5.5.10

மாந்தோப்பில் ஓர் இரவு-II


கவிராயரும் நானும் வெளியே கிடந்த கட்டிலில் இளைப்பாறியபடி இருக்க பரஞ்சோதிவேல் இளநீரைச் சீவித்தள்ளிக் கொண்டிருக்கலானார்.”ஒண்ணு போதுங்க.இப்பதாங் கருப்பு கலர் குடிச்சுட்டு வந்தோம்” என்று முனகினார் த.க. “ஆமாமாம்” என்று நானும் வில்லுப்பாட்டுக்கு ஒத்துப்பாடினேன். குளிர்ச்சியும் இனிமையும் நிரம்பியிருந்த நான்கு காய்களை நாங்கள் காலி செய்த பின் நிம்மதி அடைந்தார் பரஞ்சோதி.

வெளியே வந்த பரஞ்சோதியின் அம்மாவிடம் பழங்கதைகள் பேசத்தொடங்கினார் த.க. ஒரு மாயாலோகத்தின் கதவுகள் திறக்கலாயின. த.க.வின் அம்மாவும்,அப்பாவும் உயிர்த்தெழுந்து கண்முன்னே நின்றார்கள்.வீட்டு வாசலில் கொழுத்த பசு ஒன்று தலையை ஆட்டியபடியே நின்றிருந்தது.வாய்க்காலில் நுரைத்தபடி நீர் ஓடிக்கொண்டிருந்தது.பயல்கள் கொட்டமடித்துக்கொண்டிருந்தார்கள்.த.க. தன் ஊருக்கு முதன்முதலாக வந்த பஸ் எழுப்பிய பேருந்தின் புழுதியின் பின் கனவுகளுடன் ஓடிக்கொண்டிருந்தார்.வயல்கள் செழித்துக் கொழித்திருந்தன.கொய்யாவும்,மாவும் கையெட்டும் தூரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.

இடையே இறந்து போனவர்கள்,அடையாளம் இழந்து போனவர்கள்,அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாதவர்கள்,வீட்டுக்குத்தெரியாமல் கல்யாணம் செய்து கொண்டவர்கள்,காதலில் தோற்றுத் தற்கொலை புரிந்து கொண்டவர்கள்,ராணுவ சேவைக்காக ஊரை விட்டுப் போனவர்கள்,ஊரில் அப்போதிருந்தது போலவே இப்போதும் இருப்பவர்கள் என்று பல தட்டுக்களாக அத்தியாயங்கள் பிரிந்தன.

அட இது நம்ம நாயனாவா?என்று தெருவில் வருவோர் போவோரை ஆச்சர்யப்படுத்தியபடி இருந்தது த.க.வின் வருகை.பரஞ்சோதிவேலின் அம்மாவுடனான பேச்சு கொடிபோல் வளர்ந்து கொண்டிருந்தது.அன்பின் சின்னங்களாக அம்மாவும்,பரஞ்சோதியும் எனக்குத் தோன்றினார்கள்.அன்பில் நனைந்து கொண்டிருந்த நானும்,த.க.வும் மெல்ல விடுவித்துக்கொண்டு ஊர்ச்சாலையில் நடைபோட்டோம்.

தான் வசித்த வீட்டின் வாசலில் நின்று தன் பிராயத்தைத் தேடிக்கொண்டிருந்தார் த.க. அவர் தோளில் கை போட்டபடி அவரை ஆசுவாசப்படுத்தினேன். வீட்டு முற்றத்தில் தன் அம்மா கையில் சோறிட்டபடியே சொன்ன கதைகள் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தன. மொடமொடக்கும் வெள்ளைக் கதர்ச்சட்டையுடன் கையில் குடையுடன் அவரின் அப்பா நடந்து கொண்டிருந்தார். த.க.வின் அழைப்பைப் பொருட்படுத்தாது எங்கு போய்க்கொண்டிருந்தாரோ? வெளியில் வாங்கம்மா என்று கூப்பிட அவரின் அம்மா வந்து விடக்கூடும் போல இருந்தது அந்த மாலையின் மனமயக்கம்.

