நல்ல ரசனையும் கூர்மையும் கொண்ட காளமேகத்தின் இன்னும் சில பாடல்களை இன்றைக்குப் பார்க்கலாம்.
முதல் பாடலை மேலோட்டமாகப் படிக்கும்போது பாம்பை எப்படி வாழைப்பழத்துடன் ஒப்பிட்டு? எனக் குழம்பலாம். நாலு வரிகளில் நறுக்குத் தெறிக்க வைக்கிறார் காளமேகம்.
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது-விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்.
படித்தவுடன் பாம்பின் குணத்தைப் பற்றி எழுதப்பட்ட பாடலாய்த் தோன்றும் இந்த வெண்பா என்ன சொல்கிறது வாழைப்பழம் பற்றி?
நஞ்சிருக்கும் - நைந்துபோயிருக்கும் (பேச்சுவழக்கில்) நஞ்சிருக்கும்
தோலுரிக்கும்_ சாப்பிடும் முன் தோல் உரிக்கப்படும்
நாதர்முடி மேலிருக்கும் - அபிஷேகத்தின் போது சிவனின் சிரசில் வாழைப்பழத்துக்கும் இடமுண்டு
வெஞ்சினத்தால் பற்பட்டால் மீளாது - பல்லில் அரை பட்டால் மீளாது.
எத்தனை அற்புதமான ஒப்பீடு?
அடுத்து தகர வரிசையை மட்டுமே வைத்து எழுதிய கற்பனையின் சிகரமாக இன்னொரு மறக்கமுடியாத பாடல்.
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..
துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது.
இது ஒரு வண்டைப் பார்த்துப் பாடுவதாக அமைத்திருக்கிறார்.
தத்தித் தாது ஊதுதி - தாவிச் சென்று பூவின் மகரந்தத்தை ஊதுகிறாய்
தாது ஊதித் தத்துதி - மகரந்தத்தை ஊதி உண்ட பின் வேறேங்கோ செல்கிறாய்
துத்தித் துதைதி - துத்தி என்று ரீங்கரித்தபடியே அடுத்த பூவிற்குச் செல்கிறாய்
துதைது அத்தா ஊதி - அப்பூவையும் நெருங்கி மகரந்தத்தை உண்ணுகிறாய்
தித்தித்த தித்தித்த தாதெது - இரண்டிலும் தித்திப்பான இருந்த மகரந்தம் எது?
தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது - தித்திப்பான பூ எது? அழகான பூவின் இதழ் எது?
இப்பாடலில் தாது என்னும் சொல் மகரந்தம்,பூ, பூவின் இதழ் மூன்றையும் குறிக்கிறது.
அடுத்த பாடல் யானையையும் வைக்கோலையும் ஒப்பிட்டுக் கலக்கிய சாகசம்.
வாரிக் களத்தடிக்கும் வந்துபின் கோட்டைபுகும்
போரிற் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல் மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலுமால் யானையாம்
வைக்கோல்:
வாரிக் களத்தடிக்கும் – அறுவடை செய்கையில் வாரியெடுத்து களத்துமேட்டில் அடிக்கப்படும்
வந்துபின் கோட்டைபுகும் – அது பின் கோட்டைக்குள்ளே களஞ்சியத்தைச் சேரும்
போரிற் சிறந்து பொலிவாகும் – பெரிய வைக்கோல் போர்களாக சிறப்புற்று அழகாய் விளங்கும்
மதயானை:
வாரிக் களத்தடிக்கும் – பகைவர்களைத் துதிக்கையினாலே வாரி போர்க்களத்தில் அடித்துக் கொல்லும்
வந்துபின் கோட்டைபுகும் – பின்னே பகையரசரின் கோட்டைக்குள் புகும்
போரிற் சிறந்து பொலிவாகும் – இவ்வாறாக போர்த்துறையிலே சிறந்து மேன்மையுடையதாய் விளங்கும்
சீருற்ற – சிறப்புற்ற
செக்கோல் மேனித் திருமலைராயன் – செந்நிறமான மேனியுடைய திருமலைராயனின்
வரையில் – மலைச்சாரலிடத்தில்
வைக்கோலுமால் யானை – வைக்கோலும் மதயானை
யாம்.
