19.12.10

இலக்கு.


இது ஒருகை எழுப்பும் ஓசையில்லை.

இது தலைவர் அழைக்கிறார் வாரீர் வாரீர் என்று கூவும் பேரணியோ மாநாட்டுக்கான அழைப்போ இல்லை.

செய்யும் தொழிலை விட்டுவிட்டு வீட்டைத் துறந்து நாம் இதுவரை ஏற்றுக் கொண்ட பொறுப்புக்களைத் துறந்து குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்தும் யோசனை இல்லை.

நமது எண்ணங்கள் நிகழ்த்த இருக்கிற மாற்றங்கள்தான் இதன் அடிப்படை.
நான் உள்ளிட்ட நம் ஒவ்வொரு தனி மனிதனிடமும் மாற வேண்டிய குணங்களைக் குறித்து இது கவலைப்படும் இயக்கமாக எண்ணுகிறேன்.

அடுத்த வீட்டின் மீதான அன்பும் அக்கறையும் அடுத்த தெருவுக்கும் ஊருக்குமாய் விரிவாகட்டும். தெருக்களில் காறி உமிழ்வதையும் குப்பை கொட்டுவதையும் பொதுக்குழாயில் வடியும் நீரை நிறுத்தவும் சாலை விதிகளைக் கடைப்பிடிக்கவும் தெரு ஓரங்களில் மலம் கழிப்பதையும் வீட்டை அழகு படுத்தத் தெருக்களை அசுத்தப் படுத்துவதையும் நிறுத்துவோம். பிறரையும் அறிவுறுத்துவோம்.

"வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்" என்று ஔவையார் பாடியது விவசாயத்தை மட்டும் பார்த்த பார்வையாக எனக்குத் தோன்றவில்லை. சிறிய அடுக்கடுக்கான ஒழுங்கான சீரான படிகளில் வளர்ச்சி இருக்கிறது என்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது. சிறிய மாறுதல்களிலிருந்து பெரும் அசுர மாற்றத்திற்கு இந்தப் பாதை செல்லும்.

யோசித்துப்பாருங்கள்.

கல்வி-விவசாயம்-மருத்துவம்-தொழில் முனைப்பு-பாதுகாப்பு-உள்நாட்டு நிர்வாகம்-வெளியுறவு-நிதி-ராணுவம்-விளையாட்டு-கேளிக்கைகள்-சமயம்-நீதி-சட்டம் ஒழுங்கு-தத்துவம் போன்ற ஒரு நாட்டை அடையாளம் காட்டக் கூடிய எல்லாத் துறைகளிலும் நம் நாட்டின் நிலை எத்தனை சீரழிந்து மாற்றத்துக்காக ஏங்குகிறது என்பதை நேர்மையாய் யோசிக்கிற எல்லோராலும் உணரமுடியும்.

எல்லாத் துறைகளிலும் நாம் விவாதிக்க மாறுதல் ஏற்படுத்த நிறைய விஷயங்கள் உள்ளன. நூறு வருஷத்துக்குப் பிந்தைய விதிகளை அல்லது ஒவ்வொரு முறையும் முட்டிக்கொள்ளும் போதும் அப்போதைக்கு சரி செய்துகொள்வது போன்ற ஒட்டுப்போட்ட ட்யூபில் எத்தனை நாள் வண்டியையோட்டுவது? ஒரு நெடிய பயணத்துக்கான புதிய தடம் அவசியம் தேவை.

கொஞ்சம் பொறுமையாய் இருந்து பார்க்கலாம்-அவசரப் படுகிறீர்களோ என்று தோன்றுகிறது என அனுபவத்திலும் முதிர்விலும் நான் மதிக்கும் பலரும் ஆலோசனை சொன்னபோது அதை ஏற்க எனக்குத் தோன்றவில்லை.

எதையெல்லாம் நம்பினோமோ அதையெல்லாம் இழக்க நேரிடும்போதும்- கைப்பற்றியிருந்த பிடியை நழுவவிடும்போதும் நமக்கு நேரும் அதே நிலையில் நாமிப்போது இருக்கிறோம்.

”பாவி துச்சாதனன் செந்நீர் அந்தப் பாழ் துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவியிரண்டும் கலந்தே குழல் மீதினிற் பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான் இது செய்யுமுன்னே முடியேன்” என்ற திரௌபதியின் இடத்தில் நாமிருக்கும்போது பொறுப்பதற்கும் இழப்பதற்கும் என்ன இருக்கிறதினி மீதி? இனிப்பொறுப்பதில்லை தம்பி எரிதழல் கொண்டு வாவென்றல்லவா நம் அழைப்பு இருக்கவேண்டும்?

