குணா வந்த போது நான் சென்னை திருவல்லிக்கேணி வாசி.
விடாத மழை ஒரு வாரமும்.
தூக்கமாத்திரை சாப்பிட்டும் தூக்கம் தொலைத்த வியாதிக்காரனாய் குணா பார்த்துத் தூக்கமிழந்த நாட்கள் ஒரு ஊதுவத்தியின் சுழலும் புகையாய்.
தினமும் குடையுடன் தேவியில் ஒருவாரம் விடாது என் நெருக்கமான 5 நண்பர்களும் குணாவை அருந்தினோம்.
ஒவ்வொரு நாளும் காட்சி முடிந்து அண்ணாசாலையிலிருந்து திருவல்லிக்கேணி அக்பர்சாஹிப் தெரு அறை வரையிலும் கனத்த மௌனத்துடனும் கண்களில் வடிந்து காய்ந்த கண்ணீருடனும் படுக்கையில் விழுந்தும் உறங்காத இரவுகள்.
முதல் நாள் காட்சி முடிந்து திரும்புகையில் இறுதிக்காட்சியை விமர்சித்த என் நண்பன் செல்வராஜை கன்னத்தில் அறைந்தது நினைவிலாடுகிறது.அடித்ததன் வலியை விட நான் அடிப்பேன் என்று கொஞ்சமும் நம்பாத அதிர்ச்சியில் அவன் உறைந்தது இன்னமும் எனக்கு வலிக்கிறது.
அன்று தொடங்கி இன்று வரையிலான என் பயணத்தில் இன்று வரை குறையெதுவும் காண முடியாத அல்லது விரும்பாத சிலவற்றில் குணாவுக்கு முக்கிய இடமுண்டு.
பாலகுமாரன் தன்னை அடையாளம் சொல்ல குணாவை மட்டுமே சொல்லிக்கொள்ளலாம்.
கமலும் இளையராஜாவும் அடுத்த தளத்துக்கு நுழைந்தது இப்படத்துக்குப் பின்தான் என யூகிப்பேன்.
அதே போல் என் நண்பர்களுக்குள் எந்த விவாதத்தையோ அலசலையோ ஏற்படுத்தாது ஒரு பேரமைதியில் உறைந்த அதிர்வையும், ஆனந்தத்தையும் ஒன்றாய்க் கொடுத்த அனுபவம் குணா.
ஏனிப்படி உணர்ச்சிவசப்படுகிறேன் என்றும் எனக்குள் ஏதோ ஆகிக் கொண்டிருக்கிறேன் என்றும் தோன்றுகையில் நீ எழுதுவதும் இப்படிப் பைத்தியமாய் இருப்பதும் பார்க்கப் பிடித்திருக்கிறது என்கிறாள் அபிராமி.
என் வாழ்வின் எல்லா முக்கியத் தருணங்களிலும் என்னை நனைத்து ஆசீர்வதிக்கும் மழைப்பெண்ணும் என்னுடன் கைகோர்த்து குணாவை ஒருவாரமும் ரசித்தது என் பாக்யமன்றி வேறென்ன?
எனக்குள் அணையாது எரிந்து கொண்டிருக்கிறது குணாவின் அணையாத சுடர். நிறைவாயிருக்கிறேன்.
7 கருத்துகள்:
அன்புள்ள சுந்தர்ஜி..
குணா பதிவைப் பார்த்தேன். மனம் வலிக்கிறது உங்கள் பதிவின் அழுத்தம் கண்டு. நானும் மதுமிதாவும் இதுபோல பல தருணங்களில் நெகிழ்ந்திருக்கிறோம். ஓலங்கள், மூன்றாம் பிறை, மௌனராகம், மூடுபனி, அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், மஉறாநதி இப்படி பல படங்கள். நான் குறிப்பிடுகிற வரிசை மாறியிருக்கிறது மறதியால். ஆனால் படங்கள் மறக்கவில்லை. வடவாற்றங் கரையிலும், கரந்தை டீக்கடையிலும், மேலவீதி முக்குகளிலும், நண்பரின் லாயம் எனும் தெருவிலும் நானும் மதுமிதாவும் ஏகப்பட்ட கனவுகளுடனும் ஏக்கங்களுடனும் வெப்பமுடனும் பேசி களைத்திருக்கிறோம். உங்கள் பதிவு வசீகரிக்கிறது. கிட்டத்தட்ட நாம் (படைப்பாளிகள்) அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் உறைந்துபோகிறோம் சுந்தர்ஜி. எழுதுங்கள் தொடர்ந்து வீசும் ஒரு இதமான தென்றலின் குளிர் உணர்வைப் போல உங்கள் பதிவுகளை நான் நெஞ்சில் ஏந்தி அனுபவிக்கிறேன். தொடர்ந்து பரவும் என் எண்ணங்களை இத்துடன் நிறுத்துகிறேன். அன்புடன் உறரணி.
எனக்கு, மஹாநதியின் அடர்த்தி,சலங்கை ஒலியின் ஆட்டம்,அன்பே சிவத்தில் க்ருப்பு சட்டை போட்ட சிவப்புக் கொடிக்காரன் ,தசாவதர ஐயங்காரின் ஓ......ஓம் நமோ நாரா..யண, வாழ்வே மாயம் தேவி..ஸ்சிரி.. தேவி தேடுபவனாய், இப்படி கொஞ்சம், அப்படி..அப்படி புடிக்கும், ஒரேயடியா..இல்லை.
ஹரணியை வழிமொழிகிறேன் சுந்தர்ஜி.
குணா ஓர் ஆழமான வடு போல் தங்கியிருக்கிறது மனசுக்குள்.
ஹரணி!உங்கள் பெருமூச்சில் உறைந்தது நம் பழங்காலம்.நன்றி உங்கள் அசை போடலுக்கு.
மிக்க நன்றி வாசன்.நான் எடுத்துக் கொண்டது குணாவின் தாக்கம் பற்றித்தானே.நீங்கள் கமலை எடுத்துகொண்டீர்களே?
நன்றி மதுமிதா.ஆறாத வடு.சரியான வார்த்தை.
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு படம்.. ஆனால் அந்த உணர்வுகளின் பதிவு.. பொதுவானதாய் எல்லோருக்கும்.. உணர்ச்சி என்னும் கண்ணுக்குத் தெரியாத நூல் கட்டிப் போட்டிருக்கிறது எல்லோரையும்.
நன்றி ரிஷபன்.
vaarthaikal illai.....
GUNA...
ATHAIMATTUM UCHARITHUK KOLKIREN.
"THTHTHUUU...
MANUSHANTHA"
KAMAL SOLLUM POTHU REMBA PIDIKKUM.
KAMAL YEPPAVUM PIDIKKUM...
கருத்துரையிடுக