குருர் ந ஸ ஸ்யாத் ஸ்வஜனோ ந ஸ ஸ்யாத்
பிதா ந ஸ ஸ்யாத் ஜனனீ ந ஸா ஸ்யாத்
தைவம் ந தத் ஸ்யாத் ந பதிச்ச ஸ ஸ்யாத்
த மோசயேத் ய: ஸமுபேதம்ருத்யும்.
(பாகவதம் 5.5.18)
தாயானாலும், தந்தையானாலும், குருவானாலும் யாரானாலும் கடவுளிடமிருந்து நம்மை விலக்குபவர்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கக் கூடாது.
அதனால்தான் ப்ரஹ்லாதன் தந்தை சொன்னதையும், மாபலி குரு சொன்னதையும், விபீஷணன் தன் தமையன் சொன்னதையும் கேட்கவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மொத்தம் எட்டுப் பேர் உட்கார்ந்திருந்த அந்தத் திண்ணையின் நடுவில் அமர்ந்திருந்த காதம்பரி பேசத் தொடங்கினார்:எனக்கு அப்போது பதினைந்து வயது. என் நினைவு சரியாய் இருக்குமானால் ஒரு வௌவால் என் நினைவுக்கும் கனவுக்கும் நடுவே பறந்து கொண்டிருந்த அன்று தெருவே கோலாஹலமாய் இருந்தது. காஞ்சி மஹாப் பெரியவர் அந்தத் தெருவின் அக்ரஹாரத்துக்கு வர இருக்கிறார். எல்லா ப்ராமணர்களும் பஞ்சக் கச்சமும், ஸ்த்ரீகள் மடிசார் புடவையும் அணிந்தும், வீடுகளின் வாசலில் மாவிலைத் தோரணமும், செம்மண் இடப்பட்ட மணக்கோலங்களும் கல்யாணக் களையுடன் ஜொலிக்கின்றன.
தெருமுனையில் நாதஸ்வர ஓசையும் மேளதாளங்களும் ஒலிக்க தெருவுக்குள் நுழைந்தார். ஒவ்வொரு வீட்டிலும் பாதபூஜை, நமஸ்கரித்தல், தர்சனம், ஆசீர்வாதம் என்று முடித்து என் வீட்டை நெருங்கும்போது என் அப்பா என்னை நெட்டித் தள்ளுகிறார். ’குளிக்கலேன்னாலும் பரவாயில்லை. பெரியவா காலில் விழுந்து ஆசி வாங்கிக்கோடா வெங்குட்டு’.
எனக்கு இதில் துளியும் இஷ்டமில்லை. அந்த ஆளும் நம்மைப் போல ஒரு மனுஷன்தானே? அவருக்கு மட்டுமென்ன இத்தனை ஆரவாரம்-உபசாரம்? நான் இன்றைக்குக் குளிக்க மாட்டேன். அவருக்கு நமஸ்காரம் பண்ண மாட்டேன் என்று சொன்னதில் என் அப்பாவின் முகமும், பெரியப்பாவின் முகமும் கடுகடு.
நான் கொஞ்சமும் மசியவில்லை. பெரியவர் என் வீட்டு வாசலுக்கே வந்து நிற்கிறார். என் வீட்டிலுள்ள அத்தனை பேரும் கன்னத்தில் போட்டுக் கொண்டு ஜய ஜய சங்கர, ஹரஹர சங்கர என்று கோஷித்தபடி கண்மூடி கன்னத்தில் போட்டபடி அவரை வணங்கி மருகுகிறார்கள். எனக்குத் துளியும் இந்த கபட நாடகத்தில் இஷ்டமில்லை. சட்டென்று என் பெரியப்பா என் பின்னந்தலையில் கைவைத்துத் தள்ளினார். ’பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோடா படவா’ என்று.
நான் விரைத்து நிமிர பெரியவர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். நான் இன்னமும் இறுக்கமாக இருக்கிறேன். அங்கிருந்த படியே ஆசிர்வதிப்பது போல என்னைப் பார்த்துக் கையசைத்து விட்டு, ”அந்தக் குழந்தையைக் கட்டாயப் படுத்த வேண்டாம். பிஞ்சிலேயே பழுத்த அவன் ஒரு ஞானி. ஒரு நாள் என்னைத் தேடி வருவான்.” என்று சொல்லியபடியே நகர்ந்து போனார்.