மற்றொரு பாடல் முகம் பார்க்கும் கண்ணாடியையும் அரசனையும் ஒப்பிடுகிறது.
யாவர்க்கும் ரஞ்சனை செய்து, யாவர்க்கும் அவ்வவராய்
பாவனையாய், தீது அகலக் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள்ளாக்கி, ஏற்ற ரசத்தால்
சதிருறறால், ஆடி அரசாம்
கண்ணாடி:
யாவர்க்கும் ரஞ்சனை செய்து- அனைவருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கி
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் – யாவரையும் அவரவர்களாகவே காட்டி
தீது அகலக் பார்த்தலால் – தீமை இல்லாது மங்கலப் பொருளாகப் பார்ப்பதால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி – தன்னை பார்க்கும் எதிர் நிற்பவரை தன்னுள் ஆக்கிக் கொண்டு காட்டி
ஏற்ற ரசத்தால் சதிருறறால – தன் பின்னே ஏற்றப் பட்டிருக்கும் ரசத்தால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் – கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்
அரசன்:
யாவர்க்கும் ரஞ்சனை செய்து – எல்லா மக்களுக்கு இன்பம் தந்து
யாவர்க்கும் அவ்வவராய் பாவனையாய் – எவருக்கும் அவர்களுக்கு ஏற்றார் போல் நடந்து
தீது அகலப் பார்த்தலால் – தீமை அகற்றி நன்மை அளிக்க முற்படுதலால்
மேவும் எதிரியைத் தன்னுள்ளாக்கி – தன்னை அணுகும் எதிரியை வென்று தன்னுள்ளாக்கி
ஏற்ற ரசத்தால் சதிருறறால் – பூசப்பட்ட நவரசப் பொருள்களால் சிறப்பு அடைவதால்
ஆடி அரசாம் – கண்ணாடியும் அரசனும் ஒன்றாம்.
இதற்குக் கீழ் வரும் பாடல்கள் மொழியின் அழகை ரசிக்கத் தெரிந்து நேரடியாய்ப் பொருள் காணத் தெரிந்தவர்களுக்கு மட்டும். சில பாடல்கள் பொருளின் துணையையும் தாண்டியவை என எனக்குப் பட்டதால்.
காளமேகத்துக்குக் கடவுளும் ஒன்றுதான் மன்னனும் ஒன்றுதான் பெண்களும் ஒன்றுதான் என்பதால் பாட்டிலுள்ள சுவையை மட்டும் பார்க்க விரும்புகிறேன்.
சிவனைப் பெண்பித்தன் என்று சொல்வதுபோல் சொல்லி அக்காளை வாகனத்தில் காட்சி தரும் அழகை அக்காள் தங்கையின் வார்த்தை உபயோகத்தில் மடக்கியிருப்பதையும் கவனியுங்கள். சபாஷ்.
கண்டீரோ பெண்காள் கடம்பவனத் தீசனார்
பெண்டீர் தமைச் சுமந்த பித்தனார்-எண்டிசைக்கும்
மிக்கான தங்கைக்கு மேலே நெருப்பையிட்டார்
அக்காளை ஏறினாராம்.
வேசியையும் தென்னையையும் ஒப்பிட்டு இந்தப் பாடல்.
பாரத் தலை விரிக்கும் பன்னாடை மேல் சுற்றும்
சோர இளநீர் சுமந்திருக்கும்- நேரே மேல்
ஏறி இறங்கவே இன்பமாம் தென்னைமரம்
கூறும் கணிகையென்றே கொள்.
வேசியையும் பனையையும் ஒப்பிட்டு இந்தப்பாடல்.
