ஞானக் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞானக் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.9.13

இரு கதைகள்.

ரிஷிகேஷ் வசிஷ்ட குகையின் ஸ்வாமி சாந்தானந்த பூரியின் "Stories for Meditation" ல் அபூர்வமான பல கதைகளைப் படிக்க வாய்த்தது. இன்றைக்கு இரு கதைகள்.

முதலில் ரமணர் சொன்ன கதை. 

ரமண மகர்ஷியின் அனுபூதியைப் பேச இந்த ஒரு கதை மட்டுமே போதும் என்று படித்த பின் தோன்றியது. கதை இதுதான்.

########

தியானம் என்றால் என்ன?அந்தச் சிறுவனுக்கு நெடு நாட்களாய்த் தீராத சந்தேகம். அந்தச் சிறுவனின் பெற்றோருக்கோ சிறுவனுக்குப் புரிந்த மொழியில் சொல்லமுடியாத இயலாமை.

ஒருநாள் மூவரும் ரமண மகர்ஷியைச் சந்திக்கச் சென்றிருந்த போது சிறுவன் ரமணரை நெருங்கி, தன் கேள்வியை முன் வைத்தான். சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனுக்கு இலையில் ஒரு தோசையைப் பறிமாறச் சொன்னார்.

சிறுவனிடம், "நான் எப்போ 'ம்' சொல்றேனோ அப்போ சாப்பிட ஆரம்பிக்கணும். அதே மாதிரி எப்போ 'ம்' சொல்றேனோ அதுக்கப்புறம் இலையில் தோசை இருக்கக் கூடாது. புரிஞ்சுதா?" என்றார் சிரித்துக் கொண்டே.

சிறுவனுக்கு ஒரே உற்சாகம். சுற்றியுள்ளோருக்குக் குழப்பம்.

மகர்ஷியின் 'ம்' க்காகத் தோசையில் ஒரு கையை வைத்தபடி தவிப்புடன் அவர் முகத்தைப் பார்த்தபடி இருந்தான். சிறுவனைச் சிறிது காக்க வைத்து சற்றைக்குப் பின் 'ம்' சொன்னார் ரமணர்.

அடுத்த சில நிமிஷங்களுக்குள் இரண்டாவது 'ம்' வந்து விடக் கூடாதே என்ற பதைப்புடன் பெரிய பெரிய விள்ளல்களாக எடுத்து அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டே மகர்ஷியின் முகத்தைக் கவனிப்பதும், தோசையைப் பிய்த்து உண்பதுமாக நேரம் கரைந்தது.

புன்னகை மாறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாரே ஒழிய 'ம்' சொல்வதாக இல்லை. தோசையோ சிறுத்து ஒரு சிறு விள்ளலாக மாறியிருந்தது இப்போது. சிறுவனும் அந்த விள்ளலில் கையை வைத்தபடி எப்படா இந்தத் தாத்தா 'ம்' சொல்லுவார் என்று காத்திருந்தான். சுற்றியுள்ளவர்களுக்கும் என்னதான் நடக்கப் போகிறது என்றறிய ஆவல்.

எதிர்பாராத ஒரு நொடியில் 'ம்' சொல்லவும் சிறுவன் சடாரென்று கடைசி விள்ளலை வாயில் போட்டுக் கொண்டான்.

"இரண்டு 'ம்'களுக்கு நடுவில் உன் கவனம் எப்படித் தோசை மேலும் என் மேலும் இருந்ததோ, அதே போல் நீ எந்தக் காரியம் செய்தாலும் அடிநாதமாக இறைவன் மேல் கவனம் வைத்திருப்பாயானால் அதன் பேர் தியானம். புரிந்ததா இப்போ?" என்றார் மகர்ஷி புன்னகைத்தபடி.

கதை முடிந்தது.

ரமணர் சொன்ன இரண்டு 'ம்'கள் வாழ்வும், சாவும் எனவும், இடைப்பட்ட காலத்தின் எல்லா நேரமுமே ஒருவன் தியானத்தில் அமிழ வாய்த்திருப்பதைப் புரிந்து கொள்ள முதிரும் காலமே வேறுபடுகிறது எனவும் எனக்குப் புரிந்தது.

ஆழமாகவும், எளிமையாகவும் செல்லும் தியானத்தின் பரிமாணங்களை சிவ சம்ஹிதையில் "திரிபுரா ரகஸ்யத்தில்" படிக்க முடிந்தது. அது வேறொரு சமயத்தில்.

#########

இரண்டாவது.

ஒரு மன்னனின் அரசவையில் விசித்ரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.

புகாரளித்தது ஒரு நாய்.

"இன்றைக்குப் பக்கத்துத் தெருவில் நான் படுத்திருக்கும் போது, என்னை ஒரு பெருங் கல்லால் ஒரு துறவி அடித்து துன்புறுத்தினார். ரத்தம் எப்படிப் பெருகி ஒடுகிறது பாருங்கள் மன்னா? அவரைத் தண்டித்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும். என்னைத் தாக்கிய துறவி இன்னும் அங்கேதான் இருக்கிறார்" என்று கண்ணீர் வடித்தது.

மன்னன் உட்பட எல்லோர்  மனதையும் அந்த நாயின் கண்ணீர் தொட்டது.

மன்னனின் உத்தரவின் பேரில் துறவி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து வரப் பட்டார்.

தனக்குப் போதிய இடமின்றி அந்த நாயே முழு இடத்தையும் ஆக்ரமித்துக் கொண்டதால் சினமுற்று கல்லால் தாக்கியதைத் துறவி ஒப்புக் கொள்ள, ஒரு துறவிக்கு இத்தனை சினம் ஆகாது என்று நினைத்த மன்னன், தன் மந்திரிகளிடம் அவருக்குத் தகுந்த தண்டனை அளிக்க உத்தரவிட்டான்.

மந்திரிகளோ அந்த நாய் விரும்பும் தண்டனையை அந்தத் துறவிக்கு அளிக்கலாம் என்று ஒரே குரலில் சொல்ல நாயின் வசம் வழக்கு திரும்பியது.

"இங்கிருந்து நூறு மைல் தொலைவில் ஓர் மடாலயம் இருக்கிறது. நிரப்பப்படாதிருக்கிற அதன் தலைமைத் துறவியின் இடத்துக்கு இந்தத் துறவியை நியமியுங்கள்" என்றது நாய் தன் தீர்ப்பில்.

எல்லோர் முகத்திலும் - எல்லாக் கதைகளிலும் இம்மாதிரியான தருணங்களில் வருவது போலக் - குழப்பம்.

"அந்தத் தலைமைத் துறவி இறந்து போய் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னமும் அந்த இடம் நிரப்பப்படவில்லை."

அதற்கும், தண்டனைக்கும் என்ன பொருத்தம் என்ற புதிர் இன்னும் நீடித்தது.

நாய் தொடர்ந்தது.

"இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து போன, அந்த மடாலயத்தின் தலைமைத் துறவி நான்தான். அதன் தலைமைத் துறவியாய் இருந்து மண், பொன், பெண் என்னும் எல்லாச் சுகங்களையும் அனுபவிக்காத ஒருவன் தேடினாலும் கிடைக்க மாட்டான். செய்த பாவங்களுக்கு இப்போது நாயாய்ப் பிறந்து அனுபவிக்கிறேன்".              

