11.6.12

சித்ரா





















நண்பர் எஸ்.வி.வேணுகோபாலன் ஒரு குறும்படத்தைச் சிலாகித்து எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் பிரதி ஒன்றை எனக்கும் அனுப்பியிருந்தது தெரியாமல் என் பயணத்தில் உறங்கிக்கொண்டிருந்தேன். மின்னஞ்சலில் உறங்கிக்கொண்டிருந்தது என்னை உலுக்கிஎழுப்பும் வல்லமை கொண்ட அந்தக் குறும்படம்.

இன்று காலைதான் அதைக் காணும் வாய்ப்பு அமைந்தது.
https://www.youtube.com/watch?v=bl9cxwhYuuA
இந்தக் ஆறு நிமிடக் குறும்படத்தின் தாக்கத்திலிருந்து விடுபட வழக்கம்போல் நல்ல சிருஷ்டிகளைக் கண்டபின் உண்டாகும் அதே நேரம் பிடித்தது.

இந்தக் குறும்படம் தன்னுடைய பவித்ரா என்ற சிறுகதையினை அடிப்படையாய் அமைத்து எடுக்கப்பட்டது என்ற தகவலைக் கூட வெளிப்படுத்தாத முதல் பரிசு குறித்த அவரது இடுகையில் தெரியும் அ.முத்துலிங்கத்தின் அடக்கம் அவர் எழுத்தைப் போல அத்தனை உயர்வானதும் காணக்கிடைக்காததும்.

இதை இயக்கிய விக்னேஷ்வரன் விஜயன் - பாலுமகேந்திராவின் மாணவர்-, கதை கொடுக்கும் வாசிப்பனுபவத்தையும் கடந்து உணர்வுகளை உலுக்கும் விதமாக இந்தக் குறும்படத்தை இயக்கியிருப்பது அவரின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இப்படிச் சொல்வது அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களின் மீதான முழு மரியாதையுடனும், விக்னேஷ்வரன் விஜய னைப் பாராட்டும் விதமாகவும்தான் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஒரே சிருஷ்டி வெவ்வேறு வடிவங்களில் வெளியாகும்போது மூலத்தையும் மிஞ்சும் விதமாக உருக்கொள்ள முடியும் என்பதற்கான சாட்சி இந்தக் குறும்படம். இதற்கு மூலத்திலிருந்து சாரத்தை உறிஞ்சிக்கொள்ளத் தெரிந்த மற்றுமொரு கலைஞனின் சாகஸமேயன்றி வேறில்லை.

கோடிகளைக்கொட்டி வீணடிக்கும் இயக்குனர்களும் நடிகர்களும் கொடுக்காத அனுபவத்தை அ.மு.வின் சிறுகதையும், சித்ரா என்ற குறும்படமும் அநாயசமாய் அள்ளித்தந்துவிடுகிறது.

இந்தச் சிறுகதையும் குறும்படமும் சொல்லிவிடாததை நான் சொல்லி என் எழுத்தை நிரூபிக்க விரும்பும் மனநிலையில் இல்லை.

இந்த இடுகைக்கான ஊற்றுக்கண்ணான நண்பர் எஸ்.வி.வி.யின் வார்த்தைகளோடு இதை முடிக்க ஆசைப்படுகிறேன்.

”சிக்கல் இல்லாமல் கதையை அவர் நகர்த்த ஆரம்பிக்கிறார்...பார்வையாளரை அவர்கள் நம்பும் திசையில் செல்ல அனுமதிக்கிறார். அவர்களுக்கான அதிர்ச்சிகளை அடுத்தடுத்து வழங்கி முடிக்கையில் ஓர் உலுக்கு உலுக்கிவிடுகிறார்.”

நன்றி எஸ்.வி.வி. நல்ல அனுபவத்துக்கு.

பல நல்ல குறும்படங்களை உள்ளடக்கிய சிறுகதைகள் பலவற்றை எழுதிய எழுதவிருக்கிற என் ஆதர்ச எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கும், அ.மு. சொன்னதுபோல வருங்காலத்தில் அனைவரின் வாயிலும் புகுந்து புறப்பட இருக்கிற விக்னேஷ்வரன் விஜயனுக்கும் தித்திக்கும் ஆனந்தத்துடன் பாராட்டுக்கள்.

