ஒரு ஆண்டு முடிவதிலும் மறு ஆண்டு துவங்குவதிலும் அதற்காகவே காத்திருந்து குலுக்கோ குலுக்கென்று கையை சுளுக்கும்வரை குலுக்கிக் கொள்வதிலும் ஆர்வமில்லை.
கொண்டாட்டங்களில் மிகுதியாய் ஆர்வம் இருந்தாலும் ஏனோ ஆங்கிலப் புத்தாண்டின் மீது ஒரு கட்ட்ட்டுப்பு.
ஆங்கிலேயனின் கணக்கைப் பின்தொடரும் எரிச்சல்.
அவனுக்குமுன் வானசாஸ்திரத்திலும் அரசியலிலும் நம்மிடம் ஆர்யபட்டரும் சாணக்கியரும் இருந்தாலும் நாம் இந்தக் கணக்கைத் தலையில் வைத்துக் கூத்தாடுகிறோம்.
நம் தமிழ் மாதங்கள் சித்திரையில் தொடங்கிப் பங்குனியில் முடிவது- இன்றையக் குழந்தைகளை விடுங்கள்-இளைஞர்களுக்கே தெரியாது.
அஸ்வினி தொடங்கி ரேவதி வரை முடியும் நட்சத்திரங்களின் பின்னணி தெரியாது.
சந்திரன் வளர்வதையும் தேய்வதையும் கொண்டும் சூரிய உதயத்தைக் கொண்டும் திதி என்றும் பட்சம் என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறது என்பதையோ-
ஆங்கில நாட்காட்டியைப் போல நமக்கு வேறுவழியில்லாமல் நான்கு வருஷத்துக்கு ஒருதடவை மிஞ்சிப் போன நான்கு கால் நாட்களையும் ஒன்றாக்கி லீஃப் என்கிற சமாளித்தல் கிடையாது என்பதையோ மூச்சு வாங்கினாலும் சொல்லியே ஆக வேண்டும்.
நம்முடைய நாழிகையின் அளவு உலகின் எல்லா கால அளவுகளையும் விட மிகத் துல்லியமானது என்றும் நம் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதையெல்லாம் சரியாகப் புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாய்த் தாண்டுபவர்களுக்கு ஏஷியாநெட்டின் சந்தன குங்குமப் பொட்டுடன் ஏதோ ஒரு நம்பூதிரியின் புத்தாண்டுப் பலன் சொல்லும் பதிவு என்று மிரள்வதற்குச் சாத்தியம் இருப்பதால் இது பற்றி நம் பெருமை பற்றி விரிவான ஒரு பதிவு எழுதுவேன்.
சொல்ல வந்த விஷயத்தை விட்டுவிடாமல் சொல்லியாகவேண்டும்.
நான் எல்லா வலைப்பூக்களையும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். பலரின் பின்னூட்டங்களும் பலரின் பதிவுகளும் என்னைக் கூர் தீட்டிக்கொள்ளவும் என் எழுத்தைச் செறிவாக்கிக் கொள்ளவும் மிகவும் உதவியிருக்கின்றன. பெயர்களற்ற யார் யார் மூலமெல்லாம் இதை நான் பெற்றேனோ அவர்களுக்கெல்லாம் என் அன்பும் நன்றியும்.
குறிப்பாக இன்றைய இளம் எழுத்துக்கள் என்னில் பெரும் மாறுதலை ஏற்படுத்திவருகின்றன. இவர்களில் சிலர் வயதினால் இளையவர்களாகவும் சிலர் எழுதும் உற்சாகத்தால் இளையவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஏற்கெனவே எல்லோராலும் அறியப் பட்டு பின்னிப் பெடெலெக்கும் பலருக்கு நான் அறிமுகம் தரப் போவதில்லை.
எவ்வளவு எழுதியிருக்கிறார்கள் என்பதோ அவர்கள் பின்னணி என்ன என்பதையோ விட இவர்கள் தொடர்ந்து எழுதினால் தமிழின் பெரிய ஆளுமைகளாக வரக்கூடும் என்றும் சொல்ல விரும்புகிறேன்.