########

 இரண்டு கதைகளும் வெவ்வேறு படிப்பினைகள்.

முதல் ரமண அனுபவம் நமக்கு போதனை. பின்பற்றுவதற்கானது. 

அடுத்த அனுபவம் ஆன்மாவின் (வா) வேதனை. பின்பற்றும் அவசியமற்றது.

23.12.11

பீஷ்மரின் போதனை

மஹாபாரதத்தின் பக்கங்களில் நிறைந்திருக்கும் போதனைகளும் கதைகளும் கணக்கில் அடங்காதவை. வேறெந்த நாட்டின் இதிகாசத்துக்கும் இப்படிப்பட்ட செழுமையான பரந்த பெருமை கிடையாது.படிக்கப்படிக்க நம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளவும், பல நேரங்களில் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும் மஹாபாரதம் விளங்குகிறது. வாழ்வின் அனுபவம் முதிர முதிர நமக்கு அது மேலும் மேலும் தன்னைத் திறந்து கொடுக்கும் பொக்கிஷத்தின் சாளரமாக விளங்குகிறது.

அதிலிருந்து ஒரு தொடராக மஹாபாரதக் கதைகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன். முதலாவது இடுகை இது.

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம். அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற தர்ம புத்திரர் விரும்பினார்.

தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "பிதாமகரே!தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க, திரௌபதி மட்டும் பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் நெடியை உணர்ந்த தர்மர், "நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?இது தகாத செயல்" என்று கடுமையாகக் கேட்டார்.

"துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது?" என்று சொல்ல, தர்மரையும் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார். 

"திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். 

துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள்.
 .
"ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்"

"ஆனால் இப்போது பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன்." என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

அதனால்தான் முற்காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.

(இணைக்கப்பட்ட சிற்பத்தின் புகைப்படம் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருப்பதைக் குறிக்கிறது. இச்சிற்பம் 8ம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தில் கட்டப்பட்டதும் மாலப்ரபா நதிக்கரையில் பாகல்கோட் மாவட்டத்தில் பட்டாடக்கல் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் அற்புதமான விருபாக்‌ஷா ஆலயத்தில் உள்ளது)

19.12.11

குரங்கிலிருந்து குரங்கிற்கு.


என் தாத்தா எனக்குச் சொன்ன இந்தக் கதையை தாத்தாவோடும் கதைகளோடும் வாழ்ந்தவர்கள் கேட்டிருக்கலாம். கேட்டிராதவர்களுக்காகத்  தொடர்கிறது கதை. முன்னாலேயே தெரியும் என்று சொல்பவர்களுக்கு இரண்டு சாய்ஸ். இப்படியே விலகிக் கொள்ளலாம். அல்லது ஒழுங்காய் என்னதான் சொல்லியிருக்கான் பாக்கலாமே என்று பொறுமையாய்ப் படிக்கலாம்.

கதைக்குப் போவோமா?

அது ஒரு வசந்த காலம். காட்டில் நதியோரத்தில் அமர்ந்து ஓடும் நீரில் கால்களை அளைந்தபடியே சிந்தித்துக்கொண்டிருந்தார் கடவுள்.

எல்லா உயிரினங்களுக்கும் ஆயுளை எத்தனை ஆண்டு காலம் வைப்பது என்ற சிந்தனையின் முடிவோடு எழுந்தார். எல்லா ஜீவராசிகளுக்கும் சரிசமமாக முப்பது ஆண்டுகள் வாழ்க்கை என்று முடிவோடு காட்டின் மையப் பகுதிக்கு எல்லா உயிரினங்களையும் வரவழைத்தார்.

”உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுட்காலம்.என் முடிவு சரியென நினைப்பவர்கள் இங்கிருந்து செல்லலாம். காலத்தை நீட்டவோ குறைக்கவோ நினைப்பவர்கள் இங்கேயே அமரலாம்.ஒவ்வொருவரையும் தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன்” என்றார் கடவுள்.

கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வரைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் சலசலப்பின்றி அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றன.

கழுதையிடம் திரும்பினார். முதலாவதாக நின்றிருந்த அக்கழுதையை அழைத்தார் கடவுள். ”உன் மனவருத்தம் என்ன?சொல்.” என்று கேட்டார்.

அதற்குக் கழுதை “ கருணையும் பெருந்தன்மையும் கொண்ட கடவுளே! என் நிலைமையைச் சொல்லித் தீராது. நாள்தோறும் நான் படும் வேதனையை நீங்கள் எப்படி அறிவீர்கள்? ஏராளமான சுமைகளைச் சுமந்து திரிகிறேன். நேரத்திற்கு ஓய்வோ தூக்கமோ உணவோ எனக்குக் கிடைப்பது இல்லை.  முதுகில் சுமையுடன் வரும் என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. நான் தெருவோரம் முளைத்திருக்கும் புற்களை மேயவும் வழியில்லை. தேங்கிக் கிடக்கும் நீரையும் பருக வழியில்லை. எனக்குக் கனவிலும் வருவது தூக்கமுடியாத சுமைகளின் காட்சியே. என் வாழ்க்கையே நரகம். இந்த நரகத்தையும் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்” என்று புலம்பியது.

”
சரி! உன்னைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. உன் ஆயுட்காலத்தில் ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான். என்ன மகிழ்ச்சிதானே?” என்றார் கடவுள்.

இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் கனைத்தபடியும் ஆடியபடியும் அங்கிருந்து கிளம்பியது.

அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள். ”உன் குறை என்னப்பா?” என்று கேட்டார்.

”
கடவுளே! நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. ஆண்டுக்காண்டு பிறக்கும் குட்டிகளுக்கு முன்னால் என்னை யாரும் கண்டுகொள்வதில்லை. தெருவில் நடமாடினால் எல்லோரும் என்னைத் துரத்தியடிக்கிறார்கள். எனக்கு இருக்கும் பயத்தை குரைத்துக் குரைத்துத் தீர்த்துக்கொள்கிறேன் நான். தவிரவும் நான் முதுமையடைந்து தளர்ந்து போய்விட்டால் எல்லோருமே என்னை மிகக் கேவலமாக நடத்துகின்றனர். கடைசிக் காலங்களில் எனக்கு உணவும் கிடைப்பதில்லை” என்று அழுதது நாய்.

”
சரி.சரி. அழாதே. உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று நினைப்பது புரிகிறது. குறைத்து விடுகிறேன். இனி உனக்கு வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான். போதுமா?” என்றார் கடவுள்.

அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டு சந்தோஷமாகக் குரைத்தபடியே புறப்பட்டது.

கழுதையும் நாயும் சந்தோஷமாகப் புறப்பட்டதை மரத்தில் தலைகீழாய்த் தொங்கியபடியே குரங்கு கவனித்துக் கொண்டிருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் கடவுளின் முன் தாவிக்குதித்து வணங்கியது. 

“உனக்கு என்ன குறை? உன்னைப் பார்த்தால் சந்தோஷமாக இருப்பது போல இருக்கிறதே? என்று கேட்டார் கடவுள்.

