26.10.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 8


ராம்பாடா சின்னக் கிராமம்தான். சாலைக்கு இருமருங்கிலும் தேனீர்க்கடைகள். அங்கங்கே பனிக்கட்டி கரைந்து சிற்றோடைகளாக ஏதோ சேதி சொல்லப் புறப்பட்ட சேடிப் பெண்கள் போல ரொம்ப ஒயிலாகத்தான் இங்குமங்கும் சென்று கொண்டிருந்தன. இளைப்பாறல் அளவு மீறினால் களைப்பாக மாறிவிடும் என்பதை யாத்ரிகள் அறிவார்கள். எனவே, பிரயாசையுடன், தளர்ந்திருந்த உடலை மறுபடி கூட்டிக்கொண்டு, சற்றே கழற்றி வைத்திருந்த கம்பளிக் கவசங்களைத் தட்டி அணிந்து கொண்டு கிளம்பினோம்.

எதிரே, மிக உயரத்தில் எங்கோ ஒரு மலைப்பாதை தெரிகிறது. அதில் நடந்தும், குதிரைகளிலும் சிலர் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எங்கே போகிறார்கள் என்ற என் யோசனை என் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்ததோ என்னமோ, குதிரைப்பயல் சிரித்தபடிச் சொன்னான், ‘ அதுதான் நாம் போகவேண்டிய பாதை’ என்று. தொலைவிலிருந்து பார்க்கும் உயரம் பிரமிப்பாக இருக்கிறது. இதோ இங்கேதான் என்று தோன்றுவன நடக்க நடக்க நம்மைப் பரிகசித்தபடி மேலும் விலகுவதுபோல் தோற்றமளிக்கின்றன. காலறியாமல் உயர்கிறது பாதை. கம்பலை போல் இறைக்கிறது மூச்சு. காதறியாத மௌனத்தின் பேச்சு; கடவுள், தேடினால் கண்ணாமூச்சு! அட! கவிதைபோல் தொனிக்கிறதே! வளைத்துப் போடுவோமா?

காலறியாமல் உயர்கிறது பாதை
கம்பலை போல் இறைக்கிறது மூச்சு
காதறியாத மௌனத்தின் பேச்சு
கடவுள், தேடினால் கண்ணாமூச்சு!

பாதை கோரினால் தொலைவு நிச்சயம்
வாதை மிகுந்த பயணம் நிரந்தரம்
கலவியில் இரண்டும் ஒன்றும் இல்லை
கடலுட் சென்றபின் நதியே இல்லை!

ஒவ்வோ ரடியாய் உணர்ந்து நடந்தால்
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சிகரம்
ஒவ்வொரு சிகரமும் ஒவ்வொரு துவக்கம்
உண்மையில் நடைதான் உயிருக் கிலக்கம்!

சுழன்று கொண்டே இருக்கும் புவியில்
சும்மா இருந்தும் தொடரும் பயணம்
முடிவறியாமல் முதல்புரியாது
முன்னுள் ளவரை பின் தொலையாது

முகவரி யற்ற வீட்டைத் தேடி
தகவ லற்ற தடத்தில் பயணம்
வானம் அதற்கு வாசலென்றபின்
வழி தொலைந்தது; வம்பு தொடர்ந்தது......

ஒளி, மங்கிக்கொண்டே வருகிறது. உதிர்ந்து கிடந்த திரியை, உணர்வென்னும் காற்று நிமிர்த்தியது. வெட்ட வெளியைக் கிழித்துவந்த சின்னப் பொறியொன்று தீபத் திலகமாய் வீற்றுச் சிரித்தது. என்னெதிரே காரிருள். எதிர் என்ற கருத்தும் தொலைந்த கருப்பு கப்பிக் கிடக்கிறது. என்னிடம் இருப்பது இதோ இந்தச் சின்னச் சுடர்தான். அதோ அங்கே என்ன இருக்கிரது என்பதை இதனால் தெரிவிக்க முடியாது. ஆனால்,

அடுத்த அடியை எடுத்துவைக்க
அகல்விளக்கு போதும்
எடுத்து வைக்க எடுத்து வைக்க
அடிகள் குறைந்து போகும்
இறுதி வரையும் எந்தன் தீபம்
சின்னஞ் சிறிதாய் இருக்கும்
இலக்கை அடைந்து அமரும்போது
சற்றே சிரித்து நிலைக்கும்.....