கட்டித் தழுவுதலால் கால் சேர ஏறுவதால்
எட்டிப் பன்னாடை இழுத்தலால்-முட்டப் போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்
வேசையெனலாமே விரைந்து.
ரசிகமணி டி.கே.சி. காளமேகத்தைத் தூக்கியடிக்கக் கூடிய சிலேடைக் கவிஞர் ஒருவர் திருநெல்வேலியின் தென்திருப்பேரையில் இருந்திருக்கிறார் என்று தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். அவர் குறித்த விவரங்களையும் தேடிவருகிறேன்.
ஆனாலும் எல்லோராலும் பரவலாய் அறியப்பட்ட காளமேகத்தின் இடம் இன்னும் நிரப்பப்படாமலே உள்ளதாய்த் தான் இப்போதுவரை தோன்றுகிறது.
10 கருத்துகள்:
கலக்கலான கருத்துக்களை அள்ளித்தரும் தாங்களே இன்று எனக்குக் காளமேகப்புலவராகக் காட்சி தருகிறீர்கள், சுந்தர்ஜி சார்.
நன்றி. பாராட்டுக்கள்.
உண்மைதான் சுந்தர் ஜி . காளமேக புலவரின் இடம் அப்படியே இருக்கிறது
காளமேகப் புலவரின் பாடல்களைத் தொடர்ந்து தங்களுக்கு என் நன்றிகள்... இந்த பகுதியில் குறிப்பிட்ட ஒரு சில பாடல்களையும் முன்பே படித்திருக்கிறேன்.... தொடருங்கள்...
சிலேடையில் சிகரம் தொட்ட
சிந்தனை சிற்பி
காளமேகத்தை பற்றி தாங்கள் தங்கள் தரும்
தகவல்களும் விளக்கங்களும் அருமை
தொடருங்கள்
தேன் சுவை தமிழை,
தமிழால்....................
இளம் வயதில் படித்தவற்றை நினைவிற்குக் கொண்டு வந்து விட்டீர்கள் சகோதரர் சுந்தர்ஜி! அற்புதமான சிலேடைக்கவிதைகள்! அதுவும் முதற்பாடல் தீந்தமிழில் தித்திக்கிறது!!
காளமேகப்புலவரின் சிலேடை மனம் மயக்கும் ஓர் அற்புதம். அதை உங்கள் கைவண்ணத்தில் ரசித்தேன்..
இன்னமும் எதிர்பார்க்கும் காளமோகன்
காளமேகத்தை உங்கள் வலைப்பூ வாயிலாக மழையாகப் பொழியவைத்த உங்களுக்கு ஒரு சல்யூட். அற்புதம் ஜி! இன்னும் இரண்டு முறை படிப்பேன். நன்றி. ;-))
//இன்னமும் எதிர்பார்க்கும் காளமோகன்//
ஒரு சின்ன திருத்தம்.
இளங்காள மோகன் !!! ;-))
அந்த வைக்கோல்/யானை கவிதை-- class! என்னப்போல ஒரு சில பேருக்கெல்லாம் இப்படி உங்கள போல யாராவது blog ல இதையெல்லாம் பத்தி எழுதினாதான் தெரியும்! எவ்வளோ அற்புதமான விஷயம், இந்த சிலேடை! ரொம்ப ரொம்ப நன்றி sir-ji, இந்த post கு....!
விட்டுப் போன அத்தனையும் படித்து விட்டேன்.
காளமேகத்தின் கவிதையென்று அச்சில் ஏற்ற முடியாத இன்னும் சில வெவகாரமான கவிதைகளை என் சித்தப்பா சொல்வார். சிறு வயது என்பதால் , வெட்கமாகவும், கொஞ்சம் புரியாமலும் இருந்தது. அக்கவிதைகள் காளமேகம் எழுதியதா,இறந்து போன என் சித்தப்பா எழுதியதா என்று சந்தேகம் வருகிறது இப்போது.யாரிடம் கேட்பது?
கருத்துரையிடுக