தலையைச் சொறிந்தபடியும், பல்லைக் காட்டியபடியும் நின்ற குரங்கு, ” சரியாப் போச்சு! அடக் கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எத்தனை நீண்ட காலம் தெரியுமா? அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். 

இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்களும் வீணாய்ப்போன சோறும்தான். முதுமையடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறைத்து விடுங்கள்” என்று வேண்டிக் கொண்டது.

”
சரி. நீயும் இத்தனை கஷ்டப் படுகிறாய். இனி உனக்கும் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள்” என்றார் கடவுள்.

குரங்கும் குட்டிக்கரணம் அடித்தபடியே ஒவ்வொரு கிளையாகத் தாவித்தாவி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து மறைந்தது. 

கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.

”
உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்?” என்று கேட்டார்.

”
கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் . அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு தொழிலையோ கலையையோ வித்தையையோ முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் தங்குவதற்காகச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.

நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயனை அனுபவிக்கும் காலம் அது. அந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது எத்தனை கொடுமை? முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்குக் குறைந்தது நூறு ஆண்டுகளாவது வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான் மனிதன்.

”
இங்கு வந்த நீ குறையுடன் செல்லக் கூடாது. அதற்காக நான் உனக்கு நூறு ஆண்டுகள் தரமுடியாது. உனக்கும் எனக்கும் பொதுவாக ஒரு ஆயுட்காலத்தை நிர்ணயிக்கிறேன். கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்கிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே?” என்று கேட்டார் கடவுள்.

”ஹும். வேறென்ன சொல்லமுடியும்? அப்படியும் இப்படியும் பேசி இருபது ஆண்டுகளைக் குறைத்து எண்பதுடன் போகச் சொல்லுகிறீர்கள். பரவாயில்லை. மகிழ்ச்சிதான்” என்று அரைகுறை மனதுடன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான் மனிதன். 

எதிர்காலத்தில் நடக்கப் போகிற வேடிக்கையை நினைத்துப் புன்னகைத்தாலும்  கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக கடவுள் வருத்தப்பட்டார்.

கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். 

முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பிறருக்குப் பயனுள்ளவனாக வாழ்ந்தான். கடவுள் அவனுக்கு முதன் முதலில் நிர்ணயித்த ஆயுட்காலம் அது. 

அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள் துவங்கியது. அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் அவமானங்களாலும் வாடினான். பொறுப்புக்களை இழுத்துப் போட்டுக்கொண்டு மிகுந்த சிரமப் பட்டான்.

நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் ஆரம்பமானது. இந்தக் கால கட்டத்தில் தான் சேர்த்த பொருட்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் வேறேதோ நோக்கத்துடன் வந்தாலும் அதைக் கைப்பற்ற வந்ததாய் எண்ணிக் குரைத்து ஒரு நாயின் வாழ்க்கையை நடத்தினான். 

அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கை போலானது. தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்டவும், கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்லவும் வேண்டியதாயிற்று. அவனுக்கென்று சுயமாய் எதுவுமற்று அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துக் கடைசியில் சுய பச்சாதாபத்துடன் இறந்தான்.

7.7.11

ஃபில்டர் காஃபி


வாழ்க்கையின் ப்ரச்சினைகளால் துவண்டு போயிருந்தான் அவன். எதிர்பாராத விதங்களில் எதிர்பாராதவர்களிடமிருந்து.

கஷ்டம் என்றால் என்னவென்று அவன் அறியாததல்ல. ஆனாலும் அவன் சம்பந்தப்படாத நிகழ்வுகளில் எல்லாம் சரியான புரிந்துகொள்ளுதலும் அவனின் விளக்கங்களையும் கேட்கக்கூட யாருமற்ற நிலையில் அவையெல்லாம் அவன் மீது அவதூறுகளாகப் போர்த்தப்பட்டன. ஒவ்வொரு நாளிலும் அவன் நிலையைச் சொல்லி அழக் கூட யாருமில்லாத வெற்றுத் தனிமையின் அனல்.

தனக்கு ஆறுதல் தரக்கூடிய தன் ஒரே நண்பனின் நினைவு வர மெல்ல ஊர்ந்து மனதின் பலத்தையெல்லாம் இழந்து பிடி கொள்ள எந்தப் பற்றுக் கோலுமின்றி அவன் வீட்டுக் கதவுகளின் முன்னே நின்றான்.

”வாப்பா! எல்லாம் கேள்விப்பட்டேன். என்னைப் பார்க்க இப்போதுதான் நேரம் கிடைத்ததா?” என்றான் அவன்.

”போதுமப்பா! நீயும் வார்த்தைகளால் கொல்லாதே. உன்னிடம் ஆறுதல் வார்த்தைகள் தேடித்தான் வந்தேன்.என் நிலை இப்படியாகி விட்டதே? அளவு கடந்த அன்பும் பாசமும் இப்படி விஷமாகிவிடக் கூடுமோ?சொல். நான் போக வேண்டிய பாதையும் தெளிவின்றிக் குழப்பமாக இருக்கிறதே! எனக்கு நல்ல வார்த்தைகள் சொல் என் நண்பனே.”

அவன் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்ட அவன் நண்பன் அவனைச் சமையலறைக்குக் கூட்டிபோனான். நண்பனின் மனைவி இறந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு குழந்தையும் இல்லை.

”இப்படி உட்கார்” என்று அடுப்பின் முன்னே அமர்த்தினான். அடுப்பைப் பற்ற வைத்து மூன்று பாத்திரங்களில் நீரை நிரப்பிக் கொதிக்கவைத்தான். நீர் குமிழியிட்டுக் கொதிக்கத் துவங்கியிருந்தது.

அருகிலிருந்த கூடையிலிருந்து ஒரு கேரட்-முட்டை-இரண்டையும் தனித்தனியே இரு பாத்திரத்திலும் இட்டான்.பக்கத்தில் ஒரு ஃபில்டரில் ஆறு தேக்கரண்டி காஃபித்தூளை இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மேல் அது வடிய வடிய ஊற்றினான். நீர் மேலும் கொதித்தபடி இருந்தது. என்ன செய்கிறான் என்ற ஆவல் இவனைத் தன் கவலையிலிருந்து மீட்டிருந்தது.

ஐந்து நிமிடங்களுக்குப் பின் அடுப்பை நிறுத்திவிட்டு கேரட்டையும் முட்டையையும் வெளியே எடுத்தான். ஃபில்டரில் சேகரமாயிருந்த கருஞ்சாந்து போன்றிருந்த டிகாக்‌ஷனை வேறொரு கோப்பையில் இட்டு நிரப்பினான்.

”என்னப்பா செய்கிறாய்? ஆறுதல் தேடி வந்தால் ஏதோ சமையல் குறிப்பைச் செய்துகாட்டுகிறாய்?” என்றான்.

“நண்பனே! மேலோட்டமாக வாழ்க்கையைப் பார்க்காதே. என்ன ஆயிற்று என்று இந்தக் கேரட்டையும் முட்டையையும் உன் கைகளால் தொட்டுப்பார்.

