பரவிக்கிடக்கிறது இரக்கமற்ற
நெருஞ்சிமுட்களின் நெடுஞ்சாலை.
பற்சக்கரங்களில் சிக்கிய துகிலாய்ச்
சிதைந்து போனது எதிர்காலம் குறித்த
அவளின் வண்ண ஓவியம்.
கடிகார முட்களின் இடைவெளியில்
அறையப்படுகிறது
பறப்பது அல்லது நடப்பது பற்றிய கனவுகள்.
நிரம்பிக்கொண்டிருக்கும் குடத்தின் நீரொலி போல்
எச்சரிக்கிறது கடக்கும் காலத்தின் ஓசை.
யாரும் கவனியாதிருக்க காற்றுதிர்த்த மல்லியாய்
ஏற்பாடுகள் எதுவுமற்று இறந்தவனின் வீடு.
12 கருத்துகள்:
நெருஞ்சி முட்களின் நெடுஞ்சாலை ரணங்களில் நனையச் செய்தது.குரூரமான கால ஓட்டம். அருமை ஜி.
-யாழி.
இறந்தவனின் வீடு மீளாத்துயரத்தில். அருமை சுந்தர்ஜி.
-ப.தியாகு.
நிரம்பிக்கொண்டிருக்கும்
குடத்தின் நீரொலி போல்
எச்சரிக்கிறது
கடக்கும் காலத்தின் ஓசை
என்ன ஒரு அருமையான ஒப்புமை..
எப்படி உவமைகளின் அழகு.
ஒவ்வொரு அணுவிலும் உவமைகளைக் கொண்டு வரலாமோ !
நிரம்பிக்கொண்டிருக்கும் குடத்தின் ஒலியைப் பொருத்தமான இடத்தில் புகுத்தியமைக்கு சீழ்கைஒலியோடு ஒரு சபாஷ். இடியாப்ப சிக்கல் சமூகத்தில் ஜீவிக்கும் ஒரு அபலையின் மன ஓட்டங்களை அழகாய்ப் பதிவு செய்துள்ளீர்கள்.
-தனலக்ஷ்மி பாஸ்கரன்
கனமான கவிதை.
-ஸ்ரீமதி.
காதலனின் இறப்பும் காதலியின் நெருஞ்சி முள் வாழ்வும் கண் கலங்கவைத்துவிட்டது அண்ணா.
-கே.அண்ணாமலை.
நிம்மதியின் சமன் குலைந்துபோன தருணத்தின் வரைபடம்.பிரிவின் பெருவலியும்,இழப்பின் நிர்கதியும் உங்கள் வரிகளில் தோன்றும்போது கண்களில் கசிவின் முட்டல்.காலத்தின் ஓசைக்கு நீங்கள் தந்த உவமையை மிகவும் ரசித்தேன்.
//யாரும் கவனியாதிருக்க காற்றுதிர்த்த மல்லியாய்
ஏற்பாடுகள் எதுவுமற்று
இறந்தவனின் வீடு.//
கவிதையின் மொத்த அழுத்தமும் இந்த வரிகளில்.
-உஷா.
என் தாமதத்துக்கு வருத்தம்.
நன்றி.
-யாழி
-தியாகு.
-ரிஷபன்.
-ஹேமா.
-டி.எல்.பி.
-அண்ணாமலை.
-ஸ்ரீமதி.
-உஷா.
காற்று உதிர்த்த மல்லியாய்
ஆகிப்போனதோ உறவு?
நன்றி மது.இழப்பின் வலி வார்த்தைகளைத் தாண்டியது சமயங்களில்.
இறந்தவனின் வீட்டில் இன்னமும் ஜீவன் இருக்கிறது, உங்கள் வரிகளால்!
கருத்துரையிடுக