ப்ரளய காலம் என்ற ப்ரயோகம் அடிக்கடி நாம் கேள்விப்படுவதும், அறிய முடியாத ஒன்றும். ஆனால் ப்ரளய காலத்தை - அதாவது ச்ருஷ்டிக்கு முந்தைய காலத்தை - அற்புதமான மொழியில் பாடியிருக்கிறது நாஸதீய ஸூக்தம்.
ஆதிப்பொருளை அறிய முற்படுகிற, எவ்வித நிர்பந்தங்களுமில்லாத பல்வேறு அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு ஞானத்தையும், அதிசயத்தையும் ஒரே தட்டில் கொடுத்த களஞ்சியம்தான் - உருவில் சிறியதும், உள்ளடக்கத்தில் ப்ரும்மாண்டமும் ஆன - நாஸதீய ஸூக்தம்.
யாரால் இயற்றப்பட்டது? என்ற ரிஷிமூலம் தெரியாத, மொத்தம் ஏழு ச்லோகங்கள் மட்டுமே உள்ள இந்த ஸூக்தம் ரிக் வேதத்தின் அபூர்வமான ஒரு ஆன்மீகக் கவிதை.
விவேகானந்தரின் வார்த்தைகளில் இதைப் பார்ப்போம்.
“ இவை உலகிலேயே மிகச் சிறந்த கவிதைகள். வேதங்களின் சம்ஹிதைப் பகுதிகளைப் படிப்பீர்களானால், எழில் கொஞ்சித் ததும்பும் அற்புதமான பகுதிகளைக் காண்பீர்கள். உதாரண்மாக, ப்ரளய வர்ணனையைப் பாருங்கள். தம ஆஸீத் தமஸா கூட மக்ரே - இருள் இருளால் மூடப்பட்டிருந்தபொழுது என்று செல்கிறது கவிதை. என்ன ஒரு நுட்பமான கவிதை நயம்?
காளிதாஸர் “ஊசி நுனி நுழைந்து ஊடுருவுகின்ற இருள்” என்கிறார். மில்டனோ, “ ஒளியில்லை; மாறாக, காணத்தக்க இருள்” என்கிறார். இப்போது உபநிஷத்திற்கு வாருங்கள். ” இருளை இருள் மூடியிருந்தது”, “ இருள் இருளில் மறைந்திருக்கிறது”. வெப்பப் பகுதியில் வாழ்பவர்களான நாம்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும். மழைக்காலம் சட்டென்று வரும். கணநேரத்தில் அடிவானம் இருளும். கருமேகத் திரள்கள் எழும். கரிய மேகக் கூட்டங்கள் அதை விடக் கரிய மேகங்களால் மூடுவதும், எழுவதுமாக ஓர் அற்புதக் கோலம் விரியும்.” ( ஞானதீபம் - 5.268.269)
இனி நாஸதீய ஸூக்தம்.
***********************
नासदासींनॊसदासीत्तदानीं नासीद्रजॊ नॊ व्यॊमापरॊ यत् ।
किमावरीव: कुहकस्यशर्मन्नभ: किमासीद्गहनं गभीरम् ॥१॥
நாஸதாஸீன்னோ ஸதாஸீத் ததானீம் நாஸீத்ரஜோ நோ வ்யோமா பரோ யத்।
கிமாவரீவ: குஹ கஸ்ய சர்மன்னம்ப: கிமாஸீத் கஹனம் கபீரம்॥
படைப்புக்கு முன்பு இல்லாமை இல்லை; இருப்பு இல்லை; பூமி இல்லை; மேலே ஆகாயம் இல்லை. மூடி போன்றுள்ளதே அது என்ன? அது எங்கே இருக்கிறது? இன்ப துன்ப அனுபவங்கள் எல்லாம் யாருக்கானது? ஆழமான இந்த வெள்ளம் அப்போது உண்டா?
न मृत्युरासीदमृतं न तर्हि न रात्र्या।आन्ह।आसीत् प्रकॆत: ।
आनीदवातं स्वधया तदॆकं तस्माद्धान्यन्नपर: किंचनास ॥२॥
ந ம்ருத்யுராஸீதம்ருதம் ந தர்ஹி ந ராத்ர்யா அஹ்ன ஆஸீத்ப்ரகேத:।
ஆனீதவாதம்ஸ்வதயா ததேகம் தஸ்மாத்தாயன்ன பர: கிஞ்சனாஸ ॥
அவ்வேளையில் மரணம் இல்லை; அமரத்வமும் இல்லை; இரவு பகலின் அடையாளம் இல்லை; மூச்சற்ற அந்த ஒரே இறைவன் தமது சக்தியால் ஸ்வாசித்தார். அவருக்கப்பால் அவரைத் தவிர எதுவும் இருக்கவில்லை.