கொதிநிலையைக் கடந்த நீரில் வலுவான வெளித்தோற்றம் கொண்ட கேரட் தன் வலுவை இழந்து வெந்துபோய் தொட்டாலே பிய்ந்துபோய்விடும் அளவில் தன் தன்மையை இழந்து விட்டது.

மென்மையான பூஞ்சையான வெளிப்புறம் கொண்ட முட்டையோ இந்தச் சோதனையில் தன் உட்புறத்தைக் கடினமாக்கிக் கொண்டது.

ஆனால் இந்த அற்புதத்தைப் பார். நீர் வேறு காஃபித் தூள் வேறென்ற நிலை முதலில். அதையே மாற்றி தன்னைக் கொதிக்கவைத்த நீரின் தன்மையை-அதன் சுவையை-அதன் நிறத்தை முற்றிலுமாகத் தன் இயல்பினதாகவே மாற்றிவிட்ட இந்தக் காஃபியை விட நம்பிக்கையூட்டக் கூடிய தன்மை கொண்டதை நீ எங்கு கண்டுவிடுவாய்?

கண்களில் நீர் தாரை தாரையாய் வடியத் தனக்கு எதிர்காலத்தின் சாலையில் வெளிச்சமிட்ட தன் ந்ண்பனின் தோளில் தலைசாய்த்து விம்மினான்.

முட்டை-
வெளிப்புறம்
உடைகையில்
உயிர் துறக்கிறது.
உட்புறம்
உடைகையில்
உயிர் பிறக்கிறது.
வெளிப்புறமோ
உட்புறமோ
உடைபடுகையில்
நம்பிக்கையின்
வாயிற்கதவுகள்
அடையாதிருக்கட்டும்.

6.7.11

எறும்பு



நீதிபதி உள்ளே நுழைந்தவுடன் பேச்சொலி குறைந்து அமைதி அறை முழுவதும். அந்தக் குற்றவாளியின் மீதான குற்றங்கள் சுமத்தப்பட்டன. அவனுக்காக வாதாட அவன் யாரையும் நியமித்துக் கொள்ளவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் அவனுடைய கடந்த காலத்தை மட்டுமே அவன் சாட்சியாகக் கொள்ள விரும்பினான். அதை மட்டும் எடுத்துக் கொள்ளச் சட்டம் தயங்கும் என்பதும் அவனுக்குத் தெரிந்திருந்தது.

தீர்ப்பளிக்கும் நாள் வந்தது.

எதுவும் சொல்ல விரும்புகிறாயா எனும் இறுதிக் கேள்விக்கும் மௌனத்தைப் பதிலாய் அளித்து நீதிபதியளித்த ஐந்து வருட தண்டனையைச் சுமந்து சிறைக் கதவுகளைக் கடந்து சிறையை அடைந்தான்.

யாருமில்லாத் தனி அறை. பத்துக்குப் பத்து அளவு. அவனை மிகவும் துளைத்தெடுத்தது பகிர யாருமில்லாத் தனிமை. அதன் அழுத்தம் இரவின் இருளை விடவும் அடர்த்தியாய் இருந்தது.

கண்ணீரால் நனைந்தபடியே முதல் வாரம் கரைந்தது. பேசவும் யாருமற்று தனக்குத் தானே தோன்றிய சிந்தனைகளோடு நாட்கள் சென்றன.

மெதுவாய் தன்னைக் கடந்து போகும் காலடிகளின் ஓசை-சிறைகளில் நிலவும் அமைதி-சாப்பாட்டு நேர மணியோசை-மாலை வீழும்போது சிறையின் நடுவிலிருந்த பிரும்மாண்டமான ஆலமரத்திற்குத் திரும்பும் பறவைகளின் கூச்சல் இவை அவனுக்கு அட்டவணை போலப் பழகியிருந்தன. பறவைகளின் சிறகசைப்பின் படபடப்பும் குஞ்சுகளோடு அவை கூவும் கூச்சலுமே அவனை மிகவும் சரித்தன.

மற்றுமொரு நாள். கையைத் தலைக்கு மடித்து வைத்து உறங்கியபடி இருக்க முதுகில் ஏதோ குறுகுறுக்க எழுந்து கையால் மெல்லத் தட்ட தரையில் ஒருகட்டெறும்பு தரையில் விழுந்தது. ஏதோ தோன்ற அதைக் கையில் பிடித்து முகத்துக்கு நேரே வைத்து உற்றுப் பார்த்தான்.

”ஐயோ!என்னை நசுக்கிக் கொன்றுவிடாதே!”என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். பெரிய ஆச்சர்யம். எறும்புதான் பேசியது.

“என்ன நீயா பேசுவது? எப்படி இது சாத்தியம்?” என்றான்.

”இது ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஒரு முனிவருக்குச் செய்த உதவியால் எங்கள் குலத்துக்கு அவர் அளித்த வரம்.அது எதற்கு உனக்கு? என்னைக் காரணமில்லாமல் கொன்று விடாதே காரணமில்லாமல் நீ தண்டனை அனுபவிப்பதைப் போல” என்று சாதுர்யமாகப் பேசியது.   

பேசும் எறும்பு.இனித் தனிமையில்லை. அதனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான்.தினமும் தனக்குத் துணையாய்ப் பேசுவதற்கு பகல் பொழுதுகளில் வரவேண்டும். அதற்குப் பதிலாகத் தன் உணவில் ஒரு பங்கை அதற்குத் தருவதாக அவர்களுக்குள் உடன்பாடு.

மெதுவாய் அந்தக் கைதியின் நாட்கள் அர்த்தமுள்ளதாய்க் கழிந்தது. எறும்பின் ஞானம் அவனை ஆச்சர்யப் படுத்தியது. அதற்குத் தெரியாத விஷயங்களே இல்லை. பழங்கால நாணயங்கள்-சோழர்களின் ஆட்சி-ஹிந்துஸ்தானி இசை- அர்த்தசாஸ்திரம்-சித்தர்களின் வாழ்க்கை-ஐன்ஸ்டீனின் மூன்றாவது விதி என்று அவனுக்குப் பாடம் போதித்தது கிடைத்த நேரமெல்லாம்.

அவன் யோசித்தான். இப்படி ஒரு எறும்புடன் வெளியே சென்று இதை வைத்தே ஒரு கண்காட்சி தொடங்கிவிடலாம். “பேசும் எறும்பு” என்று விளம்பரப் படுத்தினால் கூட்டம் அள்ளிக் கொண்டுபோகும். எறும்பிடமும் இந்த யோசனையைச் சொன்னான்.

அதற்கு எறும்பு சொன்னது-

“மனிதர்களிடம் தான் விலங்குகளை வேடிக்கை பார்க்கிற பழக்கம் இருக்கிறது. எல்லா விலங்குகளுக்கும் மிருகக் காட்சி சாலை- செத்தவற்றிற்கு அருங்காட்சியகம். சிங்கம்-புலி-குரங்கு-யானை-நாய்-கரடி-இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். உங்கள் விருப்பப் படி ஆட்டுவித்து உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளும் நீங்கள் எந்த விலங்கை விட்டு வைத்திருக்கிறீர்கள்? எது எப்படியோ உன்னுடன் சமமாகப் பழகிவிட்டேன்.உன் யோசனையையும் செயல்படுத்திப் பார்ப்போம்”.

