17.7.10

கால ஊஞ்சல்




















தேடினேன்
என் வேர்களை-

பாறைகளில் வெட்டுப்பட்ட
புராதன சிற்பங்களில்.
குகைகளின்
அந்தகார இருளில்.
உளிகள் செதுக்கிய
நிழல்களின் முகங்களில்.

தேடினேன்
என் நூற்றுப் பாட்டனின் இருப்பை.

பல யுகங்களுக்கு முன்
என் பாட்டன் கடந்து சென்ற
கரடுமுரடான பாதைகளைக்
காலம் பருகி நொடியில் அடைந்தேன்.

பாட்டியிடம் தாத்தா
பகிர்ந்து கொண்ட
மொழியின் சுவடுகளை
ஒரு நாயின் வேட்கையோடு
முகர்ந்தேன்.

காலங்களும் தொடாத
நதிகளின் ஆழத்தில்
மூழ்கிப் புதைந்து
முத்துக்கள் பொறுக்கினேன்.

நேற்றின் மண்ணில்
என் நாவினைப் புரட்டிச் சுவைத்தேன்.

ஒரு சிறு பாறையைப் பெயர்த்து என்
உள்ளங்கைகளுக்குள் பொதிந்து கொண்டபோது
யுகங்கள் தாண்டி பின்னும் முன்னுமாய்க்
கால ஊஞ்சலில் ஆடித் திளைத்தேன்.

காலமே!
காற்றில் அனுப்பும் என் முத்தங்களை
முகமறியாத என் பாட்டனின்
கைகளில் பதித்து விடு.

5 கருத்துகள்:

நிலா மகள் சொன்னது…

குகை கிளர்த்திய உணர்வுகள் அபாரம்!

santhanakrishnan சொன்னது…

நிச்சயம் சேர்ந்து விடும்.

Vel Kannan சொன்னது…

தூது அனுப்பவது கவிதை அல்லவா .... கண்டிப்பாக சேர்த்து விடும் கவிதை விட வலிமையானது எது ... இவ்வுலகில்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி
-நிலாமகள்.
-மதுமிதா.
-வேல்கண்ணன்.

Harani சொன்னது…

ஒரு நாயின் வேட்கையோடு முகர்ந்தேன்....அற்புதம் சுந்தர்ஜி..
ஒரு சுவாரஸ்யமிக்க அதேசமயம் சொற்களைத் தேர்ந்து கையாண்டு வெளிப்படும் கவிதையின் பொருண்மையிலும் அதன் வசீகரத்திலும் திரும்பத்திரும்பத் தோன்றுவது எழுதுவதைவிட படிப்பது ரொம்பரொம்ப சுகமானது..சுகம் தந்த தோழனே நன்றிகள்..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...