இப்போது
மழை வந்ததை
யாரும்
எதிர்பார்க்கவில்லை.
சில பேர்
கூரைகளுக்கடியிலும்
சில பேர்
வானத்தின் கீழுமெனப்
பிரிந்து கொள்ள
மழை வலுத்தது.
யாரையும் பேசவிடாமல்
வாயை அடைத்தது
மௌனம்.
மழை வாசனை
மண்ணோடும்
மண்ணில் கிடந்தவற்றோடும்
கரைந்து புதுக்கலவையானது.
என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.
நிர்வாணம் தவிர்த்து
மற்றெல்லாவற்றையும்
கரைக்கும் மூர்க்கத்துடன்
மழை இன்னும்
வலுத்தது.
மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.
மழை எப்போது பெய்யுமெனக்
காத்துக்
கடைகளுக்குக் குடையை
விரித்துப் போகும்
குழந்தைகளைப்
பார்க்கமுடியவில்லை.
இப்போது
மழையைத் தவிர
தெருக்களில்
யாருமில்லை.
இந்தக் கவிதையின் முதல்வரி போலவே எதிர்பாராது இன்றும் மழை பெய்தபடி இருந்த இந்தக் காலையில் நினைவுகள் பின்பக்கமாய்ப் பயணித்தன.
23 வருஷங்களுக்கு முன்பு இந்தக் கவிதை ஜூன் 1988 கணையாழியில் வெளிவந்திருந்தது.அப்போது எனக்கு 22 வயது.
அசோகமித்திரனும் நாஞ்சில் நாடனும் எழுதிய அதே இதழில் சுந்தர்ஜியும் என்று நிதானிக்க அவகாசம் வேண்டியிருந்தது.அசோகமித்திரன் கௌரவ ஆசிரியராக இருந்தார்.
தொடர்ச்சியாகக் கணையாழி-முன்றில்-இன்று-கனவு-பாலம்-காலச்சுவடு ஆகியவை என் கதை-மொழிபெயர்ப்பு-கவிதைகளை வெளியிட்டு எனக்குக் கிறுக்குப் பிடிக்க வைத்திருந்தன.
இந்தக் கவிதையை இப்போது திருப்பிப் படிக்கும்போது ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தில் என்னைத் தேடுவதாய் இருக்கின்றன நினைவுகள்.
இன்றைய ஒப்பனைகள் எதுவும் இல்லாத என் 22 வயதுக் கவிதை எனக்கு வசீகரமாகவே தெரிகிறது.
வேறு வழியில்லை.படித்து வையுங்கள்.
21 கருத்துகள்:
//என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.//
//மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.//
மழைக்கவிதை கோடையில் பெய்யும் அடைமழை போலவே வெகு அருமை.
//அசோகமித்திரனும் நாஞ்சில் நாடனும் எழுதிய அதே இதழில் சுந்தர்ஜியும் //
என்பதில் இன்று எனக்கொன்றும் ஆச்சர்யமில்லை. ஆனால் நீங்கள் அப்போது 22 வயதே ஆன வாலிபன் என்பது தான் ஆச்சர்யமாக இருந்தது.
அந்த வயதில் இது மிகப்பெரியதொரு சாதனை தான்.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன் vgk
இப்போது மழையைத் தவிர தெருக்களில் யாரும் இல்லை...
அற்புதமான கவிதை... சுந்தர்ஜி...
அன்புடன்
ராகவன்
நீங்கள் 22 லும் சரி... வரப்போகும் 62 -லும் சரி.. வசீகரன் தான்... உங்கள் எழுத்துக்களில் நீங்கள் வசீகரன்... குரலில் கூட.. ;-))
//என் வாய்
எச்சில்
மழைவாசனையாய்
இருந்தது.//
//மழையின் நிழலாக
வீட்டின் வாசல் எல்லாம்
கோலமாய்ப்
பள்ளங்கள்.//
இப்போது மழையைத் தவிர தெருக்களில் யாரும் இல்லை...
