25.11.12

ஆளை உருக்கும் ஒரு அஞ்சலி.



போன மாதம் ஒரு நடுநிசியின் பேரமைதியில் என் நண்பன் செல்லத்துரையோடு இந்த விளம்பர வீடியோவைப் பார்த்துப் பரவசப் பட்டேன்.

ஒன்றே முக்கால் நிமிடத்தின் முறிவில் துளிர்க்கும் ப்யானோவின் ஒற்றைச் சொல்லுக்கும், அதற்கடுத்த சொல்லுக்கும் நடுவே சமுத்திரம் போல் பரவிக்கிடக்கும் நிசப்தம் என்னை அசைக்கத் துவக்கியது.

தன் தந்தையை இழந்த செல்லக் குழந்தைகளை அந்தத் தாய் அணைத்துக் கொண்ட போது என் மனம் நிறைந்து தளும்பியது.

உறவைப் பற்றியும், பிரிவைப் பற்றியும், வாழ்க்கையின் குறைநிறைகளை நாம் பார்க்க வேண்டிய கோணம் பற்றியும் அற்புதமாய் போதித்த யாஸ்மின் அஹமதுக்கு என் வந்தனங்கள்.

அந்த உரையைத் தோராயமாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.
இந்த வீடியோவுக்காக ஒரு மூன்று நிமிடம் செலவழியுங்கள் ப்ளீஸ்.

”திருமதி லீ! மரித்த உங்கள் துணை குறித்துச் சொல்ல விரும்புவீர்கள் என நினைக்கிறேன்.

இன்றைக்கு நான் மரித்துப்போன என் கணவரின் புகழைப் பாட இங்கு வரவில்லை.

அவரின் நல்ல குணாதிசயங்களைப் பற்றிப் பேசவும் வரவில்லை. நிறையப் பேர் அதைச் செய்துவிட்டார்கள்.

மாறாக, உங்களில் சிலருக்கு அசௌகர்யமாக உணரக்கூடிய சிலவற்றைப் பற்றிப் பேசப் போகிறேன்.

முதலாவதாக எங்கள் படுக்கையில் நடந்த விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.

காலையில் உங்கள் கார் என்ஜினை இயக்க உண்டாகும் கஷ்டத்தை எப்போதேனும் பெற்றதுண்டா?

( ஒலியை எழுப்புகிறார்)

கிட்டத்தட்ட இப்படித்தான் டேவிட் உண்டாக்கும் குறட்டை ஒலி இருக்கும்.

பொறுங்கள். ஆனால் குறட்டை மட்டுமல்ல. அத்தோடு கூட அதன் பின்னிருந்து கிளம்பும்  காற்றும் கூட.

சில இரவுகள் பலமான அவரின் குறட்டை ஒலியே அவரை எழுப்பிவிடும்.

“ ஓ! நாயாயிருக்கும். நீ தூங்கு டேவிட்” என்று சொல்வேன்.

இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாய் இருக்கலாம். ஆனால் தன் வாழ்க்கையின் - நோயால் பீடிக்கப்பட்ட - இறுதி நாட்களில் இந்தக் குறட்டை ஒலிதான் ’என் டேவிட் இன்னும் வாழ்கிறார்’ என்று உணர்த்தும்.

வேறென்ன சொல்ல? நான் உறங்கும் முன் மீண்டும் அந்தச் சத்தங்களைக் கேட்க விரும்புகிறேன்.

கடைசியில் நினைவிலாடும் இந்த மாதிரியான சின்னச் சின்ன சில அரைகுறை விஷயங்கள்தான் அவர்களை முழுமையாய் நினைவுறுத்துகின்றன.

என் அழகான குழந்தைகளே! ஒருநாள் நீங்களும் - எனக்கு உங்கள் தந்தையைப் போல - அரைகுறையானாலும் அற்புதமான ஒருவரை உங்கள் வாழ்க்கைத் துணையாய்ப் பெறக்கூடும்.”

6 கருத்துகள்:

மஞ்சுபாஷிணி சொன்னது…

கனத்த மௌனம்....

அதில் இருக்கும் துயரம்....

அழுத்தமான இத்தனைக்காலம் இணைத்துவைத்த அன்பு.....

அவரின் பேச்சை நீங்கள் அனுப்பிய யூ ட்யூப்ல பார்க்க இயலவில்லை ஏனெனில் அலுவலகத்தில் இருப்பதால்... ஆனால் மொழிப்பெயர்த்து நீங்கள் எழுதிய வார்த்தைகளில்....

வாழ்க்கை.....

அதில் கலந்திருக்கும் இன்பம் துன்பம்...

