மழைமேகத்தைத் தெரியாதவர்கள் இருக்கலாம். காளமேகத்தைத் தெரியாதவர்கள் இருக்கமுடியாது.
ஒரே கவிதை இரண்டு பொருள். சிலேடை இவரின் ஆயுதம். சிலேடையைக் கம்பர், கடிகைமுத்துப் புலவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர் போன்றவர்கள் உபயோகித்திருந்தாலும் வசையும் எள்ளலும் இயல்புமாய் இவரை விடத் தமிழில் அற்புதமாக உபயோகித்தவர்கள் யாரும் இருந்ததில்லை.
இவர் விளையாட்டுக்குச் சொல்கிறாரா வினையாய்ச் சொல்கிறாரா என்று ஒவ்வொரு பாட்டுக்கும் பதற வைக்கும் சில்மிஷர்.
இவரின் பெற்றோர் வைத்த பெயர் வரதன். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கும்பகோணம் தந்த தமிழின் பெருங்கொடை. தாயுமானவருக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்.
ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த இவர் திருவானைக்கா கோயிலுக்கு வரும் முன்னர் ஸ்ரீரங்கம் கோயில் மடப்பள்ளியில் பரிஜாரகராய் இருந்தார். திருவானைக்கா கோயில் தேவதாசியிடம் கொண்ட மையலால் அவளை மணந்து சைவர் ஆனார். தினமும் ஆலயத் திருப்பணிகளை இருவரும் செய்து வந்தனர்.
ஒருநாள் அர்த்தஜாம வழிபாட்டின்போது வரதன் மனைவி மோகனாங்கி நாட்டியம் ஆடும் முறை வந்தது. தான் நாட்டியம் ஆடிவிட்டுத் திரும்ப நேரம் ஆகும் என்பதால் கோயில் மண்டபத்திலேயே கணவனைக் காத்திருக்கச் சொல்லி இருந்தாள் மோகனாங்கி. தன் வேலைகள் முடித்து மண்டபத்திற்கு வந்து காத்திருந்த வரதன் அசதி மிகுதியால் தூங்கிவிட்டார்.
நாட்டியம் முடிந்து வந்து குரல் கொடுத்துப்பார்த்த மோகனாங்கி கணவனை அழைத்தும் வராத காரணத்தால் அவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார் என நம்பி வீடு சென்றாள்.
அந்த மண்டபத்தில் வரதன் தனியே இருக்கவில்லை. அம்பிகையின் அருளை வேண்டி ஒரு பண்டிதரும் இரவு பகல் பாராமல் தவம் செய்துகொண்டிருந்தார். ஞானம் வேண்டித் தவம் செய்த அவருக்கு ஞானம் கொடுக்க எண்ணிய அம்பிகை அங்கே அப்போது வந்தாள்.
தூங்கிக் கொண்டிருந்த வரதனுக்குத் தூக்கிவாரிப்போட்டது. என்ன திடீரென சலங்கைச் சத்தம்? ஒருவேளை மோகனாங்கியா? எனப் பார்க்கக் கால்களில் சிலம்பும், பாடகங்களும் அணிந்து ஒரு பெண் நடக்கும் ஒலி கேட்டது.
வரதன் பார்த்துக் கொண்டே இருந்தார். அப்போது ஒரு அழகான சின்னஞ்சிறு பெண் யோகநிலையில் இருந்த பண்டிதரை எழுப்பினாள். பண்டிதர் அருகில் சென்று தன் வாயில் இருந்த தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டே அவர் வாயைத் திறக்கச் சொன்னாள்.
அம்பிகையை எதிர்பார்த்திருந்த பண்டிதர் ஒரு சிறு பெண் வந்து தன் எச்சில் தாம்பூலத்தைத் தன் வாயில் துப்ப வாயைத் திறக்கச் சொல்கின்றாளே என எண்ணிக் கோபத்துடன் அவளைத் திட்டி அனுப்பினார்.
திரும்பிச் செல்ல முயன்ற அம்பிகையோ தூணில் சாய்ந்து அரை உறக்கத்தில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வரதனைக் கண்டாள். ஒன்றும் புரியாமல் வாயைத் திறந்த வரதனின் வாயில் அம்பிகை தாம்பூலத்தை உமிழ்ந்தாள்.
