30.4.13

அகமும், புறமும் - I


சொன்னபடி “பஜகோவிந்தம்” முதலில்.

எம்.எஸ்.சுப்பலக்ஷ்மியின் குரலில் பிரபலமான பாடல் இது என்று ஆயிரத்தில் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றி ஒன்பது பேருக்குத் தெரியும். ஆனால் எம்.எஸ். பாடியிருப்பது மொத்தம் 32ல் 10 ச்லோகங்கள் மட்டுமே. 

இதை இயற்றியது ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிசங்கரர் என்றும், கேட்பதற்கு அத்தனை இனிமையான தேனில் குழைத்த பாடலின் பொருள் இத்தனை ஆழமானதும், வாழ்க்கையின் சாரத்தைப் புட்டுப்புட்டு வைக்கும் வெளிப்படையான தன்மை கொண்டதும் என்பதும் அதே ஆயிரத்தில் ஒருவருக்குத் தெரியாதிருக்கலாம்.

பஜகோவிந்தத்தின் கட்டமைப்பு இருபாகங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரரால் இயர்றப்பட்டவை த்வாதசமஞ்சரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதில் 12 ச்லோகங்கள் அமைந்திருக்கின்றன.

இதற்கடுத்த பகுதி சர்ப்படபஞ்சரிகா என அழைக்கப்படுகிறது. இது அவரின் சீடர்களால் இந்தப் பகுதி இயற்றப்பட்டிருக்கிறது. பத்மபாதர் ஒன்றும், தோடகாசார்யர் ஒன்றும், ஹஸ்தாமலகர் ஒன்றும், ஸுபோதர் ஒன்றும், வார்த்திககாரர் ஒன்றும், நித்யானந்தர் ஒன்றும், ஆனந்தகிரி ஒன்றும், த்ருடபக்தர் ஒன்றும், நித்யநாதர் ஒன்றும், யோகானந்தர் ஒன்றும், சுரேந்திரர் ஒன்றும், மேதாதிதி இரண்டும், பாரதீ வம்சர் ஒன்றும், ஸுமதி ஆறும் என மொத்தம் 20 ச்லோகங்கள் அமைந்திருக்கின்றன.

ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்ன மாலா, விவேக சூடாமணி இவற்றையெல்லாம் விட எளியாமையானதும், கடல் போல ஆழமுடையதும் இந்த பஜகோவிந்தம் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஓஷோ அவரைக் கவர்ந்த 169 புத்தகங்களில் 32 ஸ்லோகங்கள் மட்டுமே கொண்ட பஜகோவிந்தத்துக்கு ஓரிடம் கொடுத்திருக்கிறார்.

இது என்னுடைய மொழிபெயர்ப்பில். முப்பத்தொன்றையும் ஒன்றாகப் பதிவிட்டால் கண்டுகொள்ள மாட்டார்களோ என்ற பீதி எனக்கு உண்டானதால் மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன்.

இனி பஜ கோவிந்தத்துக்குப் போய்விடலாம்.

பஜகோவிந்தம்
=============
1. ஏ மூட மனமே! கோவிந்தனைத் துதிப்பாயாக. அந்திமப்பொழுது நெருங்கும்போது இலக்கணத்தை ஒப்பிப்பது உன்னைக் காவாது.

2. ஏ மூட மனமே! செல்வத்தைச் சேர்க்கும் பேராசையை விட்டுவிடு. இச்சையற்ற மனதுடன் இரு. உன் உழைப்பினால் கிடைத்தவற்றில் நிறைவு கொள்.

3. யுவதியின் தோற்றம், மார்பு, நாபி இவையெல்லாம் கண்டு மோகாவேசம் கொள்ளாதே. அவை வெறும் மாமிசத்தின் திரிபுகளே.

4. தாமரை இலை மேல் நீர் போன்றது வாழ்க்கை. சபலமும் நிலையாமையும் உடையது. அகங்காரத்தாலும், துக்கத்தாலும் பீடிக்கப்பட்டது. இதைப் புரிந்து கொள்.

