7.7.11

ஃபில்டர் காஃபி


வாழ்க்கையின் ப்ரச்சினைகளால் துவண்டு போயிருந்தான் அவன். எதிர்பாராத விதங்களில் எதிர்பாராதவர்களிடமிருந்து.

கஷ்டம் என்றால் என்னவென்று அவன் அறியாததல்ல. ஆனாலும் அவன் சம்பந்தப்படாத நிகழ்வுகளில் எல்லாம் சரியான புரிந்துகொள்ளுதலும் அவனின் விளக்கங்களையும் கேட்கக்கூட யாருமற்ற நிலையில் அவையெல்லாம் அவன் மீது அவதூறுகளாகப் போர்த்தப்பட்டன. ஒவ்வொரு நாளிலும் அவன் நிலையைச் சொல்லி அழக் கூட யாருமில்லாத வெற்றுத் தனிமையின் அனல்.

தனக்கு ஆறுதல் தரக்கூடிய தன் ஒரே நண்பனின் நினைவு வர மெல்ல ஊர்ந்து மனதின் பலத்தையெல்லாம் இழந்து பிடி கொள்ள எந்தப் பற்றுக் கோலுமின்றி அவன் வீட்டுக் கதவுகளின் முன்னே நின்றான்.

”வாப்பா! எல்லாம் கேள்விப்பட்டேன். என்னைப் பார்க்க இப்போதுதான் நேரம் கிடைத்ததா?” என்றான் அவன்.

”போதுமப்பா! நீயும் வார்த்தைகளால் கொல்லாதே. உன்னிடம் ஆறுதல் வார்த்தைகள் தேடித்தான் வந்தேன்.என் நிலை இப்படியாகி விட்டதே? அளவு கடந்த அன்பும் பாசமும் இப்படி விஷமாகிவிடக் கூடுமோ?சொல். நான் போக வேண்டிய பாதையும் தெளிவின்றிக் குழப்பமாக இருக்கிறதே! எனக்கு நல்ல வார்த்தைகள் சொல் என் நண்பனே.”

அவன் கையை ஆதரவாகப் பற்றிக் கொண்ட அவன் நண்பன் அவனைச் சமையலறைக்குக் கூட்டிபோனான். நண்பனின் மனைவி இறந்து இரண்டாண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு குழந்தையும் இல்லை.

”இப்படி உட்கார்” என்று அடுப்பின் முன்னே அமர்த்தினான். அடுப்பைப் பற்ற வைத்து மூன்று பாத்திரங்களில் நீரை நிரப்பிக் கொதிக்கவைத்தான். நீர் குமிழியிட்டுக் கொதிக்கத் துவங்கியிருந்தது.

அருகிலிருந்த கூடையிலிருந்து ஒரு கேரட்-முட்டை-இரண்டையும் தனித்தனியே இரு பாத்திரத்திலும் இட்டான்.பக்கத்தில் ஒரு ஃபில்டரில் ஆறு தேக்கரண்டி காஃபித்தூளை இட்டு நன்கு கொதித்த நீரை அதன் மேல் அது வடிய வடிய ஊற்றினான். நீர் மேலும் கொதித்தபடி இருந்தது. என்ன செய்கிறான் என்ற ஆவல் இவனைத் தன் கவலையிலிருந்து மீட்டிருந்தது.

ஐந்து நிமிடங்களுக்குப் பின் அடுப்பை நிறுத்திவிட்டு கேரட்டையும் முட்டையையும் வெளியே எடுத்தான். ஃபில்டரில் சேகரமாயிருந்த கருஞ்சாந்து போன்றிருந்த டிகாக்‌ஷனை வேறொரு கோப்பையில் இட்டு நிரப்பினான்.

”என்னப்பா செய்கிறாய்? ஆறுதல் தேடி வந்தால் ஏதோ சமையல் குறிப்பைச் செய்துகாட்டுகிறாய்?” என்றான்.

“நண்பனே! மேலோட்டமாக வாழ்க்கையைப் பார்க்காதே. என்ன ஆயிற்று என்று இந்தக் கேரட்டையும் முட்டையையும் உன் கைகளால் தொட்டுப்பார்.

கொதிநிலையைக் கடந்த நீரில் வலுவான வெளித்தோற்றம் கொண்ட கேரட் தன் வலுவை இழந்து வெந்துபோய் தொட்டாலே பிய்ந்துபோய்விடும் அளவில் தன் தன்மையை இழந்து விட்டது.

மென்மையான பூஞ்சையான வெளிப்புறம் கொண்ட முட்டையோ இந்தச் சோதனையில் தன் உட்புறத்தைக் கடினமாக்கிக் கொண்டது.

