19.10.10

நிராகரிப்பின் மலர்


என்றோ ஒருநாள்
ஒருவேளை சந்திக்க
நேர்கையில்


பரிமாறிக்கொள்ள
என்னிடம் மன்னிப்புக்களும் -
உன்னிடம் அவற்றை
நிராகரிக்கும் பெருந்தன்மையும் -
இருக்கலாம்.

இத்தனை நாள்
திறவாத தாழின் துரு
உன் மென் திருப்பலில் உதிர்ந்து
சேருமிடம் காட்டும்
புதிய தடம் மலரலாம்.

என் வயோதிகக் கண்களின்
விழிநீரைத் துடைக்க
நடுங்கும் உன் கைகள்
உயரலாம்.

மன்றாடி ஓய்ந்தடங்கிய
மனதின் அடுக்குகள்
அரவணைப்பின் களிம்பு
பூசத் தவிக்கலாம்.

யூகங்களும் பரிதவிப்பும்
நிரம்பித் தள்ளாடும்
இப்படியான என் இறுதிநாள்-

நிகழாத அந்தச் சந்திப்பிலும் -
அளிக்கப்படாத மன்னிப்பின்
கூரான கொக்கியிலும் சிக்கி -
நிராதரவின் வாயிலில்
கொண்டு நிறுத்த-

நிராகரிப்பின் இறுதிக்கவிதை
எழுதப்படாதே முடிந்திருக்கலாம்.

4 கருத்துகள்:

நிலா மகள் சொன்னது…

கடலின் கரிப்பை விஞ்சும் படியாய்தான் நிராகரிப்பின் கரிப்பு! அளிக்கப் படாத மன்னிப்பின் கூர் தரும் உறுத்தல் நிராதரவின் புழுக்கத்தினும் கொடிது.

vasan சொன்னது…

மார்புக்குள் புர‌லும் விள‌க்காத‌ வில‌க‌ல்
கால‌த்தின் கையுள்,சொல்ல‌ப் ப‌டு முன்
கொள்ள‌ப் ப‌ட்டால், வாழ்ந்து என்?

(புரியாவிடில் இது என் க‌விதை,
புரிந்துவிடின்,இது உங்க‌ள‌தின் தாக்க‌ம்.)

மிருணா சொன்னது…

தவறவிட்ட கணங்கள் கனக்கத் தவறுவதே இல்லை.கரிப்புச் சுவை எழுப்பும் கவிதை.

Vel Kannan சொன்னது…

//கரிப்புச் சுவை எழுப்பும் கவிதை//
சைக்கிள் சொன்னதே நானும் ஜி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...