அன்று முதல் சாதாரண வரதன் கவி காளமேகம் ஆனார். அனைத்து வகைக் கவிதைகளிலும் வித்தகராய் விளங்கிய காளமேகம் அகிலாண்டேஸ்வரியை சரஸ்வதியாகவே பாவித்து சரஸ்வதி மாலை என்னும் நூலைப் பாடினார். திருவானைக்கா உலா, சமுத்திர விலாசம், தனிப்பாடல்கள், யமகண்டம் என்ற பாடல் தொகுப்புகள் காளமேகத்தால் பாடப் பட்டவை.
காளமேகம் கலக்கிய சில பாடல்களை இன்றைக்குப் பார்க்கலாம். அவற்றின் ஆச்சர்யமே 15ம் நூற்றாண்டில் இத்தனை எளிமையாய் எழுதப்பட்ட மொழியும் அவற்றின் குதர்க்கமான மற்றொரு பக்கமுமே ஆகும்.
தமிழின் “க’ என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலை காளமேகத்தைப் பாடச்சொல்ல உடனே காளமேகம் பாடுகிறார்-
காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா.
கூகை என்றால் ஆந்தையை குறிக்கும். காக்கையானது பகலில் கூகையை வெல்ல முடியும். கூகையானது இரவில் காக்கையை வெல்லமுடியும். கோ எனும் அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். எதிரியின் பலவீனமறிந்து, கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும்வரை காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூடக் கையாலாகிவிடக்கூடும்.
இந்தப் பாடலைப் பாருங்கள்.
மாட்டுக்கோன் தங்கை மதுரைவிட்டுத் தில்லைநகர்
ஆட்டுக்கோ னுக்குப்பெண்டு ஆயினாள்; கேட்டிலையோ?
குட்டி மறிக்கஒரு கோட்டானையும் பெற்றாள்
கட்டிமணிச் சிற்றிடைச்சி காண்!
இந்த வெண்பாவை மேலோட்டமாகப் பார்க்கும்போது வரும் அர்த்தம்:
மாட்டுக்கோனாருடைய தங்கை ஒருத்தி மதுரையைவிட்டுச் சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோனாருக்கு மனைவியானாள். அங்கு குட்டிகளை மறித்து மேய்க்க அந்த அலங்கார மணிகட்டிய சிறிய இடைச்சி கோட்டானைப் போன்ற ஒரு பிள்ளையைப் பெற்றாள்.
இனி சிலேடையின் மறுபக்கம்:
மாட்டுக்கோன் – மாடுகளின் மன்னனான கோபாலனின் தங்கை மீனாட்சி மதுரையை விட்டு சிதம்பரத்தில் உள்ள ஆட்டுக்கோன் – ஆடலரசனான நடராசபெருமானுக்கு மனைவியானாள். கோட்டானை என்பது கோடு – ஆனை எனப்பிரித்தால் ஒற்றைத் தந்தமுள்ள விநாயகரை குட்டிமறிக்க – நாம் குட்டிக்கொண்டு வணங்குவதற்குப் பெற்றாள்.கட்டிமணி சிற்றிடைச்சி – அலங்கார மணிஅணிந்த சின்ன இடையுள்ள மீனாட்சி.
எத்தனை அருமையான விளக்கம்?
அடுத்து பெருமாளின் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது இப்பாடல்.
பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்!
கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதையும் எத்தனை கிண்டலாய் நேரடியான தமிழில்? இன்றுள்ள தமிழில் பாராட்டுவதானால் ”சான்ஸே இல்ல” .
ஒரு நாள் நாகப்பட்டினத்திற்கு செல்லும் காளமேகத்திற்கு பசி பிய்த்தெடுக்கிறது. உணவுக்காக சத்திரத்தைத் தேடி அலைந்து இறுதியில் “காத்தான்” என்பவரின் சத்திரத்தைப் பார்க்கிறார். வேலையெல்லாம் முடித்துவிட்டு சமையற்காரர்கள் உறங்கிக் கொண்டிருக்க, அவர்களை எழுப்பி தன்னுடைய பசியை சொல்கிறார்.
