அந்தநாள் அம்மா என்ன ஆனந்தமே - II
===============================
அந்த நாட்களில் யார் வீட்டுக்கும் சமையல் எரிவாயு வந்திருக்கவில்லை. ஆகவே அடுப்பு சகட்டுமேனிக்கு நான்கு வகைப்பட்டது.மண்ணெண்ணை பம்ப் ஸ்டவ் அல்லது விறகு அடுப்பு அல்லது உம்ரா திரி ஸ்டவ் அல்லது குமுட்டி என்கிற கும்மட்டி.
பம்ப் ஸ்டவ் எனப்படுவது சைக்கிளுக்குக் காற்றடைப்பது போல நல்ல அழுத்தத்தில் எண்ணையின் வெளியீட்டில் ஜிவ் என்ற சத்தத்துடன் அடுப்பு எரியும். பற்ற வைக்க கக்கடா என்ற குறடு வடிவ வஸ்து உதவியது. அதுக்கு அழுத்தம் கொடுக்கச் சின்னதாக வலது காலோரம் (அடுப்புக்கு) ஒரு குமிழ் போல உண்டு. நடுநடுவே, நடுவே இருக்கும் எண்ணை வரும் பாதையை ஒரு சாண் நீளத்தில் இருக்கும் ஒரு ஆயுதத்தின் நுனியில் மாட்டப்பட்டிருக்கும் பின்னால் முன்னால் குத்தி அடைப்பை நீக்க வேண்டும்.
அதிகமாக ப்ரஷர் அடித்து அது வெடித்து கல்யாணமாகி வந்த பல புதுப்பெண்கள் செத்துப்போனதற்கு இந்த அடுப்பும் வரதட்சிணையும் கூட்டுக்களவாணிகளாக “ஸ்டவ் வெடித்து இளம்பெண் மரணமாகி’ தினத்தந்தியின் தலைப்புக்கும் தாசில்தார் வருமானத்துக்கும் உபயோகமாக வெகுநாட்கள் இருந்தன.
இன்னும் சில மூடப்பட்ட வீடுகளின் மங்கிய வெளிச்சத்தில் ஜோஸ்யம் சொல்லவும் உபயோகப்பட்டன. சில ப்ராக்யன்கள் ஸ்டவ் பேசியதாய்ச் சொன்ன அபாண்டமான புரளியைக் கேட்டு பூமி பிளக்காமல், அதற்குப் பதிலாக 2004ல் சுனாமியை ஏவி விட்டது என்று கூட்டங்கூட்டமாகப் பேசிக்கொண்டார்கள். நின்று கொல்லும்.
அடுத்தது விறகு அடுப்பு. சிமெண்டாலோ மண்ணாலோ அவரவர் வசதிக்கேற்ப வாயில்(அடுப்பின்) விறகு நுழையும் அளவு முக்கட்டி வைத்து அடுப்பு காணப்படும். மண்ணெண்ணையில் தோய்த்த வரட்டி விள்ளலை(ஒரு வரட்டியில் கால் பாகம்) அடுப்பின் வாய்களுக்குள் திணித்த விறகுகளுக்கு நடுவே பாட்டி ஒளித்து வைப்பாள்.
அதன் பின் வரட்டியில் நெருப்பிட்ட பின் தன் வேலையை விறகு தொடங்கும். வரட்டி நனைந்துபோன தருணங்களில் காகிதம். நெருப்பு அதிகமாகும் போது விறகை முன்னிழுத்து பின்னிழுத்து அட்ஜஸ்ட்மெண்ட் எல்லாம் செய்ய வேண்டும்.
விறகு வாங்கும்போது ஏமாற்றப்பட்டிருந்தால் விறகின் தைலம் கன்னா பின்னாவென்று பொங்கிச் சமையலறையில் துர்கந்தத்தை மூக்கிற்கும் கறையைக் கைக்கும் உண்டாக்கி, கண் எரிச்சலையும் வயிற்றெரிச்சலையும் ஒருங்கே உண்டாக்கும்.