இவர்களை நான் பார்த்ததோ பழகியதோ இல்லை. இவர்களின் எழுத்துக்கள்தான் இவர்களின் அடையாளம்.இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன். என் தேடல் இன்னும் விடுபட்டவர்களைத் தேடித் தொடர்கிறது.
படிக்கத் தவறியவர்கள் அவசியம் படிக்க இவர்களை சிபாரிசு செய்கிறேன்.
இவர்கள் அடுக்கப்பட்ட வரிசைப்படி இல்லாமல் எழுத்தின் வீச்சிற்கேற்பவும் தொடர்ந்து எழுதுவதன் மூலமும் தங்கள் இடத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
உலகமே இந்தப் புத்தாண்டைப் பாராட்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற இந்த இரவின் கரங்களில் நாம் இவர்களைப் பாராட்டுவோம்.
48 கருத்துகள்:
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
முதலில் நன்றி. இப்படித்தான் எழுதுவீர்கள் என்று தோன்றியது. அப்படியே இருந்தது! பேருக்காகப் படிக்காமல் எழுத்துக்காக படிக்க, மனமார்ந்த வார்த்தைகளில் உற்சாகப்படுத்த ஒரு மனம் வேண்டும். அதற்கும், சோர்வு வரும் போது உங்கள் பிரார்த்தனை கவிதையையில் வரும்
//யாருமற்ற
இடைப்பொழுதில்
தேவாலயத்தின்
அசையும் மலர்களில்
மகரந்தமாய்
நிரம்பியிருக்கின்றன
வேண்டுதல் எதுவுமற்றவளின்
பிரார்த்தனைகள்//
என்ற வரிகளையும் படித்து சுயம் மீட்டுக் கொள்வேன், அதற்கும் பிற கவிதைகளுக்கும் நன்றி நண்பர் சுந்தர்ஜி.
ஒரு எழுத்தாளனுக்குப் பெருமை அவன் எழுத்துக்களை பிறர் படிப்பதால் ஏற்ப்டுவது.அதனினும் பெருமை அவன் எழுத்தை இன்னொரு எழுத்தாளன் சிபாரிசு செய்வது. இரண்டு பெருமைகளையும் ஒருசேர எனக்களித்த சுந்தர்ஜி உங்களுக்கு என் நன்றி.வாழ்க வளமுடன்.
திருத்தம்:பெயர்,கவிதையில் என இருக்க வேண்டும்.நன்றி.
நான் உங்களை வழிமொழிகிறேன்
சுந்தர். உங்கள் அறிமுகத்தில்
சிலரைப் படித்திருக்கிறேன்.
சிலரை இனிமேல்தான்.
நன்றி.
உங்களின் பாராட்டுக்குரியவர்கள்
பாராட்டப் பட வேண்டியவர்களே.
வினோ!
என் கைமீறி நீங்களிட்ட முதல் பின்னூட்டம் அழிந்துபோனது.
தவறிழைத்துவிட்டேன்.வருந்துகிறேன்.சரி செய்து தருவீர்களா?
என் மகிழ்ச்சியும் பரவசமும் எனக்குள் மட்டும் கரைந்து போய்விடக்கூடாது என்ற பொதுநலம்தான் சைக்கிள்.
பௌர்ணமியின் பால் வழிந்து பொங்குவதை மற்றொரு வேலையில் ஆழ்ந்திருப்பவர்களிடம் ஓடிச்சென்று பார்க்கச் சொல்லி அழைப்பதில்லையா?
நானும் ஒரு முழு நிலவைப் பாருங்கள் என்றுதான் அழைத்திருக்கிறேன்.அதற்குத் தகுதியானதுதான் அந்த நிலா.
நீங்கள் எழுதுவதும் நாங்கள் அதைப் படிப்பதும் எங்களை நீங்கள் படிப்பதும்தான் பெருமை பாலு சார்.
சாஷ்டாங்க நமஸ்காரங்கள் இன்னும் நீங்கள் நிறைய எழுதி எங்களை அசத்த இருப்பதற்கும் சேர்த்து.
