இத்தொடரின் முதல் பகுதியை வாசிக்க:
இமயம் இளைய மலைதான், திருவண்ணாமலையைக் காட்டிலும் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா? ஆம்; ஒரு காலத்தில் கடலாயிருந்த பகுதிதான் தற்போது இமயமாய் நெடிதுயர்ந்து நிற்கிறது. மிக உயரமான பகுதிகளில், கடல்வாழ் பிராணிகளின் எலும்புகளைக் கண்டெடுத்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தியாவுக்கு இமயம் அரண். அது இல்லையென்றால் இந்தியா பனிப்பாலைவனமாகியிருக்கும்.
இமயம் பாறைகளாலான மலையல்ல! பெரும்பாலும் மண்தான். காடுகளை அழிப்பது, வேட்டு வைத்துச் சாலைகள் அமைப்பதுமே நிலச்சரிவுகளுக்குக் காரணம்.
இந்தியனுக்கு இமயம் வெறும் மலையன்று. இறை உறையும் திருக்கோயில். ஆன்மீகத் தலைவாசல். ஞானப் பாசறை. யோகத்தின் கொட்டடி. பக்திக்குத் தொட்டில். நாகரிகம், மனித நேயம் இவற்றின் ஊற்று. எழிற்கொள்ளை. கற்பனைகளின் களஞ்சியம். கவிதைக்குச் சவால். அந்தரங்கத்தின் பகிரங்கம். ரகசியங்களின் கருவூலம். உருவாய்த் தோன்றும் அருவத்தின் ஜாலம். நில்லாமல் நகராமல் நிகழ்கின்ற கூத்து. நிஜம் என்று நாம் போர்த்திக்கொண்ட பிரமைகளைத் தாக்கி நிர்மூலமாக்கி நின்று சிரிக்கும் பிரமிப்பின் உச்சம். கம்பீரத்தின் முழு வடிவம். கடவுள் வியக்கும் அழகு. ஆ! உள்ளே ஏதோ கொஞ்சம் தமிழிருப்பதால் இவ்வளவும் சொன்னேன்!
இமயத்தைப் பார்த்துவந்த பிறகே இந்தியன் என்ற பெயருக்குப் பொருள் புரியும்.
என் குருவின் திருவருளால், 1994ல் இருந்து இன்றுவரை 14 முறை இமயத்தின் பல்வேறு பகுதிகளைத் தரிசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது. ஒவ்வொரு முறையும் திரும்பிவந்த போதும், மறுமுறை எப்போது வாய்க்கும் என்று ஏங்கவைக்கும் இமயம்! கண்வழியே கன்னமிட்டு, உயிரையெல்லாம் தனதாக்கி, எண்ணமெல்லாம் தன் வண்ணமாக்கும் மாயக் காதலின் மகத்தான தலைநகரம் இமயம்!
நான் பலரோடும் சென்றபோதும், தனியாக மெய்சிலிர்க்கும் அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். இருமுறை, என் குருநாதர் என்னைத் தனியாக அனுப்பியபோது, வார்த்தைகளில் வடிக்கமுடியாத வாழ்வை வாழ்ந்து வந்திருக்கிறேன். ‘தனிமை கண்டதுண்டு, அதிலே சாரமிருக்குதம்மா’ என்பானே பாரதி. அந்தத் தனிமையின் மடியில் அகம் திறந்த சுகம் கண்டிருக்கிறேன்.
பனிப்பாளங்கள் உருகி ஓடும் ஓடையில் ஒரு பரவச வெறியில் உள்ளே இறங்கி, எப்படியோ உயிரோடு மீண்டிருக்கிறேன். ஒற்றையடிப் பாதை கூட இல்லாத காட்டில், எதற்கு-எங்கு என்றெல்லாம் தெரியாமல் நடந்தபோது, திடீரென காட்டுக் குளவிகள் கூட்டம் கூட்டமாக எதிரே வந்தும் ஒன்று கூட என்னைத்தொடாமல் சென்றதை எண்ணி வியந்து நின்றிருக்கிறேன்.
பாதையற்ற மலைச் சரிவொன்றில் இறங்கும்போது, வைக்கப்போன கால் யாராலோ இழுக்கப்பட்டது போல் அந்தரத்தில் நிற்க, கீழே சுருண்டு கிட்ந்த கரிய பாம்பினைக் கண்டு புன்னகைத்துச் சென்றிருக்கிறேன். உறக்கம் தேவையற்ற, உள்ளார்ந்த இரவுகளைக் கண்டிருக்கிறேன்.
