3.10.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 5 - இசைக்கவி ரமணன்


கேதார யாத்திரையின் துவக்கம் ஹர் த்வார். ஆனால், கங்கைக் குளியலில் எல்லாமே மறந்துபோய்விடுகிறது. பெரிய தொன்னைகளில், பெண்கள் மலர்கள், விளக்கு ஆகியவற்றை ஏந்திப் பிரார்த்தனை செய்தபடி கங்கையில் விடுகிறார்கள். ஏதேதோ ஊர்களில் இருந்து வந்திருக்கும் அவர்களைப் பார்த்தாலே ‘பராசக்தி!’ என்று பரவசமாய்க் கூவத் தோன்றுகிறது. இவர்கள் எதற்காகக் கோவிலுக்குச் சென்று கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்? கண்ணாடி பார்த்தால் போதாதோ? இதைக் கேட்கவும் செய்தேனே! ஆ! அந்த அட்டைக் கறுப்புக் கன்னங்களில் எங்கிருந்து வந்து தோன்றி நெளிந்ததோ ஒரு நாணச் சிவப்பு மின்னல்!

உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லவில்லை; உள்ளார்ந்த உணர்வோடு சொல்லுகிறேன். பெண்மை சிறப்பிக்கப்படும் வரை, இந்த நாட்டில் அறமும், அன்பும், வீரமும் தழைக்கும். இருட்டை விலக்குகிறோம் என்ற உணர்வு விளக்குக்கு இருப்பதில்லை. அதுபோலத்தான் பாரத நாட்டுப் பெண்கள். ஏன், அவர்கள் அடக்கப்படுவதில்லையா? அவர்களது உரிமைகள் பறிக்கப்படுவதில்லையா? என்றெல்லாம் கேள்விகள் எழலாம். அவை நியாயமாகவும் இருக்கலாம். இந்தக் கூட்டங்கள், கோஷங்கள், அறிக்கைகள், கோபங்கள் எல்லவற்றையும் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு, கங்கைக்கு வாருங்கள் என்று கனிவோடு அழைக்கிறேன். அங்கே, அங்கிருந்து புரிந்து கொள்வீர்கள் நான் என்ன சொல்கிறேன் என்று!

விடுதலை என்பது சில இடங்களில் கேட்டு வழங்கப்படுவது; சில இடங்களில் போராடிப் பெறப்படுவது. ஆனால், இந்தியப் பெண்ணைப் பொறுத்த மட்டில், அது உணரப்படுவது., நினைவு கூறப்படுவது! மோழையிலே பொறியாகக் காணப்படுவதுதான் ஊழியிலே கூத்தாக எழுந்து நிற்கிறது! பெண்மையின் கொடையில் பிழைப்பதுதான் ஆண்மை. இந்தியப் பெண் தன்னை என்று உணர்கிறாளோ, அன்று தருமத்திற்குப் பொன்னாள்! தரணிக்கெல்லாம் நன்னாள்!

ஒன்று சொல்லவா? கல்வியில்லாத எத்தனையோ பெண்மணிகள் கண் திறந்துதான் இருக்கிறார்கள்! கங்கை போலவே கனலும் புனலுமாகவும், கைவிளக்காகவும், காவல் தெய்வமாகவும், அன்றாட வாழ்க்கையின் நடைக்கு அச்சாணியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்விமான்கள் அல்ல கல்விச்சாலைகள்!

கங்கையின் களியாட்டத்தில் களைப்புத் தீர்ந்தது. உடல் மட்டுமல்ல, உள்ளமும் இளைப்பாறியது. ஆசுவாசத்தில் நேர்ந்த ஆயாசத்தை ரசித்தபடிப் படியேறி வந்தேன். ஒரு பெண்மணி தேநீர் விற்கிறாள். கன்னங்கறுத்த முகம்; மின்னற் சிரிப்பு; உடுக்கள் போற் கடுக்கன்கள்; உல்லாச நிலவாய் மூக்குத்தி. பத்துப்பதினைந்து பேரைப் பந்தாடும் வலிய தேகம். பேச்செல்லாம் பசுமழலை! ‘ சகோதரி! இங்கே உட்காரலாமா?’ என்றதும் பதறிவிட்டாள். ‘அதென்ன அப்படிக் கேட்கிறீர்கள்? அதற்காகத்தானே பெஞ்சு போடப்பட்டிருக்கிறது!”.

அற்புதமான தேநீர் கொடுத்தாள். நெஞ்சில் இறங்கும் இளஞ்சூட்டை ரசித்தபடியே அவளிடம் கேட்டேன், ‘அதெப்படி உன்னால் இவ்வளவு பிரகாசமாகச் சிரிக்க முடிகிறது?’. சற்றே வெட்கப்பட்டுச் சுதாரித்துக்கொண்டு சொன்னாள் ‘செய்ய வேண்டியதைச் செய்கிறேன். நடக்க வேண்டியதை அவன் பார்த்துக் கொள்வான். நல்லது கெட்டது அவனுக்குத் தெரியாதா? இல்லை, நமக்குத்தான் புரியாதா? அட, சிட்டுக்குருவியின் தாகத்தைத் தீர்க்கத் தெரியாதா கங்கைக்கு?!’ என்று சோழி குலுங்கச் சிரித்தபடி, மங்கிய ஸ்டவ்வை மறுபடி விசைத்தாள். நான் வியப்பில் உறைந்தேன்.