நல்ல மாறுதலைக் கொண்டு வருவார்கள் என்றெதிர்பார்த்த தலைவர்களிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் எந்த மாறுதல்களும் உண்டாகவில்லை. பிரபலமாகிவிட்ட பின் பலரையும் பல விஷயங்களையும் யோசித்து பின் நமக்கென்ன? நம் காலம் முடிந்தது. பின்னால் வருபவர்கள் மாற்றுவார்கள் அல்லது காலச்சக்கரம் சுழலும் என்ற சால்ஜாப்போடு நாட்கள் நழுவிச் செல்வதை நாம் பார்த்துக் கைபிசைந்து நிற்கிறோம்.

ஏன் இந்த அவல நிலை?

இதை நிவர்த்திப்பதற்கு ஒவ்வொரு கட்டமாக இதைக் கொண்டு செல்வோம். முதலில் சிந்தனையை உறுதிப் படுத்திக் கொள்வோம். இந்த மாற்றம் சாத்தியம் என நான் நம்புகிறேன்.

இந்த நொடியே என்னையே நேரில் பார்த்துப் பழகாதவர்களும் பேசாதவர்களும் எப்படி இதைச் செய்வது? எது இலக்கு? என்றெல்லாம் ரொம்பவும் பெரிதாய்க் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

யார் எந்தத் துறையில் என்ன என்ன மாறுதல் கொண்டு வரலாம் என எண்ணுகிறார்களோ அவர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிரலாம். கூடிய விரைவில் ஒரு பொது வலைத்தளம் உருவாக்கி அந்தத் தளத்தில் நம் விவாதங்களைத் தொடர்வோம்.

விவாதங்களின் பொதுக் கருத்து நம்மை இணைக்கட்டும். அதன் பின் சந்திப்பதும் அடுத்த கட்டத்துக்குச் செல்வதையும் முடிவு செய்வோம். துவக்கம் எல்லாச் செயல்களையும் போலவே நிறையப் பேரிடம் சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் விதைக்கும்.

தொடர்ந்து எழுதும்போதும் ஒரே திசையில் யோசித்துக் கொண்டிருக்கும் போதும் எல்லாம் சரியாகிவிடும். நல்ல நோக்கத்தை நம்புபவர்கள் இந்தப் புனிதப் பயணத்தில் இணைவார்கள்.

பொய்மையிலிருந்து வாய்மைக்கு-
இருளிலிருந்து ஒளிக்கு-
இறப்பிலிருந்து அமரத்வத்திற்கு -
எடுத்துச் செல்லட்டும் நம்மை இந்தப் பயணம்.

தொடர்ந்து எழுதுவேன்.

13 கருத்துகள்:

பாரத்... பாரதி... சொன்னது…

நல்ல எண்ணங்களின் பகிர்வு. மாறுபட்ட, புதிய , நல்ல எண்ணமுடையவர்கள் கட்டாயம் ஒரு தளத்தில் இணைய வேண்டும்.

பாரத்... பாரதி... சொன்னது…

தமிழ்மணம், இன்ட்லியுடன் இணையுங்கள் . உங்களின் நல்ல
எண்ணங்கள் நிறைய பேரை சென்றடையட்டுமே...

G.M Balasubramaniam சொன்னது…

எதிர்மறை சிந்தனை உடையவர்கள் எதிரிகள் அல்ல.நேர்மறை சிந்தனை கொண்டவன் ஏரோப்ளேன் கண்டுபிடித்தான். எதிர்மறை சிந்தனை உடையவன் பாராசூட் கண்டுபிடித்தான்
எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல்
நிதானமாக சிந்தித்து செயல்படவேண்டு
கிறேன். எதெல்லாம் செய்யவேண்டும்
எதெல்லாம் ப்ராக்டிகலாக கொண்டு நடத்த முடியும் என்னும் ஆலோசனைகளைப் பெருவதில் முதலில் முனைதல் வேண்டும்.BEST OF LUCK.

dineshkumar சொன்னது…

போர்க்களத்தில் பொறுமையா
சரியாக சொன்னீர்கள் அண்ணா இம்மண்ணில் பொறுத்து வெறுத்து மால்வதை விட போர்தொடுத்து போர்க்களத்தில் போராளியாய் மால்வதே எம் எண்ணமும் தோழர்களே வாருங்கள் கரம் கோர்ப்போம்

சிவகுமாரன் சொன்னது…

இணைவோம் உறுதியாய்.

Harani சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...