ஏதோ ஒரு மந்திரியின் பிறந்த நாளுக்கு விடுதலை செய்யப்பட்ட கைதிகளுடன் அவனும் விடுதலை ஆனான். தன் கைகளில் எறும்பைச் சுமந்தபடி வெளியுலகத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அனுபவிக்கத் தொடங்கினான்.

அந்த நாளை சூடான ஒரு தேநீருடன் துவங்கலாம் என்றெண்ணியபடியே ஒரு விடுதிக்குள் நுழைந்தான். தேநீரும் வந்தது. முதன் முதலாய் பேசும் எறும்பை அந்த தேநீர் கொடுத்த ஊழியருக்குக் காட்டுவோம் என்ற நினைப்பில் இங்க பாத்தியாப்பா? என்ற படியே மேஜையில் எறும்பைக்காட்டினான்.

”அடச் சே! இப்பத்தான் துடைச்சிட்டுப் போனேன். எப்படி வந்தது இந்தச் சனியன்?” என்று ஒரே அடியில் அதை நசுக்கி விட்டு ”சாரி சார். தப்பா எடுத்துக்காதீங்க!” என்று அடுத்த மேஜைக்கு நகர்ந்தான்.

எறும்பு பேசலாம்.
யானை பறக்கலாம்.
பசுவும் நீந்தலாம்.
குதிரை ஆடலாம்.
சிங்கம் சிரிக்கலாம்.
மனிதன் மட்டும்
மனிதனாகவே.
மாறுவதும் இல்லை.
விரும்புவதும் இல்லை.         

10.6.11

பிற்பகல்






















தசாவதாரம் என்கிற கமலின் பத்து முகம் வெளியான பின் ஆறுமுகம் தொடங்கி எல்லோரிடமும் அடிபட்ட வார்த்தை கயாஸ் தியரி அல்லது கயாஸ் கோட்பாடு.

என்றோ நிகழ்ந்த ஒரு மிகச்சிறிய நிகழ்வு-காரணம்-விளைவு சுழற்சியில் சிக்கி காலப்போக்கில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் சாத்தியக்கூறு உண்டென்று தலையில் அடித்துச் சத்தியம் செய்யும் ஒரு கோட்பாடு.

இதற்கு மேல் வேண்டாம். கொட்டாவி அல்லது கோபம் வரும்.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பினால்
உண்டாகும் மென்காற்று காலப்போக்கில் இந்து மஹாசமுத்திரத்தில்  சுனாமியாய்த் தாக்கலாம் என்று ஒரு கவிதையாய்ச் சொன்னால் இது இன்னும் மனசுக்கு நெருக்கமாய் இருக்கும்.

இந்தக் கோட்பாட்டை இன்றைக்கு ராமாயணக் கதை ஒன்றால் பார்க்கலாம்.

ச்ரவணன் என்பது ஒரு சிறுவனின் பெயர். அவனது பெற்றோர்கள் மிகவும்  வயதானவர்கள். இருவரும் பார்வையற்றவர்கள். தங்களின் மகன்  உதவியில்லாமல் எந்த ஒரு வேலையையும் செய்ய
இயலாது. ச்ரவணனின் தந்தையார் ஒரு முனிவர். அவர்கள் மூவரும் ஒரு  வனத்தில் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த வனத்தில் தமிழ்நாட்டைப் போலவே நீரின்றி வறட்சி  ஏற்பட்டது. ஆகவே வேறு வனத்தைத் தேடிப் புறப்பட்டனர். பார்வையற்றும் நடக்க இயலாமலும் சிரமப்படும் தன் பெற்றோருக்கு
ஊன்றுகோலாகவும் கண்ணாகவும் இருந்தான் ச்ரவணன். 

இரண்டு பெரிய பிரம்புத் தட்டுகளில் அவர்களை அமரவைத்து  அத்தட்டுகளைத் தராசு போல் ஒரு நீண்ட வலுவான கழியில் பொருத்தி
அவர்களைத் தன் தோளில் தூக்கிக் கொண்டான்.

வெகு தூரம் நடந்து மற்றொரு வனத்தை அடைந்தனர். 

ச்ரவணனின் பெற்றோர் தாகமிகுதியால் நீர்பருக விரும்பினார்கள்.
நீர்க்குடுவையில் நீர் மிகவும் குறைவாக இருந்தபடியால் இருவரின்  தாகத்தையும் நீக்க எண்ணிக் குளமோ கிணறோ அருகில் உள்ளதா எனத்  தேடிச் சென்று நீர் கொண்டு வருவதாகக் கூறினான் ச்ரவணன்.

சீக்கிரம் வந்துவிடுமாறு கூறி அனுப்பிவைத்தனர் அந்த வயோதிகத் தம்பதியர்.

அந்தப் பகுதி அயோத்தி நகரைச் சேர்ந்தது.  அயோத்தி மன்னன் தசரதன்  காட்டுவிலங்குகளின் துன்பத்திலிருந்து மக்களைக் காப்பதற்காகக் கட்டுக்கடங்காத காட்டு மிருகங்களை வேட்டையாடக் கானகம்  வந்திருந்தான். 

மாலைநேரம். இருள் கவிழத் துவங்கியது மெதுவாக. மரத்தடியில்  ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான் தசரதன். அவன் அருகே மிருகம் ஒன்று  தண்ணீர் குடிப்பதுபோல சத்தம் கேட்டது.

துள்ளி எழுந்தான்.தன் வில்லில் நாணைத் தொடுத்தான். அம்பைச் செலுத்திய மறுநொடியே "அம்மா!" என்ற அலறல் கேட்டது.

மனிதக் குரலைக் கேட்ட மன்னன் திடுக்கிட்டான். குரல் வந்த திசையில்  ஓடினான். அங்கே ச்ரவணன் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்தான். அவனிடம்  தசரதன் மன்னிக்குமாறு வேண்டினான். தவறு நேர்ந்துவிட்டது என்று  புலம்பித் துடித்தான்.

தசரதனைத் தடுத்த ச்ரவணன்,

”மன்னா! என் பெற்றோர் வனத்தில் தாகத்தால் தவித்தவாறு  இருப்பார்கள்.நான் இறந்த செய்தியைச் சொல்லாமல் அவர்களை நீர் அருந்தச்  செய்துவிடுங்கள். பெற்ற தாய் தந்தையரின் நீர் வேட்கையைத் தீர்க்காமல்  மடிகிறேன். நீங்கள் அவர்களின் மகனாக இருந்து அவர்கள் தாகத்தைத் தீர்த்து  விடுங்கள். இதுதான் என் கடைசி ஆசை."என்று கூறிவிட்டு இறந்தான். 

ச்ரவணனின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற நீரை எடுத்துக்கொண்டு  அவன் பெற்றோர் இருக்குமிடம் நோக்கிச் சென்றான் தசரதன். குரலை
வெளிப்படுத்தாமல் நீரை அந்த வயோதிகத் தாயிடம் கொடுத்தான். 