இந்திய நாட்டின் சராசரிக் குடிமகனுக்கு மதம் தெரியாது; ஆனால், அதைத் தாங்கும் தத்துவம் தலைகீழ்ப்பாடம்! பெண்ணின் தாத்தா வந்தார். ‘குளிப்பது கங்கையில். குடிப்பது கங்கையை. வாழ்வது கங்கைக் கரையில்; எனக்கு நோய் கிடையாது; வரவும் வராது’, என்றபடிப் படித்துறையில் இறங்கிச் சென்றார். ஏதோ சம்பிரதாயத்துக்காக என்னிடம் காசு வாங்கிக்கொண்டு, அடுப்பைச் சுற்றி திருஷ்டி கழித்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.

கிளம்ப வேண்டிய நேரம். மொத்த இடமும் தனதே என்ற மதர்ப்புடன் திரியும் காளை மாடுகள், விவரிக்க முடியாத வெற்றியைப் பறை சாற்றுவதைப் போலக் காற்றில் நீண்டு படபடக்கும் சேலைகள், இழந்துவிட்ட பெற்றோரை எண்ணிக் கண்மல்கிச் சடங்கு செய்யும் பிள்ளை, வரப்போகும் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்று மனமுருகிப் பிரார்த்தித்து முக்காடிட்டுக் கொள்ளும் பேரழகுப் பெண்கள்.

வாழ்வின் இறுதி விளிம்பில் பத்திரிகையில் ஏதோ உற்றுப்படித்துக் கொண்டிருக்கும் முதிய விழிகள், தேவைகள் தீர்ந்தும், வாழ்க்கை தீராத திகைப்பில் அமர்ந்து கொண்டிருக்கும் சாதுக்கள், குளிக்கப் பயப்படும் குழந்தை, அதை அதட்டி இறக்கும் தந்தை, பின்பு மறுபடி ஏற மறுக்கும் குழந்தை, அதைப் பார்த்துச் சிரிக்கும் அன்னை, இரும்பு கிராதியைத் தாண்டி நீச்சலிடும் துணிச்சல் மிக்க சீக்கிய இளைஞர்கள், இவை போன்ற எத்தனையோ காட்சிகளுக்குப் பாத்திரமான கங்கை, சாட்சியான மணிக்கூண்டு, இவற்றைப் பார்த்தபடி நடந்தால், கங்கைக்கு ஆரத்தி காட்டும் காட்சியைக் கண்டு அப்படியே நின்றேன்!

கரையில் கங்காதேவிக்குச் சின்னக் கோவில். காலையிலும், மாலையிலும் அடுக்கடுக்கான தீபங்களுடன், பின்னே ஆரத்தி கீதமும், வாத்தியங்களும் முழங்க, நதிக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். அப்போது, பெண்களெல்லாம், சின்னச் சின்ன தீபங்களைத் தொன்னையில் ஏற்றி கங்கையில் விட்டு, அவை செல்லும் திசையைப் பார்த்தபடி நிற்கிறார்கள்! எத்தனை கனவுகள் விண்ணப்பங்களாகச் சிறகு முளைத்துச் செல்கின்றனவோ! ஆரத்தி முடிந்து, எல்லோரும் எல்லாம் நிறைவேறியது போன்றதொரு நிம்மதியோடு கலைகிறார்கள்.

ஹர் த்வாரிலிருந்து அண்மையிலிருக்கிறது ரிஷிகேஷ். மலைப்பாதை அதற்குள்ளாகவே துவங்கிவிடுகிறது. அங்குள்ள ஆச்ரமங்கள், அந்தத் திருத்தலத்தின் சிறப்புக்கள் இவற்றைச் சொல்லி முடியாது. இருந்து அனுபவிப்பதற்காகப் போகும்போது ஹர் த்வாரிலும், வரும்போது ரிஷிகேஷிலும் தங்குகிறார்கள் யாத்ரிகள்.

வளைந்து வளைந்து செல்கிறது பேருந்து. கற்பனைக்கெட்டாத வெற்புகள். எத்தனை அழித்தும் இன்னும் மிஞ்சியிருக்கும் காடுகள். அவற்றின் பிரத்யேக வாசத்தைச் சுமந்து வந்து தலைகோதும் குளிர்காற்று. மனதில் ஏதேதோ பல்லவிகள். தலைசுற்றலில் யாரோ ஒரு பெண் வாந்தி எடுக்க, உடனே தொடர்ந்து பல தலைகள் சன்னலுக்கு வெளியே முயல, வந்துவிட்டது தேவப் பிரயாகை.