குறட்டை விட்டார் கணவர் என்ற ஒரு காரணத்துக்காகவே வெளிநாட்டில் டிவோர்ஸுக்கு அப்ளை செய்யும் மனைவிகளும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்....

ஆனால் கார் எஞ்ஜினை இயக்கும் முயற்சியில் ஏற்படும் சத்தம் அதன்பின் கிளம்பும் காற்று.. சிலசமயம் அந்த சத்தமே அவரை எழுப்புவதும்.. இவர் அவரை சமாதானப்படுத்தி உறங்கவைப்பதும்... எத்தனை அந்நியோன்யம்...

உயிரோடு இருக்கும்போது ஒருவரால் தொல்லை என்று நினைக்கும் பலவிஷயங்கள் தான் நமக்கு அவர் மரித்தப்பின்னர் நினைவுகளின் தேக்கமாக மனதில் நிலைத்துவிடுகிறது.....

என்னது இது.... ஒருமாதிரியாக இருக்கிறது மனம்... மரணம் இத்தனைநாள் உடன் இருந்த ஒருவரின் அருகாமை திடிர் என்று இல்லாமல் செய்துவிடும் கொடுமை....

அதனால் துவண்டுவிடாமல் தன் குழந்தைகளையும் அந்த சோகத்தில் மூழ்கடித்துவிடாமல் நினைவுகளையே ஸ்திரமான தூண்களாக்கி அதில் சாய்ந்துக்கொள்ளும் பக்குவத்தை போதிக்கும் போதிமரமாக.....

என் ஆழ்ந்த அஞ்சலி அவருக்கு....

மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இறைவன் ஆன்மபலத்தை கொடுக்கட்டும்.....

அன்புநன்றிகள் சுந்தர் ஜீ....

ரிஷபன் சொன்னது…

துக்க நிகழ்வுகளில் வரவழைக்கப்பட்ட மௌனத்துடன் இறுக்கி வாய் மூடி அமர்ந்திருக்க நேரிடும். போலியான அதை சட்டென்று உடைத்து இயல்பாக்கி பின் நிஜமான உணர்வை கிளர்ந்தெழச் செய்த மனதைத் தொடும் பேச்சு. மனசிலிருந்து வந்த பேச்சு.

ப. தியாகு சொன்னது…

என் அழகான குழந்தைகளே! ஒருநாள் நீங்களும் - எனக்கு உங்கள் தந்தையைப் போல - அரைகுறையானாலும் அற்புதமான ஒருவரை உங்கள் வாழ்க்கைத் துணையாய்ப் பெறக்கூடும்.” // சுந்தர்ஜி சார், என் தந்தையோடு அனேக விஷயங்களில் எனக்கு முரண் உண்டு. அவரது செயல்கள் என்னை (நியாயமான) வெறுப்பிற்கு தள்ளியபோதும், அடுத்த சில நேரத்தில் அவர் அப்படித்தான் என்று அவரை அனுசரித்துக்கொள்ளவே செய்கிறேன். இந்த இடுகை என்னவோ என் தந்தை குறித்து என்னை மிக நெகிழ வைக்கிறது.

தினேஷ்-பாரதி சொன்னது…

கண்கள் கனத்துப் போயின♪♪♪நன்றி.

vasan சொன்னது…

"உலகில் அருமையான‌ ச‌த்த‌ம் 'க‌ண‌வ‌னின் குற‌ட்டை' தான். ச‌ந்தேக‌ம் இருந்தால் எந்த‌ ஒரு வித‌வையிட‌மும் கேளுங்க‌ள்" எனத் தொட‌ங்கிய‌ சிறுக‌தை சில கால‌ங்க‌ளுக்கு முந்தைய‌ ஒரு பிர‌ப‌ல‌ வாராந்திரியில் வ‌ந்த‌து. க‌தை நினைவில் இல்லை, ஆனால் இந்த‌ வ‌ரி ம‌ட்டும் நெஞ்சில் சொருகிய‌ ஊசியாய் இருந்து கொண்டிருக்கிற‌து, உங்க‌ளின் இந்தப் ப‌திவு, அந்த‌ ஊசியை மீண்டும் சுண்டிவிட்டு இர‌த்த‌ம் க‌சிய‌ச் செய்து விட்ட‌து. "வாழ்வின் பொருளென்ன‌ ஞானப் பெண்ணே?" க‌ண்ண‌தாசா!!!

ரவிச்சந்திரன் சொன்னது…

என் வாழ்வின் மிக அற்புதமான தருணங்களில் ஒன்று இந்த வீடியோ துண்டுப் படத்தைப் பார்க்கக் கிடைத்தது. மிக்க நன்றி சுந்தர்ஜி !

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...