மறுபடியும் அந்த வௌவால் குறுக்கும் நெடுக்குமாக ஒரு தடவை பறந்து மறைந்து போனது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதம்பரி தொடர்ந்தார்.
அப்போ நான் நிதித்துறையில் ஒரு குமாஸ்தா. சிதம்பரத்தில் வேலை.சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் 5 ரூபாய். எனக்குக் கல்யாணம் ஆகியிருக்கவில்லை. மாதத்துக்கு ரெண்டு தடவை மெட்ராஸுக்கு வந்து விடுவேன். வெள்ளிக்கிழமை ராத்திரி ரயில் ஏறினால் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் சென்னையில்தான் என் வாசம்.
நேரே ராயப்பேட்டை அஜந்தா லாட்ஜில் ஜாகை. அந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் காலை முழுவதும் மூர்மார்க்கெட்தான் என் கதி. அக்குவேறு ஆணி வேறாகப் புரட்டி எடுத்து எனக்கு வேண்டிய புஸ்தகங்களை எல்லாம் பேரம் பேசி வாங்கி, துணியால் ஒரு பெரிய கட்டுக்கட்டி ரிக்ஷாவில் ஏற்றிக்கொண்டு வந்துசேர்வேன்.
ஒரு மாலை கேசினோ அல்லது கெயிட்டியில் ஏதாவது நல்ல இக்ங்லீஷ் சினிமா. அப்புறம் ரசிக ரஞ்சனி சபாவில் ஒரு சங்கீதக் கச்சேரி. மறுநாள் ஏதாவது ஒரு ஹிந்துஸ்தானி கச்சேரி. தாஸப்ரகாஷிலோ, உட்லண்ட்ஸிலோ சுசிருசியாக டிஃபன், சாப்பாடு. ரெண்டு நாள் போவதே தெரியாது. மறுபடியும் ஞாயித்துக்கிழமை ராத்திரிக்கு எக்மோர் போய் ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு புஸ்தக மூட்டையுடன் ரயிலேறி விடுவேன்.
ஒரு தடவை அப்படி ஊருக்குத் திரும்பும்போது எனக்குள் ஒரு சின்ன சபலம். எப்போவும் செகண்ட் க்ளாஸிலேயே ப்ரயாணம் பண்ணுகிறோமே! ஒரு தடவை முதல் வகுப்பில் ப்ரயாணம் பண்ணினால் என்ன? என்று குறுக்கு சால் ஓட்டியது மனசு. கையில் பணம் இருக்கவே முதலாம் வகுப்புக்கு ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டேன். முதலாம் வகுப்புக்கு டிக்கெட் 12 ரூபாய். என் ஒரு மாத சம்பளம் 17 ரூ.
ஆன்லைன் ரிசர்வேஷன், தாட்கால் இதெல்லாம் அப்போது கிடையாது. நேரே விளக்கு அழுதுவடியும் ஒரு அறைக்குள் போனால் ஒரு குமாஸ்தாவிடம் சொன்னோமானால் ஒரு ரசீதில் எழுதிக் கிழித்துக் கொடுத்துவிடுவார். அதைச் சட்டைப் பைக்குள் மடித்து வைத்துக்கொண்டு ரயிலில் ஏறி உட்கார்ந்தேன்.
எதிரில் பஞ்சகச்சம் டர்பன் கோட் சகிதமாக கடலூர் ஜட்ஜ் உட்கார்ந்திருக்கிறார். எனக்கோ என் விரைப்பு. யாராயிருந்தால் நமக்கென்ன? நானும் டிக்கெட் வாங்கித்தானே வந்திருக்கிறேன் என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஸ்டைலாக உட்கார்ந்தேன். ஒரு தடவை என்னை மூக்குக் கண்ணாடி வழியாக ஏற இறங்கப் பார்த்து விட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டு எதையோ வாசிக்க ஆரம்பித்தார்.
சற்று நேரம் கழித்து இன்னொரு நடுத்தர வயது ஆசாமி வந்து உட்கார்ந்தார். அவரைப் பார்த்தால் இன்னவாய் இருப்பார் என்று யூகிக்க முடியாதபடிக்கு ஒரு தோற்றம். கொஞ்சம் என்னைப் போலவே கர்வியாய் இருப்பார் என்று நினைக்க வைக்கும் இறுக்கமான முகம். டைட் பேண்ட்டும், டெர்லின் ஷர்ட்டும், ஒரு தோல்ப்பையும்.