இரண்டு நதிகள் சேர்ந்து பிறகு தொடரும் இடம் பிரயாகை. இங்கே, சாலையில் நின்றபடிப் பார்த்தால், கீழே பள்ளத்தாக்கில், ஆர்ப்பரிக்கும் அலக்னந்தாவும், அமைதியான பாகீரதியும் கலப்பதைக் காணலாம். பாகீரதி கரும்பச்சை. அலக்னந்தா வெண்ணுரை தெறிக்கும் பழுப்பு. மிகுந்த பிரயாசையுடன் கீழே இறங்கி, அதிகமாய்ப் பாதுகாப்பில்லாத படித்துறையில், கால்வைத்தால் கோடித்தேள் கொட்டும் குளிர் நதியின் பரிகாசச் சூழலில் குளித்தால் வெற்றி! நாம் பயந்த பயமெல்லாம் மறந்துபோய், அடுத்துக் குளிக்க வருபவர்களுக்கு நாம் சொல்லும் தைரியம் இருக்கிறதே!!

இரண்டு ரொட்டி, கொஞ்சம் கூட்டு; அதற்கு மேல் தேவையில்லை. 50 வயதுக்கு மேல் பாதி, 60 வயதுக்கு மேல் மூன்றில் ஒரு பங்கு, 70 க்கு மேல் உயிர் நிற்கத் தேவையான அளவு மட்டுமே உண்ண வேண்டும். அதிகக் காரமில்லாத உணவே சாதனைக்கு ஏற்றது. நதி நீரைத் தாராளமாய்க் குடிக்கலாம். பாட்டில் வாங்கத் தேவையில்லை. தாதுக்கனிகள் அதிகமிருப்பதால், சிலருக்கு சற்றே வயிற்றில் கடகடப்பு உண்டாக்கலாம்.

ருத்ரப் பிரயாகையில் இரவுத் தங்கல். இங்கே அல்க்னந்தாவும் மந்தாகினியும் கலக்கின்றன. இங்கும் வேகத்திற்கோ, குளிருக்கோ, அச்சத்திற்கோ பஞ்சமில்லை! சின்ன விடுதி. சித்திரப் பூக்கள்! அவற்றில் வந்தமரும் தேனிக்கள்! சோறும், பருப்பும், காயும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. மேல்மாடிக்கு வந்தால், நெடிய மலைத்தொடர் நேருக்கு நேர் நின்றுகொண்டு ‘நலமா?’ என்கிறது. இருளின் கருமையிலும், வானத்தின் நீலத்தின் பிடிவாதம் பிரமிக்க வைக்கிறது. சற்றே முந்திவந்த முழுநிலவும், கோள்களும், நட்சத்திரங்களும் வெல்வெட்டுக் கம்பளத்தில் ரத்தினங்களைப் பதித்தது போல் தோன்றுகிறது.

எல்லாவற்றையும் மீறி ஓர் அமைதி. காட்டிலிருந்து வரும் சுவர்க்கோழி சீழ்க்கை, அந்த அமைதிக்குப் பங்கமில்லாமல், அதன் ரீதிக்குத் தோதாக அமைகிறது. புறத்தே எழுந்த மௌனத்தின் நாதம் அகத்தே புகுந்துகொள்கிறது. மண்டையெங்கும் மௌனராகம். எண்ணங்கள் நின்று போய்ப் புலன்கள் எல்லாம் ஒருமித்து ஒரே திசையை நோக்கிக் கூர்த்திருக்கின்றன. இனி யாரிடமும் பேசுவதற்கில்லை. மெல்ல அறைக்குள் சென்று அதன் இருட்டை ரசித்தபடி, கம்பளிக்குள் அமிழ்ந்தேன். எனக்குள்ளே கவிழ்ந்தேன்....

(தொடரும்)

  

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// கல்வியில்லாத எத்தனையோ பெண்மணிகள் கண் திறந்துதான் இருக்கிறார்கள்! கங்கை போலவே கனலும் புனலுமாகவும், கைவிளக்காகவும், காவல் தெய்வமாகவும், அன்றாட வாழ்க்கையின் நடைக்கு அச்சாணியாகவும் இருக்கிறார்கள். அவர்கள் கல்விமான்கள் அல்ல கல்விச்சாலைகள்! ///

உண்மை... தொடர்கிறேன்...

அப்பாதுரை சொன்னது…

capsule size பிடித்திருக்கிறது. பயணக்கட்டுரைகளில் படங்கள் அவசியமென்று நினைப்பேன். இதுவும் வித்தியாசமாக இருக்கிறது. /கால்வைத்தால் கோடித்தேள் கொட்டும் குளிர் நதி - ஆகா!

G.M Balasubramaniam சொன்னது…


வாரணாசி, ஹர்துவார், ரிஷிகேஷ் சென்று வந்த அனுபவங்களில் மீண்டும் மூழ்க வைத்தது. அனுபவிப்பதும் அதை அழகு குறையாமல் பகிர்ந்து கொள்வதும் சிறப்பு. ஒவ்வொரு வரியும் ரசனையுடன் அனுபவித்து எழுதப் பட்டிருக்கிறது.

சக்தி சொன்னது…

ஒவ்வொரு வரியும் ரசனையுடன் அனுபவித்து எழுதப் பட்டிருக்கிறது.unmai..unmai...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...