நின்ற இடத்திலிருந்து நேரே திரும்பியிருந்தால் என்றோ முடிந்திருக்கும் நடை! வட்டத்தில், முதலும் முடிவும் ஒன்றுதானே. இருந்த இடத்தில் இருந்தால் போதுமென்பது நடந்து களைத்தால்தானே புரிகிறது! அலைமோதும் எந்தன் அகவேட்கைக்கும், உடல்நோகும் இந்தப்புறப் பயணத்துக்கும்தான் எத்தனை பொருத்தம்! இவை இரண்டும்கலந்து தவிர்ந்து போகும் தருணம் புலப்படும் அமைதியாய், அதிசயமாய், அனைத்துமாய் அதோ அசையாமல் வீற்றிருக்கிறது சிவம்!

வீதியற்ற பாதையின் வெளிச்சமற்ற விளக்குகளைத் தாண்டி நாதியற்ற குதிரைகளை விட்டிறங்கி நமசிவாயனை நினைத்தபடி நகர்த்தப்பட்டேன்.... புடைத்த சிகரமே லிங்கமாய்ப் புலித்தோல் போர்த்துத் திகழ்கிறது..... மாறி மாறி அதே இடத்தில் கோயில். தலமே முக்கியம்; கோவிலன்று. காதலுக்குக் கவிதை முக்கியமன்று; கவிதை உடம்பு. மஞ்சள் விளக்கொளியில் மாறாத கடுங்குளிரில், நெஞ்சைக் கவர்ந்து நினைவெல்லாம் திருடிக் கொண்டு, உயிர் கொஞ்சத் துடிக்கின்ற கோலவெழிலை, குலவக் குலவக் குழைந்து குழைந்து குழையவைக்கும்  உயிர்க்கினிய காதற் காந்தத்தை என் கண்ணாரக் கண்டுகொண்டேன்!

வானளாவும் நீலமேனி! வளரும் வெற்பைப் போன்ற சடைகள்! கானமாய்க் கலகலக்கும் கங்கை! கணங்கள் உதிரும் கவி உடுக்கு! தேனவாவும் சுத்த சிவம்! திரையிலாத புதிரின் உச்சம்! நான் கரைந்தேன் கண்ணின் முன்னே! நான் முடிந்தேன் கவிதை போலே.....

பிச்சையேந்தும் சாதுக்கள், காலைக்கதிரின் முதற்கிரணங்கள் முத்தமிட்டுப் பொன் துலங்கும் கோவிலுக்குப் பின்னிருக்கும் பனிச்சிகரம், புதிதாய்ப் பாவாடை கட்டிக்கொண்ட சின்னஞ்சிறுமியைப் போல் பாறைகளிடையே சலங்கை கொஞ்சக் கலகலத்துவரும் பனியோடை, எங்கோ கேட்கும் உடுக்கு, கண்ணைப் பறிக்கும் நீலம், புன்னகையே முகமாய்க் கடைக்காரர்கள், கஞ்சாப் புகையில் காலம் மக்கிய கனவு முகம், சாம்பலே ஆடையாய்த் திரியும் துறவி, அந்த இடத்தில் முளைத்த கல்லாய் அசையாது அமர்ந்திருக்கும் அகோரி,

தன்னை மீரா என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முதிய துறவி, சிறுநாகம் போல் நெளியும் ஜ்வாலை முன் குறுநகை தவழ வீற்றிருக்கும் நாகா, மூக்கும் கால்களும் மஞ்சளாய் அண்டங்காக்கை, கால் வைக்க முடியாமல் குளிரும் கல் பதித்த பிரகாரம், இளைய சூரியனின் கர்வம், கண்கொட்டாமல் நமசிவாயனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் நந்தி, ஈரக்காற்றில் மிக நிதானமாய் அசையும் காவிக்கொடி, பரபரப்புடன் உள்ளே நுழையும் பக்தர்கள், எண்ணற்ற பிரார்த்தனைகள், கணக்கற்ற தேவைகள் யாவும் கலந்து ஒன்றான காட்சிதான் நான் கண்ட தரிசனம்.