இப்போதெல்லாம் ப்ளேனில் வந்திறங்கியவர்கள் ஒரு வருடமானாலும் தன் பெட்டியிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் டேக்கைக் கழற்றாமல் சுற்றுவது போல் - பையில் அண்ணாமலை சர்வகலாசாலை ட்யூட்டர் என்று தன் பெயர் எழுதப்பட்ட ஒரு துண்டுச் சீட்டைச் செருகியிருந்தார். அது தான் யார் என்று காட்டிக்கொள்ளவா, அல்லது பை தொலைந்து போகாதிருக்கவா என்று என்னால் கணிக்க முடியவில்லை.
சடாரென்று ஏறியது திமுதிமுவென ஒரு கூட்டம். ஜட்ஜ் மூக்கிலிருந்து விழுந்து விடட்டுமா என்று கேட்கிற கண்ணாடியின் மேல்பக்க வழியாக என்ன என்று பார்த்தார். ட்யூட்டரும் என்னைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார்.
எதிர் இருக்கையில் நீள அங்கி மட்டும் அணிந்து கீழே எதுவும் அணியாத வித்யாசமான ஆடை அலங்காரத்தோடு ஒரு துறவி வந்தமர்ந்தார். தலைக்கு மேலே ஐந்து மீட்டர் சுற்றளவில் காவிநிறத் தலைப்பாகை. கழுத்தைச் சுற்றி எலுமிச்சை அளவில் கோர்க்கப்பட்ட ருத்ராக்ஷமாலை. வார்த்தைக்கு வார்த்தை திருச்சிற்றம்பலம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். பெட்டியெல்லாம் ஒரே விபூதி நெடி. ரெண்டு தடவை தும்மல் போட்டேன்.
வந்திருந்தவர்கள் சாமி சாமி என்று அவர் காலடியில் மாம்பழக்கூடை, சாத்துக்குடி, ஆப்பிள், மலைப்பழம் என்று ஒரு கடையையே அவர் முன் வைத்தார்கள். தடாலெனக் கால் நீட்டக் கூட இடமில்லாத இடத்தில் ஒவ்வொருத்தராக விழுந்து எழுந்தார்கள். சாமி! ஆசீர்வாதம் வேணும் சாமி! என்றார்கள்.
எதுக்கப்பா இத்தனை பழக்கூடை என்று சொல்லி விட்டு, ஒரு மலைப் பழத்தை மட்டும் எடுத்துப் பிய்த்து வாய்க்குள் போட்டுக்கொண்டார். ரெண்டாவது மூணாவது வகுப்புப் பெட்டில இருக்கிற எல்லாருக்கும் எல்லாப் பழத்தையும் கொடுத்து வா என்று தன் சிஷ்யகோடி போலிருந்த ரெண்டு பேரிடம் சொல்லிவிட்டு நிமிர்ந்து தனக்கு முன்னால் நின்றவர்களைப் பார்த்தார்.
சிகப்பு சட்டை ஆசாமி ஒருவரிடம் ‘உன்னோட வியாதி இன்னொரு மாசத்துல சரியாப் போய்டும்’ என்று சொல்லி நெஞ்சில் கைவைத்து ஏதோ மந்திரத்தை உச்சரித்து வாயைக் காட்டச் சொல்லி விபூதியை ஊட்டினார்.
‘உன்னோட இடமாற்றம் இப்போதைக்கு இல்லை. கொஞ்சம் நாள் பொறுத்துக்கோ. அடுத்த வாரம் சிதம்பரத்துக்கு வா’ என்றார் இன்னொரு வெள்ளைச் சட்டையிடம்.
‘உன் பெண்டாட்டி உன்னிடம் வந்து சேந்துடுவா. ஒன்பது வெள்ளிக்கிழமை யானைக்குக் கரும்பு கொடுத்துவிட்டு வா’ என்று தாடியை நீவி விட்டுக்கொள்ள இன்னமும் எஞ்சியிருந்தவர்களுக்கும் ஒவ்வொரு தீர்வாகச் சொல்லவும் ரயில் விசில் ஊதவும் சரியாக இருந்தது.