சமையற்காரர்கள் தூக்கக் கலக்கத்தில் உலையேற்றி பொறுமையாகச் சமைக்கின்றார்கள். இருப்பினும் காளமேகத்துக்கோ பசி அதிகமாகச் சத்தமாக இப்படிப் பாடுகிறார்,
“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசிவரும் – குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.”
காளமேகத்தின் வசை காலம் கடந்து நிற்குமென பயந்த அந்தச் சத்திரத்தின் உரிமையாளர் காளமேகத்தை விசேஷமாகக் கவனித்து சேவை செய்து உணவு படைத்துவிட்டு அந்தப் பாடலைக் கைவிடுமாறு கேட்க.
“ஊரெல்லாம் பஞ்சத்தால் அரிசி அஸ்தமித்துப் போனாலும், உன்னிடத்தில் தானமாய் அரிசி வந்து நிற்கும். அதைக் குத்தி உலையிட்டு பரிமாற ஊரின் பசியடங்கும். அந்த அன்னத்தின் வெண்மை கண்டு நிலவும் வெட்கப்படும்” என வேறு பொருள் சொல்லி மகிழ்ச்சியோடு பாடலுக்கு விளக்கம் தருகிறார்.
இன்னொரு தடவை காளமேகப் புலவர் திருமலைராயன் என்ற மன்னனிடம் சென்று பாடிப் பரிசு பெறலாம் என்று எண்ணி அவரைக் காண வருகிறார். வழியில் வளமான அவன் நகரத்தைப் பார்த்து பூரித்து அரண்மனை வந்து சேர்ந்தார்.
அரண்மனையில் திருமலைராயனோ தன் ஆஸ்தானக் கவிஞர்களின் பேச்சில் வயப்பட்டு காளமேகப்புலவரை சரியாக மதிக்கவில்லை. உட்கார இருக்கை அளிக்காமல் இருக்க காளமேகப்புலவர் சரஸ்வதியைத் துதிக்க அரசனின் சிம்மாசனம் வளர்ந்து புலவருக்கு மன்னருக்கு சரிசமமாக இடமளித்தாக வரலாறு சொல்கிறது.
அதையும் பொருட்படுத்தாது தன் ஆளுமையைக் காட்டி ஆச்சர்யப்படுத்தி அவர்களின் தவறை உணரவைக்க எண்ணினார் காளமேகம்.
அப்போது சிலேடை பாடக் கோரி தலைப்பு அளிக்க காளமேகப்புலவர் உடனடியாகப் பாடியவை.
பெரிய விடம் சேரும் பித்தர் முடிஏறும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் – எரிகுணமாம்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எலுமிச்சம் பழம்
பாம்பு:
பெரிய விடம் சேரும் – மிகுதியான விஷம் உடையாதாயிருக்கும்
பித்தர் முடிஏறும் – பித்தனான சிவனின் திருமுடியில் இருக்கும்
அரி யுண்ணும் – காற்றைப் புசிக்கும்
உப்பும் -அதனால் உடல் உப்பி இருக்கும்
மேலாடும் – மேலாக தலை தூக்கி ஆடும்
எரிகுணமாம் – கோபமான குணத்தினை உடையதாயிருக்கும்
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எலுமிச்சம் பழம்
எலுமிச்சை:
பெரிய விடம் சேரும் – பெரியவர்களிடத்து கொடுக்கப்படும்
பித்தர் முடிஏறும் – பித்துப் பிடித்தவனின் தலையில் தேய்க்கப்படும்
அரியுண்ணும் உப்பும் மேலாடும் – ஊறுகாய் தயாரிக்கும்போது அரியப்பட்டு உப்பு மேல் தூவப்பட்டிருக்கும்
எரிகுணமாம் – அதன் சாறு பட்டால் எரியக்கூடிய தன்மை கொண்டது
தேம்பொழியும் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பு எலுமிச்சம் பழம்.
மற்றொரு சுவாரஸ்யமான பாடல்.
காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது
நீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்
வாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்
மோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.
வானில் இருக்கையில் உனக்குக் கார் என்றும் நிலத்தில் வீழ்கையில் நீர் என்றும் ஆயர்குடிப் பெண்களின் கைபட்ட பின்பு மோர் என்று மூன்று பெயரோ உனக்கு? என்று மோர் பருகியபின் கிண்டலாய்ப்பாடிய பாடல் இது.
காளமேகத்தின் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்-சாமர்த்தியம்-நக்கல்-கிண்டல்-புலமை தமிழில் அவருக்கு முன்னும் பின்னும் இத்தனை ஆழமாய் வெளிப்படாமல் போனதுதான் நம் பெரிய சோகம் என நினைக்கிறேன்.
இப்போதே கொஞ்சம் சந்தேகம். பாதியிலேயே நீளத்தைப் பார்த்துப் பல பேர் ஓடிப்போய்விட்டதால் மற்ற பாடல்களையெல்லாம் சமயங்கிடைக்கும்போது எடுத்துவிடலாம் என நினைக்கவே வுடு ஜூட்.
13 கருத்துகள்:
நான் இப்பொழுதுதான் தங்கள் பதிவின் உதவியால் காளமேகப் புலவர் பற்றி அறிந்துகொண்டேன் ... மேலும் அறிந்து கொள்ள ஆவல் ... தமிழியின் சிறப்பே தனிதான் அண்ணா ...
காளமேகப்புலவர் பற்றிய பல செய்திகள் தங்கள் பதிவால் நன்கு அறிய முடிந்தது. அவரின் சிலேடைப்பாடல்களும் அவற்றின் விளக்கங்களும் அருமையாகவே தங்களால் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நன்றி. பாராட்டுக்கள்.
பாடல்கள் சிலேடைகளை விட எனக்கு
//திருவானைக்கா கோயில் தேவதாசியிடம் கொண்ட மையலால் அவளை மணந்து சைவர் ஆனார். //
என்ற தகவல் ஆச்சர்யமாக இருந்தது.
அதைவிட ஆச்சர்யம்:
//திரும்பிச் செல்ல முயன்ற அம்பிகையோ தூணில் சாய்ந்து அரை உறக்கத்தில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வரதனைக் கண்டாள். ஒன்றும் புரியாமல் வாயைத் திறந்த வரதனின் வாயில் அம்பிகை தாம்பூலத்தை உமிழ்ந்தாள்.
அன்று முதல் சாதாரண வரதன் கவி காளமேகம் ஆனார். //
ஆஹா, தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டிய வேளை வந்தால் எப்படியாவது கிடைத்துவிடும், என்ற நம்பிக்கை பிறக்கிறது, சுந்தர்ஜி, சார்.
சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.
தங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்கள்
அதிகம் படித்திராதவைகளாக இருப்பதாலும்
வழக்கம்போல் தாங்கள் சொல்லிச் செல்லும் விதம்
சிறப்பாக இருப்பதாலும் பதிவின் நீளம் ஒரு
பொருட்டாகத் தெரியவில்லை
சட்டென முடித்ததைபோல்தான் இருந்தது
பதிிவின் நீளத்தை பதிவே முடிவு செய்யுமாறு
பதிவை தொடர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நிஜமா சான்ஸே இல்ல..
காளமேகப் புலவரின் நையாண்டியும் அச்சமின்மையும் பல கதைகளில் கேட்டு பிரமித்திருக்கிறேன்.
உங்களின் பதிவு சரியான நினைவூட்டல்.
இந்த கதை நான் இது வரைக்கும் கேட்டதே இல்லை. மஹா interesting ஆ இருந்துது. எங்கூர் காரர்- னு தெரிஞ்சப்ரம் ஜாஸ்தி interesting ஆ இருந்துது! :)
சிலேடை -னா என்ன-ன்னே இப்போ இத படிச்ச பிற்பாடு தான் தெரிஞ்சுது... "chance ஏ இல்ல"!
அந்த 'க' கவிதை பொருள்-- பஞ்சதந்திர கதைகள்-ல மூணாவது தந்த்ரம்- "Of crows and owls" (Kākolūkīyam) அ நினைவு படுத்தித்து...