தசரதனின் கை பட்டதுமே "யார்  நீ?"என்று குரல் கொடுத்தாள் அந்தத்தாய்.  இருவரும் "எங்கள் மகன் எங்கே? நீ ஏன் வந்தாய்? எங்கள் மகனுக்கு    என்னவாயிற்று?" என்று அழுது புலம்பினர். அதைத் தாங்காத தசரதன் தான்  தவறாக அம்பெய்திய காரணத்தால் ச்ரவணன் மாண்ட  செய்தியைக்  கூறினான். 

புத்திர சோகம் தாங்காத அந்தப் பெற்றோர் 

"ஏ! மன்னா! நாங்கள் மகனை இழந்து  தவித்து உயிர் விடுவது போலவே நீயும்  எத்தனை புத்திரர்களைப் பெற்றாலும் யாரும் அருகே இல்லாமல் புத்திர  சோகத்தாலேயே உயிர் விடக்கடவது. இது  எங்கள் சாபம்" என்று  சபித்துவிட்டு உயிர் விட்டனர்.

பின்னாளில் தசரதன் ராமனையும் லட்சுமணனையும் வனவாசத்திற்கு  அனுப்பிவிட்டு  புத்திரசோகத்தில் ஆழ்ந்து துன்பப்பட்டான். பரதனும்  சத்ருக்னனும் கேகயநாடு செல்லவும் தசரதன் தனிமையில் தவித்துப் பின்  உயிர் விட்டான்.

இந்திய மரபில் இதுபோன்ற முற்பகல் செய்யின் சமாச்சாரங்கள் நிறையவே இருக்கின்றன.தவறை மன்னிக்கும் போதனையை மதங்கள் வலியுறுத்தினாலும் இன்ஸ்டண்ட் சாபங்கள் நம் மரபின் வாக்கின் வலிமைக்கான அடையாளங்கள். அந்த சாபம் நீங்கும் வரை வாழ்தல் எனும் அனுபவத்தையும் அவை சேர்த்தே போதிப்பதாய் உணரத் தோன்றுகிறது.

அறியாமல்
கொன்றது
தசரதனின்
வில்லம்பு.
அறிந்தே
கொன்றது
முதியோரின்
சொல்லம்பு.
செயலுக்கு முன்
சிந்தனை.
இல்லாமல்
போனால்
நிந்தனை.

8.6.11

ஒரே கனா

























சலசலக்கும் நதியின் ஓசை உங்கள் காதுகளை அடைகிறது இப்போது.

வேட்டைக்காரர்களின் சுவடுகள் பாவாத-கடவுளின் அற்புதம் பரவிய-நட்பு பாராட்டும் மிருகங்களும் அபூர்வ மூலிகைகளும் நிறைந்த வனத்தில் நிற்கிறீர்கள்.

அதோ மனம் மயக்கும் இனிமையான காற்றில் அசைந்தபடி நிற்கும் மூன்று இளஞ்செடிகள் பேசிக் கொள்வதை நீங்கள் கேட்கிறீர்கள்.

முதல் செடிக்கு எத்தனை அழகான ஒரு கனவு.

“நான் வளர்ந்து மிகப் பெரிய மரமாகி இந்த உலகத்தின் மிகச் சிறந்த அரசனின் முத்துக்கள்-மாணிக்கங்கள்-வைர வைடூரியங்கள்-நிரம்பி வழியும் ஒரு பேழையாக மாறுவேன்.”

அதற்கடுத்த செடியின் அற்புதமான கனவு வெளிப்படுகிறது.

“நான் வளர்ந்தபின் வெட்டப்பட்டு ஒரு பெரும் போர்க்கப்பலாவேன். கடும் புயலோ கொடும் மழையோ என்னில் பயணிக்கும் வீரபராக்கிரமம் நிறைந்த உலகத்தின் மிகச் சிறந்த மன்னனையும் அவன் படைகளையும் சுமந்து செல்வேன்.”

விசித்ரமான கனவு மூன்றாவது இளங்குருத்துக்கு.

“என்னை யாரின் கோடரியும் வீழ்த்தாது நான் வானைத் தொட்டு வளர்வேன். கடவுளின் பாதங்களைத் தொடுவதாய் இருக்கும் என் உயரம். உலகே வியக்கும் அபூர்வ மரமாகி சரித்திரத்தின் பக்கங்களை நிரப்புவேன்”.

கனவுகள் வளர்ந்தது. காலம் தேய்ந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு மூன்று மரவெட்டிகள் அந்தக் காட்டிற்கு வந்தனர். கனவுகளைச் சுமந்து நின்ற அந்த மூன்று மரங்களின் அடியில் நின்றனர்.

முதல் மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரவெட்டி அதை ஒரு தச்சனிடம் கொண்டு சேர்க்க ஒரு மாணிக்கப் பேழையாகும் கனவு நிறைவேறக் காத்திருந்த அந்த மரம் இறுதியில் மாடுகளுக்கு வைக்கோல் நிரப்பி வைக்க உதவும் மரப்பெட்டியாய் உருக்கொண்டது.

இரண்டாவது மரத்தை மற்றொரு மரவெட்டி வீழ்த்தி அதை ஒரு நல்ல விலைக்குத் துறைமுகத்தில் விற்றான். போர்க்கப்பலாக வேண்டிய அதன் கனவு ஒரு சாதாரண மீன்பிடிப்படகாய் மாற்றம் கொண்டது.

மூன்றாவது மரத்துக்கோ தான் வெட்டி வீழ்த்தப்பட இருக்கிறோம் என்கிற நினைப்பே சகிக்க முடியாததாக இருந்தது. தன் கனவின் மீது ஒவ்வொரு முறையும் கோடரி விழுந்ததை எண்ணி எண்ணித் தவித்தபடியே வெட்டுண்டது. பல பாளங்களாய்  அதன் கனவு பிளவுண்டு இருண்டு கிடந்த யாரின் கவனிப்புமற்ற ஓர் அறையில் இட்டுப் பூட்டப்பட்டது.

கனவுகள் எல்லாம் சிதறுண்டு போய் வெவ்வேறு வடிவங்களில் மாற்றமுற்று காலத்தின் பிடியில் தங்களை ஒப்புக்கொடுத்த போதும் கனவின் பீளைகள் அவற்றின் கண்களில் மீதமிருக்கத்தான் செய்தன.

வருடங்கள் சென்றபின் இன்று கடுங்குளிரால் உறைந்த ஒரு இரவில் நுழைகிறீர்கள்.

 ஒரு நிறைமாத கர்ப்பிணியும் அவள் கணவனும் அந்த மாட்டுத் தொழுவத்தைக் கடக்கும் வேளையில் தாங்கமுடியாத பிரசவ வலி ஏற்பட்டு அந்தத் தொழுவத்தில் ஓர் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள் அந்தத் தாய்.

குளிருக்கு அடக்கமாக வைக்கோலால் நிரம்பிய அந்த முதல் மரத்தின் பெட்டியில் கதகதப்பாக இருக்கும்படி அந்தக் குழந்தையை அந்தத் தாய் இட்டபோது முதலாம் மரம் உலகத்தின் மிக உயர்ந்த பொக்கிஷத்தைத் தான் சுமப்பதாய் உணர்ந்தது.