எல்லோரும் கோஷ்டியாக தென்னாடுடைய சிவனே போற்றி என்றும் எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று போட்ட சத்தம் ரயில் ஊதலை விடவும் பலமாக இருந்தது. ’என்னடா இது ந்யூஸன்ஸ்’ என்று நினைத்துக் கொண்டேன் நான்.
மெதுவாகப் பக்கத்தில் இருந்தவரிடம் தலையைத் திருப்பி உதட்டைப் பிதுக்கினேன். அவரும் என் சங்கேதத்தைப் புரிந்து கொண்டவர் போல கட்டை விரலைத் திருப்பி நெற்றியில் இடவலமாக நீளக் கோடாகக் கிழித்துக் காட்டினார். நான் சட்டென்று நிமிர, எதிரில் இருந்த ஜட்ஜ் என்னைப் பார்த்து எதுக்குப்பா வீண் பொல்லாப்பு என்று சைகை காட்டியது போல இருந்தது.
’பூம்பூம் மாடு மாதிரி அவரு கிட்ட போயி அவரு சொல்றதுக்கெல்லாம் தலையை ஆட்டிக்கிட்டு? எத்தனை பெரியார் வந்தாலும் இவனுங்களைத் திருத்த முடியாது. இதுக்கெல்லாம் காரணம் இவனுங்களை மாதிரி சாமியார்கள்தான். இவங்களையெல்லாம் புடிச்சு உள்ள போடணும்’ என்று நானும்,
‘காஞ்சிபுரத்துல இப்படித்தான் சார். போன மாசம் நடந்த கூத்து ஒங்களுக்குத் தெரியுமா?ஊரை ஏமாத்தறாங்க. படிக்கிறது ராமாயணம்னாலும் இடிக்கிறது பெருமாள் கோயிலு. சாமியார்னாலும் ஒடம்புக்கு எத்தனை சொகுசு கேக்குது பாருங்க’ கிசுகிசுப்பான குரலில் ட்யூட்டரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம்.
என் சிந்தனைக்கு ஆதரவாக இன்னொரு பகுத்தறிவுவாதியாவது உடன் இருக்கிறாரே என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஜட்ஜ் எந்த ராஜா எந்தப் பட்டணத்துக்குப் போனால் நமக்கு என்ன? என்று விடாமல் பேப்பரைக் கரைத்து குடித்துக் கொண்டிருந்தவர் சற்று நேரத்தில் மேலேறிப் படுத்துக்கொண்டார்.
எதிரே சாமியாரைப் பார்த்தேன். கண்களை மூடி பின்பக்கமாகச் சாய்ந்திருந்தார். அதற்குள் உறங்கிவிட்டவரைப் போல முகத்தில் ஒரு ஆழ்ந்த அமைதி. அவருக்கென்ன கவலை தூக்கம் வராமல் இருக்க? என்று கொஞ்சம் சத்தமாக நான் சொல்லவும், ரயில் டிக்கெட் பரிசோதகர் வரவும் சரியாய் இருந்தது.
’டிக்கெட் ப்ளீஸ்’ என்று ஜட்ஜிடம் கேட்க அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் சீட்டை நீட்ட கிறுக்கிவிட்டுக் அவரிடம் நீட்டினார் டீடீஈ. உறங்கிக் கொண்டிருந்த சாமியாரிடம் டிக்கெட் கேட்க சிறிது தயங்கினார். சாமியார் டிக்கெட் டிக்கெட் வாங்கியிருப்பாரா? மாட்டாரா? ஒரு வேளை வித்தவுட்டோ என்றும் நினைத்தேன். இடுப்பில் இருந்த ஒரு துணிப்பையை அவிழ்த்து ’இந்தாங்க ஐயா’ என்று நீட்ட நீங்க எதுக்கு சாமி? என்று சிரித்தபடியே அதை வாங்கிக்கூடப் பார்க்காமல் அவரிடம் பணிந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொள்ள அவருக்கு விபூதி பூசி விட்டார் சாமியார்.