உங்களுக்கு சீக்கரமாகவே நிறைய நிறைய சமயம் கிடைக்க வேண்டும்-னு பிரார்த்திக்கறேன்!
நீண்ட நாட்கள் கழித்து காளமேகப் புலவரின் பாடல்களையும் அவர் வரலாற்றியினையும் படிக்கக் கிடைத்தது... என் அம்மா அடிக்கடி சொல்லும் பாடல் நீங்கள் சொன்ன “காரென்று பேர் படைத்தாய்” என்ற கிண்டலான பாடல்.....
இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் ஜி! எங்களுக்கும் இந்தத் தெவிட்டாத தேன்தமிழ் பருக ஆசைதான்.
நல்ல தகவல்கள்..பகிர்வுக்கு நன்றி
முதல் மூன்று பாடல்களும் காளமேகத்தின் வரலாறும் தங்களால் அறியக் கிடைத்தது. நன்றி ஜி!
தற்காலத்தில் சிலேடைக்கு எடுத்துக் காட்டாக இருந்தவர் கி.வ. ஜகன்னாதன் என்பார்கள். பதிவைப் படித்தவுடன் ஒரு அரசவையில் கவி தெரியாதவர் அரசனிடம் பரிசில் வாங்க காதில் கேட்ட சில வார்த்தைகளை எழுதி கவிதை என்று கூறி பரிசு பெற முயன்றபோது அரசவையிலிருந்து விரட்டப் பட்டார் என்றும் அவர் எழுதியதையே நல்ல கவிதை என்று உணர்த்தும் வகையில் பொருள் கூறினாராம் வேறொறு புலவர். பாட்டு சரியாக நினைவுக்கு வரவில்லை. அதில்” காவிரையே கூவிரையே, கன்னா, பின்னா, மன்னா தென்னா...என்று வருவதாக நினைவு.
என்ன செய்ய . இதனைப் படிப்பவர்கள் தெரிந்தவர்கள் தெளிய வைக்கலாம் பதிவிலிருந்து தெரியாத விஷயங்கள் பல தெரிந்து கொண்டேன். நன்றி.
நானறிந்த சிலேடை.
புலவரின் இறுதி நேரத்தில்
உற்றார் ஒரு துணியில் பாலை நனைத்து அவரது வாயில் ஊட்ட அதனை புறக்கணிக்க, அருகிருந்தவர் "பாலும் கசந்ததோ' என வினவ, புலவர் கூறுகிறார்,"பாலும் கசக்கவில்லை, பிழிந்த துணியும் கசக்கவில்லை". படித்த இடம்,வகுப்பு, ஆசிரியர் என எல்லாம் மறந்து விட்டன இந்த செய்தி மட்டும் பசுமரத்தாணியாய். நன்றி சுந்தர்ஜி உங்களின் பன்முக அறிவுக்கும் பதிவுகளுக்கும்.
"தமிழ் மேகம்" கொ(சு)ட்டும் உங்களின் தமிழ் மோகம்.
நண்பரே!
அடியேன் சண்முகதாஸ். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன் "கண்ணதாசன்" இலக்கிய இதழின் சிறப்பு வெளியீடுகளாக பண்டைய தமிழ் பாடல்களை வாசகர்களுக்கு படைத்திருந்தார்கள். மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு வலைத்தளம் மூலம் அதை மீண்டும் தமிழ் அன்பர்களுக்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி
kshanmughadas@gmail.com
நண்பருக்கு, கிட்டத்தட்ட 3௦ ஆண்டுகளுக்கு முன் "கண்ணதாசன்" இலக்கிய இதழின் சிறப்புப்பதிப்புகளாக இது போன்ற விலைமதிக்கமுடியாத பாடல்களை படித்து இப்போது அதை வலைத்தளத்தில் காணும்போது மிக்க ஆனந்தமாக இருக்கிறது. இனியும் எதிர்பார்க்கிறேன்.
நன்றி. வாழ்த்துக்கள்
kshanmughadas@gmail.com
கருத்துரையிடுக