செய்யாத தவறுக்காக
யாருமற்ற இரவுகளில்
அந்தக் கைதி
வடிக்கும் கண்ணீர்
பற்றி அறியமுற்படுகிறது
இந்தக் கவிதை.
வாதி பிரதிவாதிகளின்
வாதங்கள் குறித்தோ
தண்டனையின் கனம் குறித்தோ
எதுவும் பேச விரும்பாதவனின்
அமைதி குறித்தும்,
அவனை இரவுகளில் தேடும்
மகன்களின் ஸ்பரிசம் பற்றியும்
வாழ்வின் கொடுந்தீயில் வாடும்
மனைவியின் வேர்வையைத்
துடைக்க இயலாது
பதறும் அக்கைதியின்
ஊனம் குறித்தும்.
தன்னிலை விளக்கம்
கொடுக்கவோ
தண்டனையைத்
தவிர்க்கவோ
விரும்பாதவனின்
ஊமைமொழியைப் பற்றியும்
அது
இரக்கம் கொள்கிறது.
குற்றம்சாட்டியவனின் மீதோ
தண்டனையளித்தவனின் மீதோ
எவ்வித கவனமோ
காழ்ப்புணர்ச்சியோ கொள்ளாத
அபூர்வமான கைதியைக்
கடவுளாய்க் கொண்டாட
விழைகிறது இக்கவிதை.
முடிந்த வரை
மொழிபெயர்க்கமுடியாத
கண்ணீரின் உப்புக்கான
காரணத்துக்காகவும்
என்றாவது அவனையும்
தேடி வரவிருக்கிற
யாரோ ஒருசிலருக்காகவும்
கனத்த இதயத்தோடு
காத்திருக்கிறது
இந்தக்கவிதை.
10 கருத்துகள்:
நெஞ்சை நெருடும் கவிதை, சார்.
//கண்ணீரின் உப்புக்கான
காரணத்துக்காகவும்
என்றாவது அவனையும்
தேடி வரவிருக்கிற
யாரோ ஒருசிலருக்காகவும்//
அருமையான வரிகள்.
தூங்கும் நீதி ஒரு நாள் எழுந்திருக்கும்.
அதுவரை நாமும் காத்திருப்போம்.
ஏற்க்குறைய தன்னை எவ்விதத்திலும்
வெளிப்படுத்த இயலாது
மரணப்படுக்கையில் விழித்தபடி
இருப்பவனின் நிலையையும்
அவனின் கையாலாகாத்தனத்தையும்
நினைவுபடுத்திப் போகிறது
இந்தக் கைதியின் நிலையும்...
சிறைக்கம்பிகளின் மீது மோதிச் சிதறும் உணர்வுத் திவிலைகள்...உங்கள் வரிகள்...
நாமெல்லோருமே கூட ஏதேதோ சிறைகளுக்குள்ளே அல்லவா நம்மைநாமே பூட்டிக் கொண்டு புலம்புகிறோம்...
அழகான கவிதை.. அன்பு சுந்தர்ஜி!
இத்தலைப்பில்
இயலாமையை
இயல்பாய்
இறக்கி
இதயத்தை
இரும்பு கம்பிக்களுக்கிடையே
இருத்தி
இயக்கி
இயம்பிய விதம்
இலக்கியம் அண்ணா
பூட்டப்பட்டவனின் உணர்வுகளைத் திறந்து விட்ட கவிதை.
செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிப்பவர் மெல்லினத்தவரே.சொல்லவும் மெல்லவும் முடியாத ,இயலாதவரின் எண்ணங்களுக்காக ஒரு கவிதை. என்றாவது அவனையும் தேடி வருபவர் இருக்கலாம்:-நம்பிக்கையின் ஒலி. நன்றாயிருக்கிறது சுந்தர்ஜி.
பலராலும் படிக்கப்படாத
பக்கங்களை
புரட்டுகிறது உங்கள் கவிதை
உள்ளே பொதிந்திருக்கும்
சோகங்களை ,
வாரி இறைக்கிறது
எங்கள் முகங்களில்.
அதில் கலந்து வழிகிறது
எங்கள் கண்ணீரும்.
யாருக்கும் தீங்கிலைக்கதவர் சிலர் படும் துயரங்களின் காரணமறியாது கடவுளைச் சாடும் சில தருணங்கள் வந்து போகிறது மனதில். கும்பகோணத்து பள்ளியின் தீ இன்னும் அனலாய்.
சிறைக்குள்ளே இருக்கும் மனிதனின் மனச்சிறைக்குள் பூட்டப்பட்டிருக்கும் உணர்ச்சிக் குவியல்கள் உங்கள் கவிதைக்குள்....
நம் மனதிற்குள்ளும் பூட்டிய விஷயங்களைப் பற்றிய சிந்தனைகள் ஏனோ வந்து போகின்றன நினைவில்....
நல்ல கவிதை...
உங்கள் சிறந்த கவிதைகளுள் ஒன்று. அழ வைக்கிறது.ஒரு முறைக்கு மேல் படிக்க மனதிற்குத் படிக்கத் தெம்பு இல்லாமல் போகிறது.
கருத்துரையிடுக