ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா என்கிற சிபி மலயில் இயக்கிய மலையாளத் திரைப்படத்தின் இசையைப் பற்றி 1990ல் இருந்து பலநூறு தடவைகள் பல நூறு இடங்களில் பேசிச் சிலாகித்திருக்கிறேன். அதை எழுதியிருக்கிறேனா என்று எனக்கே நிச்சயமாயில்லாததால் இந்தப் பாடலுடன் இந்த இடுகை.
காய்தப்ரம் தாமோதரன் நம்பூதிரியும் மோஹன்லாலும். இந்தப் பாடலைப் பாடுமுன் காய்தப்ரம் மோஹன்லாலை சமருக்கு அழைப்பார். அதற்கு மோஹன்லால் போட்டியில் தனக்கு ஆர்வமில்லை. போட்டிக்கும் தயாரில்லை என்று ஒதுங்குவார். விடாது பாடத்தொடங்கி வலுக்கட்டாயமாக நெடுமுடி வேணுவின் ஆக்ஞைக்கு இணங்கி இந்தப் பாடலின் மற்றொரு நுனியைப் பிடித்துக்கொள்வார் மோஹன்லால்.
இயல்பாகவே காய்தப்ரம் பன்முகம் கொண்டவர். அவர் ஒரு சிறந்த பாடலாசிரியர். இசையமைப்பாளர். பாடகர். நடிகரும்.அவர் ஒரு பாடகராக நடிக்க மிகவும் சிரமப்பட நேர்ந்திருக்காது. ஆனால் ஒரு பாடகருக்குடைய உடல்மொழியோடு மோஹன்லால் இந்தப் பாடலில் க்ளாஸ்.
சாஸ்த்ரீயமான மலையாள சூழல் பார்வைக்கே மிகவும் இதமானது. அத்தோடு ரவீந்திரனின் மனம் மயக்கும் இசையின் லாகிரி ஒரு புயலாய் நம்மை அடித்துச் செல்லும் இந்தப் பாடலை கானகந்தர்வன் தாசேட்டனும் (நம்ம ஏசுதாஸ்தாங்க) ரவீந்திரன் மாஸ்டரும் சுஜித்தும் ஒரு ஜுகல்பந்தி பரிமாறியிருக்கும் அழகைக் கண்ணைத் திறந்து ஒரு தடவையும் கண்ணை மூடி ஒரு தடவையும் கேட்டுப்பாருங்கள்.
ஹிந்தோளம்-தோடி-பந்துவராளி-ஆபோகி-மோஹனம்-சங்கராபரணம்-ஷண்முகப்ரியா-கல்யாணி-சக்ரவாகம்-ரேவதி என அழகான நறுமணமலர்களால் கட்டப்பட்ட ஒரு ராகமாலிகையில் கரையும்போது
சரசரவென்று காட்டுத்தீ பக்கத்தில் எதுவெனத் தெரியாது படருவதாயும்-மிகப் பரந்து விரிந்த நிர்மலமான மேகங்களற்ற வானில் முழுநிலா கிழக்கு நோக்கி விரைவதாயும்-மிகச் சிறப்பான ஒரு க்ரிக்கெட் மட்டையாளனின் மிகச் சிறந்த நாளில் அவனின் மட்டையை நோக்கி வீசப்படும் பந்துகள் எல்லாமும் எல்லைக்கோட்டை நோக்கி விரையும் தன்மை கொண்டதாகவும் இப்பாடலின் அநுபவம் எனக்கு அமைகிறது.
எளிமையாகச் சொன்னால் உங்கள் அருகில் ஒரு மயக்கும் சுகந்தம் கொண்ட ஒரு ஊதுவத்தின் புகை சுழன்று மேலெழும்புவதை உணர்வீர்கள்.
உங்களுக்குத் துணையாக மத்யஸ்தராக வரும் மஹாராஜா உடையவர்மா நெடுமுடிவேணுவையும் சுவாரஸ்யத்துக்காக கௌதமி-சுகுமாரி என்று பார்வையாளர்களையும் உடன் அனுப்பியிருக்கிறேன்.
ஒருமுறை கேட்ட பின்பு உங்களின் ஆல் டைம் ஃபேவரிட் வரிசையில் இதுவும் ஒன்றாகி முதல் பத்தில் ஏறி உட்கார்ந்துகொள்ளும். ஒரு சின்னத் துண்டு இருந்தால் குறுக்கே போடவும். தாண்டிச் சத்தியம் செய்கிறேன்.
