11.12.12

யுகங்களைக் கடந்த கோயில்


தஞ்சாவூர் போயிருக்கிறீர்களா? அதன் கூப்பிடு தூரத்தில் இருக்கும் திருவையாறு போனால் அவசியம் பார்க்கவேண்டியவற்றில் நான் வரிசைப் படுத்துபவை இந்த நான்கும்:

1. ஐயாறப்பர் (பஞ்சநதீஸ்வரர்) திருக்கோயில் 

2. த்யாகப் ப்ரும்மத்தின் ஆராதனை நிகழும் காவிரிக்கரையோரம் அமைந்த சமாதி. ( பகுள பஞ்சமியன்று நடக்கும் ஆராதனைப் பரபரப்புக்கள் எல்லாம் ஓய்ந்த பின்னால் ஆடுகள் திரியும் - வெறிச்சோடிக் கிடக்கும் வெட்டவெளியில் த்யாகய்யாவின் சமாதியை தரிசிப்பது எனக்குப் பிடிக்கும்) 

3. திருவையாறு இசைக் கல்லூரி. 

4. கடைவீதியில் காத்திருக்கும் ஆண்டவர் அசோகா அல்வா. பசும் வாழை இலையில் ஒரு இந்தியாவின் வரைபடம் போலக் கிடத்தப்பட்டிருக்கும் சூடான அசோகா அல்வா. எந்த வேளையில் உள்நுழைந்தாலும் சகட்டுமேனிக்கு ஒரு கடையின் அத்தனை இருக்கைகளிலும் அமர்ந்திருப்பவர்கள் அல்வாவை கபளீகரம் செய்வது ஆச்சர்யமான காட்சி. ருசியில் இருட்டுக்கடை அல்வா முதலிடம் பெற்றாலும் அது ஒரு கையேந்தி பவன். அதை இதனுடன் ஒப்பிட ஒப்பிட முடியாது.


போன வாரம் ஐயாறப்பர் கோயிலுக்குப் போயிருந்தேன். எத்தனை முறை என் நாட்காட்டியின் தாட்கள் கிழிக்கப்பட்டு விட்டன? தோராயமாக 17 ஆயிரம் நாட்களுக்கும் சற்று அதிகம். இத்தனை நாட்களில் ஐந்து தடவைதான் போக நேர்ந்திருக்கிறது. வெவ்வேறு பருவங்களில். 

கோயில் யானையை வேடிக்கை பார்க்கும் பருவத்தில் - தெருவைப் பார்த்திருக்கும் ஆட்கொண்டாரின் குங்கிலியக் கேணியில் குங்கிலியத்தைப் போட ஆசைப்பட்ட பிராயத்தில் - ஒரு ஆடி அமாவாசையின் போது உலகின் அத்தனை சிவ அடியார்களும் கூடிக் கூத்தாடிய ஒரு செவ்வாய்க் கிழமையின் விளிம்பில் - என்று ஐயாறப்பனுக்காக நிர்மாணிக்கப் பட்டிருக்கும் இந்தக் கோயிலைப் பார்த்துப் பரவசப் பட எனக்குப் 17000 நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. 
வெட்கமாய் இருந்தாலும், வாழ்க்கையின் ரகஸ்யமே இதுதான். கையெட்டும் தொலைவில் பொக்கிஷம் இருக்கிறதை - காலின் கீழ் நிழலாய்த் தொடரும் அற்புதத்தை இன்றைக்குத்தான் காண நேர்கிறதை - இப்போதெல்லாம் ஒவ்வொரு பொழுதும் அநுபவித்துக்கொண்டிருக்கிறேன்.   

வழிபாட்டை முடித்த பின் கோயிலின் சுற்றுச் சுவரில் எழுதப் பட்டிருந்த அக்கோயிலின் தல புராணம் ஆனந்தக் களிப்பில் தலையைச் சுழற்றியது. அதை முதலில் பார்ப்போம். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
”இத்திருக்கோயிலுக்கு முதன் முதலில் ப்ரியவ்ரதன் எனும் சூரிய வம்சச் சக்ரவர்த்தி* திருப்பணி செய்தான் என்பது புராண வரலாறு. 

