25.6.11

மொழியற்ற நொடி























கவிதையின்
முதல்வரியால்
எழுதமுடிந்ததில்லை

மரணத்திலிருந்து
மீண்டவனின்
வார்த்தைகளற்ற
மறுநொடியை-

கூடு சிதைந்தபின்னும்
மறுகூட்டை நிறுவமுயலும்
பறவையின் நம்பிக்கையை-

தூக்குக்கயிற்றின் நிழலில்
மன்னிப்பு வழங்கப்பட்டவனின்
விசும்பும் கண்ணீரை-

கவிதையின்
இறுதிவரியாலும்
எழுதவாய்த்ததில்லை

பந்தயத்தில் தோற்றவனின்
விரக்திபூத்த வியர்வையை -

பிரார்த்தனைகளில்
மறைந்திருக்கும்
துன்பத்தின் பெருவலியை-

நாடிழந்த இனத்தின்
நெடுங்கனவு
கலைக்கப்பட்டுக்
காய்ந்த பின்னும்
சொட்டும் குருதியை-

கவிதையின்
முதல்
வரியாயும்
இறுதி வரியாயும்
இருக்க
வாய்த்ததில்லை

மொழியைக்
கடந்தவற்றிற்கும்
துறந்தவற்றிற்கும்.

21 கருத்துகள்:

மிருணா சொன்னது…

மொழியின் பற்றாமையை தீவிரமாக உணரும் கணங்களை தெளிவான புகைப்படங்களாக்குகிறது இந்த கவிதை. இறுதி பத்தியின் //வாய்த்ததில்லை// என்ற வார்த்தை யோசிப்பில் அலையெழுப்புகிறது.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///
கவிதையின்
முதல்வரியால்
எழுதமுடிந்ததில்லை
மரணத்திலிருந்து
மீண்டவனின்
வார்த்தைகளற்ற
மறுநொடியை-///////


அது வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத தருணம்...

அழகிய துவக்கம்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

///////
நாடிழந்த இனத்தின்
நெடுங்கனவு
கலைக்கப்பட்டுக்
காய்ந்த பின்னும்
சொட்டும் குருதியை-//////

வலிகள் நிறைந்த வரிகள்..
கண்ணீரால் மட்டுமே சொல்லக்கூடிய தருணங்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

//////
கவிதையின்
முதல்
வரியாயும்
இறுதி வரியாயும்
இருக்க
வாய்த்ததில்லை
மொழியைக்
கடந்தவற்றிற்கும்
துறந்தவற்றிற்கும்./////

உண்மையான வரிகள்..

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//மொழியைக்
கடந்தவற்றிற்கும்
துறந்தவற்றிற்கும்

கவிதையின்
முதல்
வரியாயும்
இறுதி வரியாயும்
இருக்க
வாய்த்ததில்லை//

அழகான ஒத்துக்கொள்ள வேண்டிய தகவல். நன்றி.

VELU.G சொன்னது…

அற்புதம்

Ramani சொன்னது…

மொழியற்ற நொடி எனவும் சொல்லலாம்
அதைச் சொல்வதற்கான சக்தியற்றது மொழி
எனவும் சொல்லலாம்
ஏனெனில் நீங்கள் குறிப்பிடுகின்ற நொடிகள்
அசாதாரணமானவைகள்

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

இதனால்தான் எழுதப்படாத கவிதைகள் இன்னும் வசீகரிக்கின்றன

G.M Balasubramaniam சொன்னது…

நீங்கள் கூறும் நொடிகளும், நிகழ்வுகளும் கவிதையின் ஒரு வரியில் (முதலோ, இறுதியோ)அடங்கக் கூடியவையா என்ன.? அது மொழியின் பற்றாக்குறை யினாலல்ல. அத்தருணங்களின் தீர்க்கத்தினால் முடியாததாகிறது.

தினேஷ்குமார் சொன்னது…

பாழுடல் தேடிய பரிகாசம்
பயிர்ச்சியத்தில் முன் செல்வோம்
எதிர் சொல் வீசி
அகத்துள் அடிமையானால்
மடியும்வரை நிம்மதியற்று
நிலையில்லா உடல்
போர்த்தி உள்ளுனரும் உயிரே
சம்மதிப்பாய் எனின் ....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கேரளப்பெண்குட்டியுடன்,
கதக்களிப்படம் அருமை.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

சொல்லாத வார்த்தைக்கு விலையே இல்லை
மனதில் பல கருத்துக்களை விதைத்த கவிதை அண்ணா
படித்தவுடன் மனம் சற்றே பாரமானது
காரணம் அறிய முடியவில்லை
முற்படவும் இல்லை

சுந்தர்ஜி சொன்னது…

நீங்களும் நானும் ஒன்றைத் தான் சொல்லவருகிறோம் பாலு சார்.

கவிதையின் முதல்வரி இறுதிவரி என்பதெல்லாம் கவிதையின் அழகுக்காக.

காஸ்மெடிக் ப்ரெசெண்டேஷன். அவ்வளவுதான்.

நிலாமகள் சொன்னது…

எழுதாக் க‌விதைக‌ள‌ல்ல‌வா அத்த‌ருண‌ங்க‌ளின் அட‌ருண‌ர்வுக‌ள்!

நிலாமகள் சொன்னது…

ப‌ட்டிய‌லில் தெரிவு பெற்றவை ஒவ்வொன்றையும் ம‌றுப‌டி ம‌ன‌சில் அசைபோட‌ப்போட‌ சொற்க‌ள் அவ‌சிய‌ம‌ற்ற‌ சிந்தையின் ஆழ‌த்தில் அமிழ்த்துகின்ற‌ன‌. எழுத‌வோ சொல்ல‌வோ வாய்க்காவிடினும் அவை ப‌ற்றிய‌ கிள‌ர்வைத் தூண்டிய‌தில் வென்று விட்டீர்க‌ள் க‌விதைக்கும் அப்பாற்ப‌ட்டு.

ரிஷபன் சொன்னது…

ஒவ்வொரு கவிதையும் தன்னை எழுதிக் கொள்ளும் அதே தருணம் எழுதப்படாத பல கவிதைகள் உள்ளே உயிர்ப்பித்துக் கொள்கின்றன..அழகாய்.

Matangi Mawley சொன்னது…

Moments that makes us blessed to be born as human; the silence in them, defines our being human. Moments- too pregnant- to be expressed by words...

Sometimes, your words too get too pregnant with beauty that words I look for to write in a comment for you- hide themselves behind the words you had used in your poetry...

சிவகுமாரன் சொன்னது…

உங்கள் கவிதையின் முதல் வரியும் இறுதி வரியும் எல்லாவற்றையும் எழுதி விட்டதே சுந்தர்ஜி .

மோகன்ஜி சொன்னது…

சொல்லப்படாதது தான் கவிதையாகின்றதோ?
இந்தக் கவிதையை ஒரு தத்துவ விளிம்பில் காட்டியிருக்கிறீர்கள். இன்னமும் எனக்கு இதில் யோசிக்க பல இருக்கிறது... சாவகாசமாய் அசைபோட்டு மீண்டும் வருவேன்.

ராகவன் சொன்னது…

அற்புதமான கவிதை இது சுந்தர்ஜி...

கவிதையின் முதல் வரியிலும், இறுதி வரியிலும் சொல்லப்படாத விஷயங்கள் தான் கவிதையின் இடைப்பட்ட வரிகளாகிறது...

அன்புடன்
ராகவன்

Vel Kannan சொன்னது…

என்னை மனதிற்குள் எட்டி பார்த்து எழுதியது மாதிரி இருக்கு ஜி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...