तम।आअसीत्तमसा गूह्ळमग्रॆ प्रकॆतं सलिलं सर्वमा।इदम् ।
तुच्छॆनाभ्वपिहितं यदासीत्तपसस्तन्महिना जायतैकम् ॥३॥
தம ஆஸீத்தமஸா கூடமக்ரேSப்ரகேதம் ஸலிலம் ஸர்வமா இதம்।
துச்ச்யேனாப்வபிஹிதம் யதாஸீத் தபஸஸ்தன்மஹினா ஜாயதைகம் ॥
படைப்புக்கு முன்னால் இருள் இருளால் மூடப்பட்டிருந்தது. இங்கிருக்கும் எல்லாமே அடையாளம் காணமுடியாத வெண்மையாக இருந்தது. எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவராக, சூன்யத்தால் மூடப்பட்டவராக, ஒரே ஒருவராக எந்தக் கடவுள் இருந்தாரோ அவர் தவத்தின் மகிமையால் தம்மை வெளிப் படுத்திக்கொண்டார்.
कामस्तदग्रॆ समवर्तताधि मनसॊ रॆत: प्रथमं यदासीत् ।
सतॊबन्धुमसति निरविन्दन्हृदि प्रतीष्या कवयॊ मनीषा ॥४॥
காமஸ்ததக்ரே ஸமவர்த்ததாதி மனஸோ ரேத: ப்ரதமம் யதாஸீத்।
ஸதோ பந்தும்ஸதி நிரவிந்தன் ஹ்ருதி ப்ரதீப்யா கவயோ மனீஷா॥
மனத்தின் முதல் விதையாக எது இருந்ததோ, அந்த ஆசை ஆரம்பத்தில் எழுந்தது. இதயத்தில் தேடுகின்ற ரிஷிகள் உண்மைக்கு உண்மையல்லாததுடன் உள்ள தொடர்பை உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடித்தார்கள்.
तिरश्चीनॊ विततॊ रश्मीरॆषामध: स्विदासी ३ दुपरिस्विदासीत् ।
रॆतॊधा।आसन्महिमान् ।आसन्त्स्वधा ।आवस्तात् प्रयति: परस्तात् ॥५॥
திரச்சீனோ விததோ ரச்மிரேஷாமத ஸ்விதாஸீதுபரி ஸ்விதாஸீத்।
ரேதோதா ஆஸன்மஹிமான ஆஸன்த்ஸ்வதா அவஸ்தாத் ப்ரயதி: பரஸ்தாத்॥
ரேதோதா ஆஸன்மஹிமான ஆஸன்த்ஸ்வதா அவஸ்தாத் ப்ரயதி: பரஸ்தாத்॥
இவற்றின் கதிர்கள் கீழேயும், மேலேயும், குறுக்காகவும் விரிந்தன. சந்ததியைத் தோற்றுவிக்க வல்லவையான உயிரினங்கள் இருந்தன. மகத்தானவை இருந்தன. கீழே ஆற்றல் இருந்தது. மேலே வேகம் இருந்தது.
कॊ ।आद्धा वॆद क।इह प्रवॊचत् कुत ।आअजाता कुत ।इयं विसृष्टि: ।
अर्वाग्दॆवा ।आस्य विसर्जनॆनाथाकॊ वॆद यत ।आबभूव ॥६॥
கோ அத்தா வேத க இஹ ப்ரவோசத் குத ஆஜாதா குத இயம் விஸ்ருஷ்ட்டி:।
அர்வாக் தேவா அஸ்ய விஸர்ஜனேனாSதா கோ வேத யத ஆபபூவ॥
உண்மையில் இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்று யார் அறிவார்? இதை யார் சொல்லக் கூடும்? தேவர்களோ கூட இந்தப் படைப்புக்குப் பிறகு தோன்றியவர்கள். எனவே, அவர்களுக்கும் அது தெரியாது. இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்று யார்தான் அறிவார்?