கி.மு. - முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தான். இவன் காட்டை அழித்து நாடாக்கி வளம் பெருக்கியவன். கல்லணை கட்டி, காவிரிக்குக் கரை எழுப்பி இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில் ஐயாற்றை அடைந்ததும் அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. இதனடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான். 

பூமியின் அடியில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள்,  சண்டர், சூரியன் திருவுருவங்களும், யோகி ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றியும் காணப்பட்டன. 

மேலும் அகழவே, ’நியமேசர்’ எனும் அகப்பேய்ச் சித்தர் நிட்டையிலிருப்பது கண்டு மெய்விதிர்ப்பெய்தி அவர் பாதம் பணிந்தான். அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம் ’தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட இம்மகாலிங்கத்திற்கும், மற்றைய படிமங்கட்கும் கோயில் எடுப்பாயாக’ எனக்கூறி எவராலும் வெல்லற்கரிய தண்டமொன்று மளித்து, கோயில் கட்டுதற்கு வேண்டிய பொருளும் நந்தியின் குளம்படியில் கிடைக்குமென அருள் புரிந்தார். 

அவ்வாறே கரிகாற் சோழன் சிறப்பாக ஆலயத் திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்து நிவந்தங்கள் அளித்தான். கரிகாற் சோழனுக்கு ஐயாரப்பரே எல்லாம் வல்ல சித்தர் வடிவில் தான்தோன்றி, நாதராக சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடம் காட்டிக் கோயிலும் கட்டச்செய்தார் என்பதறிந்தோம். 

கற்பக் கிரகப் பிரகாரத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் பிரகாரத்தைச் சுற்றி வரக் கூடாதென்பதும், சோழனால் கட்டிய செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாயிருப்பதும், கரிகாற்சோழன், அவன் மனைவி இருவரின் சிலைகள் இருப்பதும் கண்டு உண்மை உணரலாம்.

கி.பி. 825-850 தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்திற்கு முந்திய திருப்பணி, ஆதி கோயில் அமைப்பை மாற்றியுள்ளது. அருள்மிகு ஐயாரப்பர் எழுந்தருளியுள்ள கருவறைக் கற்றளி துவார பாலகர், யாளித்தூண்கள் பல்லவர் காலப் பாணியாகும்.


கி.பி. 982** ல் வேங்கி நாட்டு விமலாதித்த தேவர் இதனைப் புதுக்கி, மகாதேவர்க்கு நிறைய அணிகலண்கள் வழங்கியுள்ளார்.

கி.பி. 1006 – ல் முதலாம் இராசராசன் (985 – 1014) மனைவி ஒலோக மாதேவியார் வட கைலாயம் எனும் ஒலோக மாதேவீச் சுரத்தைஎழுப்பி எழுந்தருளும் திருமேனிகள், ஒலோக வீதி விடங்கர் எனும் சோமஸ்கந்தர், விநாயகர் முதலான பஞ்சமூர்த்திகளை வழங்கியுள்ளார்.

கி.பி. 1014 – 1042 முதலாம் இராசேந்திரசோழத் தேவர் மனைவி பஞ்சவன் மாதேவியார் தென் கைலாயக் கோயில் பழுதுபட்டு இருந்ததை புதுப்பித்தார்.

அடுத்து, கிருஷ்ண ராஜ உடையாரால் இக்கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுக்கப்பெற்றுள்ளது. சலவைத் தூண்கள் சாளுக்கிய நாட்டு வாகாடகச் சிற்பத் திறனை எடுத்துக்காட்டவே பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்தவையாகவுள்ளன.

கி.பி. 1118 – 1135 விக்ரம சோழன் காலத்தில் மூன்று, நான்காம் திருச்சுற்றுகளும், மதில், கீழக்கோபுரங்களும் எடுக்கப்பட்டிருப்பதுடன் வடகிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் அடிப்படை பீடத்துடன் எழும்பி நின்று விட்டது.

கி.பி. 1381 - ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் வீர சரவண உடையார் காலத்து செந்தலைகருப்பூர், கச்சி வீரப்பெருமான் மகளால் கோயில் மண்டப மதில் சீர்திருத்தம் பெற்றது.