உம்ரா திரி ஸ்டவ் மிக சாதுவானது. அதற்கு அழுத்தம் இல்லாது வெறும் நாடாத் திரியின் உபயோகத்தில் தன் திறமையைக் காட்டும் மிதவாதி. யாரையாவது குறித்த நேரத்தில் சோறு போடாமல் பழி வாங்க இதை வாங்க ஆசைப்பட்டார்கள். அவ்வப்போது எரிகிறதா என்று குனிந்து பார்த்தபடியே சிலர் தூங்கிப்போனதுமுண்டு.
நாலாவது மிகவும் ஆசாரமான பாட்டிமாருக்கும், பாட்டி சொல்லே வேதவாக்கு என்று நினைத்த சொல்ப தாத்தாமாருக்கும் உகந்த அடுப்பு கும்மட்டி அடுப்பு. ஒரு இரும்பு வாணலியின் அடியில் சல்லடை போன்ற நெருப்பின் சூடு வரும் வகையில் அமைக்கப்பட்ட ஓர் அமைப்பில் அடுப்புக் கரி நிரப்பி கீழ்ப்பக்கம் போஸ்ட் பாக்ஸ் போல ஒரு ஓபனிங் இருக்கும். அதற்குள் சுருட்டப்பட்ட காகிதத்தைப் பற்ற வைத்து வாயினுள்ளே சொருகி பனைஓலை விசிறியால் பட்பட் என்று முப்பது தடவை ஏர்வாங்கியவுடன் நல்லபிள்ளையாய் நெருப்பாய்ச் சிரிக்கும்.
பொதுவாய் இதில் பால் காய்ச்சிக் காஃபி குடிக்க மாதம் மும்மாரி பொழியும் என்று ஓர் நம்பிக்கை. பல கல்யாண வீடுகளுக்குப் போய் ’நான் மடி’ என்று பே(பீ)த்தும் ஆசாமிகளுக்கும், ஆமாமிகளுக்கும் இந்தக் கும்மட்டி அடுப்பில் வெங்கலப்பானை தனியே ஏற்றப்பட்டு சுட்ட அப்பளம் சகிதம் தனியாக சேவை நடக்கும்.
இந்த நாலுவகை அடுப்பையும் வைத்திருப்பவர்கள் சகல சம்பத்தும் நிறைந்தவர்களாக சமூகத்தில் கருதப்படுவார்கள்.
விறகடுப்புக்கு ஏகப்பட்ட முன்னேற்பாடுகளை வெயில்காலத்தில் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தெருக்களில் மாட்டுவண்டியில் கரடுமுரடாய் விறகுகளையும், மூன்றுகாலும் நடுவில் குருவாயூரப்பனுக்குத் துலாபாரம் கொடுக்கும் பெரிய தராசையும் தூக்கிப் போட்டுக்கொண்டு முண்டாசு கட்டியபடியே மாடசாமித் தேவர் கூடவே வெறகு வெறகு என்று கத்தியபடியே வருவார்.
குண்டு-தூக்கு-அந்தர் என்று தமிழ்நாட்டின் சொலவடைக்கேற்றபடி ஒவ்வொரு வடையும் ஸாரி எடையும் இருக்கும். தராசை நடுத்தெருவில் நிறுத்தி - எப்போதாகிலும் சைக்கிள் மட்டுமே போகும் தெருவில் - ட்ராஃபிக் ஜாம் ஏற்படுத்தியிருக்கிறோமே என்ற சமூக ப்ரஞ்ஞை இன்றி, விறகின் விலை பேரம் பேசி எடைபோட்டு விறகைத் தூக்கிவீசி கோலம் போட மெத்து மெத்தென்று சாணி போட்டு மெழுகியிருந்த முற்றத்தை அலட்சியமாகவும் குரூரமாகவும் பெயர்த்துவிடுவார் தேவர்.
வண்டியையே மிகவும் சரியாக பிள்ளையார் பூஜையில் பிள்ளையாரைக் கோலத்தில் ஆவாஹனம் செய்வது போல கோலத்தின் நடுவில்தான் அலங்கோலமாக நிறுத்தும் அவரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
தேவரின் பெயரைக் கொண்டு ’ஒருவேளை இவர்தான் சாண்டோ சின்னப்பத்தேவராய் இருப்பாரோ?’ என்று தவறுதலாகப் புரிந்துகொண்டோ என்னவோ, பீதியில் அந்த மாடு வியாபாரம் முடிவதற்குள் சத்தங்காட்டாமல் ஒன்றுக்கு ரெண்டுக்கு எல்லாம் முடித்துவிடும்.
