சமீபத்திய வாசிப்பில் என்னைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீ. அரவிந்தர்தான். என் பல்வேறு நம்பிக்கைகளின் சுவர்களை மிக அனாயாசமாகத் தகர்ந்தெறிந்து விட்டார். அவரின் ”மேற்கின் அழிபாடுகளிலிருந்து - இந்தியாவின் மறுபிறப்பு” , அமிர்தா எழுதிய “அரவிந்த தரிசனம்” , Nirodbaran எழுதிய "Twelve years with Sri. Aurobindo" இந்த மூன்று புஸ்தகங்களில் இதுவரை அரவிந்தர் பற்றி அறிய நேராதவர்களுக்கு சொர்க்கம் காத்திருக்கிறது. ஒரே மூச்சில் நீளும் நள்ளிரவில் எடுத்தபின் கீழே வைக்க முடியாமல் வாசித்தேன்.
காந்தியின் பல முடிவுகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்திருக்கும் இவரின் துணிச்சல் வேறு யாரிடமும் நான் பார்த்திராதது. இந்தியாவின் விடுதலைக்கு இவர் போடும் அடித்தளம் காலத்தால் திசைமாறி வேறு திசையில் செல்கிறது.
அலிப்பூர் குண்டுவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காலத்தில் வேதங்களையும், உபநிஷத்துக்களையும் வாசிக்க நேர்கிறது. ஓராண்டு சிறையில் இருக்கும் அவருக்கு யோகசாதனை குறித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த விவேகானந்தரிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கிறது. கண்ணனின் காட்சியையும் அவர் பெறுகிறார். அந்த நாளில் இருந்து அவரின் அரசியல் திசை ஆன்மீகத்தின் பாதைக்குத் திரும்புகிறது.
இது போதும். தனியாக ஒரு இடுகையில் பார்க்கலாம்.
***********************
இன்னொரு சுவாரஸ்யமான புஸ்தகம் ஏ.கே.செட்டியார் தொகுத்த நூறாண்டுகளுக்கு முன்பு வெளியான பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. படு ரசனையான எழுத்து. கமகமக்கும் நாஸ்டால்ஜியா பக்கத்துக்குப் பக்கம்.
செல்லம்மாள் பாரதி தங்கள் குலதெய்வக் கோயிலுக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு போன அனுபவத்தை விவரித்திருக்கும் அழகு ஒரு மஹாகவியின் மனைவி என்பதை நிரூபிக்கிறது. ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் வேதனையைப் பல கட்டுரைகள் புலம்பித் தீர்க்கின்றன.
தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் தீர்த்த யாத்திரை ( வெள்ளைப் பிள்ளையாரை தரிசித்துவிட்டுக் குதிரையில் கிளம்பும் ராஜா, போகும் வழியில் அய்யம்பேட்டையில் சீட்டித்துணி விற்றுக்கொண்டிருக்கும் வியாபாரியிடம் பணம் கொடுத்துத் துணியை வாங்கிக் கொள்கிறார்) சென்னையின் குஜிலிக் கடை வரலாறு.....
கண்டிப்பாய்ப் படியுங்கள்.
*************************
திருமூலரிடம் சீடராக இருந்த போகர், சுவடியில் ஒளித்து வைத்த ”கற்ப மூலிகைகள்” என்ற தலைப்பில் அந்தாதி ஃபார்மட்டில் ஒரு பாடலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம் போலத் திறந்த வாய்தான். இன்னும் மூடவில்லை.
"கேளென்ற
1கருநெல்லி,
2 கருத்த நொச்சிகெடியான,
3 கருவீழி,
4 கருத்த வாழை
காளென்ற,
5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு,
6 கருப்பான நீலியோடு,
7 கரியவேலி
கோளென்ற
8 கரூமத்தைத்
9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி
10 கொடு திரணச் சோதி
11 சாயா விருட்சம்
ஏளென்ற
12 எருமை கனைச்சான்
13 ரோமவிருட்சம்ஏற்றமாம்
14 சுணங்க விருட்சம்
15 செந்திரா"
"செந்திராய்
16 செங்கள்ளி
17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை
18 சிவந்தக றறாழை
19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடுநலமான
20 கற்பிரபி
21 கறசேம் பாகும்
பரந்திராய்
22 கல்லுத்தா மரையி னோடுபாய்ந்த
23 குழல் ஆ தொண்ட
24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய்
26 வெண்புரசு
27 வெள்ளைத் துத்திமிகு
28 வெள்ளைத் தூதுவளை
மிடுக்குமாமே" (2)
"மிடுக்கான குண்டலமாம்
29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி
30 வெள்ளை நீர்முள்ளி
31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான
32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு
33 கசப்பான பசலையோடு
34 மதுர வேம்பு
கிடுக்கான
35 கிளிமூக்குத் துவரை
36 அமுகண்ணிகெடியான
37 பொன்மத்தை
38 மதுர கோவை
படுக்கான
39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை
40 பாங்கான கருந்தும்பை
41 மதனத் தண்டே" (3)
"தண்டொடு
42 மூவிலையாம் குருத்துமாகும்தணலான
43 சிவத்ததில்லை
44 கருத்த வேம்பு
45 இண்டோடே
இவ்வகைகள் நாற்பத் தைந்தும்ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்திசாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)
ஹப்பா! நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளை எண்ணிப் பாத்துக்குங்க.
இதை முறையாக உட்கொள்ளுபவர்களுக்கு
1. சாவு இல்லை.
2. மன்மதன் போல மிடுக்கான வாலிபத்தோற்றம் க்யாரண்டி.
3. முடி (இருந்தால்) நரைக்காது.
4. தோல் சுருங்காது.
5. உடல் மூப்பு அடையாது.