சில வருடங்கள் கழிகின்றன.

ஒரு மழைக்காலத்தின் பகல் பொழுதில் கூட்டமாய் வந்த சிலர் அந்த இரண்டாவது மரத்தால் செய்த படகின் மீதேறிக் கடலில் செல்வதைப் பார்க்கிறீர்கள்.

நடுக்கடலில் அந்தப் படகு பயணிக்கும்போது கடுமையான புயல் படகை அலைக்கழித்துக் கவிழ்க்க இருக்கிறது. இரண்டாவது மரம் அவர்களை எப்படியாவது கரை சேர்த்துவிட விரும்பியது.

படகில் பயத்தோடு பயணித்தவர்கள் உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பினார்கள். அவர் கடலை நோக்கிச் சாந்தமான குரலில் கையை உயர்த்தி அசைத்தபடியே அமைதி-அமைதி என்றார். கடல் குளம் போல் அமைதியானது. இரண்டாவது மரம் அப்போது அரசர்களின் அரசரைச் சுமப்பதாக உணர்ந்தது.

இறுதியாகச் சில வருடங்கள் கழித்து இருட்டறையில் சிறைவாழ்க்கையை அனுபவித்த மூன்றாவது மரத்துக்கு விடுதலை கிடைத்தது. அதை ஒரு மனிதர் சுமக்க முடியாமல் சுமந்து சென்றார். அவரைச் சுற்றியிருந்த மக்கள் கொடும் சொற்களால் அவரை நிந்தித்தனர். சொற்கள் செய்ய விட்டதை சவுக்கால் அடித்துப் பூர்த்தி செய்தார்கள்.

அவரை அம்மரத்தின் பாளங்களில் ஆணிகளால் அறைந்து மலையுச்சிக்குக் கொண்டு சென்று நட்டு வைத்தனர். வானுயர எழும்பி நிற்பதாய் உணர்ந்த அந்த மரம் கடவுளுக்கு மிக நெருக்கமாய் இருப்பதை உணர்ந்து விம்மியது.

ஒரே கனா
என் வாழ்விலே
அதை நெஞ்சில்
வைத்திருப்பேன்.
கனா மெய்யாகும்
நாள் வரை உயிர்
கையில்
வைத்திருப்பேன்.
வானே என் மேலே
சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன்.
வானும் மண்ணும்
தேயும் வரை
வாழ்ந்து காட்டுவேன்.

(வைரமுத்துவின் இறவாப் புகழ் கொண்ட-எனக்கு மிகப் பிடித்த கவிதையின் இறுதிவரியை மானசீகமான அனுமதியுடன் கதைக்கேற்ற மாற்றத்துடன்.)     

4.6.11

எய்யாத அம்பு

அதோ சிவப்பு நிறத்தில் கோடு போட்ட சட்டை போட்டுக்கொண்டு ஒரு இளைஞன் நடந்து போகிறானே அவனைப் பற்றித்தான் இந்தக் கதை.

முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வந்துவிடும். கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான். தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லோரையும் திட்டித் தீர்த்துவிடுவான். அதற்குப் பிறகு அவர்களிடம் வருத்தப்படுவான்.

போகப்போக அவனை சுற்று வட்டாரத்தில் யாருக்கும் பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். அவனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதுண்டு. ஆனால் எப்படி என்றுதான் தெரியாமலிருந்தது.

அவனுடைய அப்பாவும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு ஒரு யோசனை செய்தார். 


ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரம் வரும்போதும் சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மரத்தில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றும்படி அறிவுரைத்தார்.

முதல் நாள் மரத்தில் சுமார் 50 ஆணிகளை அறைந்தான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு போகுமுன் கோபவெறி குறைந்து போய் மரத்தில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது.


சில நாட்களில் மரத்தில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் ஏற்பட்ட மாற்றத்தைச்  சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.


அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் சுத்தியலைக் கொடுத்து மரத்தில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பிறகு அப்பாவை மரத்தைப் பார்க்கக் கூட்டிப்போனான் இளைஞன். அப்பா மரத்தில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் உண்டான வடுக்களை மகனுக்குக் காட்டி-


"கோபம் வந்தால் நிதானமிழந்து பேசும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான்.

ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்தச் சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்.அதனால் பேசும் முன் பேசாதிருக்கப் பழகு" என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

கொட்டிய வார்த்தைகள்
திரும்ப வாராது.
கூரிய அம்பாய்த்
துளைக்காமல்
ஓயாது.
சுட்ட செங்கல்
மணலாகாது.
விதைத்த வினை
தினையாகாது.
பேசும் முன்பு
பேசாதிருக்க
வாழ்ந்த வாழ்வும்
வீணாகாது. 

3.6.11

ஜன்னல்

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திசைக்கு சற்றே வலதுபுறம் தெரிகிறதா ஒரு பிரம்மாண்டமான கட்டிடம்?

அது ஒரு பெரிய மருத்துவமனை. அதன் ஏழாவது தளத்துக்கு நாம் செல்கிறோம். 

ஒரு அறையில் இரு தீவிரமான வியாதிகளால் பீடித்த நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு சிறு தடுப்புச் சுவர். 

ஒருவரின் படுக்கை அருகே ஒரே ஒரு ஜன்னல். இவரை ஜான் என்று கூப்பிடலாம். மற்றவருக்கு - இவர் ராபர்ட் - அதுவும் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர தனிமையே இருவரின் துணை.

புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருந்தார் ஜான். ராபர்ட்டோ புற்று நோயுடன் கடுமையான பக்கவாத நோயாளி. நாட்கள் தேயத் தேய இருவரும் நண்பர்களாகி விட்டனர். ஒருமுறை ராபர்ட் ஜானிடம் சொன்னார்.

"உனக்காவது வெளி உலகைப் பார்க்க - பொழுது போக்க ஒரு ஜன்னல் இருக்கிறது. என் நிலைமையைப் பார். ஒவ்வொரு நொடியும் நரகம்.”

“நீ சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்னால். இனி நமக்குள் ஒரு ஒப்பந்தம். நான் என்னவெல்லாம் பார்க்கிறேனோ அதையெல்லாம் காட்சிக்குக் காட்சி உனக்கு விவரிப்பேன். போதுமா நண்பா?”

அன்று முதல் ஜான் தான் பார்க்க நேர்ந்தவற்றையெல்லாம் ராபர்ட்டுக்குப் படு சுவாரஸ்யமாகக் கூறி வந்தார்.

”ஹா! என்ன ஒரு ரம்யமான சூழல்! ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய நிலவின் மது பொழியும் சலனமற்ற ஏரி. நடுவில் சிறு தீவு. ஏரியில் படகுகள் மிதக்கின்றன. ஏரிக்கரையில் அழகான பூங்கா. காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்."

ராபர்ட்டுக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும். அதுவும் ஜானின் மொழியில் தன்னையே மறந்து தன் நோயை மறந்து கேட்டுக்கொண்டிருப்பார் ராபர்ட்.

மற்றொரு நாள் ஆனந்தமான ஒரு காட்சியை ஜான் விவரித்துக் கொண்டிருந்தார்.