பாட்டி தேவரிடம் முற்றத்தைப் பெயர்த்ததற்கும் சேர்த்து விறகின் விலையில் பேரம் பேசி சந்தடி சாக்கில் மாட்டையும் தொந்தரவு பண்ணாமல் காலால் உதையும் வாங்காமல் லாவகமாக சாணியையும் அள்ளி முறத்தில் போட்டு வைத்துவிடுவாள். சிறிது அசந்தாலும் பக்கத்துவீட்டு லோகாம்பா வந்து சாணியை அபகரித்துவிடுவாள் என்பதால் சூடாக மாட்டின் பின்புற சாட்சியாக இந்த சாணி அபகரிப்பு.
மாட்டின் பின்னங்காலில் உதை வாங்காமல் லாவகமாக சாணி அள்ளுவதைப் பார்த்துச் சிரிப்பதைப் பார்த்துவிட்டால் பொத்துக்கொண்டு வரும் கோபம்.
ஏண்டா!அடுப்பு பத்தவைக்க-வாசல் தெளிக்க-வேண்டித்தானே இருக்கு? வாசல்லயே கெடைக்கறத விடமுடியுமா? என்று பதில் சொல்லிபடியே தேவரிடமும் பாட்டியம்மா பாட்டியம்மாதான் என்று சான்றிதழ் வாங்கிவிடுவார்.
அவரின் சான்றிதழ் குடிக்கக் கொஞ்சம் மோருக்கான விண்ணப்பமும் கூட. உள்ளே போய்ப் பாட்டி கொண்டு வரும் மோரை மேலே சிந்தியபடியே குடித்து விட்டு ’நல்லாருக்கணும் பாட்டியம்மா’ என்றபடியே ’காய் காய்’ என்று அவரை அறியாமலே ஹிந்தியில் மாட்டைப் பத்தியபடியே கிளம்புவார்.
அடுத்து பின்னாலேயே வருவார் விறகு பிளக்கலியோ விறகு என்று கோடரியுடன். மல்யுத்தம் போவதற்குப்பதிலாக விறகு பிளக்க வந்துவிடும் அளவுக்கு சரியான வேலையில்லாத் திண்டாட்டம் அல்லது ஆச்சர்யப்படவைக்கும் கட்டுமஸ்து. கூலிபேசிய பின் அடுப்பில் நுழையக்கூடிய அளவில் வெட்டிபோடப்பா என்று அன்றைய பொழுது அதிலேயே போய்விடும்.
சந்தடி சாக்கில் ஃப்ரீயாகவே கிட்டிப்புள்ளும் அவர் செர்வீஸிலேயே தேத்திவிடுவோம். விறகுச் செதில்கள் நட்சத்திரம் போல சிதறிக்கிடக்க வெயிலில் நன்கு மாலை வரை காயும். மாலையில் முன்னறையில் ஏற்றப்பட்டு மறுநாளும் முழுதும் காய வைக்கப்பட்ட பின் பரணில் ஏற்றிவிடுவாள் பாட்டி எனக்குக் கடலைஉருண்டையை லஞ்சம் கொடுத்து. வெட்டிய விறகு பரணில் ஏற்றப்பட்ட மறுநாளிலிருந்து ஒருவாரமாகி விடும் கோலமிடும் முற்றம் பழைய மெத்துமெத்தை அடைய.
10 கருத்துகள்:
கரிக் குமுட்டி, விறகு அடுப்பு, திரி ஸ்டெளவ், பம்ப் ஸ்டெளவ் பற்றிய சாதக பாதகங்கள் அனைத்தையும் விவரித்த விதம் வெகு அழகு.
நடுவில் ஸ்டெளவ் பேச ஆரம்பித்தது என்று புரளி கிளப்பினார்களே! அதையும் நகைச்சுவையாக கொண்டுவந்திருக்கலாம்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.