இருண்ட வானம் தெளிந்தது உங்கள் வரவால் மதுமிதா.நீண்ட நாள் இழந்திருந்தேன் உங்களை.
அப்பாவின் உடல்நலம் விரைவில் மேலும் சீரடையட்டும்.
பல நூறு கவிதைகளை நீங்கள் எழுத அது உதவட்டும்.
உங்களுக்கும், உங்கள் எழுத்துக்களுக்கும் நன்றி சுந்தர்ஜி..
குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பை தெரிவிக்கவும்
புத்தாண்டு வாழ்த்துக்கள் (பயத்துடன்..)
இவர்களைப் பாராட்டக் காரணம் இருப்பதால் பாராட்டுகிறீர்கள். அதனால் தான் அது ஒப்புக்காக இல்லாமல் உளமார்ந்த உணர்ந்த பாராட்டாக இருக்கிறது. மனமார உணர்ந்து பிறரைப் பாராட்டத் தொடங்குகையிலேயே உள்ளம்
ஆரோக்கியம் அடைந்து விடுகிறது.
வாழ்த்துக்கள்.
கலைந்து போன வினோவின் வரிகளை
நான் இங்கு மீள் பதிவு செய்கிறேன் சுந்தர் சார்,
எப்படியெனில்
எழுதிய வினோவின் விரல்களில்
என்னுடைய ரேகை இருந்தது...
நேற்று அதிகாலை
நானும், வினோவும்
காலத்தை தொட்டு திறக்கும்
சில கவிஞர்களை பற்றி
வலைநிழலியின் ஒற்றைக்கண் வழியே உரையாடியபடியே
உங்களின் புராதான நதிக்கரைக்கு வந்து சேர்ந்தோம்.
தத்துவமும், கலைநயமும்
இலக்கியமாய் பெருக்கெடுக்கும்
உங்களின் ஜீவ நதிகரையில் ,
சில நூற்றாண்டு சரித்திரத்தின் பிணங்கள் கூட
ஒரு யானையின் சவத்தை போல
மிதந்து போவதை
விழிகள் விரிய பார்க்கும்
இரு சிறுவர்களாக
வெகு நேரம் நின்றிருந்தோம்
மரத்தின் இலைகளின் துளை வழி நீளும்
சூரிய தாரகைகளை ஒடித்து
அதை கொண்டு
இரவின் தேகங்களில் கவிதைகளை
எப்படி இந்த சுந்தர்ஜீயால் எழுத முடிகிறதென்று
நேற்று என்னிடம் கேட்டார் ,
அதையேதான் பின்னூட்டத்தில் வினோ
இன்று உங்களிடம் கேட்டார்.
---------------------------------------------
மிக்க நன்றி சுந்தர் சார்,
உச்சி வானில் பறக்க வில்லையென்றாலும்
பட்டாம் பூச்சிகளும் பறவை இனத்தை சார்ந்ததுதான் என்று
என் தோள் தட்டி நீங்கள் சொல்லும் பொழுது
என் சிறகுகள் இன்னும் வலுப்படுவதாய் உணர்கிறேன்.
மீண்டும் நன்றி சுந்தர் சார்,
இதை விட ஒரு எழுத்தாளனுக்கு என்ன பெருமை? தங்கள் அன்புக்கு நான் தகுதி உள்ளவன் தானா?
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
ஆர்.ஆர்.ஆர்.
எனது பாராட்டுகளும்..
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
புத்தாண்டை ஒட்டி எல்லோருக்கும் போல் உங்களுக்கும் ஒரு பின்னூட்டம் இட்டுவிட்டு பிறகு தான் உங்கள் பதிவைப் படித்தேன். சுருக்கென்றது. வாழ்த்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன். உங்கள் பட்டியலில் இடம்பெறும் அளவுக்கு நான் தகுதியானவனா என்ற சிறு அச்சம் எனக்குள் இருந்தாலும் தகுதியானவனாய் ஆக்கிக் கொள்ள இன்னும் முனைப்போடு எழுதுவேன். காஷ்யபன் அய்யா எழுத்துக்களும், உங்கள் எழுத்துக்களும் சமூகம் சார்ந்த என் பார்வையை விசாலப்படுத்தி இருப்பதை நான் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். தொடர்ந்து உங்களுடன்....