10 கருத்துகள்:

vasan சொன்னது…

அ.மு வின் இந்த‌ க‌தையை முன்பே ப‌டித்திருக்கிறேன்.
ப‌டிப்ப‌த‌ற்கும், பார்ப‌த‌ற்குமான‌ அவ‌தானிப்பின்
இடைவெளி இவ்வ‌ள‌வு ஆழ‌மானதா?
என் க‌ற்ப‌னையின் வ‌ர‌ட்சி அப்ப‌டியோ?
பிர‌மிக்க‌ வைக்கும், ஆனால் எளிமையான ந‌ளின‌மாக ஆக்க‌ம்.
ஆம் இதைத்தான் 'ஆக்க‌ம்' என்ற‌ முழு அர்த்தத்தோடு
அழைத்து அராதிக்க‌முடியும்.
தொட‌க்க‌த்தில் உறுத்திய‌ வேலைக்காரி, அம்மா,
ம‌ணைவி ஆகியோரின் ஸ்டேலான (அக்க‌றையில்லா)பாத்திர‌ப்
ப‌டைப்பையே, க‌தையின் ப‌ல‌மாய், மைய‌மாய் (கோர்) மா(ற்)றிய‌
ர‌ச‌வாத‌ம் ப‌ட‌ம் முடிந்த‌ பின்பு தான் முக‌த்தில் அறைந்த‌து.

ஆஹா, ந‌ன்றி சுந்த‌ர்ஜி, விற்ப‌ன்ன‌ர்க‌ளால் தான்,
க‌ண்ணாடிக‌ளையும், வைர‌ங்க‌ளையும் 'ஜ‌ஸ்ட‌ லைக் தேட்'
வ‌கைப்படுத்தி பிரித்துத்த‌ர‌ இய‌லும். வைர‌த்தை க‌ண்ட‌டை‌ந்த‌வ‌ருக்கும்,
அபூர்வ‌ ப‌ட்டைதீட்டிய‌வ‌ருக்கும், அதை காட்சி ப‌டுத்திய‌ மூவ‌ருக்கும் ந‌ன்றிக‌ள் ப‌ல..

Ramani சொன்னது…

பல நல்ல குறும்படங்களை உள்ளடக்கிய சிறுகதைகள் பலவற்றை எழுதிய எழுதவிருக்கிற என் ஆதர்ச எழுத்தாளர் அ.முத்துலிங்கத்துக்கும், அ.மு. சொன்னதுபோல வருங்காலத்தில் அனைவரின் வாயிலும் புகுந்து புறப்பட இருக்கிற விக்னேஷ்வரன் விஜயனுக்கும் தித்திக்கும் ஆனந்தத்துடன் பாராட்டுக்கள்//.

முடிவில் நீங்கள் சொல்வது போல
அதிர்ந்துதான் போனேன்
குறும்படத்தை பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam சொன்னது…

குறும்படத்தை காணும் தொழில் நுட்பம் என்னிடம் இல்லை. அனுபவித்து எழுதுகிறீர்கள் சுந்தர்ஜி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முற்றிலும் எதிர்பாராத ஒரு முடிவு....

நிச்சயம் இந்தப் படத்தின் பாதிப்பு சில சமயத்திற்கு என்னில் இருக்கும்....

பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி...


நம்பிக்கையின் கனவைக் கர்ப்பம் தரித்தவனின் வலியை உணர்கிறேன். வேறெந்த சொல்லுமின்றி.

அப்பாதுரை சொன்னது…

நடிப்பு கொஞ்சம் காட்டிக் கொடுத்துவிட்டது.
சிறுகதையைத் தேடிப் படிக்கப் போகிறேன். அற்புதமான கற்பனை.

விமலன் சொன்னது…

நல்ல குறும்படம்.

தீபிகா(Theepika) சொன்னது…

அற்புதமான கதை...அழகான திரைக்கதை. மறக்கமுடியாத முடிவு. காட்சிகளாக்கிய விதங்கள் அற்புதமானவை.

அ.முத்துலிங்கம் சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி.

உங்கள் பாராட்டு என்னைக் குளிரவைக்கிறது. விக்னேஸ்வரனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. உங்கள் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்.

அன்புடன்
அ.முத்துலிங்கம்
ஜூன் 11, 2012

Kinema Central சொன்னது…

https://www.youtube.com/watch?v=bl9cxwhYuuA

சித்ரா குறும்படம் புதிய இணைப்பு....

நன்றி.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...