அங்கே எனக்குக் கோரிக்கைகள் நேரவில்லை. புத்தியைப் பயன்படுத்தி வாக்கியங்களைக் கோர்த்து விழையும் வரங்கள், முத்தியல்லாமல் வேறேதோ முட்டும் ஆசைகள், அவற்றால் நேரும் குற்ற உணர்வு, இவையெல்லாம் நமக்கே ஒத்து வராத போது இறைவனைத் தொடுமா?

தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். குமிழிகள் ஒன்றன்பின் ஒன்றாய் உடையவும், விட்டுப் புறப்பட்ட ஆவி ஒரு நடனக்காரியின் லாவண்யத்தோடு வளைந்து நெளிந்து வெளியில் கலக்கவும், என்னை விட்டுப் பிரிந்தன கருத்துக்கள், சித்தாந்தங்கள், அபிப்பிராயங்கள், வேட்கைகள் எல்லாம்...

மிடறு விழுங்கிக் கொள்கிறேன். தேனீரின் இளஞ்சூடு நெஞ்சில் பரவுகிறது. நிம்மதியின் உதயத்தில் ஆர்ப்பாட்டம் ஏது? பனியும், தூசும் சேர்ந்து கப்பிக் கிடக்கும் கண்ணாடி டம்ளர். இருப்பினும், தன்னைத் தொட்டுச் சென்ற கதிரின் கிரணத்தை வாங்கி வைத்துக் கொண்டு மகிழ்வில் ஒளிர்கிறது; புதிய முத்தம் பெற்ற பழைய கைதி போல்!

எழுந்தேன் தும் துது தும் துது தும் என்று பெரிய பறை முழங்குகிறது. மிகப் பெரிய தாரையில் மெல்லிய ஒலி வருகிறது. எங்கிருந்தோ வந்த பக்தர்கள் ஒரே விதமாக, பதட்டமில்லாத ஆட்டத்தில் ஈடுபட்டுத் தன்வயம் இழந்தவர்களாகக் கண்கள் மேலே செருகக் காட்சியளிக்கிறார்கள். இன்றைய கலைநடனம் என்பது அந்த வெட்டவெளி நடனத்தின் அற்பப் பிரதிபலிப்புத்தான் என்ற குருநாதரின் வார்த்தை காதில் கேட்கிறது.

சாதித்த உணர்வில்லை; சாதிக்கும் வெறியுமில்லை. ஏக்கமில்லை. ஏற்ற இறக்கங்கள் இனியுமில்லை. அவனாய்க் கிளம்பி, இவனாய்த் திரிந்து சிவனில் கலந்தது சித்தம்.

திரும்பி வந்தால்தானே திரும்பி வந்த கதையைச் சொல்ல முடியும்?

                                                                 நிறைந்தது.
                                                             ஓம் நமசிவாய  

(இன்று ஜாகேஸ்வர் யாத்திரைக்கு இசைக்கவி ரமணன் வழிநடத்திச் செல்ல, உடன் பயணிக்க வேண்டிய பாக்யத்தை சீரற்ற உடல்நிலையால் நான் கடைசி நாளில் ரத்து செய்தேன்.

அந்த இறையருளால் அவர் மேற்கொண்டிருக்கும் இமய யாத்திரை மிக நல்லதொரு இறையனுபவமாக நிறைவுற கடவுளைப் ப்ரார்த்திக்கிறேன்.) 


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இசைக்கவி ரமணன் இமய யாத்திரை சிறப்பாக அமையட்டும்...

நன்றி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தில்லியில் இன்று உங்களைச் சந்தித்திருக்க வேண்டியது. நானும் இந்த வாய்ப்பினை இழந்துவிட்டேன்...

சந்திப்போம் விரைவில்....

தொடரட்டும் இமயம் நோக்கிய பயணம். தொடர்கிறேன்.

G.M Balasubramaniam சொன்னது…

காணும் காட்சிகளுக்கும் , தோன்றும் எண்ணங்களுக்கும் உணர்வில் கலந்த உயிரூட்டும் மொழிவடிவம் அட்டகாசம். மிகவும் ரசித்துப் படித்தேன்.எனக்கே என் வலைப்பூவின் தலைப்பெழுத்துக்களை மீண்டும் நினைவு கூற வைத்தது. எழுதிய கைகளுக்கு காப்பிட ஆசை. வாழ்த்துக்கள் என்று மட்டுமே இப்போது கூற முடிகிறது சுந்தர்ஜி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...