ஏகலைவர்களிடம், வலக்கை பெருவிரல் கேட்கும் துரோக, துரோணர்கள் நிரம்பிய பாரதத் திருநாட்டில், இலவசமாய் உணவும் கல்வியுமளித்த வள்ளலாய், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாராய் இன்னும் சிலர் இருக்கிறீர்கள் என்ற அறிந்து கொண்டதுதான், இப்புத்தாண்டின் இனிய கொண்டாட்டம்.
முகமறியா மாற்றானைப் பாராட்டி, பிறரிடம் பரிந்துரைக்க எத்தகு மனம் வேண்டும்!!
இத்தனை அறிஞர்களும், கவிஞர்களும், எழுத்தாளர்களும், புரட்சியாளாரகளும் புளகி திரியும் உங்களின் (பிளாட்டிலேயே)பிளாக்கிலேயே, என்னையும் குடியமர்த்தியதிற்கு. நன்றி சுந்தர்ஜி.
நன்றி திருநாவுக்கரசு.அப்படியே செய்கிறேன்.
புத்தாண்டு வாழ்த்துக்களுக்குத் தாமதித்து நன்றி அப்பாதுரை.
உங்களுக்கும் என் மனதிலிருந்து ததும்பும் வாழ்த்துக்கள்.
(உங்கள் பயத்தை நான் ரசிக்கிறேன்)
தாமதத்திற்கு மன்னிக்கவும் அண்ணா
தாங்கள் கூறுவது உண்மைதான் என்று மாறும் என யோசிப்பதை தான் ஒவ்வொருவரும் கையால்கிறார்களே தவிர மாற்றுவோம் மாற்றம் காணுவோம் என முயற்சிப்பதில்லை
தடைகல்லாய் நாம் இருக்க
தடைகள் தானே தகருமோ?
வாங்க வாங்க ஜீவி சார்.
உங்கள் வருகைக்கும் முதல் வார்த்தைகளுக்கும் நன்றி.
நன்றி சுந்தர்ஜி. தொடர்ந்த ஊக்கத்திற்கும், என்னை ( இது என் ரஃப் நோட்டு ) மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கும் நன்றிகள்.
-Toto.
கமலேஷ்!
தொடர்ச்சியான உடல்நலக் குறைவால் உடனே பதிலெழுத முடியாமைக்கு வருத்தம்.
உங்களின் வார்த்தைகள் உங்களின் உற்சாகத்தின் வெளிப்பாடாகக் கொள்கிறேன்.
எனக்கு அதற்கான அருகதை இல்லை.உங்களைப் போன்றவர்களைப் படிக்கும்போது கிடைக்கும் ஆனந்தம் வேறெதற்கும் ஈடாகாது.
அதிக இடைவெளி கொடுக்காமல் தொடர்ந்து எழுதுங்கள்.பெரிய உயரங்களை எட்ட இருக்கிறீர்கள் கமலேஷ்.
How are You NOW & what was the problem?
அன்புக்குரிய ஆர்.ஆர்.ஆர். சார்!
கரும்பின் ருசி கரும்புக்குத் தெரியாது.
கரும்பை ருசித்தவன் நான்.
நீங்கள் இல்லாமலா ரிஷபன்? உங்கள் வழியாகத்தானே ராமமூர்த்தி சாரைத் தொட்டேன்.
வாழ்த்துக்களை உற்சாகத்தோடு ஏற்றுக்கொள்கிறேன் சிவகுமாரன்.என் கருத்து ஆங்கிலப் புத்தாண்டு குறித்ததே தவிர கொண்டாட்டங்கள் குறித்தல்ல.
எழுதும்போது நினைவுக்கு வந்த பெயர்களில் உங்களுடையதும் ஒன்று.எப்படி சாப்பிட்ட ருசியை நாக்கு மறவாதோ அதுபோலத்தான் இதுவும்.
வாசன்!