5. சம்பாதிக்கும் வரைதான் உன் குடும்பம் அன்பு காட்டும். உன் முதுமையில் உன்னிடம் பேசக்கூட மாட்டார்கள்.

6. உடலில் மூச்சுள்ள வரை உறவும் சுற்றமும் நலம் விசாரிக்கும். நீ சவமாகி விட்டால் உன் உடலைக் கண்டு உன் மனைவி கூட பயப்படுவாள்.

7. செல்வம் அர்த்தமற்றது. அதில் துளியும் சுகமில்லை. செல்வந்தர்களுக்குத் தன் பிள்ளைகளிடம் கூட அச்சம் உண்டாகிறது. இதுவே உலக இயல்பு.

8. குழந்தைப் பிராயத்தில் விளையாட்டிலும், வாலிபப் பிராயத்தில் பெண்களிடமும், கிழப் பருவத்தில் கவலைகளிலும் மட்டுமே பற்று உண்டாகிறது. ப்ரும்மத்திடம் பற்றுக் கொண்டவர் எவருமில்லை.

9. மனைவி யார்? மகன் யார்? இந்த வாழ்க்கை விசித்ரமானது. நீ யார்? எங்கிருந்து வந்தாய்? இந்தத் தத்துவங்களை சிந்தனை செய்.

10. நல்லவர்கள் உறவால் பற்றின்மை உண்டாகும். பற்றின்மையினால் மதிமயக்கம் விலகும். மதிமயக்கம் விலக மாறாத உண்மை விளங்கும். மாறாத உண்மை விளங்க ஆன்ம முக்தி உண்டாகும்.


(தொடரும்)
____________

புறநானூறு:

முதலில் 255வது பாடல் கண்ணீர் வரவழைத்தது. இந்தப் பாடல் போரில் உயிர் நீத்த தன் கணவனைக் கண்ட பெண்ணொருத்தி பாடுவதாக அமைகிறது.

பாடியவர்: நெடுங்களத்துப் பரணர். (நெடுங்களம் திருச்சி அருகே உள்ளது)

ஐயோ எனின்யான் 
புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே 
அகன்மார்பு எடுக்கவல்லேன்
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் நடத்தி சின்சிறிதே!

ஐயோ!
என்று கதறினால்
புலி வந்து விடுமோ
என அஞ்சுகிறேன்.
அகன்ற மார்பை
உடையவனாதலால்
உன்னைச் சுமக்கவும்
என்னால் இயலாது.
உன்னைக் கொன்ற எமனும்
என்னைப் போல் ஒருநாள்
அனுபவித்து நடுங்கட்டும்.
என் வளைக்கரம் பிடித்து
நீ எழ மாட்டாயா?
மெதுவாய் நடந்து
அந்த மலை நிழலை அடையலாம்.

அடுத்தது பாடல் 276.

இந்தப் பாடலை எழுதியவர் மதுரைப் பூதன் இளநாகனார்.

இந்தப் பாடலை இதில் வரும் பால் தயிராகும் உவமைக்காக முதலில் தேர்வு செய்தேன். ரசியுங்கள்.

நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலம் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்உறைப் போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே!  

வாசமற்ற 
தைலம் துறந்த
நரைத்த கூந்தல்.
இரவமர விதை போலச்
சுருங்கித் தொங்கும்
வறண்ட மார்பு.
முதியவள் பெற்ற அன்புமகன்
-ஒரு இளம் ஆய்ச்சி
தன் சிறுவிரல் நகநுனியால்
தெறித்த ஒரு துளிமோர்
குடப் பாலையும்
தயிராக்கி விடுவதைப் போல-
எதிரிப் படையின் கூட்டத்துக்கு
நோயாய் மாறினான்.

எழுதும் ஆசுவாசம் இன்னும் கிட்டவில்லை. இதை கிடைத்த ஒரு அரைமணி நேர இடைவெளியில் எழுதினேன்.

ஆலாபனை பின்னால் தொடரும்.

27.4.13

சில வாசிப்புகளும், பல அறிவிப்புகளும்.