மெல்ல வயல்க்காட்டின் வேப்பமரத்தின் குச்சியை ஒடித்துக் கடித்தபடியே தபதபவென விழுந்து கொண்டிருந்த பம்ப் செட் தண்ணீர்த்தொட்டியின் குளிர்ச்சியில் மூழ்கினோம். உள்ளே சென்ற போது நேற்றைக்கும், வெளியே எழுந்தபோது இன்றைக்குமாக மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது. துவைத்துக்குளித்துவிட்டு வரப்பில் நடந்து போகையில் இருவரையும் உறைந்துபோன காலப்ப்ரக்ஞை மூடியிருந்தது.ஒருவரோடு ஒருவர் பேசியபடியே வீட்டை அடைந்தோம்.

உடை மாற்றி வெளிவரும்போது பரஞ்சோதியின் அம்மா மூணு சட்னி, இட்லி/தோசை என்று ஆசை காட்டினார்.ஆனாலும் பரஞ்சோதி முன்பே எங்களுக்கு விறுவிறுப்பை ஏற்றியிருந்த பறோட்டா ஸ்டாலைப் பார்த்துப் புறப்பட்டோம். கடையில் வேர்க்க விறுவிறுக்க பறோட்டா அடித்துக் கொண்டிருந்த மாஸ்டரை இரக்கத்துடன் பார்த்துவிட்டு ரெண்டு பேருக்கும் ஆர்டர் கொடுத்தோம்.புயல் வேகத்தில் பறோட்டாக்கள் இலையில் இறங்கின. 

பறோட்டா மாஸ்டரின் வேட்டி படு வெளுப்பாக ஒரு கண்ணையும்,பச்சை நிற ட்யூப் லைட்டின் ஜ்வலிக்கும் பசுமை மறு கண்ணையும் பறிக்க மிகுந்த சுவையுடன் த.க.வின் பள்ளி வாழ்க்கையின் கதாநாயகிகளைப் பற்றிப் பேசியபடியே பறோட்டாக்களை இரு கை பார்த்தோம்.பின் முறுகலான தோசை,சாம்பார்-சட்னி எல்லாமே சூடும் சுவையும் பூசியிருந்தன.ஏப்பம் புறப்பட்ட பின் நாங்கள் புறப்பட்டோம் எங்கள் திட்டப்படி மாந்தோப்பை நோக்கி.

(தொடரும்)

(த.க.என்கிற தஞ்சாவூர்க்கவிராயர் இந்தியாவின் ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர். 58 வயது. சென்னை ஊரப்பாக்கம் ஜாகை.எழுத்துக்காரத் தெரு, வளையல் வம்சம் என்ற இரு கவிதைத் தொகுப்புகளும், பல சிறுகதைகளும்,கட்டுரைகளும் எழுதியவர். இவர் எழுத்தை வாசிக்காதவர்கள் ஒரு நல்ல வாசிக்கும் அனுபவத்தை இழக்கிறார்கள்.என் 25ஆண்டு கால நண்பர்.இருவரும் பரஸ்பரம் இருவரின் எழுத்துக்களுக்கும் ரசிகர்கள்.வெகு நேர்த்தியான கதைசொல்லி.அவருடனான ஒவ்வொரு நொடியும் சொர்க்கம்.என் நண்பனுக்கு இந்தக் கட்டுரையை அர்ப்பணிக்கிறேன்.)

3 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

இங்கே பகுதி 2 பதிவிட்டிருக்கிறீர்கள்.
ஒன்றைத் தேடி வாசித்த பின்தான் வாசிக்கவேணும்.
நீங்கள் தொடருங்கள் சுந்தர்ஜி.

சுந்தர்ஜி சொன்னது…

சாவதானமாகப் படியுங்கள் ஹேமா.நன்கு கதைக்கிற இரு நண்பர்களின் பயணக் கட்டுரை இது.

இரசிகை சொன்னது…

nice.........

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...