என்னை ரொம்பவும் நெளிய வைக்கிறீர்கள்.
உங்களின் சமூக அக்கறையும் கவிதைகளின் மேலுள்ள ஆழ்ந்த பார்வையும் அபூர்வமான கலவை.
நிறையப் பேரிடம் இல்லாதது.
ஒரு கவிஞனிடம் அழகுணர்ச்சி மட்டும் போதாது.
சமகாலத்தில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அவன் எழுத்தில் தென்பட்டால் அவனே மேன்மையானவனாகிறான்.
நீங்களும் அப்படித்தான்.
நன்றி தினேஷ்.
லயம் நிறைந்த மனிதர் நீங்கள்.
கோபம் வந்தாலும் காதல் வந்தாலும் வருத்தம் வந்தாலும் தாளமில்லாமல் வருவதில்லை.
புத்தாண்டு குறித்த இது என் தனிப்பட்ட கருத்து. இது சாதமாக இருப்பின் பகிர்ந்து கொள்ளப்படின் சந்தோஷம்தான்.
முதல் தடவை வந்திருக்கிறிர்கள் டோடோ.நன்றி.அடிக்கடி வாருங்கள்.
உங்கள் எழுத்து புத்துணர்வோடு புதிய திசையில் அற்புதமான உவமைகளோடு பயணிக்கிறது.
கவிதையைக் காட்சி ரூபமாகப் பார்ப்பதும்,கடந்து போனவைகள் குறித்த கூர்மையான பார்வையும் உங்க ஸ்பெஷல்.
என் பையன்களோடு கால்பந்தாடிக்கொண்டிருக்கும் போது வலது கால் மடங்கி தசைநார்கள் கிழிவுற்று (நல்ல வேளை முறிவில்லை) இயக்கமற்றுப் போனேன்.
இப்போது ஓரளவு பரவாயில்லை.தொடர்ந்து காலைத் தொங்கவிட்டு உட்காரமுடியாததால் எழுதுவதும் படிப்பதும் வழியின்றிக் குறைந்துபோனது.
சொல்ல விரும்பாவிடினும் உங்கள் அக்கறை அதைச் சொல்ல வைத்துவிட்டது.
தவிர பதில் எழுதமுடியாத ஒரு குற்ற உணர்ச்சியும்.
அன்புக்கு நன்றி வாசன்.
அண்ணா இப்போது நலமா ? உடல்நலம் தேறியதும் நம்ம பக்கம் வாருங்கள். எனது "கனலாய் பிறக்கட்டும்" - வெண்பாக்களை நீங்கள் இன்னும் படிக்கவில்லை. உங்களது பின்னூட்டம் வராததால் அடுத்த பதிவுக்குப் போகாமல் காத்திருக்கிறேன். .
இணைய பக்கம் வரமுடியாத ஒரு கடினமான நிலை எனக்கு.
கைப்பேசியில் நீங்கள் அழைத்து பேசிய போது மருத்துவமனையின்
இறுக்கங்களில் இருந்து சற்று தளர்ந்தேன். இன்று பதிவை படித்தபோது இதற்கு தகுதியானவான என்று எனக்குள் கேள்வியும் நிறைய பயமும். இந்த தகுதியடைய/தக்கவைத்துக்கொள்ள நான் இன்னும் நிறைய செல்லவேண்டும் ஜி
உங்களை போன்றவர்களை அறிமுகமும் நட்பும் கிடைத்ததே நான் வெகுவாக பெருமைபட்டு கொள்கிறேன்.
சக நண்பர்களை போல் நான் நெகிழ்ந்து நிற்கிறேன்.
(கால் வலி எப்படியுள்ளது .. நல்ல ஒய்வு எடுத்து கொள்ளுங்கள்)
எனக்கு ஏன் இப்பிடிப் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லத் தெரியவில்லையென குட்டிக் கொண்டேன்!இவ்வ்ளோ தாமதமாக வந்ததற்கு மீண்டும் ஒரு முறை!
மனதிற்கு மிகவும் பிடித்திருந்தது பெருமைக்குரியவர்கள்!பூங்கொத்து!