1. ஆதிசங்கரரின் “பஜகோவிந்தம்” பலமுறை கேட்டிருக்கிறேன். றோம். பல பருவங்களில், பல தருணங்களில் வாசித்திருக்கிறேன். சமீபத்தில் இதை வாசிக்கும்போது நான் பெற்ற அதிர்வுகள் இதற்கு முன் பெற்றிராதவை. என் அடுத்த இடுகையில் பஜகோவிந்தத்தின் மொழிபெயர்ப்பு என் பாணியில் என் மொழியில் எழுதப் போகிறேன்.

2. அடுத்த ஆச்சர்யம் சங்க இலக்கியத்தின் புறநானூறு. மொத்தம் நானூறும் நானூறு விதம். படித்துப் படித்து தஞ்சாவூர்க்கவிராயருடன் சிலாகித்துக் கொண்டிருக்கிறேன். மிக ஆச்சர்யமான உவமைகள். (கள் குடிக்கத் தொட்டுக்கொண்டு பல்லிடுக்கில் மாட்டிக்கொண்ட பயறைத் துளாவித் துளாவி சிவந்த நாக்கின் நுனி போல்).

நாம் நவீனமாக எழுதுகிறோம் என்று அடுத்த முறை நீங்கள் சந்திக்கும் உன்னதமான எழுத்தாளரோ பேச்சாளரோ பீலா விட்டால் நம்ப வேண்டாம்.புறநானூறையும் மொழிபெயர்த்துவருகிறேன். இதுவரை 50 முடிந்திருக்கிறது. இரண்டிரண்டாக இனி வரும் இடுகைகளின் நுனியிலோ வாலிலோ.

3. வ.உ.சி. பற்றித் தமிழில் சரியான ப்ரக்ஞை இல்லை. பாரதி பற்றி வ.உ.சி. எழுதியுள்ள சரிதை அபாரம். சில சுவாரஸ்யமான பகுதிகளின் வெளியீடு அடுத்த இடுகைகளில்.

”மெய்யறம்” என்ற தலைப்பில் ஆத்திசூடி போல ஒற்றைவரியில் 125 அதிகாரங்களில் 1250 நீதியை ஆப்பு போல் அடித்துச் சொல்லியிருக்கிறார். நமது ஆத்திசூடி, வாக்குண்டாம், கொன்றை வேந்தன் போல குழந்தைகளின் பாடங்களோடு சேர்க்கப்பட வேண்டியவை இவை.

மெய்கண்ட தேவரின் சிவஞானபோதத்தின் ஒவ்வொரு சூத்திரத்துக்கும் வ.உ.சி. எழுதியுள்ள பொழிப்புரையும் மிக முக்கியமானது.

”திலக மகரிஷி” என்ற தலைப்பில் இலங்கையிலிருந்து வெளிவந்த “வீரகேசரி”யில் தொடராக எழுதி முழுமையாகக் கிடைக்காத புத்தகம் படு சுவாரஸ்யம். பலத்த குழப்பங்கள் கலவரங்களுடன் முடிந்த சூரத் காங்கிரஸ் குறித்து வ.உ.சி கொடுக்கும் தலைப்பில் இன்னொரு சுவாரஸ்யம். (”கூட்டத்தில் பாதரக்ஷை ப்ரயோகம்”) செருப்பு வீச்சு என்று எழுதினால் உண்டாகும் அமளி கொஞ்சமும் தெரியாமல் ஏதோ பெருமாள் கோயில் ப்ரஸாதம் விநியோகம் என்பது போல எத்தனை மென்மையான அமளி?

தூத்துக்குடியில் கூலி உயர்வுக்காகவும், தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காகவும் இவர் முன்னின்று நடத்திய மிகப் பெரிய வேலைநிறுத்தம் இந்திய சரித்திரத்தில் மிக முக்கியமானது. அரவிந்தர் வ.உ.சியையும், சுப்ரமண்யசிவத்தையும் பாராட்டி எழுதிய தலையங்கம் அபூர்வமானது. பெருமைக்குரியது.