13 கருத்துகள்:
மிக நல்ல பகிர்வு அண்ணா
போட்டி தொடங்கும் முன்னமே தன் கைகளால் காய்தப்ரம் தாமோதரன் ஐ வணங்கி அமரும் போது கால்களை நீட்டி போட்டியாளனாக நிர்பந்தித்ததை நிரூபணம் செய்துகொண்டு அமரும் அழகை ரசித்தேன்
அடுத்து என்னை பொறுத்தவரை மோகன்லாலின் நடிப்பில் பெரிய கடினத்தை காணவில்லை , ஏனெனில் மிகச்சிறந்த நடிகர்கள் தண்ணீரை போன்றவர்கள் அவர்கள் ஏற்கும் பத்திரமாகவே ஆகிவிடக்கூடியவர்கள், ஆனால் நீங்கள் எழுதியது மாதிரி பல முகம் கொண்ட பாடகர் காய்தப்ரம் தாமோதரன் பாடகராகவே நடிப்பது கடினம் என்று நினைக்கிறன், எனேன்றால் நடிகர் நடிகராகவே இருப்பது இலகுவானது , ஆனால் பாடகர் பாடகராக நடிப்பது கடினம், பாடலின் ரசனைக்கேற்ப தன் முக பாவனைகளை தன்னை மறந்து மாற்றாமல் ஒரு நடிகராக போட்டியாளனாக நிலை நிறுத்துவதென்பது மிக கடினமானதாகவே நான் கருதுகிறேன். நான் மோகன்லாலைவிட காய்தப்ரம் தாமோதரனையே மிகவும் ரசித்தேன்
இதை பாடலை நான் முதல் முறையாக பார்க்கிறேன் நன்றி
very nice..
அருமையான பாடலை
பெருமையாகச் சொல்லி
பொறுமையாக அனுப்பியுள்ளீர்கள்.
மிக்க மகிழ்ச்சி.
உங்க பதிவு ஒரு பெரிய inspiration ஆ மாறிடுத்து!
மோகன்லால் உக்காந்துருக்கற style ... முக்கால் வாசி பாட்டுக்கு... அந்த கால் மேல கால் வெச்சிண்டு... லால்குடி பாணி-ல! மோகன்லால் பாட்டு பாடராப்ல நடிக்கறது, என்ன பொறுத்த வரைக்கும்- பெரிய ஆச்சர்யம் ஒண்ணும் கெடயாது! எத்தன எத்தன மலையாள சினிமாக்கள்-ல இத போல role! எந்த கதாபாத்ரம் பண்ணினாலும்- அதுவாவே மாறக்கூடிய ஒரு actor! எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு சினிமா அவரோடது-- "வானப்ரஸ்தம்"... மோகன்லால்/வேணு combination! இந்த பாட்டுலேயும்-- நெடுமுடிவேணு வோட "back up"! அதுவும்- நடுப்பர அவரும் சேர்ந்து பாடறது! இந்த "Sargam" சினிமா-ல "Aantholanam" பாட்டு சொல்லி கொடுப்பாரே! ஆஹா!
இந்த பதிவ படிச்சப்ரம்-- "His Highness Abdullaah" சினிமா-வ மறுபடியும் பாக்கணும்-போல ஆசையா இருக்கு! நாளைக்கு காலேல show எங்காத்துல அது தான்!
இந்த படத்துல இந்த பாட்டைவிட எனக்கு ரொம்பவும் பிடிச்சது-- "ப்ரமதவனம்"! அலை போல- மேலும் கீழுமா... அதுவும் யேசுதாஸ் குரல்! chance ஏ இல்ல!
இந்த பாடலை என் சிறுவயதில் கேட்டு அசந்திருக்கிறேன். வெகு காலத்திற்குப் பிறகு மீண்டும் ஜேசுதாசின் இசையில் நனைய விட்டீர்கள்.