எந்தவொரு மாற்றமும் தனி மனிதனிடமிருந்துதான் தொடங்கப்படவேண்டும்.ஒருவர் சொல்லி வந்துவிடாது. தானாக யோசித்து தனக்கும் இந்த சமூகத்தின் மீது அக்கறையுண்டு இது என்னுடையது சுத்தமாக இருக்கவேண்டும் என்று நினைப்பவனால்தான் இது சாத்தியப்படும். கண்ட இடங்களில் காறி துப்புவதும்...சாலையை அசிங்கப்படுத்துவதும் பேருந்துகளிலும் ரயிலிலும் கண்டதையும் தின்று குப்பைப் போடுவதும் கேட்டால் நானும் வரி கட்டுகிறேன். எனக்கும் உரிமையுண்டு. எனவே சுத்தம் செய்துகொள்ளட்டும் என்று பேசுகிற மேதாவித்தனம் நிறைந்திருக்கிறது. இன்னும் பட்டவர்த்தனமாக சொன்னால் எனக்குத் தெரிந்த பல நல்ல சிறந்த படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கும் எழுத்தாள நண்பர்கள் அழுகிப்போன சாக்கடையைப் போல சாதியை நுகர்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தப் பின்னணியில் தங்களது படைப்புக்களைக் கூர்தீட்டிக்கொள்ளும் அசிங்கத்தையும் பார்த்துக்கொண்டு வருகிறேன். எனவே தன்னால் இயன்றவரை சிறுசிறு செயல்களில் இந்த தேசத்தை ஒழுங்குபடுத்துகிற எண்ணத்தைச் செயல்படுத்தினால் போதும். தனி மனித ஒழுக்கம் மிக மிக முக்கியமானது. சுந்தர்ஜி உங்களின் விதை விருட்சமாகக் கிளைவிரிக்கபோவது சத்தியம். மறுபடியும் தருமமே வெல்லும்.

philosophy prabhakaran சொன்னது…

நல்லதொரு பதிவு... ஏன் திரட்டிகளில் இணைக்கவில்லை...

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பாரத் பாரதி.

இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் இணைத்தால் பக்கம் திறப்பதற்கு மிகவும் நேரம் பிடிக்கிறது.தவிரவும் இந்த ஓட்டு கான்செப்ட் எனக்கு ஒத்துவராதது.

உங்களை போல துடிப்புடன் இருக்கும் இளைஞர்களை நம்புகிறேன். முடிந்த விதங்களில் நீங்களும் இதைப் பற்றி அறிமுகம் செய்யுங்கள்.கண்டிப்பாக நல்லது நடக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்கள் சொல்வதை நூறு சதம் ஏற்கிறேன் பாலு சார்.

எதிரெதிர் விவாதங்கள் மூலமாகத்தான் நாம் நம்மை அறிந்துகொள்ள முடியும்.

போகும் இலக்கில் மாற்றமில்லை.பின் வாங்குதலும் இல்லை.அதற்காக அவசரமும் நிதானம் தவறுதலும் இருக்காது.

யாரிடம் நாம் குறை காண்கிறோமோ அதுவே நம் குறையாயும் ஆகிவிடக் கூடாது.

தொடர்ந்து என் எண்ணங்களை உங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் படிப்பதும் ஆலோசனைகள் சொல்வதும் எனக்கு பெரிய உந்துதல்.

நன்றி பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

போராளி என்கிற பதங்களில் நாம் திசை மாறிவிடக் கூடாது தினேஷ்.

எந்தப் போரினாலும் யாருக்கும் நன்மை விளையாது.வெற்றி என்பதும் தோல்வி என்பதும் சற்று அழுத்தமான பதங்கள். அவை நம்மை உணர்ச்சியின் பால் கொண்டு நிறுத்திவிடும்.மாற்றத்தைக் கொண்டு வருவோம்.எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக அது இருக்கும்.

மாள்வதும் வீழ்வதும் கடந்த கால அடையாளங்கள். வீழும்போதும் நாம் வாழ்ந்துதான் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

நம் சிந்தனையிலும் செயலிலும் மூர்க்கமான எண்ணங்களோ எழுத்தோ இருக்கக் கூடாது தினேஷ்.

உங்கள் வயதுக்குரிய துடிப்புக்கு நன்றி தினேஷ்.

சுந்தர்ஜி சொன்னது…

சிக்கெனப் பிடித்தேன் சிவபெருமானே!

உம்மை விட்டு நாம் நீங்குவதுமில்லை.

எம்மை விட்டு இனி நீர் விலகுவதுமில்லை.

நானும் நீயும் நாமானோம் என் அன்பு சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் பதில்கள் என்னை மிகவும் சந்தோஷப் படுத்துகின்றன ஹரணி.

பொறுப்பான ஒரு சகோதரனின் நிழலின் கீழ் பாதுகாப்பாய் உணருகிறேன்.

நாம் இணைந்து போகவிருக்கும் பாதையில் உங்கள் தமிழும் எழுத்தும் ஆற்றவிருக்கும் பணி முக்கியமானதாக இருக்கும் ஹரணி.

நீங்கள்தான் என் ஆத்மபலம்.

சுந்தர்ஜி சொன்னது…

பாரத் பாரதிக்கு பதிலில் சொல்லியிருக்கிறேன் பிரபாகரன்.

உங்களைப் போன்ற இளைஞர்களின் கைகோர்த்தலில்தான் நாம் நெடுதூரம் செல்ல இருக்கிறோம்.

உங்களைப் போன்ற அதிக பின்பற்றுபவர்களைக் கொண்ட வலைப்பூவினர் உதவினால் நாம் இன்னும் வேகமான நடையில் நம் மாற்றங்கள் குறித்துத் தீர்மானிக்கலாம்.

உதவுங்கள் பிரபாகர்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...