இந்த இடுகையை எழுதிக்கொண்டிருக்கும்போது உத்தரப்ரதேசம் பஞ்சாப் மணிப்பூர் கோவா உத்தராகண்ட்டில் மாநிலத் தேர்தல் முடிவுகளோடு எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் லாட்டரிச்சீட்டு விற்கும் வியாபாரிகளைப் போலக் கூவிக்கூவி கடைபரப்பிக்கொண்டிருந்தார்கள்.
உத்தரப்ரதேசத்தில் முகாமிட்டு ஏழைகளுடன் ஏழையாகவே கடந்த ஒரு வருடமாக தேவுடு காத்த ராகுல் காந்தி இலவு காத்த கிளியானார். சிலைகளாலேயே கல்லாக் கட்டிய மாயாவதிக்கு இந்தத் தேர்தலில் வெற்றி மாயமானது. முலாயம்சிங்கிற்கு அடித்தது யோகம். இனி அடுத்த ஐந்து வருஷங்கள் அவர் காட்டில் மழை. பஞ்சாபிலும் காங்கிரஸ் போட்ட கணக்குகள் தப்பாகிப் போனது. ஆளும் அகாலிதளக் கட்சிக்கு இன்னொரு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது. உத்தராகண்ட்டில் காங்கிரஸும் பா.ஜ.கட்சிகளும் குதிரை பேரத்தில் ஈடுபட பெரிதாய் ஆர்வம் காட்டும். கோவா பா.ஜ.கவுக்குப் போகிறது.மணிப்பூர் மற்றொரு புதுச்சேரி போல காங்கிரஸ் இல்லாமல் அவர்களால் சிந்திக்க முடியாத அனிமிக் மாநிலம். அங்குள்ள குண்டுச் சட்டியில் காங்கிரஸ் குதிரை ஓட்டும்.
இந்திய அரசியலை ஆட்டிவைக்கும் மூன்று பெண் முதல்வர்களில் முதல்வரான மாயாவதிக்கு அடுத்த ஐந்து வருடங்கள் கோர்ட் படிகளை மிதிக்கவே நேரம் சரியாக இருக்கும். வரும் ஏப்ரல் முதல் முலாயம் அதிகாரிகளைப் பந்தாடுவதும் மாயாவதியின் ஊழல் குற்றச்சாட்டுக்களை அம்பலப் படுத்தி அவரை மூலைக்குத் தள்ள எடுக்கும் முயற்சிகளும் தினசரிகளின் முதல் பக்கத்துக்குத் தீனி போடும்.
அரசியலில் ஒரு சராசரி நியாயமான மனிதன் எதிர்பார்க்கும் எந்த மாறுதலும் இப்போது தேர்தல் ஆணையம் நடத்திக்கொண்டிருக்கும் தேர்தல் முறைகளால் ஏற்படாது. மனம் உவந்து தேர்தல்களில் கடுமையான மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தப் படாமல் வெறுமனே கட்டப்பஞ்சாயத்து குண்டர்களுக்கும் தாதாக்களுக்கும் கட்சி வாரியாக ஜாதி வாரியாக வேட்பாளர் நியமனம் கொடுத்து நூறு சதம் ஓட்டுப்போட்டு ஜனநாயகக் கடமையாய் ஆள்க்காட்டி விரலைக் கறையாக்க வாருங்கள் என்று கூவி முக்கி முக்கி 60 சதம் நல்ல ஓட்டு கள்ள ஓட்டு கலந்துகட்டி முடிவுகளை அறிவித்து மாற்றி மாற்றி இரண்டு கட்சிகளும் கொள்ளையடித்து நாட்டைக் காயடித்துக்கொண்டிருந்தால் வளர்ச்சி மற்றும் மாறுதல் என்பதெல்லாம் வெறும் கெட்ட வார்த்தைகளாகவே நீடித்து கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ரத்த சோகை பிடித்து லொக் லொக்கென்று இருமிக்கொண்டு பூட்ட கேஸாகத்தான் இருக்கும்.
