4.2.11

சக்ரவாகம்


சக்ரவாகம்.

இப்படி ஒரு பெயரைக் கேட்ட ஞாபகம் லேசாக வருகிறதா? சின்ன சின்ன மழைத் துளிகள் சேர்த்து வைப்பேனோ என்று கருப்பு உடையில் இஷா கோபிகரைப் பார்க்காதது போலே பார்த்துக் கொண்டே மழையில் ஜம்மென்று நனைந்த அர்விந்சாமியை உடனே நினைவுக்கு வரும். அதுக்கப்புறம் அந்தப் பாடலில் சக்ரவாகம் பற்றி ஒரு வரி வரும். அந்தப் பறவையாவேனோ என்று ஏக்கத்துடன் பாடிவிட்டுக் கிளம்புவார் அ.சா.

’சகோரப் பறவை’என்று கூவப்படும் சாரி அழைக்கப்படும் பறவையின் மறு பெயர்தான் ‘சக்ரவாகம்’.அது இரவு நேரங்களில் இணையைப் பிரிய நேர்ந்தால் சோகத்துடன் கூவுமாம்.அதன் கூவல் மிகுந்த மன வேதனையைப் பொதிந்ததாக இருக்கும். சரி.

இப்போ சக்ரவாகம் என்ற பெயரில் ஒரு கர்நாடக சங்கீத ராகமும் இருக்கிறது. இந்த ராகம் மட்டும் ஒரு பெண்ணாயிருந்தால் கடத்திக் கொண்டுபோயிருப்பேன் என் குடிசைக்கு.
ஹலோ யாருங்க! உடனே ஓடாதீங்க. மேலோட்டமா உங்களுக்குப் பிடிச்சா மாதிரி பேசறேன். கொஞ்சம் கேளுங்க.

கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் குருதியில் நனைந்து சிவாஜி உயிர்விளிம்பில் தவிக்கையில் என்.டி.ராமராவ் சீர்காழியின் அற்புதக்குரலில் பாடுவாரே ஆன்மாவின் துயரெல்லாம் வெளிப்படும்படியும் அந்தத் துயருக்கும் அதுவே மருந்தாகும் மாயமும் கொண்ட ”உள்ளத்தில் நல்ல உள்ளம்”-அது சக்ரவாகம்.

முத்துவில் மாளிகையை விட்டுத் துரத்தப்படும் போது ரஜினிக்கு ஹரிஹரன் கொடுத்திருப்பார் குரல்-விடுகதையா இந்த வாழ்க்கை?- அதை யார் கேட்கும் போதும் உடனே மனமிறங்கும்.தத்துவ முலாம் பூசப்பட்டிருப்பதும் தெரியும்.புதிரும் விடையும் கொண்டதாய் அமைந்திருக்கும் அதன் பாவம்.

அடுத்து நேற்றுத்தான் ஒரு சக்ரவாகம் கேட்டேன். இன்னும் அதுதான் ஓடிக்கொண்டிருக்கிறது.

மந்திரப்புன்னகை என்கிற படத்தில் சுதாரகுநாதனின் உயிரை அறுத்தெடுக்கிற என்ன குறையோ என்ன நிறையோ என்கிற தேவகானம்தான் இதை உடனே எழுதத் தூண்டியது.

என்ன ஒரு சங்கீதம்! எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு விட்டு அந்தப் பாடலைப் பிடித்துக்கொண்டு எதையும் தேடாமல் தேசாந்திரியாய் வாழ்ந்து சாகலாம் போங்கள்.

ஒரு ப்யூஷனின் தோய்ப்பும் மிருதங்கத்தின் இறுக்கமும் ஹா!மனது இளகி இங்கே வழிந்தோடிக் கொண்டிருப்பது அந்த சங்கீதத்தைக் கேட்டவர்களுக்குப் புலப்படும்.நான் திருப்பித் திருப்பி ஐம்பதாவது தடவைக்கும் மேலே இதைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.கண்ணில் மழையையும் கண்ணன் அதைத் துடைப்பதையும் உணர்கிறேன்.

