தீயினும் கொடியது
தேவையற்ற பொழுதில்
சந்தேகமும்-
தேவையான தருணத்தில்
அவநம்பிக்கையும்.
பனியினும் குளிர்ந்தது
மன்னிப்பின் தண்மையும்-
பரிவற்றவர்களுக்கு அன்பும்.
பூமியினும் பளு நிறைந்தது
பழி சுமப்பவனின் மௌனமும்-
விட்டுக் கொடுப்பவனின்
பெருந்தன்மையும்.
சகிக்கவும் தீராதது
இளமையில் இறத்தலும்
நெடுநாள் வாழ்தலும்.
அடைய முடியாதது
திட்டமிடா இலக்கும்
நட்டமில்லா அனுபவமும்.
காணச் சகியாதது
பகிர வழியற்றவனின்
இரவும்-
நிமிர மொழியற்றவனின்
துயரும்.
10 கருத்துகள்:
தண்டவாளம் ஒவ்வொரு நிறுத்தமாய் செல்வது போல நின்று யோசிக்க வைக்கும் வரிகள்...நன்றாக இருக்கிறது சுந்தர்ஜி
வார்த்தைகளில்
வசந்தம்
வரவழைக்கும்
வழி
வந்தது எப்படி உங்களுக்கு ??
அனைவரும்
அறியவேண்டிய
அற்புத
அமர்க்களமான கவிதை
அனைத்து வரிகளுமே அருமை. இருப்பினும் என்னைக்கவர்ந்தது:
//பூமியினும் பளு நிறைந்தது
பழி சுமப்பனின் மௌனமும்-
விட்டுக்கொடுப்பவனின்
பெருந்தன்மையும்.//
பாராட்டுக்கள். அன்புடன் vgk
இருப்பு நிலை குறிப்பு போன்ற தெளிந்த அளவீடு. வரும் சந்ததியினர்க்கும் பயனுறும் அற்புத நன்னெறி விளக்கமாய் தொடரும் தங்கள் அனுபவக் கடைசல்.
முருகனிடம்
அவ்வை சொன்னது போல
மிக அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
மன நிறைவைத் தந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
பூங்கொத்து!
சபாஷ்
மொழியற்றவனின் துயர்..
என்னை அசைத்தது.
ப்ரகாஷ் படம் அட்டகாசம்.
தினம் ஒரு கவிதை எழுதுகிறீர்கள். எனக்கு என் இயலாமையை நினைத்து உங்கள் மேல் பொறாமையாய் இருக்கிறது. வாரம் ஒருமுறை வாசிக்க நேர்ந்தாலும் எல்லாவற்றையும் படித்து விடுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். வேலைப் பளு அதிகம். வேறொன்றுமில்லை .
"பூமியினும்
பளு நிறைந்தது
பழி சுமப்பவனின்
மௌனமும்-..."
The echo of silence that rings all over these few words- a black hole that contained in itself all the silence of the universe...
Brilliant!
கருத்துரையிடுக