ட்யூட்டரிடம் இப்போது டிக்கெட் கேட்டார். அவர் தன் தோல்பையைத் திறந்து உள்ளே பார்த்தார். சார் டிக்கெட்டைக் காணலியே என்று தேட ஆரம்பித்தார். வாங்கியிருந்தீங்கன்னா உள்ளாறதான் இருக்கும். பதட்டப் படாம பாருங்க என்றார் டீடீஈ.தன் பையை முழுதாகக் கொட்டித் தேட ஆரம்பித்தார் ட்யூட்டர்.
அவர்கள் உரையாடலையும், ட்யூட்டரின் பதட்டத்தையும் கவனித்தபடியே ‘தம்பி டிக்கெட்’ என்று கேட்கும் முன்னாலேயே ஜம்பமாக டிக்கெட்டை அந்த ஜட்ஜ் மாதிரி நீட்டவேண்டும் என்று நினைத்துப் பைக்குள் கைவிட்டால் தேள் கொட்டியது. டிக்கெட்டைக் காணோம். மறுபடியும் நிதானமாகத் துளவினால் நிஜமாகவே காணவில்லை.
’என் டிக்கட்டையும் காணவில்லை சார். நன்றாக நினைவிருக்கிறது சார்.அந்த டிக்கெட் நம்பர் கூட 3144 நன்றாக நினைவிருக்கிறது சார்’ என்று தந்தியடித்தேன்.
’நீங்க ரெண்டு பேரும் நிதானமாத் தேடிப்பாருங்க. கம்ப்பார்ட்மெண்ட்ல மிச்ச பேசெஞ்சர்சையும் செக் பண்ணிவிட்டு வர்றேன். டிக்கட் இல்லேன்னா ஃபைன் கட்டணும். 500 ரூபா ரெடி பண்ணி வையுங்க’ என்று கிளம்பினார்.
புஸ்தக மூட்டை, என் அண்டர்வேர் என்று ஒரு டிக்கெட்டைப் பாதுகாப்பாக வைக்கச் சிறிதும் பொருத்தமில்லாத இடங்களிலெல்லாம் தேடினேன். ஏண்டா இந்த முதல் வகுப்பில் ஏறினோம் என்று கூட யோசித்தேன்.
இருந்தால்தானே கிடைப்பதற்கு? அதெப்படி சொல்லி வைத்தது மாதிரி ரெண்டு பேருடைய டிக்கெட்டும் அபேஸாகி இருக்கும் என்று என்னவெல்லாமோ சந்தேகங்கள்.
டீடீஈ திரும்பியிருந்தார்.
டிக்கெட் கிடைச்சதா? என்று கேட்க உதட்டைப் பிதுக்கினோம். ரயில்வே போலீஸார் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்து, என் வேலை பறி போய், குடும்பமே நடுத்தெருவில் நிற்பது வரையிலான காட்சிகளை என் மனத் திரை ஓட்டி முடித்திருந்தது.
நிர்க்கதியாய் உணர்ந்த ஒரு நொடியில் சட்டென்று ஒரு மின்னல். ’உன் வார்த்தைதான் உனக்கு எமன்’ என்று அப்பா அடிக்கடி சொல்லும் உபதேசம் நினைவுக்கு வந்தது. ஒருவேளை அந்த சாமியாரைத் தரக்குறைவாகத் திட்டியது காரணமாக இருக்குமோ? என்று தோன்ற என் அகம்பாவம் எல்லாவற்றையும் விட்டுக் கடாசி, ‘ஸ்வாமி! நான் தெரியாம சிறுபிள்ளைத் தனமா உங்களை விமர்சனம் பண்ணிட்டேன். நீங்கதான் காப்பாத்தணும்’ என்று அவர் காலில் விழுந்தேன்.
அப்போதும் மெல்லிய புன்னகையோடு, ’அவசரப் படாதே. நான் சொல்றேன். உன் சட்டைப் பையில் தேடிப்பார். அது இருக்கும்’ என்று அழுத்திச் சொல்ல, அவநம்பிக்கையோடு அந்த அரைமணி நேரத்தில் நூறாவது தடவையாக பைக்குள் கையை விட்டால் இத்தனை நேரம் உசிரை எடுத்த அதே டிக்கட் பத்திரமாக உட்கார்ந்திருந்தது.