6. மலைகளில் தாவி அஸால்ட்டாக ஏறலாம்.
7. மூச்சு இரைக்காது.
8. வான்வெளியில் வாக்கிங் போகலாம்.
9. வான மண்டலத்தில் உள்ள எல்லா நட்சத்திர மண்டலங்களையும் பார்க்கலாம்.
10. இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும்.
11. இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும்.
இதையெல்லாம் விட்டு விட்டுக் கண்ட கண்ட கேப்மாரிகளின் விளம்பரத்தில் மயங்கி உங்கள் மேனிப்பொலிவை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
*********************
படம்: தஞ்சாவூர் தெற்கு வீதி. (150 வருஷங்களுக்கு முன்னால்)
14 கருத்துகள்:
நான் திருச்சி மிகுமின் கொதி கலத் தொழிற்சாலையில் பணியில் இருந்தபோது என்னிடம் பணியில் இருந்த ஒரு முஸ்லிம் நண்பர் எப்போதும் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டிருப்பார். அதில் மருத்துவ மூலிகைகள் குறித்த விஷயங்கள் பாடல் வடிவில் இருக்கும்.படித்தாலும் பொருள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் உங்கள் பதிவில் காண்பதுபோல் ஒருவேளை அரிய விஷயங்கள் கொண்டதோ என்னவோ. ஒவ்வொரு பதிவையும் படிக்கும்போதும் how wide your interests are என்று புரிகிறது சுந்தர்ஜி.
அரவிந்தரைப் பற்றி கேள்வி மட்டுமே..இன்னும் படித்ததில்லை...அறிமுகத்திற்கு நன்றி !
போகரின் மூலிகைகளை யாராவது பறித்துத் தரமாட்டார்களா என மனமும்..உடலும் கேட்கிறது!
நன்று..வாழ்த்துக்கள்!
அருமையான வாசிப்பு அனுபவத்தை அழகாக பகிர்ந்திருக்கிறீர்கள் அண்ணா...
45 வகை மூலிகைகளையும் படிக்கும் போது மூச்சு முட்டுது....
மூலிகைகள் சாப்பிட்டு மூப்பழிக்கும் பாடெதற்கு,
காளிகையில் உன்னைக் கொடுத்துவிடு; -மாளிகை
ஆகுமே உன்வாழ்வு, அன்னை அமருமுன்
தேகமே சிம்மா தனம்"
கருத்து போட நாலு மூலிகையாச்சும் பறிச்சு மெல்லணும்..
அறிதலில் தீரா அவாவை நீளும் இரவுகள் துலங்கச் செய்கின்றனவோ...
தாய்ப் பறவையின் இறை தேடல் தனக்கு மட்டுமானதன்றே...!
காலைக் கலக்கம்.
"வாழ்ந்ததுவா கர்த்தா விவசம்ப்ருக்த் தோவாலே
வீழ்ந்ததுநான் கர்த்தா வெனும்னினைப்பால்-ஆழ்ந்திதை
சிந்தித்(து) அருணை சிவரமணர் சன்னிதியில்
வந்தித்(து) இருப்போருக்கு வீடு".(OR )
வந்தித்(து) அடைநிர் விகல்பு"
(நிர்விகல்பத்தை நிர்விகல்பு என்று எழுதலாமா!)
முகப்பு புகைப்படம் அருமை . என் கண்ணையும் கருத்தையும் ஒரு சேர கவர்ந்து விட்டதால் நகர முடியவில்லை அடுத்ததை நோக்கி.
சுந்தர்ஜி, உங்கள் வாசிப்பு எவ்வளவு விரிவாக இருக்கிறது என்ற ஆச்சரியம் ஒரு புறம், 'are you really serious?' என்ற கேலி ஒரு புறம்.
நீங்க என்ன பு சுத்தினாலும் வாசனையாத்தான் இருக்கு க்ரேசி மோகன்.
/இதையெல்லாம் விட்டு விட்டுக் கண்ட கண்ட கேப்மாரிகளின் விளம்பரத்தில் மயங்கி உங்கள் மேனிப்பொலிவை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.//
இந்த கடைசி வரிகள், விளம்பர/வியாபரத்தனத்திற்கு எதிரான சாட்டையின் வரிகள்.
அன்புள்ள சுந்தர்ஜி...
எது சொன்னாலும் அதை வலிமையாகச் சொல்கிறீர்கள்... அதைப் பயனாகச் சொல்கிறீர்கள்...வையம் பாலித்திடச் சொல்கிறீர்கள்... இப்போது குளிர்கால விடுப்பு அளித்திருப்பதே உங்கள் பதிவுகள் அத்தனையையும் வாசிக்கத்தான் என்று வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன்... அன்பின் சகோதரர் நம்முடைய கவிராயர் எப்படியிருக்கிறார்,,, மறுபடியும் இதழ்களில் துள்ளிக் குதிக்கிறார்...இன்பமாக இருக்கிறது அவரின் வருகையும் பதிவுகளும்..
இந்தியாவின் விடுதலைக்கு இவர் போடும் அடித்தளம் காலத்தால் திசைமாறி வேறு திசையில் செல்கிறது.
அரவிந்தரது பிறந்த நாளான ஆகஸ்ட்
15 ம் தேதி சுதந்திரம் கிடைத்தது அவரது ஆன்மீக சாதனையின் வெற்றியாக கொள்ளலாம் ..
அரவிந்தரிலிருந்து போகர் வரை அபூர்வமான செய்திகள் .. ஒவ்வொரு பதிவுக்கும் அர்ப்பணிப்பான உழைப்பு ... பாராட்டுக்கள்
அரவிந்தரில் இருந்து போகரை வரையான செய்திகள் யாவும் அற்புதம் அய்யா. முகப்புப் படம் அருமை. நன்றி
கருத்துரையிடுக