26.11.10

யுத்தம்



கூர்வாள் கொண்டு
கிளம்புகிறாய் யுத்த களத்திற்கு.
வெட்டி வீழ்வதும்
குத்திச் சாய்ப்பதும் நிறைவேறுகிறது
போரின் உபாயங்களாய்.
குருதியும் கண்ணீரும் கவ்வுகின்றன
அழுகும் சடலங்களை
வேட்டை நாயின் முனைப்போடு.
வெல்லும் ஒவ்வொரு
நாளும் வீழ்கிறாய் நீ.
வாழும் ஒவ்வொரு
நொடியும் சாகிறேன் நான்.

9 கருத்துகள்:

ஹ ர ணி சொன்னது…

இப்போது யுத்தம் என்பது ஈகோவும் வக்கிரப்புத்தியின் அடையாளமாகவும் உள்ளது. உயிரழித்தல் என்பது மயிர் மழித்தல்போல அவசியமும் வலியுமற்று அமைந்துவிடுகிறது. அரிப்பெடுத்த ஜந்துக்களைப்போல வேட்டை நடக்கிறது போர் எனும் பெயரில். மனது கணக்கிறது சிறுமியின் புகைப்படத்தால்.

santhanakrishnan சொன்னது…

மிகச் சரியாய்ச் சொன்னீர்கள்
சுந்தர்ஜி. வெற்றியே தோல்வியாவது
யுத்தத்தில் மட்டும்தான்.

விமலன் சொன்னது…

ஆ,சூப்பர்.வலிகளை ரணங்களை எடுத்துச்சொல்லிச் செல்கிறது.

நிலாமகள் சொன்னது…

வெல்லும் ஒவ்வொரு
நாளும் வீழ்கிறாய் நீ.
வாழும் ஒவ்வொரு
நொடியும்
சாகிறேன் நான்.

படமும் வார்த்தைகளும் சாகடிக்கும் வண்ணம்... எனது கூர் வாளை மழுங்கடிக்கும் உத்தேசம் பிறக்கிறது மனசில்.

vasan சொன்னது…

ஒரு சில‌ முட்டாள்க‌ளின் முனைப்பால்
கொட்ட‌டில் குழ‌ந்தைக‌ள் பாலின்றி.
வேலிக்ளுக்குள் கண்ணீரோடு க‌ன்னிக‌ள்,
நில‌ங்க‌ளுக்குள்ளும் காத்திருக்கும் கன்னிகள்.
கைகால்கழிந்த‌ குழ‌ந்தைக‌ள், க‌த‌விழ‌ந்த‌ வீடுக‌ள்.
ஒளி இழ‌ந்த‌ சாமிக‌ள்,அந்த‌ சாமிக‌ளும் கைவிட‌,
அப்பாவிக‌ளாய் ம‌க்க‌ள். பாவிக‌ளாய்?

ரிஷபன் சொன்னது…

மனதைப் பிசைகிறது.. கவிதையின் அந்தராத்மா.

மிருணா சொன்னது…

படமும்,வரிகளும் வலி.

ஹேமா சொன்னது…

படம் சொல்லும் கவிதையாகிறது !

பத்மா சொன்னது…

இருத்தலைப் போல் போர் புரிதலும் இயல்பு என்றாகிவிடுகிறதே !அதன் side productsகள் தான் மனதை வருத்துகிறது.
இந்த படத்தை போட்டு வருத்த எப்படி ஜி மனசு வந்தது ?
மேலும் தொலைகிறது உறக்கம் ..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...