முல்லா நஸ்ருத்தீனைத் தெரியாதவர்கள் கீழே இருப்பதையும் தெரிந்தவர்கள் வேகமாகக் கடைசி வரிக்குச் சென்று மேலே இருப்பவற்றையும் படியுங்கள்.
I
ஒரு முறை முல்லா கப்பலில் வேலை செய்ய ஆசைகொண்டு விண்ணப்பித்திருந்தார். நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார்.
அதிகாரி: புயல் வந்தால் என்ன செய்வீர்?
முல்லா: நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரி: முன்னைவிடப் பெரியதாய் இன்னொரு புயல் வந்தால்?
முல்லா: இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரியும் முல்லாவும் ஒன்பதாவது புயலை முடித்து-
அதிகாரி: பத்தாவது புயல்?
முல்லா: நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன்.
அதிகாரி: அதெல்லாம் சரி மேன். இத்தனை நங்கூரம் எங்கிருந்து உமக்கு மட்டும்? என்று கேட்டு மாட்டிக்கிட்டான் பய என்று மூன்று முறை ஹா ஹா ஹா என்று சிரித்தார்.
முல்லா: உங்களுக்கு விடாம பத்து புயல் எங்கிருந்து கிடைக்குமோ அதுக்குப் பக்கத்துல இருந்துதான் என்று சொல்லி சிரிக்கவில்லை.
II
”முல்லா ரொம்ப புத்திசாலி" என்று பலரும் புகழ்வதைக் கேட்ட ராஜா முல்லாவைச் சோதிக்க எண்ணினார்.
ஒரு நாள் அரசவை கூடியபோது முல்லாவை ராஜா ராரா என்று தெலுங்கில் இல்லை உர்துவில் கூப்பிட்டார்.
”முல்லா! உங்கள் அறிவைச் சோதிக்கணுமே? நீங்கள் ஏதாவது ஒரு வாக்கியம் சொல்லலாம். அது உண்மையாயிருந்தால் உங்கள் தலை வெட்டப்படும். பொய்யாயிருந்தால் உங்களைத் தூக்கில் போடுவேன். எங்கே ஏதாவது ஒரு வாக்கியம் ப்ளீஸ்” என்றார் ராஜா.
உடனே வழக்கமாகத் தங்களுக்குள் இந்த மாதிரி நேரங்களில் குசுகுசு என்று பேசிக்கொள்ளும் மந்திரிகள் இப்போதும் குசுகுசு.
“முல்லா உண்மையைச் சொன்னாலும் செத்தார். பொய்யைச் சொன்னாலும் செத்தார். ஆக முல்லாவுக்கு இன்னிக்கு செத்து நாளைக்குப் பால்” என்பது அந்தக் குசுகுசுவின் விரிவாக்கம்.
முல்லா ராஜாவைப் பார்த்துப் தெனாவெட்டுடன் " மன்னரே! நீங்கள் என்னைத் தூக்கில் போடுவீர்கள் " என்ற மஹா வாக்கியத்தை உதிர்த்தார்.
முல்லா சொன்னதைக் கேட்ட மன்னர் திகைப்பூண்டை மிதிக்காமலே முழித்தார். பின் வேறென்ன? திகைத்தார்.
முல்லா சொன்னது உண்மையாயிருந்தா அவருடைய தலை வெட்டப்படவேண்டும்.அப்படி வெட்டப்பட்டால் அவர் சொன்னது பொய்யாகிவிடும். பொய் சொன்னால் தலையை வெட்டாமல் தூக்கில் போட வேண்டும்.
முல்லா சொன்னது பொய்யாயிருந்தா முல்லாவைத் தூக்கில் போடணும். அப்படித் தூக்கில் போட்டால் அவர் சொன்னது உண்மையாயிடும். உண்மையைச் சொன்னால் அவரைத் தூக்கில் போடாமல் தலையை வெட்டணும்.
ஆக வேறு வழியில்லாமல் வயிறு புகைய புத்திசாலித்தனமாக பதில் சொன்ன முல்லாவை ராஜா பாராட்டினார். சபையோர் வழக்கம்போல் சோர்வாகக் கைதட்டிவிட்டு இன்றைக்குப் பொழுது கழிந்தது என்று அவரவர் வீட்டுக்குக் குதிரைகளில் கிளம்பினார்கள்.
அதுசரி. உங்க ஆறு பேருக்கும் முல்லா யாருன்னு தெரியாதா? அடடா! வீட்டுக்குக் கெளம்பிட்டேனே. நாளக்கிச் சொல்றேனே.