8.5.10

கடவுளின் ஒரு நொடி


I
ஒரு தட்டில்
பழங்களும் பிரார்த்தனைகளும்
வைக்கப்பட்டன.
பழத்தைத் தின்றார் கடவுள்.
பழுக்கட்டும் என்று
விட்டுவைத்தார் 
பிரார்த்தனைகளை.

II
அருகே
சென்றது பல்லி.
அசையாதிருந்த
பூச்சி பறந்தது.
பறந்த பூச்சியை
நசுக்கினான் குழந்தை.
சிரித்தார் கடவுள்.

III
எல்லா மொழியிலும்
வந்தன வேண்டுதல்கள்.

புரிந்து போனது
மொழியற்றவனின்
வேண்டுதலும்
வழியற்றவனின்
பிரார்த்தனைகளும்.

கடவுளை உலுக்கியது
பேசமுடியாதவனின்
மொழியும்,
பார்வை கோரியவனின்
விழியும்.

18 கருத்துகள்:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

கடைசி வரிகள்...
கனக்க வைத்து விட்டன
மனதை...
கலங்க வைத்து விட்டன,
கண்களை!!!!

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…

அது சரி..அது யார்? ஹரி ப்ரஸாத் செளராசியா தானே? பாடுவது என்ன
ஆஹிர் பைரவியா??

Madumitha சொன்னது…

கை கொடுங்கள்
சுந்தர்ஜி.
பிரார்த்தனைகளால்
மட்டுமல்ல
கவிதைகளாலும்
கடவுளை
அடையலாம்.
ஹரி பிரஷாத் செளராசியா
மிகப் பொருத்தம்.

ஹேமா சொன்னது…

//கதவின் அருகே
சென்றது பல்லி.
அசையாதிருந்த பூச்சி
நகர்ந்தது.
பூச்சியை நசுக்கினான்
குழந்தை.
சிரித்தார் கடவுள்.//

அப்போ கடவுள் நல்லவரா கெட்டவரா ?

//கடவுளை உலுக்கியது
பேசமுடியாதவனின்
மொழியும்,
பார்வையற்றவனின்
விழியும்.//

அவர்தானே படைச்சார்.
அவருக்கே சங்கடமாப் போச்சா !

பத்மா சொன்னது…

கடவுளும் பிரார்த்தனைகளும் !
உருக்கமாயிருக்கு

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி முதல் படிமிதித்தலுக்கு.

ஹரிப்ரஸாத் சௌரஸ்யா தான்.
ஆஹிர் பைரவியா?யமன் கல்யாணியா?யூகிக்கமுடியவில்லை.ஆனால் அவரின் குழலில் கசிவதென்னவோ கடவுளின் மொழியாகத் தோன்றுகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மது.கடவுளை நெருங்கும் முயற்சிதான் என் கவிதைகள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹேமா.ஒரு கவிதை முடிவுகளைச் சொல்வதில்லை.அதை வாசிப்பவர்களிடமே விட்டுவிடுகிறது.ஒரு கத்தியின் பயன் போல.

இரசிகை சொன்னது…

//
அது சரி..அது யார்? ஹரி ப்ரஸாத் செளராசியா தானே? பாடுவது என்ன
ஆஹிர் பைரவியா??
//

yaar athu?
yennathu athu??

m......sundarji
kavithaikal superb:)

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரசிகை.ஹரி ப்ரஸாத் சௌரஸ்யா ஒரு புல்லாங்குழல் மேதை.ராகங்களில் ஒன்று ஆஹிர்பைரவி மற்றது யமன்கல்யாண்.ரொம்ப அப்பாவியா இருக்கீங்க. http://www.youtube.com/watch?v=U5h19sgkuGk இந்த இணைப்பைக் கேட்டு மயங்குங்க.

Anonymous சொன்னது…

இயலாமையின் வெளிப்பாடை சொற்களின் வாயிலில் தரிசித்தேன்.
கலைவாணி.

Anonymous சொன்னது…

சொல்லப்படாததை மொழிபெயர்ப்பதும்- வார்த்தைகளற்று நிற்பவர்களைப் புரிந்து கொள்வதும்- கனிவின் பெரும்பரப்பில் ராஜபரிபாலனம் நடத்திக்கொண்டிருக்கும் இதயங்களுக்கே சாத்தியம்.
உஷா.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி கலை மற்றும் உஷா.

Anonymous சொன்னது…

அருமை. உங்கள் ப்ராத்தனை கவிதை வெகு அருமை. சொற்களில் இருக்கிறது வாழ்வின் வலி.வாழ்த்துக்கள்.
வி.விநாயகமூர்த்தி.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி விவிஎம்.

Anonymous சொன்னது…

//மொழியற்றவனின்
வேண்டுதலும்
வழியற்றவனின்
பிரார்த்தனைகளும்.//

மனதைப் பிசைந்து வரைகிறது வேறு ஒன்றை.அருமை சுந்தர்ஜி.
-ஜெ.ஃப்ராங்ளின் குமார்.

உறரணி சொன்னது…

சுந்தர்ஜி...

கடவுள் பற்றிய உங்கள் கவிதை கவிஞர் ஆத்மாநாமின் கடவுள் பற்றிய கவிதைக்குப் பின் உலுக்கிவிட்டது நிறைய கனிகள் பழுத்த மரத்தை உலுக்கும்போது உதிரும் பழங்களைப்போல மனத்துளிகள் உதிர்கின்றன கவிதையைப் பற்றிய கசிவான தருணங்களாக. பாராட்டுக்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஹரணி உங்க அன்புக்கு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...