செக்கிழுத்ததையும், கப்பல் ஓட்டியதையும் தாண்டி மிகப் பெரிய இலக்கியவாதியாகவும், தொழிற்சங்க வாதியாகவும் திகழ்ந்த வ.உ.சியைத் தமிழகமும் அதற்குப் பின் இந்தியாவும் இன்னொரு முறை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

4. திரு. பாரதிமணி இயக்கத்தில் சுஜாதாவின் “ கடவுள் வந்திருந்தார்” நாடகத்தில் சேஷகிரி ராவாக, ’ரா’வாக ராப்பகலாக நடித்துக் கொண்டிருந்தேன். மறக்க முடியாத தருணங்கள். அதன்பின் வழக்கம் போல் என் ராசிப்படி உடல்நிலை காரணமாக நான் பங்கேற்க முடியாது போயிற்று. இருநாட்கள் நடந்த நாடகத்தைக் காண முடிந்த பார்வையாளர்களுக்கு என் நடிப்பைக் காணமுடியாது போயிற்று.

வெளியில் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். ஞாபகமில்லாமல் கணினியில் உட்கார்ந்துவிட்டேன். 

2.4.13

இனி நாம் சந்திப்போம்


எந்த நேரத்தில் போன இடுகைத் தலைப்பை எழுதினேனோ தெரியவில்லை. 

விலகிச் சென்ற ஜனவரி 4ம் தேதிக்குப் பின்னால் எதிர்பார்த்த எதுவும் நிகழாமல் எதிர்பாராதவைகள் நிகழ்ந்தன.

ஜனவரி 20ம் தேதி வழக்கம் போல் எனக்குப் புலரவில்லை. எழுதுபவனுக்கு மிக அவசியமான முதுகின் தண்டுவடம் (L 4- 5) விலகியும், சிதைந்தும் போனதில் என்னால் படுக்கையை விட்டு எழ முடியவில்லை.

தமிழின் மேல் அதீத ஆர்வம் கொண்டு அலையும் நான் உருவத்திலும் பொருத்தமாக ஔவை போல் ஆனேன்.

அறுவைச் சிகிச்சைதான் இதற்கு ஒரே மாற்று என்று சொன்ன ஒரு ப்ரபல மருத்துவரின் அறிவுரையைத் தவிர்த்துவிட்டு, நிறைந்த வலியுடனும், நம்பிக்கைகளுடனும் சித்த மருத்துவ மனையில் அனுமதி பெற்று சிகிச்சை எடுத்துக் கொண்டு வர்மம், தொக்கணம், கஷாயங்கள், சூரணங்கள் , மருத்துவர்கள் காட்டிய அதீத பரிவு இவற்றால் அதியமானாக மறுபடி சீரானேன்.

எனக்கு நானே விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டினால் மார்ச் முடியும் வரை கணினி முன்னால் உட்கார அனுமதி மறுத்தேன்.கிட்டத்தட்ட 3000க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன. மெதுவாய் வாசிக்கலாம். 

எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும், உதவிய செவிலியர்களுக்கும் அவர்களுக்கு மருந்து அளித்து உதவிய திருமூலர், அகத்தியர் துவங்கி சகல சித்தர்களுக்கும் நன்றிபா.

அந்த நாள் முதல் இந்த நாள் வரை இத்தனை நாட்கள் ஓய்வை நான் ருசித்தவனில்லை. படுக்கையிலும் படுத்தவன் இல்லை. நிறைய வாசிக்க முடிந்தது. வாசிக்க வாசிக்க நான் இதுவரை எழுதியது ஒன்றுமில்லை என்ற உண்மை பட்டவர்த்தனமானது. 

எனக்கு நிறைய நண்பர்கள் பல்வேறு கட்டங்களிலும் உதவியாய் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் என் ஈரமான நன்றிகள்.

இனி எழுதுவதன் வேகத்தையும், அவசியத்தையும் எழுத்து தீர்மானிக்கட்டும். பழைய நம் தொடர்பு மீண்டுவிட்டது என்ற ம்கிழ்ச்சியுடன் இன்று நான் உறங்குவேன்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...