31.10.12

அசத்தலான ஐந்து நாலடிகள்.


கடந்த வாரம் நாலடியாரின் காமத்துப் பாலில் இருந்து சுவாரஸ்யமான ஐந்து பாடல்களைப் பார்த்தோம். படிக்க விட்டுட்டீங்களா? இந்தாங்க லிங்க்.
இந்த இடுகையில் பொருட்பாலில் இருந்து சுவாரஸ்யமான கருத்துக்களுக்காகவோ, அபாரமான உவமைகளுக்காகவோ ஐந்து பாடல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

கிட்டத்தட்ட நான் ரசித்த பொருட்பால் பாடல்கள் ஒரு இருபதில் முதல் ஐந்து. பார்ப்போமா? 

பாடல்: 1

கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.      (253)

சின்ன வயதில் அப்பா ‘படி படி’ என்று சொல்லியும், அதை ஒரு சொல்லாக மதிக்காது புறக்கணித்தவன், பின்னொரு காலத்தில் எவனோ ஒருவன் மெதுவாக ஒரு ஓலையைக் கொடுத்துப் படித்துக்காட்டச் சொல்ல, அவன் தன்னை அவமதித்ததாக நினைத்து, கோபத்துடன் அவனைத் தாக்க, தடிமனான  கழியைக் கையில் எடுப்பான்.

இந்தப் பாட்டின் ஊசி செருகலை லேசாகச் சிரித்தபடி ரசிக்க முடிகிறது. அப்பா சொல் கேளாதவனின் கையிலிருக்கும் கழி ரொம்பவே வலிக்கும்.

பாடல்: 2

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.                (218)

நாயின் காலில் இருக்கும் சின்னஞ்சிறு விரல்களைப் போல் மிகவும் நெருக்கம் உள்ளவர்களாக இருந்தாலும், ஈயின் கால்களின் அளவு கூட உதவி செய்யாதவர்களின் நட்பினால் என்ன பயன்?

வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லை என்றாலும், வயல் விளைய உதவும் வாய்க்காலைப் போன்றவர்களின் நட்பினை, தொலைவில் இருந்தாலும் நாடிப் பெற வேண்டும்.

நாயின் காலையும் ஈயின் காலையும் உவமித்திருக்கும் அழகையும், வயலுக்கும் வாய்க்காலுக்கும் உள்ள உறவை ஒப்பிட்டிருக்கும் மேன்மையையும் மறக்க மனம் கூடுதில்லையே!

பாடல்: 3

ஊரங்கண நீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓரும்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.                  (175)

ஊரில் உள்ள சாக்கடை நீர், கடல் நீரில் கலந்த பின், அதன் கடந்த காலமும், அதன் பெயரும் கரைந்து ’தீர்த்தம்’ என்னும் புனிதமான பெயர் பிறக்கிறது. அதுபோல, பெருமையில்லாத குடியில் பிறந்த ஒருவரும், பெருமை மிக்க பெரியவர்களோடு கூடிப் பழக, மலை போலப் புகழ் பெறுவார்கள்.

சாக்கடை தீர்த்தமாகும் நுட்பம் ’அட கவிஞா’ என வாஹ்வாஹ் போட வைக்கிறது.

பாடல்: 4

எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பணி - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை. (363)

கணவன் சொன்ன சொல்லுக்கு பயப்படாது ‘ நல்லா அடி’ என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குள் நுழையாதவள் நீக்கமுடியாத நோய்; சமைத்த உணவைப் பரிமாறாதவள் வீட்டில் கொலுவிருக்கும் பிசாசு;

இந்த மூவரும், கணவனைக் கொல்லும் கொலைக்கருவிகள்.

ஏசுநாதர் சற்றைக்கு முன் வந்து சென்றிருந்த ஒன்றாம் நூற்றாண்டில் வீட்டுக்குள் இருக்கும் அரசியல், கமகமவென வெளியில் மணக்கும் பாடல் இது. தவிர, போருக்குப் போய்விட்டு சிலபல விழுப்புண்களுடன் ஆண்கள் வீடு திரும்ப,  பெண்கள் சமையலறைப் பக்கமே எட்டிப் பார்க்காமல் பொழுதை ஓட்ட, சீரியல்களுக்குச் சமமான சொக்குப்பொடி வேறு என்ன  இருந்திருக்கும்? என்று நெற்றிப்பொட்டில் தட்டியபடி யோசிக்கவைக்கும் அற்புதமான பாடல்.