ஒரு மின்மினிப்பூச்சி கூட மினுக்காத இருளில், மின்னல்கள் கருத்த வான்மீது சினமுற்று வாட்களாகிக் கிழிக்க, அண்டம் பொடிந்தது போல் இடியிடிக்க, சூறைக்காற்று பள்ளத்தாக்கில் இருக்கும் காடுகளைக் கதிகலங்கச் செய்ய, கால்பரப்பி, இடுப்பிலே கைகளை வைத்தபடி, அந்தக் களிநடனத்தைக் கண்டு களித்திருக்கிறேன்.
புத்தகங்களில் ஆஹா, ஓஹோ என்று பெரிதுபடுத்தப்படும் அதிசய அனுபவங்களை, அன்றாட நிகழ்ச்சிகளாகப் பார்த்திருக்கிறேன். கண்ணெதிரே பாறையுருண்டு காரோடு செத்துச் சிதறிய காட்சியைக் கண்டிருக்கிறேன். எந்தக் கல்வியாலும் எந் நாளும் நேரமுடியாத மனிதப் பண்பின் உயரங்களை, எழுதப்படிக்கத் தெரியாத ஏழைகளிடம் தரிசித்திருக்கிறேன். மலர்களோடு பேசி, அவற்றின் மறுமொழியால் உயிர்குளிர்ந்து போயிருக்கிறேன்.
தொடரும் இந்த அனுபவங்களோடு ஏதோ மூலையில் இருந்த என்னை எதற்காக இழுத்துவிட்டீர்கள்? குயில் மேடையேறுமா? நான் ஏன் இந்த வம்பில் சிக்கிக் கொண்டேன்?
சரி. மனதிலிருந்து எப்படி வருகிறதோ அப்படியே கவிழ்த்துவிட்டு ஓடிவிடுகிறேன். எனக்கு வேறு பாஷை தெரியாது.
வீதி நாடகத்தில் ஏது மேடைக் கூச்சம்?
(தொடரும் )
7 கருத்துகள்:
"அந்தரங்கத்தின் பகிரங்கம்"....
குயில் மேடையேறுமா????
வீதி நாடகத்தில் ஏது மேடைக் கூச்சம்?//
ஆஹா, குயிலின் அந்தரங்கம் பதிவு வீதியில், பார்க்க / ரசிக்க / ருசிக்க / பயனுற.
கண்டவர் விண்டிலர்.. இமயத்தை தரிசிக்க இந்த இரமணனின் விழிக் கீற்றில் ஒரு அணுக்கீற்றாய்
காத்திருக்கிறேன் இந்த தளத்தில்.
யாத்திரை என்பது ஒரு சுகானுபவம் . அனுபவித்தவர் களுக்கே புரியும் அது.
ரமணன் அவர்களோடு கூடவே பயணிக்கும் உணர்வைத் தருகிறது.
நன்றி
\\நில்லாமல் நகராமல் நிகழ்கின்ற கூத்து.//
\\\குயில் மேடையேறுமா?//
\\வீதி நாடகத்தில் ஏது மேடைக் கூச்சம்?//
ரமணன் தமிழ் சொக்க வைக்கிறது.
கண்வழியே கன்னமிட்டு, உயிரையெல்லாம் தனதாக்கி, எண்ணமெல்லாம் தன் வண்ணமாக்கும் மாயக் காதலின் மகத்தான தலைநகரம் இமயம்!
உணர்வும் மொழியும் அதன் உச்சத்தில்.
இந்தியனுக்கு இமயம் வெறும் மலையன்று. இறை உறையும் திருக்கோயில். ஆன்மீகத் தலைவாசல். ஞானப் பாசறை. யோகத்தின் கொட்டடி. பக்திக்குத் தொட்டில். நாகரிகம், மனித நேயம் இவற்றின் ஊற்று. எழிற்கொள்ளை. கற்பனைகளின் களஞ்சியம். கவிதைக்குச் சவால். அந்தரங்கத்தின் பகிரங்கம். ரகசியங்களின் கருவூலம். உருவாய்த் தோன்றும் அருவத்தின் ஜாலம். நில்லாமல் நகராமல் நிகழ்கின்ற கூத்து. நிஜம் என்று நாம் போர்த்திக்கொண்ட பிரமைகளைத் தாக்கி நிர்மூலமாக்கி நின்று சிரிக்கும் பிரமிப்பின் உச்சம். கம்பீரத்தின் முழு வடிவம். கடவுள் வியக்கும் அழகு. ஆ!//
சிலிர்ப்பூட்டும் அனுபவச் சிதறல்கள் தெறித்துக் கிடக்க அள்ளியள்ளிக் கைசோரச் செய்யும் நடையழகு!
வீதி நாடகத்தில் ஏது மேடைக் கூச்சம்?
beautiful..
இமயத்தைப் பார்த்துவந்த பிறகே இந்தியன் என்ற பெயருக்குப் பொருள் புரியும்.
இமயமாய் நிறைந்த பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
கருத்துரையிடுக