கி.பி. 1530 – ல் அச்சுதப்ப நாயக்கர் நின்று போன தண்டபாணி கோயில் மண்டபத்தை 144 தூண்களுடைய அழகிய மண்டபமாக உருவாக்கி முடித்தார். அவர்காலத்து இடைமருதூர் ஆனையப்பப் பிள்ளையாலும், அவர் தம்பி வைத்திய நாதராலும் மேலக்கோபுரம், முதற் பிரகாரம், அதில் திருநடமாளிகைப் பத்தி (மாடி) மூன்றாம் பிரகாரத் தெற்குக் கோபுரம், திருக்குளம், காவிரி பூசைப் படித்துறை “கல்யாண சிந்து” மண்டபம், குதிரை பூட்டிய தேர் மண்டபங்கள் ஆகிய இவை யாவும் அவர்களால் எடுக்கப் பட்டனவே.

கி.பி. 1784 காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியார், மூன்றாம் பிரகார முகப்பு மண்டபத் திருப்பணி செய்துள்ளார். அவரும் அவரது இரு மனைவியர் திருவுருவங்களும் தூண்களில் உள்ளன. மூன்றாம் பிரகார கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப் பெற்றதாகும்.

கி.பி. 1937 – ல் நாமறிந்த வகையில் அம்மன் கோயில் முழுமையும் அழகு ஒழுகும் பளிங்குக் கருங்கள் திருப்பணியாக தேவகோட்டை சிவத்திரு உ.ராம.மெ.சுப.சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் குடும்பத்தினரால் திருப்பணி செய்யப் பெற்று 2-5-1937 ல் குடமுழுக்கு இனிதே நிறைவேறியுள்ளது.

கி.பி. 1971 – ல் திருக்கையிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் திருக்கோயில் முழுமையும் செப்பமுற திருப்பணி செய்யப்பெற்று 31-3-1971 ல் திருக்குடமுழுக்குப் பெருவிழா மிகச் சீரும் சிறப்புமாக நிகழ்ந்தேறியது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

* ரகுவம்சத்தைச் சேர்ந்த மன்னனாகையால், இது த்ரேதா யுகத்தைச் சேர்ந்த கோயிலாகவும் இருக்கக்கூடும்.

**1013 – 14 ஆம் ஆண்டு என கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விமலாதித்த தேவர்தான் ராஜராஜ சோழனின் புதல்வி குந்தவி தேவியை மணம்செய்திருக்கக் கூடும்.


எனக்குத் தெரிந்த வகையில் பல ஆட்சியாளர்களின் காலங்களையும் பார்த்த கோயில் இதுவாகத்தான் இருக்கும். கரிகாற்சோழனில் தொடங்கி, போன நூற்றாண்டின் மெய்யப்பச் செட்டியார் வரைக்கும் கோயில் மெருகூட்டப்பட்டிருப்பது ஆச்சர்யமான அற்புதம்.  

கோயில் நெடுகிலும் கண்ணில் படும் பல கலாச்சாரங்களின் தடமாக விதவிதமான சிற்பங்களின் அழகும், ஏராளமான கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் வரலாறும் திகட்டத் திகட்டப் பருக ஏற்றவை. இன்னொரு முறை ஒரு முழு நாளும் தங்கி, குறிப்புகள் எடுத்து இன்னொரு இடுகையில் அவற்றை எழுதுகிறேன்.

கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்பில் பரந்து கிடக்கும் இந்த வரலாற்றின் சாட்சியைப் பார்க்கும்போது இது தஞ்சாவூர்ப் பெரிய கோயிலுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்று தோன்றியது. கரிகால் சோழனைப் பார்த்த நந்தி என்னையும் உற்றுப் பார்த்த தருணத்தில், நான் கி.மு.முதலாம் நூற்றாண்டில் நீந்திக்கொண்டிருந்தேன்.

நான் சென்றிருந்தபோது மிகுந்த உற்சாகத்துடன் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இறைவனின் கருணையால் நீண்ட இடைவேளை கடந்து - 41 வருடங்களுக்குப் பின் - வரும் தை மாதம் 25ம் நாள் வியாழக்கிழமை, மூல நக்ஷத்திரத்தில் ( 07.02.2013 ) குடமுழுக்கு மிகச் சிறப்பாக நிகழ இருக்கிறது.    