இந்த வரி எழுதும் போதும் எனக்குப் பின்னால் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அலைபாயுதே கண்ணாவை விரட்டிவிட்டு என் ரிங்டோனாகி விட்டது. என் காலர் ட்யூனாகவும் மாறிவிட்டது.

இந்தக் காட்சி எப்படி படமாக்கப் பட்டிருக்குமென நான் பார்க்கவும் விரும்பவில்லை.இதை ஒலி வடிவமாகவே ஒரு ஓவியம் போலத் தீட்டி வைத்துப் பாதுகாப்பேன்.

இது சக்ரவாகத்தின் மாயமா அங்கங்கே தொட்டுப்போகும் ஆஹிர்பைரவியின் வாசனையா அந்த வார்த்தைகளா அல்லது சுதாவின் குரலா? எனக்குத் தெரியாத குழப்பமாயிருக்கிறதே? என்ன செய்வேன்? தஞ்சாவூரில் செத்துபோன ப்ரகாஷ் இதைக் கேட்டிருக்கவேண்டும். என்னோடு கை கோர்த்துக்கொண்டு ஆடியிருப்பார்.

அறிவுமதி அற்புதமாக எழுதி வித்யாசாகர் இசையமைத்த இந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள். உங்களை இழந்து போவீர்கள். (வலது புறம் பேரானந்தம் இருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்டபடி வரிகளை மேயுங்கள். பரலோகம் சமீபிக்கும்)

என்ன குறையோ
என்ன நிறையோ
எதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
என்ன தவறோ
என்ன சரியோ
எதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
என்ன வினையோ
என்ன விடையோ
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
அதற்கும் நான்
உண்டென்பான்
கண்ணன்
( என்ன குறையோ )
நன்றும் வரலாம்
தீதும் வரலாம்
நண்பன் போலே
கண்ணன் வருவான்
வலியும் வரலாம்
வாட்டம் வரலாம்
வருடும் விரலாய்
கண்ணன் வருவான்
நேர்க்கோடுவட்டம்
ஆகலாம்
நிழல் கூட
விட்டுப் போகலாம்
தாளாத துன்பம்
நேர்கையில்
தாயாகக் கண்ணன்
மாறுவான்
அவன் வருவான்
கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே
புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை
அழகு மன்னனை
தினம் பாடி வா
மனமே
( என்ன குறையோ )
உண்டு எனலாம்
இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு
கண்ணன் சிரிப்பான்
இணைந்தும் வரலாம்
பிரிந்தும் தரலாம்
உறவைப் போலே
கண்ணன் இருப்பான்
பனி மூட்டம் மலையை
மூடலாம்
வழி கேட்டுப் பறவை
வாடலாம்
புதிரான கேள்வி
யாவிலும்
விடையாக
கண்ணன் மாறுவான்
ஒளிந்திருப்பான்
எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசை மழையாய்
உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை
கனிவு மன்னனை
தினம் பாடி வா
மனமே
( என்ன குறையோ )

37 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கேட்க அற்புதமான பாடல். எனக்கு பாட்டின் ராகம், தாளம் போன்றதெல்லாம் தெரியாது. இருந்தும் பாடலை ரசிக்கிறேன். பின்புலத்தில் ஒலி கேட்கும்போதே ஒரு வித அமைதி மனதில். பகிர்வுக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி.

G.M Balasubramaniam சொன்னது…

சுந்தர்ஜி, எதையும் அநுபவிக்க ஒரு கொடுப்பினை வேண்டும்.காதுக்கு இனிமையாக இருக்கும் பாட்டு ரசிக்கத் தெரியும். ராகமோ இசையின் நுணுக்கங்களோ தெரியாது. பின்னூட்டம் இடும் முதல் ரசிகன் நான் பாட்டைக் கேட்டபடி வரிகளை மேய்ந்தேன்.என் ப்ரௌசரில் என்ன குறையோ பாட்டு விட்டுவிட்டு வந்தது. எழுத்தை படிப்பதிலும் சரி எழுதுவதிலும் சரி இசையை அறிந்து ரசிப்பதிலும் சரி சுந்தர்ஜி இஸ் குட்.