इयं विसृष्टिर्यत ।आबभूव यदि वा दधॆ यदि वा न ।
यॊ ।आस्याध्यक्ष: परमॆ व्यॊमन्त्सॊ आंग वॆद यदि वा न वॆद ॥७॥
இயம் விஸ்ருஷ்ட்டிர்யத ஆபபூவ யதி வா ததே யதி வாந।
யோ அஸ்யாத்யக்ஷ: பரமே வ்யோமன்த்ஸோ அங்க வேத யதி வா ந வேத॥
இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியதோ, அது இந்தப் படைப்பைத் தாங்குகிறதா, இல்லையா? மேலான விண்ணில் வாழும் இந்தப் படைப்பின் தலைவர் யாரோ அவர் கட்டாயமாக அறிவார். ஒருவேளை அவருக்கும் தெரியாதோ என்னவோ?
பரந்து கிடக்கிற வான வெளியையும், மின்னித் திளைக்கின்ற நக்ஷத்ரக் கூட்டங்களையும், நிலவையும், கதிரையும், கடலையும், மலையையும் ஒரு கணமாவது பார்த்து சிந்திப்பவர்கள் ப்ரமிப்பைத் தவிர வேறென்ன அடைய முடியும்?
அத்தகைய ப்ரமிப்பில் ஆழ்ந்த முனிவர் ஒருவர் படைப்பின் ரகசியம் நமக்கும், தேவர்களுக்கும் தெரியவில்லை. அனைத்தையும் படைத்த இறைவனுக்கே கூட ஒருவேளை அது தெரியாதோ என்று மிகைப்படுத்தி ச்ருஷ்டியின் ப்ரும்மாண்டத்தை வியக்கிறார்.
************************************************
விவேகானந்தரின் வார்த்தைகளாலேயே இந்த இடுகையை முடிக்கிறேன்.
“ இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னை விடப் புதுப்பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்”.
நன்றி:
1. வேத மந்திரங்கள் - ஸ்வாமி ஆசுதோஷானந்தர்.
5 கருத்துகள்:
நன்றி சுந்தர்ஜி.
நாஸதீய ஸுக்தம் நவிலும் பிரளயத்தில்
பாஸிநிற ஆலிலையில் பாலகனாய் -வாசுதேவன்
வந்துமிழ்ந்தான் உண்டதை வாத புரிதனில்
இந்த உலகேழை இங்கு".
அருமையான பதிவு திரு சுந்தர்ஜி!
இதே சிந்தனையில் நம்மாழ்வாரின் பாடல்களில் சிலவற்றைக் கொடுத்துள்ளேன்.
தனிமுதல் எனும் சொற்குறிப்பு ஒன்றைத் தருகிறார் நம்மாழ்வார். ஜீன்ஸ் இன் தமிழ்ச்சொல்லாக இந்த ‘தனிமுதல்’ ஐ எடுத்துக் கொள்ளலாமோ என்னவோ.
ஒன்றுந் தேவு முலகும்
உயிரும் மற்றும் யாதுமில்லா
அன்று, நான்முகன் தன்னொடு
தேவ ருலகோ டுயிர்படைத்தான்,
பரந்த தெய்வமும் பல்லுல
கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,
கரந்து மிழ்ந்து கடந்தி
டந்தது கண்டும் தெளியகில்லீர்,
யானும் தானா யொழிந்தானை
யாதும் யவர்க்கும் முன்னோனை,
தானும் சிவனும் பிரமனும்
ஆகிப் பணைத்த தனிமுதலை,
தேனும் பாலும் கன்னலும்
அமுதும் ஆகித் தித்தித்து,என்
ஊனி லுயிரி லுணர்வினில்
நின்ற வொன்றை யுணர்ந்தேனே. (8.8.4)
நோவாவின் கப்பலாய் ,நூலோன் படைப்பினை
சாவா வரம்தந்து சாப்பிட்டு சாகரத்தில்
மூவா முகுந்தரூழ் முற்றும் முடிந்தபின்பு
ஆவா கனம்செய்ய ஆலில் மிதந்தாரே"....
நாஸதீய சுக்தம் பார்த்ததும் ஆச்சரியம். காரணம் இருக்கிறது.
great minds think not exactly alikeனு இப்போதைக்கு உங்களோட ஒட்டிக்கிறேன்.
க்ரேஸி மோகன் பாக்களில் முதலாவது க்ரேஸி, இரண்டாவது மோகனம் :-)
உங்கள் பதிவுகளிலிருந்து புதிது புதிதாய்க் கற்றுக் கொள்கிறேன்.
வளர்க உங்கள் பணி!
கருத்துரையிடுக