வாய்ப்பு அமையாவிட்டாலும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அவசியம் சீக்கிரமாகவே சென்று தரிசிக்கவேண்டிய கோயில் இது. இறைநம்பிக்கை இல்லாதாரும் கலைநுணுக்கத்திற்காகச் சென்று பாருங்கள். பொக்கிஷங்கள் அடிக்கடி நம் கண்களில் தட்டுப்படுவதில்லை. 

5 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…


கருப்புப் பின்னணியில் எழுத்துக்கள் படிக்க சிரமமாயிருக்கிறது சுந்தர்ஜி. இருந்தாலும் கருத்திடும் இப்பெட்டிஅருகில் இருந்த அசல் இடுகைச் சுட்டியைச் சொடுக்கி முழுவதும் படித்தேன். 1980- களில் ஒரு முறை ஆராதனைக்கு திருவையாறு சென்றிருக்கிறோம் அப்போது இந்தக் கோயிலைக் காண வாய்ப்பிருக்கவில்லை. எவ்வளவு பெரிய இழப்பு அது என்று இப்போது தோன்றுகிறது. அடுத்தமுறை ஆலய தரிசனம் செய்யப் போகும்போது இந்தக் கோயிலைக் காண கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை. இந்தக் கோயிலின் தல புராணம் எப்போது எழுதப் பட்டது.?

சக்தி சொன்னது…

உண்மையின் பல அற்புதங்களை அசோகா விழுங்குவதைப்போல்தான்
கடந்து கொண்டிருக்கிறோம். இப்படித் தேடித் தரிசிக்க,நிதானமாக ,நுணுகி
அணுக வாய்க்குமானால்...கொடுப்பினைதான்!
ஊர்ப்பக்கம் சுற்ற வேண்டும் என்ற ஆவலை அவ்வப்போது கிளப்பி விட்டு விடுகிறீர்கள்....
உங்கள் பகிர்வு..அற்புதம்..வழக்கம்போல்

அப்பாதுரை சொன்னது…

எத்தனை விவரங்கள்! எப்போதோ போன நினைவு. அல்வாவுக்கு அலைந்த ஞாபகமும் இருக்கிறது. உங்களோடு ஒரு ட்ரிப் போக வேண்டும் போலிருக்கிறது - என்னெல்லாமோ உங்க கண்ல மட்டும் படுதே?

காட்டை அழித்து நாடாக்கிய கரிகாலன் தான் க்லோபல் வார்மிங்குக்கு முதல் காரணமோ?

vasan சொன்னது…

வ‌லைப்ப‌திவில் த‌ங்க‌ளின் நீண்ட‌ இடைவெளிக்கான‌ கார‌ணம் இந்த‌ 'விச(ஜ)ய‌ம்' தானா?

அப்பாஜி,
க‌ந்த‌(ர்)வ‌‌ வ‌ன‌த்தை அழித்து எரித்து இந்திர‌பிர‌ஸ்த‌ம் எழுப்பிய‌ அர்ச்சுன‌ன், கிருஷ்ண‌ன் "ஜாய்ண்ட் வென்ச‌ர்' தான் முதன் முத‌ல் 'குளோப‌ல் வார்மிங்' ஆக‌
இருக்கும் என நினைக்கிறேன். அத‌ன் சைடு எபொஃக்ட் தான் க‌ர்ண‌னிட‌ம் வ‌ந்த‌ நாகாஸ்திர‌ம்.
(அஸ்வ‌சேனா S/O த‌க்ஸ‌ஹா தி கிங் of Nagas)
கி.மு டூ கி.பி 1971 டூர் எத்த‌னை நாட்க‌ளை க‌ட‌ந்திருக்கிற‌து. ந‌ல்ல‌ ப‌ராம‌ரிப்பு.
கோவிலும் 'ந‌டையும்'.

அப்பாதுரை சொன்னது…

ஆ vasan! சரியாப் பிடிச்சீங்களே பாயின்டு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...