13.7.10

விட்டு விடு



சில சமயங்களில் கவிதை மலராது போகலாம்.
ஒரு வெற்றுத் தாளைக் காற்று அமரும்
வகையில் திறந்து வைத்துவிடு.
அது எழுதிவிட்டுப் போகட்டும்
பரவசமூட்டும் ஒரு கவிதையை.

சில சமயங்களில் குரல் மழுங்கி
இசை அரும்பாது போகலாம்.
சாளரங்களைத் திறந்து வைத்துப்போ.
காலத்தின் ஒப்பற்ற இசையைத்
தவிட்டுக்குருவிகளும் தவளைகளும்
இசைக்கட்டும்.

சில சமயங்களில் மூப்பும் மறதியும்
அடவுகளையும் முத்திரைகளையும்
மறக்கடித்திருக்கலாம்.
நடை பழகும் மழலையிடம் தேடி எடு உன் நடனத்தை.

ஒவ்வொரு நாளும்
வாழ மறந்து போயிருக்கலாம்.
நீர்ப் பறவைகள் கொட்டமடிக்கும் ஏரிக்குள்
சட்டைப் பையில் சுமக்கும் தொலைபேசியை வீசி எறி.
கரையோர இருப்புப்பாதையில் காற்று
முடிக்கற்றையைக் கலைக்கக் கைவீசி நட.

10 கருத்துகள்:

Madumitha சொன்னது…

எட்டாக் கனியைச் சுவைக்க முயற்சிப்பதில் தான்
முதல் முடிச்சு விழுகிறது.
பின் முடிச்சுகள் பெருகி
அவிழ்க்க முடியாச் சிக்கலாகிறது.

மதுரை சரவணன் சொன்னது…

//கரையோர இருப்புப்பாதையில்
காற்று
முடிக்கற்றையைக் கலைக்கக்
கைவீசி நட//

அருமை. வாழ்த்துக்கள்

vasan சொன்னது…

அப்ப‌டியே இருந்துவிட‌ சொல்லுது ம‌னசு,
இப்ப‌டியா இருப்ப‌, சொல்லிடுமோ உற‌வு?
எப்ப‌டி எப்ப‌டியோ இருந்திருக்கலாம்!
அப்ப‌டி, அப்போ ந‌ட‌க்கையில‌ன்னா.

Vel Kannan சொன்னது…

சிறப்பான கவிதை , வாழ்த்துகள்

//நீர்ப் பறவைகள் கொட்டமடிக்கும் ஏரிக்குள்சட்டைப் பையில் சுமக்கும் தொலைபேசியைவீசி ஏறி..//

ஒருநாளில் நடத்த வேண்டும் .

பத்மா சொன்னது…

அது தான் தொலைபேசியை தூர எறிந்து விட்டீர்களோ ?

ஹேமா சொன்னது…

ஊர்ல தண்டவாளத்தில நிறைய நடந்திருக்கேன்.அந்த ஆசையில இங்கயும் ஒரு நாள் நடக்கப்போய் யாரோ ஒருத்தர் போலீஸுக்கு அறிவிச்சு போலிஸுக்குப் பதில சொல்ல வேண்டியதாய்ப் போச்சு.
சும்மா...ஆசைக்குத்தான் நடந்தேன்னு.தற்கொலை செய்யப்போனேன்னு சந்தேகம் அவங்களுக்கு !

சுந்தர்ஜி சொன்னது…

அழகாய்ச் சொல்கிறீர்கள் மதுமிதா.நன்றி.

மன்னியுங்கள் மதுரை சரவணன்.முதல் வரவேற்பு தாமதமாக.வாழ்த்துக்கு நன்றி.

எசப்பாட்டு பாடிட்டீங்க அழகா.நன்றி வாசன்.

நடத்திடுவோம் அப்பப்ப வேலகண்ணன்.

பத்மா-கரெக்ட்.சமயங்களில் அப்படி.

இன்னொரு தடவை அப்படிச் செய்யாதீங்கோ ஹேமா.நாங்க தாங்க மாட்டோம்.ஓமம்.

Harani சொன்னது…

உங்கள் கவிதைகளில் நிறைய மாற்றங்கள் சுந்தர்ஜி...படிக்கப் படிக்க அனுபவிக்கிறேன்..ஒரு ஏகாந்தத்தை..பரவசத்தை..மனதை நெருடுகிறது..நானும் உங்கள் கவிதைகளின் ஆழத்தில் ஊடுருவி என்னை மறக்கிறேன்.

சைக்கிள் சொன்னது…

சுகந்தமான கவிதை.மிக அருமை.

சுந்தர்ஜி சொன்னது…

நிறையப் புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன் தினமும்.எளிமையின் சாறு என்னை வசீகரிக்கிறது ஹரணி.உங்கள் ரசனையை வணங்கி என்னை சீர்செய்துகொள்கிறேன்.

எனக்கும் மிகவும் மனநிறைவைத் தந்த ஒரு கவிதை தோழி. நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...