இராமசாமி சொன்னது…

நன்றி சுந்தர்ஜீ :)

Nagasubramanian சொன்னது…

எனக்கு அந்த அளவுக்கெல்லாம் இசை ஞானம் கிடையாதுங்க. ஆனா நீங்க சொல்லி இருக்கிற எல்லாப் பாடல்களுமே அருமையான பாடல்கள். அவ்வளாவு தான்.

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜீ,

நலமா? அற்புதமான ராகம் இது... எனக்கு இளையராஜாவின் இசையில் டிஎம்எஸ் பாடிய... நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டுன்னு ஒரு பாடல் ரொம்ப பிடிக்கும்... அதுக்கப்புறம் இளையராஜா இசையில் டிஎம்எஸ் ஏறக்குறைய பதினைந்து வருஷங்கள் பாடலேன்னு நினைக்கிறேன்...

தியாகராஜ கிருதில எடுல ப்ரோதுவோ தெளியா... ஏகாந்தராமா நன்னு...ன்னு... எப்படிடா காப்பாத்தப் போற என்ன... தெரியலையே... ஏகாந்த ராமான்னு... உருகி உருகி பாடிய பாட்டை.. தியாகய்யர் படத்துல.. பாலு பாடியிருப்பார்... அப்படியே ராமன் வேற வழியில்லாம வாரி அணைச்சுக்குற குரல்ல! இது ஒரு ஜன்ய ராகம்னு நினைக்கிறேன்...முழுமையான ஏழு சுவரங்களும் இருக்கும் ராகம் இது...

நல்ல பகிர்வு...

அன்பும்
ராகவனும்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அருமை ! அருமை !! அருமை !!!

ஹேமா சொன்னது…

நானும் ஒரு இசைப் பரம்பரையில்தான் பிறந்திருக்கிறேன்.
ஆனால் இராகம் பற்றி எதுவும் தெரியவில்லை.ரசிக்க மட்டுமே.
இந்தப் பாடலையும் மிகவும் ரசித்திருக்கிறேன் சுந்தர்ஜி !

Balaji saravana சொன்னது…

அந்தப் பாட்ட முதல் முறை கேட்கும் போதே மிகப் பிடித்தது. ராகம் தெரியாவிட்டாலும் ரசிப்பதில் எனக்கும் என்னை உருக்குவதில் பாடலும் தப்பிப் போகவில்லை!

கோநா சொன்னது…

பிடித்த பாடலைப் பற்றி நிறையா தகவல் தெரிந்துகொள்ள முடிந்தது நன்றி சுந்தர்ஜீ.

Matangi Mawley சொன்னது…

excellent song sir! :) it's one of the 'most played' songs in my 'list'...

actually there's one another song in the same film-- megam vanthu pogum. one of the finest 'aabhogi'ies i have listened in the recent times. ('konja neram'- from chandramukhi was one. but i don't consider it 'fine' enough.. ) do listen to that as well...

chakravaaham is one of my favourite raagas. i like 'aahir bhairav' too. have you listened to 'poocho na kaise maine rain bitaayi' by manna dey? S.D. Burman music! WOW! I've never listened such an aahir bhairav later in my life- ever! think it's a movie titled-- 'meri surat teri aankhein'.. do listen o it, if you havn't..

great post sir. don't think many people would have listed to songs frm this movie. this song deserves this post!

thank you!!

kashyapan சொன்னது…

சுந்தர்ஜி! "சக்ரவாக"த்திற்கு இணையாக இந்துஸ்தானியில் "சந்த்ரபன்ஸ்" என்ற ராகம்." பாலைவனச் சொலை." என்ற படத்தில்"மேகமே- மேகமே" என்ற பாடலை வாணி ஜெயராம் பாடுவார்கள்..ஊனை உருக்கிவிடும்.இணையைத்த்தேடியலையும் சக்ரவாக பட்சியின் ஓலம் அடிநாதமாக ஒலிக்கும்.ஒருமுறை ஸ்பானிஷ் கலைஞர் தன் குழலில் மெற்கத்திய இசையாகப் பொழிந்தார்.என் இதயத்தில் இன்னும் ஓலித்துக்கொண்டிருக்கிறது.இசைக்கு பாரதூரம் கிடையாது.அது மௌனத்திலிருந்து நம்மை மீட்டெடுத்து மௌனத்தில்மீண்டும் ஆழ்த்தும் வல்லமை கோண்டது. வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