Relaxed to know but yet to be relieved!
இந்த சம்பிரதாயத்துக்குப் பதிலாக நச் கவிதை ரெண்டு எழுதிடுங்க வேல்கண்ணன்.
உங்க எழுத்தைப் படிக்கிறது பேரானந்தம்.அதை நாலு பேர் கூடுதலாப் படிக்கட்டுமே?
நலமாகி விட்டேன் சிவகுமாரன்.
அக்கறைக்கு நன்றியும், இந்த வாரம் முதல் என் இயல்பு நிலைக்கு என்னை மீட்டுவிடுவேன் என்ற வாக்குறுதியும்.
பொங்கலுக்கு இது மாதிரி இல்லாம ஒங்க ஸ்டைல்ல ஒரு சர்ப்ரைஸ எடுத்து விடுங்க அருணா.
இதுக்குப் போயி ரெண்டு குட்டு குட்டிக்கிட்டீங்களா?
வந்துட்டேன் வாசன்.
உங்களைப் போன்றவர்களின் அன்பும் அக்கறையும் காலை நினைத்ததை விட விரைவாய் குணப்படுத்தி விட்டது.
நன்றி வாசன்.
நாட்களில் பிந்தியிருந்தாலும் மனம் நிறைந்த அன்பின் வாழ்த்துகள் சுந்தர்ஜி.அழகாய் அதிஷடத்தோடு பிறந்திருக்கிறதா 2011.எனக்கும் கூட !
My goodness, sir! I didn't read this post earlier... I don't know what to say!
I had never had a formal tamil training! "Sevi Vazhi" method- watching old movies/mom reading out Kalki's works-- only these have mentored me in this great language! I did not mean to start a tamil blog... and I definitely did not expect such an honour by someone such as yourself, whose words are so happy with his thoughts that they just manage to find appropriate place all by themselves, all for him!
I Thank you, with all my heart--- this has surely been a great New Year Gift-- and I only hope, that I keep continuing to 'live-up' to that list that you've put up there!
A very Happy Happy New Year to you!
Matangi
PS: Pardon my writing this comment in English... Sometimes, I feel so many things at once, and English helps me out better at such times...
அதிர்ஷ்ட்டம் இல்லை ஹேமா அது உங்கள் தகுதி.
உப்புமடச்சந்தியில் நாங்கள் பெறும் ஆனந்தத்தின் வெளிப்பாடு.
நன்றி ஹேமா.
உங்களின் சந்தோஷக் கூவல் பிடித்திருந்தது.ரசித்தேன்.
எழுத்து ஒரு பெரிய தவம்.காதால் கேட்ட தமிழ் உங்கள் மனதின் வழி புகுந்து உங்கள் சிந்தனையையும் மெருகேற்றி எங்களுக்கெல்லாம் விருந்து படைக்கிறது.
தொடருங்கள் மாதங்கி.காத்திருக்கிறோம்.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
சிறகின்றி எழும்பிப் பறந்தேன் ... தங்களின் அறிமுகப்படுத்தலால்...!
உயரங்களை எட்டிப் பிடிப்பதும், தக்க வைத்துக் கொள்வதும் தாங்கள் கூறியதுபோல் அவரவர் பொறுப்புதான்.
என்னவாக இருக்கிறேன்... எப்படியாக வேண்டுமென்பதற்கான புரிதலின் துவக்கப் புள்ளியை புத்தாண்டு தொடக்கத்தில் உணர வைத்தமைக்கு மகிழ்வும் நன்றியும்.
கணினிக் கோளாறால் வலையுலா வாய்க்காமலிருந்தது.
தங்கள் பட்டியலில் சக வலைத் தோழமைகளின் பெயர்கள் பரவசம் பெருக்கின.
நன்றி புகழேந்தி.
தாமதமான வருகைக்கு மன்னியுங்கள்.
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நீங்கள் பறப்பதும் பறத்தலின் நிமித்தம் எழுத்துக்களைச் சிறகடிக்க வைப்பதும் நாங்கள் அறிவோம் நிலாமகள்.
தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்வியுங்கள்.
கருத்துரையிடுக