தேன் ஜி! ;-)) ஜென் குருவாகவே ஆகிவிட்டீர்கள்! ;-))
ஞானத்தால் பெற்ற
நிம்மதியின் மெத்தையில்
துயிலும்போது
துயர் இருக்காது.
அஞ்ஞானத்தை
அழிக்கும்
அற்புதம்
சொல்லும் கதையும்
கவிதையும்
மனதை
ஆசையை - உங்களின்
சொல்வழியே
நல்வழிப்படுத்துகிறது
நன்றி அண்ணா
99 பாலிசி என்று இதற்கு ஒரு பெயரும் உண்டு.. இந்தக் கதையில் 9 ஆகச் சுருக்கினாலும் வீர்யம் குறையவில்லை..
வாழ்க்கைக்கு தேவையான கருத்து.
நான் படித்த ஜென் கதைகள் எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இந்தக் கதையை முன்பே வாசித்த தருணத்தில் நிற்கிறேன். உங்களுக்காக ஒரு ஜென் கதை.
ஒரு சீடன் குருவிடம் கேட்டான். நான் பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டால் மதத்தைப் புறக்கணித்தவன் ஆவேனா?
இல்லையே என்றார் குரு.
மேலும் சிறிது ஈஸ்ட் சாப்பிட்டால்..சீடன் கேட்டான்.
தாராளமாக சாப்பிடலாம் என்றார் குரு.
மேலும் சிறிது நீரை உட்கொண்டால் சீடன் கேட்டான்.
அதிலொன்றும் தவறில்லை என்றார் குரு.
சீடன் இறுதியாகக் கேட்டான்.
இவை மூன்று சேர்ந்ததுதானே பேரிச்சம்பழ மது? அதைமட்டும் ஏன் அருந்தக்கூடாது?
குரு கேட்டார்.
ஒருபிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் வலிக்குமா?
வலிக்காது என்றான் சீடன்.
மேலும் சிறிது நீரை ஊற்றினால்...?
அதுவும் வலிக்காது என்றான் சீடன்.
குரு சொன்னார். இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?
என் மண்டை பிளந்துவிடும் என்றான் சீடன்.
உன் கேள்விக்கான விடை கிடைத்துவிட்டது என்றார் குரு.
நன்றி சுந்தர்ஜி.
ஞானமெத்தை வசீகரிக்கிறது...
நாமே தான் எல்லாம்.. நம்மால் தான் எல்லாம்
எமக்கு நாம்தான் எதிரியும் நண்பனும் !
மகிழ்ச்சியோடு வாழ்ந்தவனின் வாசலுக்கு வந்த ஒன்பது பொற்காசுகள், ஏழரையை இழுத்து வந்த கதை அருமை.
எனக்கு இது ஏன் ராஜாவின் கூட்டாளி சாதிக் பாட்சாவை நினைவுக்குக் கொண்டு வருகிறது?
கருத்துரையிடுக