ஓடிக்கொண்டிருந்த ரயில் செங்கல்பட்டில் நின்று கிளம்பியபோதும் நிறைய பக்தர்கள் கூட்டம். அதே போல தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கோஷமிட்டவர்களில் புதிதாக இன்னொருவனும் இப்போது சேர்ந்திருந்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நெய்வேலிக்குச் சாந்தலிங்க ஸ்வாமிகள் வந்திருப்பதாக அலுவலகத்தில் பேசிக்கொண்டார்கள். அவரை தரிசிக்கப் போவதற்குச் சிலர் முடிவு செய்திருந்தோம். கடலூரிலிருந்து முக்கால் மணி நேரத்தில் போய்விடலாம்.தரிசனம் முடிந்து இரவே வீடு திரும்பி விடலாம்.
அற்புதமான ஒரு சூழல். பெயரே தெரியாத விதவிதமான பூக்களின் மணம். ஊதுவத்தியின் மட்டிப்பால் மணம். கூடு திரும்பிய பறவைகளின் கூவல். வாசலில் பெரிய கோலமிடப்பட்டிருந்தது. ஒரு மூலையில் கோபூஜைக்காக சில பசுக்களும், கன்றுகளும் புல்லை மேய்ந்துகொண்டிருந்தன.
வாசலில் சிறிய வரிசை ஊர்ந்துகொண்டிருந்தது. ஓம்கார நாதம் மட்டும் இசைக்கப்பட்டபடி இருந்தது. நாங்களும் வரிசையில் நின்று நகர்ந்து, ஸ்வாமிகளின் முன்னே நின்றிருந்தோம். அமைதியும், நிறைவும் ஊறித் ததும்பும் முகம். வணங்கி நமஸ்கரித்தோம்.அதன் பின் அவரின் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானித்தபடி இருந்தோம்.
‘பல நூல்களைப் படிப்பதால் பகவத் ப்ரேமை உண்டாகி விடுமோ? பஞ்சாங்கத்தில் இவ்வளவு மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பஞ்சாங்கத்தைக் கசக்கிப் பிழிந்தால் ஒரு துளி ஜலங் கூட வராது என்று ராமக்ருஷ்ண பரமஹம்ஸர்........’ ஸ்வாமிகளின் குரல் காற்றில் கலந்து ஒலித்துக்கொண்டிருந்தது.
வீரசக்தி என்ற மின் துறை தலைமைப் பொறியாளர் ஸ்வாமிகள் வந்திருக்கும் இடத்தைப் போய்ப் பார்த்து அலுவலக ரீதியாக முடிக்க வேண்டிய சில வேலைகளால் அங்கு வர நேரிட்டது. அவருக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. அங்கு போவதிலும் அவருக்கு விருப்பமின்றி அலுவலக் கடமையை நிறைவேற்றும் ஒரே காரணத்துக்காக வந்து சேர்ந்தார்.
அவரின் கொள்கைகளுக்கு சிறிதும் ஒத்துவராத அந்தச் சூழல் வாய்விட்டு அந்த ஸ்வாமிகளை விமர்சிக்க வைத்தது.
”மனுஷனோட விஞ்ஞான அறிவு வளர்ந்தப் புறமும் அவனோட புத்திகெட்ட தனம் குறையறா மாதிரி இல்லை. காட்டுமிராண்டியா இருந்த அவன் இன்னிக்கி மின்சாரம், அணுசோதனை, தேவையான அத்தனை வசதிகளையும் விரல் நுனில கொண்டு வர்றதுக்கு விஞ்ஞானக் கண்டுபிடுப்புக்கள்லாம் வந்தப்புறமும் இந்த சாமியாருங்க பின்னால ஓடறத மட்டும் நிறுத்தல.
ஆனா இந்தச் சாமியாருங்களா ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் மண்ணக் கவ்வத்தான் போறாங்க. அதப் பாக்க நான் இருக்க மாட்டேன். என் வாரிசுங்களுக்கு அந்த பாக்கியம் கண்டிப்பாக் கிடைக்கும்” என்று விலாவாரியாகத் தன் பணியாளர்களிடம் உரக்கவே பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.
அந்த அறையின் அமைதியில் இது நிச்சயம் ஸ்வாமிகளின் காதுகளில் அபஸ்வரமாகவே விழுந்திருக்கும். விழ வேண்டும் என்பதுதான் வீரசக்தியின் நோக்கமும்.
