
இல்லாத சோறெடுத்துத்
தன் குழந்தைக்கு
வறுமையை ஊட்டிடுவாள்
நொண்டிப்
பிச்சைக்காரி.
வௌவால் இடும்
புழுக்கையையும்-
காற்றுடன் மோதும்
வெளிச்சத்தையும்-
தாங்கிக்கொண்டு
வேர்வையோடு
முறைப்பார்
தக்ஷிணாமூர்த்தி
தினந்தோறும்.
தெருப்பயல்கள்
த்வம்சித்த
சொறிநாயொன்று
ஒளிந்துகொள்ள
இடம் தேடும்
அதிகாரநந்தியின்
பின்னே.
தான் செய்த
நைவேத்யத்தைத்
திருட்டுத்தனமாய்
ருசிபார்ப்பான்
பக்ஷிராஜன்
மடப்பள்ளிக்கும்-
கை அலம்பும்
கிணற்றிற்கும்-
தெரியாமல்.
சந்தனக் காப்பிட்ட
மூலவருக்குக்
கற்பூரம் கொண்டு
குருக்கள்
முகம் காட்ட
ப்ரஹாரம் தெரியும்
ப்ரகாசமாய்.
கணையாழி-அக்டோபர், 1986.
என் 20ம் வயதில் ப்ரசுரமான எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது. எனக்கு மிகவும் த்ருப்தி அளித்த- ஒரே தடவையில்- திருத்தமில்லாமல் எழுதப்பட்ட கவிதை.
அந்த இதழில் விக்ரமாதித்யன்,என் நண்பன் பொன்.சந்தானகிருஷ்ணன்(மதுமிதா),உமாமகேஸ்வரி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருந்தன.
ப்ரகாஷ் படித்துவிட்டு இதை எல்லோரிடமும் காட்டி தமிழுக்கு இன்னொரு ப்ரமாதமான கவிஞன் ரெடி அய்யா என்று சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டது நினைவிலுண்டு.
1989க்குப் பின்னால் எழுதுவதையே நிறுத்திவிட்டு அவர் சொன்னதை நிரூபிக்காமல் ஒதுங்கிவிட்டேன். இப்போது வரையிலும் நான் வருந்தக்கூடிய ஒரே தவறு என்று இதைச் சொல்வேன்.
மறுபடியும் தஞ்சாவூர்க்கவிராயருடன் மீட்கப்பட்ட என் உறவு 2009 பெஃப்ருவரிக்குப் பின் என்னை எழுத வைத்தது.
என்னை மீட்டெடுத்துக்கொடுத்த த.க.வுக்கும் தூண்டுதலாய் இருந்த மறைந்த புத்தகன் செல்லத்துரை கவிஜீவன் முதலியோருக்கும் நான் நன்றிக்கடன் பட்டவன்.
வேர்களுக்கு நீர்விட்டும் வளராது பட்டுப்போய்விட்டதே இந்தக் கொடி என்று வருத்தத்துடன் மறைந்த தஞ்சை ப்ரகாஷுக்கு என் கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.

