உபநிஷத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உபநிஷத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9.6.13

வஜ்ர ஸூசிகா உபநிஷத் - யார் ப்ராம்மணன்?


வஜ்ர ஸூசிகா உபநிஷத் ஆஞ்சனேயருக்கு ராமபிரான் உபதேசித்த 108 உபநிஷத்துக்களில் 38வது.

ஸாம வேதத்தைச் சேர்ந்தது வஜ்ர ஸூசிகா உபநிஷத். வஜ்ரம் என்றால் வைரம். ஸூசிகா என்றால் ஊசி. அஞ்ஞானம் எனும் இருளை, கடினமான தாதுப்பொருட்களில் துவாரம் இட்டுச் செல்லும் வைரஊசி இந்த உபநிஷத்.

மெய்யறிவு பெற்றவர்களுக்கு இவ்வுபநிஷத் ஓர் அணிகலன் போலவும், அற்றவர்களுக்குக் கண்களைத் திறக்கும் ஞானமாகவும் அமைகிறது.

உபநிஷத்துக்களில் வைர ஊசி போல விளங்கும் இந்த உபநிஷத் யார் பிராம்மணன்? என்ற பொருளை ஊடுருவித் தைக்கிறது.

ப்ராம்மணன் என்பவன் யார்? 

அவன் ஜீவனா? தேகமா? ஜாதியா? ஞானமா? கர்மமா? தர்மமா? என்ற ஆராய்ச்சியை முன் வைக்கிறது.

1. ஜீவன் ப்ராம்மணன் என்று கருத முடியாது. கடந்ததும், கடக்க இருப்பதுமான பல உடல்களில் ஜீவன் ஒரே வடிவம் உடையதாலும், கர்மத்தின் பலனால் பல உடல்கள் பெறுவதாலும், எல்லா உயிர்களிலும் ஜீவன் ஒரே மாதிரியாய் இருப்பதாலும் ஜீவனை ப்ராம்மணன் என்று கருதுவதற்கில்லை.

2. பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் பிறப்பெடுக்கும் அனைவருக்கும் பொதுவானதாகவும், மூப்பு முதல் மரணம் வரை தர்ம அதர்மங்கள் சமமானதாகவும், தோலின் நிறத்தால் பாகுபடுத்த முடியாததாகவும் இருக்கிறது. ஒரு ப்ராம்மணத் தந்தையை தகனம் செய்யும் புத்திரனுக்கு ப்ரும்மஹத்தி எனும் தோஷம் பீடிக்காமையாலும் உடலை ப்ராம்மணன் என்று கருத முடியாது.

3. மஹரிஷிகளான ஹ்ருஷ்யஷ்ருங்கர் மானிடமும், கௌஷிகர் தர்ப்பையிலும், ஜாம்பூகர் நரியிடமும், வால்மீகி புற்றில் இருந்தும், வ்யாஸர் செம்படவப் பெண்ணிடமும், கௌதமர் முயலிடமும், வஸிஷ்டர் ஊர்வசியிடமும், அகஸ்தியர் கும்பத்திலிருந்தும் தோன்றியவர்கள். இதுபோலவே பிறவியில்லாமலே ஆதியில் ஞானமடைந்த ரிஷிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆகவே ஜாதியால் ஒருவனை ப்ராம்மணன் என்று கருத வாய்ப்பில்லை.

4. க்ஷத்ரியர்களில் ஞான தரிசனம் பெற்ற ஞானிகள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆகையால், அறிவாலோ ஞானத்தாலோ ஒருவனை ப்ராம்மணனாகக் கருத இயலாது.        

5. எல்லா உயிர்களுக்கும் ஊழ்வினை, தொல்வினை, வருவினை போன்ற கர்மங்கள் பொதுவாகக் காணப்படுவதால், முந்தைய வினையின் விளைவுகளாலேயே தூண்டப்பட்டுச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதுகொண்டு, கர்மத்தாலும் ஒருவன் ப்ராம்மணனாக மாட்டான்.

6. க்ஷத்ரியர்களிலும், வைசியர்களிலும் தான தர்மங்களில் மேலானவர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். பொன்னையும், பொருளையும் வாரிவழங்கும் தார்மிகனாக இருந்தாலும், ஒருவனை தர்மத்தின் பொருட்டு ப்ராம்மணனாக அறிய வாய்ப்பில்லை.

7. எல்லா ஆராய்ச்சிகளுக்கும் பின்னர், இன்னமும் யார்தான் ப்ராம்மணன் என்ற கேள்வி உடைபடாமலே நிற்பதை உணர முடிகிறது.

அப்படியானால், ப்ராம்மணன் என்பவன் யாரெனில்,

எவன் ஒருவன்-

#இரண்டற்ற ஸச்சிதானந்த வடிவினனாய் ஆன்மாவை அனுபவித்து அறிபவனாயும், இவ்வான்மாவாகவே இருப்பவனாயும், 

#ஜாதி, குணம், செயல் ஆகிய மூன்றும் அற்றவனாயும்,

#பிறப்பு, இருப்பு, வளர்வது, மலர்வது, மெலிவடைவது, இறப்பது முதலிய ஆறு மாற்றங்கள் அற்றவனாயும்,

#மூப்பு, மரணம், வியாதி, உலக மயக்கம், பசி, தாகம் ஆகிய ஆறு அலைகள் அற்றவனாயும், 

#குற்றம், குறைகள் அற்றவனாயும்,

#ஸத்யம், ஞானம், ஆனந்தம், அனந்தம் என்ற வடிவுடையவனாகயும்,

#எல்லாக் கற்பனைகளுக்கும் ஆதாரமானாலும் ஒரு கற்பனையிலும் அடங்காதும், எல்லா உயிர்களுக்கும் உள்ளே நின்று இயக்குபவனாயும், 
#ஆகாயத்தைப் போல் உள்ளும், வெளியும் வியாபித்துப் பிளவுபடாமல் ஆனந்த வடிவாயும், மனதிற்கெட்டாததாயும் அனுபவத்தால் மட்டும் அறியக்கூடியதான குணமுடையவனாகவும்,

#ப்ரகாசிக்கும் ஆன்ம வடிவினனாய் இருந்து, விருப்பு, வெறுப்பு முதலிய அற்றவனாயும், 

#சமம், தமம் முதலிய தன் அடக்கங்களுடன் கூடிய அழுக்காறு, அவா, வெகுளி முதலியன நீங்கியவனாயும்,

#டம்பம், அகந்தை முதலியவற்றால் தொடப்படாதவனாயும்,

#வீடுபேறு எய்தத் தகுந்தவனாயும்-

இருக்கிறானோ அவனே ப்ராம்மணன்.

இது ஸ்ம்ருதி, ஸ்ருதி, புராண, இதிஹாஸங்களின் முடிவான கருத்து. இதற்குப் புறம்பாக ப்ராம்மணத் தன்மை இல்லவே இல்லை.

துணை நூல்கள்: 

உபநிஷத் ஸாரம் - அண்ணா
www.dharmicscriptures.org/VajraSuchika_Upanishad.doc‎

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...