சுந்தர் ஜி அவர்களே!தேவ சபாத்தலம் கேட்டு மகிழ்ந்தேன. அதனைவிட visuals மயக்கியது.திரைப்படம் என்பது a fine mixer of light and sound. இந்த அற்புதமான அனுபவத்தை நாம் பெற லைட் பாய் ,காமிரா,துணை இயக்குனர்,எடிட்டர் என்று எத்துணை பேர் துல்லியமாக தங்கள் பணியைச்செய்திருக்க வேண்டும் என்றுநினைக்கும் போது பிரமிப்பாய் இருக்கிறது.காந்தாரம்,த்வைதம், ரிஷபம், நிஷாதம் என்று காட்சி மாறும் பொது துணை இயக்குனர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள். காட்சியின் தொடர்ச்சி, ஒரேகோணத்தில் வெளிச்சம் ,மனிதர்கள் உட்காருவது நீற்பது, ஆஹா ! என்ன அற்புதமான காட்சி.! எவ்வளவு துல்லியமாக எடிட் செய்திருக்கிறார்கள்! சுகமான அனுபவம்!9நிமிடம் 2 செகண்டு வரும் இந்த காட்சிக்காக பல நாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கும். வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
ஆனந்தம்.. ஜகதானந்தம்..
முன்பு ரசித்து ரசித்துப் பார்த்த.. ஆடியோ கேசட்டே (அறுந்து போகும் அளவுக்கு)பாடலை இப்போது விடியோவுடன் பார்க்கும் ஆனந்தம்.
நான் சொல்ல வந்த அனுபவத்தை மாதங்கி அழகாய்ச் சொல்லி விட்டார்.. ஒரு டிட்டோ போட்டுக் கொள்ளுங்கள்..
ரசிகரில் பலவிதம்..
ரசிகன்
மகா ரசிகன்
ரண ரசிகன்.
நீர் ரணமகா ரசிக சிகாமணி ஸ்வாமி!
சுந்தர்ஜி... இந்தப் படத்தைப் பார்க்கும்போது தேமேன்னு பார்த்தேன். அப்போது பார்த்த படத்தின் இசையை இப்போதுதான் முழுமையாக உணர்கிறேன். இசைபற்றிய அறிவு எனக்குக் கிடையாது. ஆனால் எல்லா இசையையும் ரசித்து கேட்பேன். பிடிக்கும். அருமையாக இருந்தது இந்தப் பதிவு. ஒன்றைக் கவனித்தீர்களா கௌதமிக்கு முன்னால் வரும் இளைஞன் மீசையில்லாத கண்ணாடியில்லாத சுந்தர்ஜி போல இல்லை. தொடர்ந்து அவன் சிரிப்பையும் பாருங்கள் உங்கள் சிரிப்புப்போலவே.
நன்றி சுந்தர்.
கை பிடித்து 90களுக்கு
அழைத்து சென்று விட்டீர்கள்.
சித்ரம்,பரதம்,,கிரீடம்..
எவ்ளோ படங்கள்.
எனக்கும் ப்ரமதவனம் கொஞ்சம்
கூட தித்திப்பு.
ரசிகன் ஒரு ரசிகையில் வரும்
பாடி அழைத்தேனும்,ஏழிசை கீதமும்
சொர்க்கம் தான்.
மீண்டும் ஒரு நன்றி.
காஸ்யபன் சார்! ஸ்பெஷல் நன்றி உங்களின் நாடகத் துறை மற்றும் திரைத்துறை அனுபவத்துக்கு. ஒரு பத்து நிமிடக் காட்சி இத்தனை அழகாய் வெளிவந்திருப்பதையும் கோணங்களையும் ஒளியமைப்பையும் எடிடிங்கையும் மிகச் சரியாய் சிலாகித்தமைக்கு இசையின் ரசனையோடு.
அத்ற்குப் பிறகு ப்ரமவதனமும் ஏசுதாஸின் குரலில் தேவகானம். என் மொபைல் காலர்டோன் நெடுநாட்களாக அதுதான்.ஆனால் காட்சியமைப்பில் சரணத்தின் முடிவில் இன்னிதா என்று முடியும் உச்சஸ்தாயியில் மோகன்லால் கோட்டை விட்டிருப்பார். படப்பதிவில் நேர்ந்த இத்தவறை எடிடிங்கிலும் தவறவிட்டிருப்பார்கள். அதனாலேயே இந்தக் காட்சியைப் பாட்டாகக் கேட்கவே விரும்புகிறேன்.
தில்லி வந்த புதிதில் அறையில் இருந்த ஒரு 2-இன்-1 ல் இந்த படத்தின் பாடல்களைப் போட்டுப் போட்டுக் கேட்டு இருக்கிறோம்.... அத்தனைப் பாடல்களும் அற்புதமான பாடலகள்...
மீண்டும் இப்போது காணொளியுடன் பார்க்கும் வாய்ப்பு உங்கள் மூலம் கிடைத்திருக்கிறது...
ரசித்தேன்.
நன்றி
கருத்துரையிடுக