23.10.10

என் ஆணவம்


ஒரு பெரிய இறுதிநாள் தெரியாத நாட்காட்டியில் தினசரித் தாட்கள் உதிர்ந்தபடி இருக்கின்றன.

என் கடந்த பாதையை உற்று நோக்கும் போது எத்தனை தவறுகளையும்-அகங்காரமான செய்கைகளையும்-செய்திருக்கிறேன் என்று புரிகிறது.

எத்தனை விஷயங்கள் தெரிந்து கொண்டுவிட்டோம் என்று நினைக்கும்போது இன்றும் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் என் அகங்காரத்தின் தலையில் ஒரு குட்டு குட்டுகிறது.

பாலோ கோய்லோ சொல்வது போல் ஒரு விஷயம் நமக்குத் தெரியாது என்கிற போது நாம் எத்தனை தன்னடக்கத்துடன் இருக்க வேண்டும்- இது தெரியாது நாமிருக்கிறோம் என்ற கூச்சத்துடன்.

ஆக நான் தினமும் கற்றுக்கொள்ள ஏராளமானவை இருக்கும்போது, என் இறுதி நாளிலும் கற்றுக்கொள்ளக் கைவராத இயலாமையுடன் தான் நான் விடைபெறுகிறேன் எனும்போது இயற்கையின் முன் நான் எத்தனை சிறியவன் என்ற அனுபவம் வாய்க்கிறது.

எனக்குத் தெரியாத- தெரிந்து கொள்ள முடியாத எத்தனை விஷயங்களின் மீது நான் சிறிதும் தயக்கமின்றி அபிப்பிராயம் சொல்கிறேன்? எத்தனை ஆணவத்துடன் எனக்குத் தெரியாததில்லை என்று மார்தட்டுகிறேன்?

ஆக நாளையும் கற்றுக்கொள்வதற்கு நான் தயாராகிறேன் எனும்போது ஆணவமற்ற ஒரு இலையின் மிதப்பு எனக்கு வாய்க்கிறது.

நினைத்துப் பார்ப்பதை விட எல்லோரும் அறிய எழுதிப்பார்ப்பது உயரியது. என் ஆணவத்தை ஒரு பறவையின் சிறகைப் போல் உதிர்க்க விரும்பும் இந்த நாள் என் இனிய நாள்.

6 கருத்துகள்:

நிலா மகள் சொன்னது…

// என் ஆணவத்தை ஒரு பறவையின் சிறகைப் போல் உதிர்க்க விரும்பும் இந்த நாள் என் இனிய நாள்.//
தினமும் விழித்தவுடன் பார்க்குமிடத்தில் எழுதி வைக்க வேண்டிய வைர வரிகள்.

vasan சொன்னது…

ஆண‌வ‌ச் சிற‌கு முற்றி உதிர, அதனிட‌த்து
முளைவிட்டு வ‌ருகிற‌து அமைதி இற‌கு.

இவ்வ‌ள‌வு தெரியாம‌ல் இருக்கிறோமா!
என‌த் தெரிவ‌தே அறிவு. ச‌ரியா சுந்த‌ர்ஜி?

ரிஷபன் சொன்னது…

ஆணவமற்ற ஒரு இலையின் மிதப்பு ..

ஒரு பறவையின் சிறகைப் போல் உதிர்க்க விரும்பும் இந்த நாள்..

வரிகள்!

santhanakrishnan சொன்னது…

என் ஆணவம் எல்லோர்
சார்பிலும் சொல்லப் பட்ட
ஓர் ஆவணம்.
உதிர்க்க உதிர்க்க
சிறகுகள் முளைத்துக்
கொண்டேயிருக்கின்றன.
Never ending process.

Harani சொன்னது…

சுந்தர்ஜி..

என் ஆணவம் என்று தலைப்பிடும்போதே
விட்டகுறைதொட்டகுறைபோல தென்படுவது நமது குற்றமல்ல மனித இயல்பு.
எப்போதும்போல இருங்கள் சுந்தர்ஜி. தானாய் எல்லாம் உதிர்ந்துவிடும். அதை நாம் எதைக்கொண்டும் தடைசெய்துவிடமுடியாது. இருப்பினும் உங்கள் அடிமனதில் ஓர் அமைதிக்கடல் கொந்தளிப்பதை உணரமுயல்கிறேன். என் ஊகம்கூட தவறாககூட இருக்கலாம். மணற்பரப்பில் விழுந்துவிட்ட ஒரு கண்ணீர்த்துளியின் அடையாளம்போலத்தான் நாம். இருப்பது உண்மையென்று உணரும் தருணத்திலேயே அது இல்லையென்று காய்ந்துவிடும். எழுதுங்கள் சுந்தர்ஜி. எழுதி கரைவோம் இயல்பாய்.

சைக்கிள் சொன்னது…

பெரிய களம்.சொல்லும் எதுவுமே ஆணவமோ என அஞ்சத் தோன்றுகிறது.அதனால் இப்படி ஒரு களத்தை எழுதியதற்கு ஒரு salute.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...