அற்புதமான கவிதை...
கவிதை அருமை சுந்தர்ஜீ :)
//இப்போது
மழையைத் தவிர
தெருக்களில்
யாருமில்லை//
மழையின் பிரமாண்டமும், ஒரு தனிமையும் துலங்கும் வரிகள். நன்றாக இருக்கிறது. ஒரு வித freshness தென்படுகிறது கவிதையில். உங்கள் மொழிபெயர்ப்பு கவிதையை காலச்சுவடு தொகுப்பொன்றில் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது.
wowwwwwwww am envious
ஒப்பனைகள் தேவையற்ற அழகிய படைப்பு
மழையைத் தவிர யாருமில்லை என்பதே
நிறையச் சொல்லிப்போகிறது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
அழகிய கவிதை. ஆஹா ஆனந்தமான நினைவுகள்.
கவிதையின் முதல் வரியைப் படித்தவுடன் கடைசிவரி உடனே நினைவுக்கு வர அந்தக்கால கணையாழிக்குச் சென்றுவிட்டேன். மறக்க முடியாத கவிதை சுந்தர்ஜி. இதை நானும் மதுமிதாவும் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.
கணையாழி என்றதும் அசோகமித்திரன் நினைவு வந்து விடுகிறது.. என் சிறுகதைகள்.. கவிதை அதன் பத்தாண்டு காலத் தொகுப்புகளில் வெளிவந்தபோது என் மகிழ்ச்சி அளவிடமுடியாதது.. கணையாழியில் என் சிறுகதை பார்த்து கல்கி ராஜேந்திரன் ஸார் எனக்கு அனுப்பிய கடிதம் இன்னமும் என்னிடம் பழுப்பேறிய இனலண்ட்.. 'உங்கள் படைப்புகளை கல்கிக்கு வரவேற்பதாய்' நீங்களும் கணையாழி குடும்ப அங்கத்தினர் தான் என்று அறிய உற்சாகம்.
அதே சுந்தர்ஜிதான் இப்பவும்.அதே மழை வாசம் !
அருமை சுந்தர்ஜி. இப்பலாம் கொஞ்சம் சோம்பேறித்தனம் ஜாஸ்தி ஆகிடுச்சி
மழைநாளின் மனதின் நுண் அவதானிப்புகள் அற்புதம் சுந்தர்ஜி!
நல்ல கவிதை.
ஆக மொத்தம் உங்களுக்கு 45 வயசு :)
என் ப்ரோஃபைல்லயே என் வயசு இருக்கே நாக்ஸ்.இத்தனை நாள் வயசு என்னவா இருக்கும்னு யோசிச்சது தெரியுது உங்க பின்னூட்டத்துல.
அட உங்க போட்டோ அவ்வளவு youthful ஆ இருந்ததுங்க ;)
உங்களுக்கு 35 தான் இருக்கும்னு நெனச்சேன்
கைகளில் அள்ளிய நீர்
விரல்களின் வழியே கவிதை
மழையாய் வழிகிறது !
மனதை மெல்ல
குளிராய் வருடுகிறது !
எழுதி முடித்தபின்
ஒரு வர்ண வானவில் ............
\\ வேறு வழியில்லை படித்து வையுங்கள்//
பொக்கிஷமய்யா இது படித்து பாதுகாத்து வையுங்கள் என்று சொல்லுங்கள். .
எப்போது மழை வரினும் நிகழ்வுகள் மாறுவதில்லை. கவிதை வரிகள் சாசுவதத் தன்மை பெற்றிருக்கிறது.
\\ வேறு வழியில்லை படித்து வையுங்கள்//
padichchuttu vaiyurathu polavaa yezhuthiyirukkeenga...:)
vaazhthiye aakanum.
vaazhthukal sudarji.
கருத்துரையிடுக