இதற்கடுத்த பெரிய ஜோக் ஊடகங்களின் கணிப்புகள். ப்ரொனாய் ராய் முதன்முதலில் தேர்தல் சிறப்புச் செய்திகள் தர தூர்தர்ஷனில் துவக்கி வைத்த இந்த விவாதங்களும் கணிப்புகளும் சார்ந்த ஓர் அங்கமாயிருந்த இவ்வகையான துறை இன்று மிகப் பிரபலமான ஓர் சம்பாதிக்கும் துறையாகவும் ஆகிவிட்டதுதான் காலத்தின் கோலம்.
உளவுத்துறையையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்ட கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்ட அல்லது ஆட்சி செய்த சீரிலிருந்தே வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றுவது போலக் கணித்துவிடலாம். இவற்றின் யூகங்களுக்கு உதவ இன்னும் இருக்கவே இருக்கிறது ஒவ்வொரு தொகுதியிலும் ஜாதிபலம் பணபலம் போட்டியிடும் வேட்பாளர்களின் பின்னணி. ஆக ஊடகங்களே கிட்டத்தட்ட ஒரு நிழல்மறைவில் ஒரு தேர்தலை நடத்தி முடிவையும் வெளியிட்டுவிட முடிகிறது. அங்கங்கே சில ஏற்ற இறக்கங்க்ள் இருந்தாலும் கிட்டத்தட்ட ஒத்தே போகிறது. சில சமயங்களில் விலகிப் போகிறது. ஆனாலும் அடுத்த ஆட்சி அமையும் வரை விளம்பர இடைவெளியில்லாமல் பார்வையாளர்களை ஈர்க்க அவர்களுக்கு விஷயதானம் இந்தத் தேர்தல்கள்.
மீண்டும் அடுத்த தேர்தல் வரும் போது ஏழைகளின் காவலனாக உத்தரப்ரதேசம் பக்கமாய் ராகுல் போனால் போதும். மாயாவதிக்கும் தன்னுடைய கணக்குகளை சாமர்த்தியமாக மறைக்கவும் ஒளிக்கவும் தன்னுடைய அடுத்த வசூலுக்காகக் காத்திருக்கவும் காலம் பணித்திருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்கள் உங்கள் காட்டில் மழை முலாயம். 2014 பொதுத் தேர்தலில் பேரம் பேசவும் இந்த வெற்றி கை கொடுக்கும். ஜமாயுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
3 கருத்துகள்:
//வரும் ஏப்ரல் முதல் முலாயம் அதிகாரிகளைப் பந்தாடுவதும் மாயாவதியின் ஊழல் குற்றச்சாட்டுக்களை அம்பலப் படுத்தி அவரை மூலைக்குத் தள்ள எடுக்கும் முயற்சிகளும் தினசரிகளின் முதல் பக்கத்துக்குத் தீனி போடும்.//
நிச்சயம் நடக்கத் தான் போகிறது இப்படி....
மாற்றி மாற்றி சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோளாகி விட்டது இவர்களுக்கு....
சுந்தர் ஜி! உங்கள் அரசியல் கணிப்பு பிரமிக்க வைக்கிறது!---காஸ்யபன்.!
மாயாவதி அம்மையார், நீங்கள் எழுதியதே முற்றிலும் உண்மையென வாக்குமூலம் தந்து விட்டார்கள். காங்கிரஸ் கட்சியினர், முஸ்லீம் வாக்குகளை முழுவதுமாய் குறி வைத்து இடஒதிக்கீடு (7% / 23%) பற்றி மத்திய சட்ட அமைச்சர் முதல் மற்றொரு மத்திய அமைச்சர் பொனி வரை பேசி , பிஜேபி அதை எதிர்த்து இந்துத்துவாவை கையில் எடுத்ததால் பெரும்பான்மையான முகமதிய மக்கள் (70%) பயந்து அவர்களுக்கு ( ) எதிராய் வாக்குகளை முலயாமுக்கு போட்டுவிட்டனர். எனக்கு எனது தாலித்துகள் மட்டும் வாக்களிக்காதிருந்தால், நானும் பீகரில் லாலு மாதிரி ஆகியிருப்போன் என்கிறார். சாதிகள் தான் இந்திய தேர்தலை தீர்மானிக்கும் சக்தி என்பதை பட்டவர்த்தனமாய் செல்லிவிட்டார் நேற்றைய உ.பி.முதல்வர். நானும் இது பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன் சுந்தர்ஜீ
கருத்துரையிடுக