"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை. அதில் மணப்பெண் வாசம் நிறைந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் உட்கார்ந்தபடி ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.மணப்பெண் முகத்தில் அடடா! அப்படி ஒரு வெட்கம்.!"

ராபர்ட்டுக்கு ஊர்வல ஆர்ப்பாட்டங்கள் எதுவும் கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை ஜான் மூலம் ஏக்கத்துடன் காதுகளால் நன்கு அனுபவிப்பார்.

ஒரு நாள் நள்ளிரவில் உறக்கத்திலேயே ஜான் மரித்துப் போனார்.

ராபர்ட்டுக்கு ஜானின் இழப்பைத் தாங்க முடியவில்லை ஒருநாளைக்கு மேல். 

மறுநாள் செவிலி வந்தபோது தன்னால் தனிமையின் வெறுமையைத் தாங்க முடியவில்லை. முடியுமானால் ஜன்னல் ஓரமாகவாவது தன் படுக்கையை மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள அவ்வாறே மாற்றிக்கொள்ள அனுமதிக்கப் பட்டார்.

ஜானின் மறைவை இப்படியாவது சமாளித்துக் கொள்வேன் என்று எண்ணியபடியே தன் வலியையும் பொருட்படுத்தாமல் மெல்லத் தன் உடலை உயர்த்தி ஜன்னல் வழியே பார்க்க-

அங்கே ஒரு பெரிய வெள்ளை மதிற்சுவர் தெரிந்தது.

ஜான் இருந்த போது ஜன்னல் வழியே பார்த்து விவரித்த காட்சிகளைப் பற்றிக் குழம்பியபடியே செவிலியிடம் சொன்னார் ராபர்ட்.

செவிலி ராபர்ட்டுக்கு மருந்தைக் கொடுத்தபடியே சொன்னாள்.

"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது ராபர்ட். கடுமையான புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்திருந்தார் ஜான்”

காட்சிகளைக் காணக் 
கண்கள் தேவையில்லை.
தொலைவைக் கடக்கக் 
கால்கள் தேவையில்லை.
பரிவு காட்டித்
தலைமுடி கோதக்
கைகளும் தேவையில்லை.
பிறரையும் மலர்த்தும்
மகிழம்பூ மனமும்
பிறருக்காய் உதிர்க்க 
ஒரு துளிக் கண்ணீரும்
இருந்துவிட்டால்.

2.6.11

கரைந்த காக்கை.






















இது நன்நம்பிக்கையின் வேரை அரிக்கும் மூடநம்பிக்கையின் கதை.

அரசன் ஒருவனுக்கு சகுனங்களில் பலமான நம்பிக்கை உண்டு. அரண்மனையின் சோதிடர் ஒருவர் இந்த மூடநம்பிக்கையால் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் இப்படித்தான். ”அரசே! அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அந்தநாளில் நினைக்காததெல்லாம் நடக்கும். நடப்பதெல்லாம் சிறக்கும்”' என்று நம்பிக்கை ஊட்டி உசுப்பேற்றினார்..

மன்னன், “யாரடா அங்கே? என்று சேவகனை அழைத்தான். காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். 


அவ்வளவுதான். தினமும் பொழுது விடியும் முன்பே சேவகனுக்கு கெட்ட காலம்தான். எழுந்ததும் எழுந்திராததுமாய் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைப் பார்த்துக் குதித்தான்.

"அடடா! நல்ல சகுனம், இன்றைக்கு நம் காட்டில் மழைதான். மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வும் பரிசுகளும் கொடுப்பார்” என்று மகிழ்ச்சி பொங்கிவழிய மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு மன்னனும் துள்ளி எழுந்தான். சேவகனுடன் அந்த இடத்துக்கு விரைந்தான். அதற்குள் ஒரு காக்கை அவசரமாய் எங்கோ கிளம்பிப் போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் வழக்கம்போல் வரவேண்டியது வந்து விட்டது. தளபதியை அழைத்து ”இந்தப் பொறுப்பில்லாத புளுகுணி சேவகனுக்குப் பத்து கசையடி கொடுத்து அதோடு அரண்மனையைச் சுற்றி நூறு தடவை ஓடச்சொல்” என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்கத் தொடங்கினான்.

மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது.

”நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடியும் நூறு சுற்றும்”' என்று மிரட்டினான்.

சேவகன் சொன்னான்.

'மஹா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது. சகுனமும் பலித்துவிட்டது” என்றான்.

இந்தக் கதையின் முடிவில் மன்னரை சுளீரென்று மின்னலும் அரண்மனை சோதிடரை டமார் என்ற இடியும் முறையே தாக்கின.

நம்பக்கூடாததை
நம்பியவனும்
நம்ப வேண்டியதை
நம்பாதவனும்
கரை சேர்ந்ததில்லை.
மூடநம்பிக்கைகள்
தளும்பும் குளத்தில்
நம்பிக்கையின் அல்லி
மலர்வதுமில்லை.

1.6.11

இழந்ததும் பெற்றதும்

















குருவைத் தேடி வந்தான் அந்த இளைஞன்.

‘‘குருவே! என்னால் மகிழ்ச்சியாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது.மகிழ்ச்சியை எங்கிருந்து பெறமுடியும்?” என்றான்.


‘‘அப்படியா?அப்படி என்ன கவலை உனக்கு’’

‘‘என் பக்கத்து வீட்டுக்காரன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான். எந்தக் கவலையுமில்லை அவனுக்கு.அதுதான் எப்படி  என்று தெரியவில்லை.. என்னாலும் அப்படி இருக்க முடியாதா?’’

குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கின்றன. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன ஆயிற்று? என்று சொல்”
என்றார்.

குரு சொன்னபடியே செய்தான் அந்த இளைஞன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.

‘‘குருவே!அவன் நிம்மதியே போச்சு. ஆனால் அவனை இப்படிப் பார்த்தபின்புதான் எனக்கு நிம்மதி” என்றான்.

”அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே? அப்புறம் எப்படி நிம்மதியிழந்தான்?”


”அதுதான் பிரச்னையே. விடியற்காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான்.

ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும் கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’

‘‘அவனுடைய தேடல் ஓரிரு நாளில் முடிந்து பழைய நிலைக்கு அவன் திரும்பிவிடுவான். ஆனால் உன் நிலை அபாயகரமானது. அவனை வைத்து உனக்குத்தான் இந்தப்பாடம். இருப்பதில் திருப்தி அடையாவிட்டால் நிம்மதி போய் விடும். புரிகிறதா?’’ என்றார் குரு.

சட்டென்று மின்னல் வெட்டியது நிம்மதியைத் தேடி குருவிடம் வந்தவனுக்கு.

எதை இழந்திருந்தாயோ
அதை நீ 
பெறுவதும்
எதைப் பெற்றிருந்தாயோ
அதை நீ
இழப்பதும்
இன்னொருவரால்
அல்ல
என்றுணரும்போது
இழக்கவும் பெறவும்
எதுவுமிருக்காது.
ஞானத்தால் பெற்ற
நிம்மதியின் மெத்தையில்
துயிலும்போது
துயர் இருக்காது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...