5.11.12

க்ருஸ்துவின் அற்புதக் கவிதையும், ஒரு அஞ்சலியும்


என் பள்ளி நாட்களில் இருந்தே, நான் கடந்து சென்ற பல்வேறு தேவாலயங்களின் - பறவைகளின் குரலோடு சேர்ந்து ஒலிக்கும் - நம்பிக்கையின் மணியோசை இன்னும் எனக்குள் ஒலித்தபடி இருக்கிறது. 

பல சமயங்களில் எழுதும் முன், மொழியின் கவித்வத்துக்காக பைபிளை நான் வாசித்து உந்துதல் பெற்றதுண்டு. 

பல சந்தர்ப்பங்களில் களைத்தும் துவண்டும் ஒரு கொடித்துணியாய்க் கிடந்த என் ஆன்மாவுக்கு, அந்த ஆலயங்களின் சுவர்களில் பொறிக்கப்பட்டிருக்கும் தேவனின் மஹாவாக்கியங்கள் அபரிமிதமான நம்பிக்கை கொடுக்கும். தூக்கி நிறுத்தும். வெளிச்சம் பாய்ச்சும்.

திருவாசகத்துக்கு மட்டுமல்ல- தேவாலயங்களின் பேரமைதியின் தேனைக் குடித்தும், ப்யானோவின் இசையோடு கலந்தும், விலகியும் உயிர்பெறும் தோத்திரப் பாடல்களைக் கேட்டு ஒரு கணமாவது உருகாதவன் ஒரு வாசகத்துக்கும் உருகாத ஜடமாய்த்தான் இருக்கமுடியும். 

மதங்களைக் கடந்ததுதான் ஆன்மீகத்தின் முதிர்ச்சி. ஆனாலும் க்ருஸ்தவ மதத்தின் மறுமலர்ச்சிக்கு ஏசுவின் அவதாரம் ஒரு மாபெரும் கொடை. பழைய ஏற்பாட்டை வாசித்து முடித்த கையோடு புதிய ஏற்பாட்டை வாசித்தால் இதை உணர முடியும். 

 புதிய ஏற்பாட்டிலிருந்து நான் ரசித்த வசனங்களைத் தொடர்ந்து சில இடுகைகளில் எழுத நினைத்திருக்கிறேன். (பழைய ஏற்பாட்டிலும் அற்புதமான பகுதிகள் இருக்கத்தான் இருக்கின்றன. இவை முடிந்த பின் அவை)

முதலில் மத்தேயுவின் அதிகாரத்திலிருந்து: 

ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள். 
அவைகள் விதைக்கிறதுமில்லை; அறுக்கிறதுமில்லை; 
களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை. 
அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; 
அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?

கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 

உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? 


காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகின்றன என்பதைக் கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதும் இல்லை, நூற்கிறதும் இல்லை; 

என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்தது இல்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்.  

அற்ப விசுவாசிகளே! 
இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், 


உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 
ஆகையால், எதை உண்போம், எதைக் குடிப்போம் என்று கவலைப்படாதிருங்கள். 

இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.  

முதலில் தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். 

ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாது இருங்கள்; 


நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். 
அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும். 



 மத்தேயு - 6 - 26 - 34


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


என்னை மிகவும் வசீகரித்த சமையல் கலைஞன் ஜேக்கபின் 37 வயது அகால மரணம் என் விடியலின் கிளைகளை உலுக்கியது. 

கலகலப்பான உள்ளம் நிறைந்த ஜேக்கபின் உணவு சார்ந்த ஆர்வம் அவரின் 13ம் வயதிலிருந்தே அவரைச் சமையலறைக்குள் ஈர்த்தது. 

உத்தமபாளையத்தில் பிறந்து உலகத்தின் தமிழ் பேசும் எல்லாச் சமையல் அறைகளுக்கும் பயணித்த ஜேக்கபின் பயணம் நேற்று முடிவடையும் என்பதை யாரால்தான் நம்ப முடியும்?

சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் குறித்த ஆராய்ச்சி வரை தேடிச் சென்ற - ஜேக்கபின் சுவடுகள் மட்டும் பதிந்திருந்த - அந்த ஒற்றையடிப் பாதை , காலத்தால் இத்தனை சீக்கிரம் மூடப்படாது இருந்திருக்கலாம். 

மரம் அறியாது பிய்த்தெறியப்பட்ட மற்றுமொரு இலையே! 
எரிக்கும் தைலம் நிரம்பியிருந்தும் ஊதி அணைக்கப்பட்ட இன்னொரு அகலே!
விறகுகள்தான் நெடுநேரம் எரியுமேயன்றி ஊதுவத்திகள் அல்ல என்பதைச் சொல்லாமல் சொன்ன ஜேக்கப்! என் ஆர்வங்களின் தோழனே!

என் கண்ணீர் அஞ்சலியின் விசும்பல்கள் உனக்குக் கேட்கிறதா ஜேக்கப்?  . 

5 கருத்துகள்:

Matangi Mawley சொன்னது…

We were talking about Chef Jacob demise at our home. It came as a shock. Just 37!
Mathew's- "நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்". This last line interested me the most...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அதற்குள் என்ன அவசரம் - அவரை அழைத்துக் கொள்ள.... :(

அற்புதக் கவிதைகள் தொடரட்டும்...

மீனாக்ஷி சொன்னது…

உங்களுடைய பதிவை பார்த்துதான் இவர் இறந்ததை தெரிந்து கொண்டேன். ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. நான் இவரோட சமயல் ஷோ நிறைய பாத்திருக்கேன். நம்பவே முடியல. மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. :(

//அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும். // எவ்வளவு உண்மை!

அற்புத கவிதைகள் அருமை. தொடருங்கள்.

vasan சொன்னது…

ஆண்ட‌வ‌னுக்கு அகோர‌ப் ப‌சி போலும்.
..... அஞ்ச‌லி..............
வாழும் வ‌யதில், தொழும் நிலைவில்.

Jayajothy Jayajothy சொன்னது…

பைபிள் வெறும் கிருத்துவ மதம் சார்ந்த நூல் மட்டுமன்று , மிக சிறந்த இலக்கிய கருவூலம் என்று திரு குப்பு. வீரமணி அவர்கள் அநேகம் எடுத்துக்காட்டுகளை கூற அதை கேட்டவள் என்கிற வகையில் நான் உணர்ந்திருக்கிறேன். மேலும் பிரகாஷ் அய்யா எழுதி வெளிவராத விவிலிய வழக்கு மொழியில் எழுதப்பட்ட troy அருமையான படைப்பு.

அண்ணா நகரில் எங்கும் ஒட்டிய jaccob இன் இரங்கல் போஸ்டர்களைப் பற்றி எனது தோழி ஜோன் லிண்டன் பேசும்போது தான் தெரிந்துக கொண்டேன் . உங்கள் அஞ்சலி உணர்வு பூர்வமாய் இருந்தது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...