அடுப்பின் வகையும் விவரிப்பும் அருமை
அந்த மண்ணெண்ணெய் அடுப்பு வந்த பிறகுதான்
ஆண்கள் கொஞ்சம் அடுப்படிபக்கம் வர
ஆரம்பித்தார்கள் என நினைக்கிறேன்
இந்த மாற்றத்தை ஏற்காத பாட்டிமார்கள்
பண்ணிய அலும்புகள்,உப்பு போடாது இறக்கினா
பத்து இல்லை என புதிதாக கண்டுபிடித்த
கண்டுபிடிப்புகள் எல்லாம் எழுதினால்
பதிவு தாங்காது
கறுப்பு வெள்ளையில் அந்த நிறைவான
கூட்டுக் குடும்பம் பார்க்க கொள்ளை அழகு
நல்லா சிரிக்க வச்சிங்க. //பொதுவாய் இதில் பால் காய்ச்சி காஃபி குடிக்க மாதம் மும்மாரி பொழியும் என்று ஓர் நம்பிக்கை// class! அதோடு மரப்பொடி அடுப்பொன்று வேறு இருந்தது. அதில் ஒரு பாட்டிலைச் சொருகி மரப்பொடி அடைத்து பிறகு லாவகமாக எடுப்பார்கள். அதே ஒரு கலை. அப்புறம் எட்டிப் பார்க்கும் அந்த குட்டி குழந்தை வெகு அழகு. நல்ல சரளமான நகைச்சுவையோடான ஒரு energetic எழுத்து. பாராட்டுக்கள்.
அந்த நாள் சாதனங்கள்.. அந்த நாள் நினைவுகள், அந்த நாள் உறவுகள், அந்த நாள் மனிதர்கள்.... உருக்கி விட்டீர்கள் அன்பு சுந்தர்ஜீ !
உங்களிடமிருந்து வித்தியாசமான உணர்வுப்பூர்வமான பதிவு அண்ணா
அமர்க்களம்
அ.அ.ஆ. ரெண்டு எடிஷனும் படித்தேன். அந்தக் காலங்களுக்கு எங்களை அழைச்சுக்கிட்டுப் போறீங்க..
குமுட்டி அடிப்புல என் பாட்டி சக்கரவள்ளிக் கிழங்கு சுட்டு குடுத்துருக்கா! தேவாமிர்தமா இருக்கும்.
கத்திரிக்கா அந்தக் கரியோடு சேர்ந்து குமிட்டில கிடந்தா... தொகையல் சாதம் இன்னும் நாலு வாய் கூடப் போகும்...
அற்புதம்.. ;-))
நான் சில நாட்கள் பிரயாணம் செல்கிறேன். வந்த பிறகு கவனித்துப் படித்து கருத்து கூறுகிறேனே.
//குமுட்டி அடிப்புல என் பாட்டி சக்கரவள்ளிக் கிழங்கு சுட்டு குடுத்துருக்கா! தேவாமிர்தமா இருக்கும்.
கத்திரிக்கா அந்தக் கரியோடு சேர்ந்து குமிட்டில கிடந்தா... தொகையல் சாதம் இன்னும் நாலு வாய் கூடப் போகும்...//
இரண்டுமே நானும் சாப்பிட்டுருக்கேன்.. அதுவும் சக்கரை வள்ளி கிழங்கை இதில் சுட்டு சாப்பிட்டால்.. தேவாம்ருதம்!
கட்டுரை படித்ததில் வந்த Nostalgia -விற்கு ஈடு இல்லை!
நல்ல நினைவுகள்... அவை கிளறிப்போன விஷயங்கள்...
என் அம்மாவின் அத்தை எங்களுடன் தான் இருப்பார்கள். அவர்கள் இந்த குமுட்டி [கும்மட்டி] அடுப்பில் வெங்கல உருளி வைத்து செய்து கொடுக்கும் அரிசி உப்புமா சுவை இத்தனை வருடங்களுக்குப் பிறகும் நாவிலும் நினைவிலும் இருக்கிறது. அந்த சுவை வேறு எந்த அடுப்பில் சமைத்தாலும் வரவேயில்லை....
நினைவுகளை மீட்டியமைக்கு நன்றி.
மிகவும் ரசித்து நெகிழ்ந்தேன் ஜி
கருத்துரையிடுக