VAI. GOPALAKRISHNAN சொன்னது…

உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட சுந்தர்ஜியின் சக்ரவாகப் பதிவு இது அத்னாலேயே அருமை; எதிலும் கண்ணன் இருப்பதுபோல இதிலும் அதாவது தங்கள் எழுத்திலும் எங்கள் வாசிப்பிலும் அல்லவா கண்ணன் இருக்கிறான், அதனாலேயே அருமையிலும் அருமை.

ரிஷபன் சொன்னது…

எழுத்திலும் இசையிலும் மயங்கியபடி.. நான்!

RVS சொன்னது…

அபூர்வராகங்களில் வரும் "இந்திரலோகத்து சக்கரவாஹம்..." ஞாபகம் வந்தது. இசையான எழுத்து. நன்றி ஜி! ;-)

Ramani சொன்னது…

எழுத்து வரிகளோடும் இசையோடும் சேர்ந்து
பயணிக்கையில் சிறிது நேரமாயினும்
கிடைத்த சுஹானுபவம் சொல்லில் அடங்காது
ரசித்ததோடு நில்லாமல்
அனைவரும் ரசிக்கும் படியாகச் செய்த
உங்களுக்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்

Vel Kannan சொன்னது…

நல்லதோர் பகிர்வு உங்களின் மொழியில்

சிவகுமாரன் சொன்னது…

அருமையான பகிர்வு. எனக்கு இசையை ரசிக்கத்தான் தெரியும்.விமர்சிக்கும் ஞானம் இல்லை. நன்றாக பாடுபவர்களைப் பார்த்தாலும்,இன்ன ராகம், இவ்வளோ சுதி என்று சிலாகிப்பவர்களைக் கண்டாலும் எனக்கு பொறாமையாக இருக்கும். மீண்டும் மீண்டும் என்னை பொறாமைப்பட வைக்கிறீர்கள் சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களை இந்த ராகம் தொட்டுவிட்டது வெங்கட்.

இசைக்கு மட்டுமல்ல நீங்கள் விரும்பும் எதையும் அடைய அடிப்படையெதுவும் தேவையில்லை.

ஆத்மார்த்தமான தொடர் ஈடுபாடு மட்டுமிருந்தால் போதும்.

சுந்தர்ஜி சொன்னது…

பாலு சார்.கொடுப்பினை என்பதை நான் நம்மை முழுமையாகக் கொடுப்பது என்று கொள்கிறேன்.அது எதுவானாலும் சரி அதை அடையவும் அனுபவிக்கவும் முடியும் என்பது என் அனுபவமும் நம்பிக்கையும்.

பாட்டும் வார்த்தைகளும் உலுக்கிடுச்சு இல்லயா?

சுந்தர்ஜி சொன்னது…

நீங்க தாய்நாட்டுக்குத் திரும்பற மூடுக்கு வந்துட்டீங்க ராம்ஸ்.அவசரம் தெரியுது பின்னூட்டங்கள்ல.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி நாக்ஸ். ரசனை உங்களிடம் இருப்பதுதான் பாடல்களின் தேர்வும் உங்களை அடைந்ததற்குக் காரணம்.

வெங்கட்டுக்கும் பாலு சாருக்கும் எழுதினதையும் சேர்த்துக்குங்க.இசை உங்க மடீலதான் எப்பவுமே.

சுந்தர்ஜி சொன்னது…

என் நினைவில் நின்று வெளிவர மறுத்த பாட்டு நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு.

//எடுல ப்ரோதுவோ தெளியா... ஏகாந்தராமா நன்னு//லயும் பாலுவோட குரல்ல ஏகாந்தம்தான்.

அதே மாதிரி காக்கி சட்டைல வானிலே தேனிலா வும் ரொம்ப வேகமான சக்ரவாகம்தான்.

இல்லையா ராகவன்?

சுந்தர்ஜி சொன்னது…

அதை நீங்கள் சொல்வது பெருமை ஆர்.ஆர்.ஆர். சார்.