ஆனால் இந்த அற்புதத்தைப் பார். நீர் வேறு காஃபித் தூள் வேறென்ற நிலை முதலில். அதையே மாற்றி தன்னைக் கொதிக்கவைத்த நீரின் தன்மையை-அதன் சுவையை-அதன் நிறத்தை முற்றிலுமாகத் தன் இயல்பினதாகவே மாற்றிவிட்ட இந்தக் காஃபியை விட நம்பிக்கையூட்டக் கூடிய தன்மை கொண்டதை நீ எங்கு கண்டுவிடுவாய்?

கண்களில் நீர் தாரை தாரையாய் வடியத் தனக்கு எதிர்காலத்தின் சாலையில் வெளிச்சமிட்ட தன் ந்ண்பனின் தோளில் தலைசாய்த்து விம்மினான்.

முட்டை-
வெளிப்புறம்
உடைகையில்
உயிர் துறக்கிறது.
உட்புறம்
உடைகையில்
உயிர் பிறக்கிறது.
வெளிப்புறமோ
உட்புறமோ
உடைபடுகையில்
நம்பிக்கையின்
வாயிற்கதவுகள்
அடையாதிருக்கட்டும்.

20 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

என்ன கருத்தோட்டமான க(வி)தை, சென்ற பதிவில் ரமணி சார் சொன்னதை நான் இங்கே முன் மொழிகிறேன் அண்ணா

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உங்களது ஒவ்வொரு பகிர்விலும் அருமையான கருத்துகள் மிளிர்கின்றன ஜி! உங்கள் திறமைக்கு எனது பணிவான வணக்கங்கள்.

Ramani சொன்னது…

வாசல் கதவுகள் மூடுவதில்லை
தேவன் அரசாங்கம் என்பார் கண்ணதாசன்
அதைப்போல நம்பிக்கையின் கதவுகளும்
மூடாதே இருக்கட்டும்.வாழ்த்துக்கள்
(படம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன்)

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஆஹா, பேஷ்...பேஷ், ரொம்ப நன்னா இருக்கே!

ஃபில்டர் காஃபி போலவே நல்ல தரமான பதிவு தான். பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

RVS சொன்னது…

அடாடா... நீங்கள் தன்னம்பிக்கை நூல் ஒன்று எழுதலாமே ஜி! அற்புதமாக இருக்கிறது. ;-))

ரிஷபன் சொன்னது…

முட்டை-
வெளிப்புறம்
உடைகையில்
உயிர் துறக்கிறது.
உட்புறம்
உடைகையில்
உயிர் பிறக்கிறது.

ஆஹா.. இந்த வரிகளை முதலில் படித்ததும் நிஜமாகவே சிலிர்த்துப் போனது. இப்போது மீண்டும் உங்கள் புண்ணியத்தில்.

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! மிக நல்ல கருத்து.. எளிமையான உங்கள் தமிழ் என்னைத் தழுவுகிறது.

குணசேகரன்... சொன்னது…

அட.....இது நல்லாயிருக்கே

ஹேமா சொன்னது…

கவிதை எவ்வளவு விஷயத்தைச் சொல்கிறது.அபாரம் சுந்தர்ஜி !

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ராஜு. ஆழமான பார்வை கொண்டவர்களால் ஓவியம் உயிர்பெறுகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

நம்பிக்கையின் மொழியை நம் சூழலுக்கு ஏற்றாற்போல என் மொழியில் எழுதினேன் வெங்கட்.

தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நம்பிக்கையூட்டும் வரிகளுக்கு நன்றி ரமணியண்ணா.படம் தாமதமாகத்தான் கிடைத்தது.

சுந்தர்ஜி சொன்னது…

தரமான காஃபியைப் பருகவோ ரசிக்கவோ நீங்கள் இல்லாமல் போனால் அது புளித்துத்தான் போய்விடும்.

நன்றி கோபு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

எழுதிக்கொண்டே இருக்கலாம் ஆர்.வி.எஸ். அதனதன் வேளையில் அதது நடக்கும்.பாராட்டுக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

2010ல் சுந்தர்ஜி இதழுக்காக எழுதின கவிதை. இதை சிலாகித்துக் கடிதமெழுதியிருந்தீர்கள் ரிஷபன்.மீண்டும் சிலிர்த்தமைக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

தழுவிய என் தமிழை அணைத்துக் கொண்ட நீவீர் வாழ்க வாழ்க மோகன்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி குணா.

சுந்தர்ஜி சொன்னது…

கவிதையைக் கூர்ந்து கவனிப்பவர்கள்தானே கவிகளாக முடியும் ஹேமா உங்களைப் போல்.

பத்மநாபன் சொன்னது…

கைகளில் அள்ளிய நீரை இன்றுதான் பருக வாய்ப்பு கிட்டியது...

முதல் அள்ளலே அமுதாய் நம்பிக்கை சொற்கள்..

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பத்துஜி.

உங்கள் தாகம் தணிக்குமா என் எழுத்து?தெரியவில்லை.முயல்கிறேன்.

முதல் முறை வந்தமைக்கும் ஊக்கமளித்தமைக்கும் தனியாய் நன்றி.தொடர்ந்து வாருங்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...