இந்த வாதங்களால் அங்கு பல்வேறு விதமான கஷ்டங்களுக்கு ஆறுதல் தேடி நம்பிக்கையுடன் வந்திருந்த பக்தர்களின் முகம் வாடியது. ஸ்வாமிகள் புன்னகைத்தபடி எல்லாருக்கும் ஆசிகளும், நம்பிக்கை ஊட்டக்கூடிய வார்த்தைகளும் அருளியபடி இருந்தார்.
திடீரென்று வீரசக்தி தரையில் உட்கார்ந்தார். வயிற்றைப் பிசைந்துகொண்டு துடித்தார். அடுத்த நொடி கடகடவென வாந்தியெடுக்க ஆரம்பித்தார். அந்த சூழலின் அருவெறுப்பைத் தாளாமல் பக்தர்கள் வெளியேறினார்கள். அவரின் பக்கத்தில் இருந்த அவரின் உதவியாளர்கள் விலகி ஓடினார்கள்.
இதைக கண்ட ஸ்வாமிகள் உடனே ஓடிவந்தார். அவர் தலையின் இருபுறத்தையும் ஆதுரத்தோடு அழுத்திப் பிடித்துக்கொண்டார். குடம்குடமாக வாந்தி எடுத்துச் சுருண்டு போனார் வீரசக்தி. அவருக்குக் குடிக்க வெந்நீர் கொண்டு வரச் சொல்லி, முகத்தை அலம்பித் துடைத்து விட்டு அவரை ஒரு சுவரில் சாய்வாக அமர வைத்து மின்விசிறியைச் சுழலச் செய்தார்.
பின்பு ஒரு வாளியை எடுத்து வந்து இரு கைகளாலும் அவர் எடுத்திருந்த வாந்தியைக் கைகளால் அள்ளி வழித்து வெளியே கொண்டு கொட்டினார்.அந்த இடத்தை துடைப்பத்தால் பெருக்கி, நீரால் கழுவி சுத்தம் செய்தார். இப்போது உதவிக்கு ஓடி வந்தவர்களையும் சிரித்தபடியே தவிர்த்தார். நான்கு ஊதுவத்திகளை ஏற்ற்ச் சொன்னார். அந்த இடம் பழைய படிக்குத் தூய்மையானது.
நடந்ததையெல்லாம் கண்ணீர் கசியப் பார்த்துக் கொண்டிருந்த வீரசக்தி கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட்டார். அதற்கு மேல் பேச அவருக்கு வார்த்தைகளின் துணை தேவையாய் இல்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதம்பரி பேசி முடித்திருந்தார். இன்னும் தன் வாழ்க்கை அனுபவங்களைச் சொல்ல நிறைய இருப்பதாகவும், இன்னொரு சந்தர்ப்பம் வாய்த்தால் பகிர்ந்துகொள்கிறேன் என்றும் சொன்னார். தன்னால் உட்காரமுடியவில்லை என்று ஒரு நண்பரின் உதவியோடு கிளம்பி விட்டார்.
காதம்பரி மதம் இனம் மொழி என்ற வட்டங்களைக் கடந்தவர். அவரின் உலகம் பரந்து விரிந்த வானம் போன்றது என்று சொன்ன சில பேர் இன்னும் அந்தச் சம்பவங்களை அசை போட்டுக்கொண்டிருந்தார்கள்.
அவருடைய நண்பர்களில் வேறு சிலர் நல்ல புரூடா என்று விமர்சனம் செய்தார்கள்.
வாசலில் நின்று கொண்டிருந்த வேப்பமரம் மெல்ல அசைந்தது.