சுந்தர்ஜி சொன்னது…

இசையின் பக்கம் நீங்கள் எழுத்தின் பக்கம் திரும்பிய அளவு திரும்பவில்லையே தவிர உங்களுள் இசை ப்ரவாகித்தபடித்தான் இருக்கிறது ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

முதல் வருகைக்கு நன்றியும் அன்பும் பாலாஜி சரவணா.

ராகம் தெரியத் தேவையில்லை. தொடர்ந்து இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில் ராகங்களின் புதிர் உங்கலை அறியாமலே உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும்.

எனக்கும் அப்படித்தான்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் ஆனந்தம் என் சந்தோஷம் கோநா.நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

நள்ளிரவு சினிமாக்கள் வரிசையில் தூர்தர்ஷனில் மேரி சூரத் தேரி ஆங்கேன் பார்க்கும்போது இந்தப் பாடலுக்குக் கண்ணீர் வடித்திருக்கிறேன் மாதங்கி.மன்னா தேயும் என் அபிமானப் பாடகர்.உங்களின் தேர்வு எல்லாமே மேலானதாக இருக்கிறது.

ஆஹிர் பைரவியில் ஹரிஹரன் பாடிய ஸாகியா ஜாயே கஹான் கஜலில் பாடிக் கேட்டிருக்கிறீர்களா?இதற்கு விடியோ இல்லை.ஆனால் இந்தப் பாட்டு சொர்க்கம்.கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

மேகமேயும் உருக்கும் பாடல்களில் ஒன்றுதான்.

உங்களின் இன்னொரு முகத்தையும் தெரிந்துகொண்டது ஆனந்தம் காஸ்யபன் சார்.

சுந்தர்ஜி சொன்னது…

எல்லாவற்றிலும் எல்லோராலும் கண்ணனைக் காண இயலாது.

கண்ட கோபு சாருக்கு எல்லோரும் ஒரு ஓ அல்லது ஜே போடுங்க.

சுந்தர்ஜி சொன்னது…

உங்க பின்னூட்டமே அடுத்த பதிவு எழுதற போதையைத் தருது ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

இந்தப் பாட்டையும் கேட்டீங்கள்ல ஆர்.வி.எஸ்?

என்ன ஒரு பாட்டும் வரிகளும்?

சுந்தர்ஜி சொன்னது…

பேரானந்தம் உங்களுக்கு வாய்த்தால் அதையும் விட வேறானந்தம் வேண்டுமோ ரமணி சார்?

நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வேல்கண்ணன்.

சுந்தர்ஜி சொன்னது…

அதெல்லாம் கேட்கக் கேட்க வந்துடும் சிவகுமார்.

மொலாஸஸ்லேருந்து போதையேற்றக்கூடிய சமாச்சாரத்தை நீங்கள் தினமும் தயாரிக்கிறீர்களே அதைப் பார்த்து அப்புறம் நானும் பொறாமைப்படுவேன்.

vasan சொன்னது…

சுந்த‌ர்ஜி, இந்த‌ பாதிவைத் திற‌ந்து ம‌றும‌று ப‌டியும் இந்த‌ பாடலை கேட்டிருந்துவிட்டு, சில‌நாட்க‌ளாய் வ்ள‌ம‌யாய் செல்லும் மற்ற‌ ப‌திவுக்ளுக்கு கூட போகாம‌ல், போய்விடுகிறேன்.
இதே பாட‌லை றேடியோஸ்ப‌தி என்ற‌ ப‌திவிலும் முன்பே இதே பாட‌லை சிலாகித்து ப‌திவு செய்திருக்கிறார். சென்று பாருங்க‌ள். http://radiospathy.blogspot.com/

சுந்தர்ஜி சொன்னது…

நீங்கள் சுட்டாவிட்டால் எத்தனை பாரமாயிருந்திருக்கும் இது தெரியுமா ஒரு பிந்தைய வேளையில்?

எத்தனை சால்ஜாப்பு சொன்னாலும் மறுபடியும் நன்றி வாசன்.

r.selvakkumar சொன்னது…

அருமையான பதிவு!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...