பாடல்: 5

கடையாயர் நட்பிற் கமுகனையார் ஏனை
இடையாயர் தெங்கின் அனையர் - தலையாயார்
எண்ணரும் பெண்ணைப் போன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு.                 (216)

தினந்தோறும் நீர் பாய்ச்சினால் மட்டுமே பயன் தரும் பாக்குமரம் போல, நாள்தோறும் உதவினால் மட்டுமே பயன்படுபவர்கள் நண்பர்களில் மூன்றாம் தரம்.

விட்டுவிட்டு எப்போதாவது நீர் பாய்ச்சினாலும், உதவும் தென்னையைப் போல அவ்வப்போது உதவினால் மட்டும் பயன்படும் வகை நண்பர்கள் இரண்டாம தரம்.

விதையிட்ட நாளில் வார்த்த நீருக்குப் பின், எந்தக் கவனிப்புமின்றி விட்டாலும் மிகுந்த பயன் தரும் பனையைப் போல, என்றோ செய்த உதவியை நினைவில் வைத்து ஆபத்தில் உதவுபவரே முதல் தரமான நண்பர்கள்.

கமுகு, தென்னை, பனை ஆகிய மூன்று மரங்களைக் கொண்டு மற நண்பர்களை அலசி ஆலா போட்டுத் துவைத்துவிட்டார் நம் கவிஞர்.

மற்றொரு இடுகையில் பொருட்’பால்’ கலந்த மற்றுமொரு ஐந்து பாடல்கள்.

ரை ரைட் போலாம்.

9 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

எழுதித் தள்ளுகிறீர்கள் சுந்தர்ஜி. எங்கிருந்து கிடைக்கிறது நேரம் உமக்கு?
நாலடியாரின் பொருட்பாலைப் படித்த கையோடு காமத்துப் பால் 5 பாடல்களையும் படித்து விட்டேன். சொக்குகிறது ...... தூக்கம்.
மற்றவற்றை படிக்க மீண்டும் வருகிறேன். நன்றி

மீனாக்ஷி சொன்னது…

இது போன்ற பாடல்களை உங்களை போன்றவர்கள் பகிர்ந்து கொள்ளும்போது படித்தால்தான் உண்டு. இல்லை என்றால் இதை எல்லாம் படித்து அனுபவிக்க இப்போது வாய்ப்பே இல்லை. மிகவும் நன்றி.

பாடல்கள் படிப்பதற்கு இனிமையாய் இருக்கிறது. பொருளோடு புரிந்து மீண்டும் ஒரு முறை படித்தபோது மிகவும் ரசிக்க வைத்தது. ஐந்தாவது பாடல் அருமை.

உங்களது 'இமயம்' பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அருமை! அருமை! மிகவும் அருமை! மனம் நிறைந்த வாழ்த்துகள் சுந்தர்ஜி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி அய்யா

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்கள் பாணியில் விளக்கங்கள் அருமை...

நன்றி...

அப்பாதுரை சொன்னது…

சரி, நாலடியாருக்கும் கடந்தகால வட்டத்துக்கும் என்ன தொடர்பு? வாசன் வந்து subtext சொல்லி விளங்க வைக்கும் வரை தவிப்பதில் சுகம் :)

நாலடியார், திருக்குறளின் எளிமை பிற பகீகணக்கு நூல்களில் இல்லையென்று தோன்றுகிறது (எல்லாவற்றையும் படித்ததில்லை :)

சுந்தர்ஜி சொன்னது…

ஸாரி மற்றும் நன்றி அப்பாதுரை.

வேறொரு இடுகைக்கான காப்பி பேஸ்ட்டில் கடந்தகால வட்டமாக இங்கு சுழன்று விட்டது.

விரும்பாத கவனக்குறைவு.

Jayajothy Jayajothy சொன்னது…

நல்ல பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.

மோகன்ஜி சொன்னது…

நாலடியார் ஒரு பொக்கிஷம்.. நீதிகளை அழுத்தமாய் வலியுறுத்தும் ஒரு படைப்பல்லவா அது.. அதை ஒரு வாய்க்காலனைய நண்பன் சொல்லும் போது மீனாய் மனம் அதிலே நீந்துகிறது..

Annamalai சொன்னது…

இசைவு இல்லாமல் படித்த காலம் போய் இப்பொழுது

உங்கள் எழுத்து மூலம் விரும்பி படிக்கும் காலம்

நன்றி

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...