(தொடரும்)
6 கருத்துகள்:
தட்சிணாயனம் நன்கு வளர்கிறது என்று மட்டுமே சொல்ல முடிகிறது இப்போது, என்னால்.ஏனெனில் இதற்கு முன் தொடர்ச்சியாய் வாசிக்க இயலவில்லை.காகிதப் பக்கங்கள் கையில் இருந்தால்,எந்த நடு நிசியிலேனும் எடுத்து வாசித்து முடிக்கலாம்.இதில் அதாவது,இணையத்தில் கண்கள் சீக்கிரமே களைப்படைந்து விடுகிறது.என்னதான் அறிவியல் வளர்ச்சி எனினும் பழைய முறைதான் சுகம்.நீங்கள் கூட,இந்த நாவலை முழுதாக காகிதத்தில் எழுதி முடித்து,அச்சு நூலாக்கி வெளியிடுவீர்களென்றால்,அதன் மரியாதை வேறு மாதிரி சீரியஸாக இருக்கும் என்பது என் இந்த நிமிஷ அபிப்ராயம்.ஏனெனில் எத்தனை ராட்சச வெளிச்சம் பாய்ச்சும் விளக்குகள் வந்தாலும்,பெரிய கார்த்திகை அன்று,நம் கிராமத்து வீட்டின் கொல்லைப் பக்கக் குப்பைமேட்டுக்கு மேல் ஏற்றி வைக்கும் சின்ன அகல் விளக்கின் சிறு வெளிச்சம் போல் அமைதியாய் நின்றெரியுமா? எனக்கு நம்பிக்கையில்லை சுந்தர்ஜி.....
நேசமிகு...எஸ்.ராஜகுமாரன் 08-10-2012
காதம்பரி ஒரு அற்புதமான கதைசொல்லி.வெளிப்படையில் அவரை இவ்வளவு அகம்பாவம் நிறைந்தவராக யாரும் பார்த்ததில்லை.ஒரு வேளை ரத்தம் சூடாகயிருந்த பருவத்தில் அப்படி இருந்திருக்கலாம்.ஞானம் பின் தொடர்வதாய்ப்படுகிறது பிறப்பு இறப்புகளை கடந்து.
உன் அமைதியான முன்வைப்புகளில்,மறைவிலிருந்து அழைத்து, கைப்பிடித்து நடப்பதாய் தோன்றுகிற்து சுந்தர்ஜி.
Why should beings be afraid of the unknown? This is what is bothering me. When one is singing hymns in praise of "God"- he's always described as "the saviour", "the benevolent" etc. In olden days, when people did not understand the nature of rain or wind or flood- they feared nature. Hence, they began worshiping it- giving gifts and performing rituals to assuage the forces of nature. But "God" or those who claim to be Her/His ambassadors/Bhaktas/God-men- as described in Kadhambari's stories- why must the non-believers be made to suffer before they begin to believe? "God" or who claim to be Her/His devotee- couldn't/shouldn't think that way, should they? Why must, in all stories, non-believers be tested so?
Yes, I too can feel the trees outside moving, silently!
Apart from my "not-so-serious" attitude about God-men--- it was perfect!
மிகச் சரியான பார்வை மாதங்கி.
தக்ஷிணாயனம் தொடரைத் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் இதைச் சொல்கிறேன்.
இந்த முயற்சியில் பலதரப்பட்ட எண்ணங்களை, அனுபவங்களை என் மொழியில் எழுதி வருகிறேன் என்பதுதான் உண்மை.
நம்பிக்கை உள்ளவர்கள் தங்கள் கட்சியை வற்புறுத்துவதைப் போலவே, நம்பிக்கையற்றவர்கள் தங்கள் நிராகரிப்பையும் வற்புறுத்தவே செய்கிறார்கள். இரண்டுமே அலுப்புத் தட்டத்தான் செய்கின்றன.
தொடர்ந்து இந்தத் தொடரை வாசியுங்கள்.
வாசலில் நின்று கொண்டிருந்த வேப்பமரம் மெல்ல அசைந்தது என்பதுதான் என் நிலை.
இயற்கையுடன் நெருங்கி இருந்ததாலேயே அவர்கள் அதைக் கடவுளாக நேசித்தார்களே தவிர, பயத்தால் அல்ல.
நெருக்கம்தான் தொழ வைக்குமே தவிர பயம் அல்ல.
மழையையும், நெருப்பையும், மரங்களையும், மலையையும் அவர்கள் நெருங்கிய அளவுக்கு நாம் நெருக்கமாயில்லை.
அந்த நெருக்கம் இயற்கையைக் கூட அவர்கள் பேசும் மொழியைக் கேட்க வைத்தது. வளைய வைத்தது.
இதைச் சொல்ல விடுபட்டுவிட்டது மாதங்கி.
"இரண்டுமே அலுப்புத் தட்டத்தான் செய்கின்றன"... Well reasoned, Sirji!
கருத்துரையிடுக