18.12.10

எது அரசியல்?-III


நாம் இனி மாற்று குறித்து சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

யாரின் பின்னும் இனிச்செல்லாது நாமே முன்னின்று அடிப்படையிலிருந்து எல்லாவற்றிலும் மாற்றத்தைத் தொடங்குவது மிக அத்தியாவசியம்.

எல்லாக் கட்சிகளும் அவரவர் பங்குக்கு அவரவர் ஆட்சிக்காலங்களிலோ அவரவர் ஆளும் மாநிலங்களிலோ பல வகையான வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

அடிப்படைக் கட்டமைப்பிலிருந்து தெளிவான சிந்தனையுடன் லாபநோக்கற்ற சுயநலமற்ற நெடுந்தூரப் பயணத்திற்கு நம்மைத் தயார் படுத்திக் கொள்வோம்.

மதம் மொழி ஜாதி இனம் இவையெல்லாம் நான்கு சுவர்களுக்குள் அடைபடட்டும்.

நம் கவனம் இனி திசைதிருப்பல்களூக்கு ஆட்படாது யார் பெரியவர் சிறியவர் என்ற அகங்காரம் தொலைத்து ஒரு பெரும் இயக்கத்துக்கான நம்பிக்கையுடன் இந்தச் சுடரைத் தமிழகத்திலிருந்து ஏற்றுவோம்.

பிற மாநிலங்களூக்கும் பின் இந்தியா முழுமைக்குமான வெளிச்சமாயும் விடியலாயும் இது சுடர் விடட்டும்.

முதலடி எடுத்து வைக்க முனைவோம். நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம். அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

காத்திருக்கிறேன்.

மேலே எழுதப் பட்ட கடிதம் கடந்த ஆறு மாதங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த சலனங்களின் வெளிப்பாடு.

இதை நேற்று எழுதி வலைப்பூக்களில் என் பார்வைக்குட்பட்ட சார்பற்றவர்களாய்த் தெரிந்த நண்பர்களுக்கு அனுப்பினேன். சிலரிடமிருந்து இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து உடனடி பதில் கிடைத்தது.

சிலரிடமிருந்து அழைப்புக்களும் சிலரிடமிருந்து வாழ்த்துக்களும் சிலரிடமிருந்து ஒப்புதல்களும் சிலரிடமிருந்து யோசிப்பதற்குக் கால அவகாசம் கோரியும் இருந்தன எதிர்வினைகள்.

சரி. இதற்கான தயக்கங்கள் என் இலக்கையோ முடிவையோ மாற்றப்போவதில்லை. என் எழுத்துக்கள் தொடர்ந்து என் எண்ணங்களைச் சொல்லும். இப்போது சில விளக்கங்களும் சில யோசனைகளும்.

உங்களுக்கு மிக உயர்வான ஒரு பொருள் நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடையில் விழுந்து விடுகிறது. அந்தப் பொருள் கண்ணெதிரே அவ்வளவு எளிதில் விட்டுவிடக்கூடிய ஒன்றல்ல. என்ன செய்வோம்?

அதே நிலையில்தான் நம் தேசம் சாக்கடைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறது. யார் எப்படிப் போனால் என்ன? நம் கதையைப் பார்த்துக் கொள்வோம் என்கிற சுயநலம் விஷ விருட்சம் போல் அடர்ந்து பரவ நாம் அனுமதித்துவிட்டோம்.

நம் தேசம் நம் உரிமை என்பதையெல்லாம் உதறி அதை வேறு யாருக்கோ கொடுத்துவிட்டு நடக்கும் அக்கிரமங்களையும் அநியாயங்களையும் தட்டிக் கேட்கத் திராணியின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லது முடிந்தால் கவிதையோ கட்டுரையோ கதையோ எழுதி முடித்துக் கொண்டு விடுகிறோம்.

இப்படியே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை முற்றிலும் பழுதடைந்து போன ஒரு கட்டமைப்புக்கு ஓட்டுப் போட்டுவிட்டு மாறுதல் வரும் என்று அதீதமாய் நம் பங்கு எதையும் கொடுக்காமல் தொலைக்காட்சியில் நடக்கும் விவாதங்களையும் செய்தித் தாட்களில் வரும் அக்கிரமங்களையும் நமக்குத் தெரிந்த வட்டத்துக்குள் விவாதித்துவிட்டு மாறுதலுக்காக காத்திருக்கிறோம்.

எதுவுமே யாருமே முயலாத போது மாறுதல் என்ன மந்திரவாதியின் கையிலிருந்து வரும் கிளியா?

நாம் முதல் அடி எடுத்துவைக்காத வரை இந்த அடர் வனம் திகைப்பூட்டுவதாய்த்தான் இருக்கும். இதற்குள் உயிரைக் குடிக்கும் கருநாகங்களும் இரைக்காகக் காத்திருக்கும் கொடும் விலங்குகளும் காத்திருக்கும் என்பது குறித்து எந்த சந்தேகமுமில்லை. அவற்றோடு பழகி அவற்றிற்கு நம்முடைய மொழியைப் புரியவைக்கமுடியும் என்ற அசையாத நம்பிக்கை இருக்கிறது. நிலத்திற்கேற்ப நீரின் இயல்பு. நிலம் மாறும் போது நீரும் மாறும். மாற்றுவோம்.

மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியின் வழிகாட்டல் நமக்கு பெரிய நம்பிக்கை.
தென் ஆப்பிரிக்காவில் ரயிலிலிருந்து தள்ளப்பட்ட பின் அவரின் பாதையில் மற்றொரு வீழ்ச்சி இல்லை. அசைக்கமுடியாத நம்பிக்கையும் செயலிலும் சிந்தனையிலும் தெளிவும் அவரை இன்னும் பல காலங்களுக்கு வழிகாட்டியாய் நிறுத்தும். உண்மை-நேர்மை-பிறரிடம் அன்பு-பொறுமை-சகிப்புத்தன்மை-சொல்லும் செயலும் ஒன்றென வாழ்தல் இவையெல்லாம் அவரின் ஆயுதங்கள். இவையே இன்றைக்கும் கேடுகளை வீழ்த்தப் போதுமான
ஆயுதங்களாக நமக்கும் கை கொடுக்கும்.

அடுத்து இந்த இயக்கத்துக்கான வழித்தடம் வலையின் மூலமாகவும் தொலைபேசியின் மூலமாகவும் தேவைப்படும் நேரங்களில் வீடியோ கான்ஃபெரன்ஸிங் மூலமாகவும் நம் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வோம். போன நூற்றாண்டுக்குக் கிடைக்காத அறிவியலை நம் விரைவான பரிவர்த்தனைக்கும் ஆலோசனைக்கும் பயன்படுத்திக்கொள்வோம். நாம் யாருக்கும் கேடு நினைக்காத போது நம் சிந்தனைக்குத் தேவையான ஆன்ம பலம் நமக்குக் கிட்டும். தெய்வத்தின் அல்லது இயற்கையின் துணை வழி நடத்தும்.

இன்று ஒரு தென்னை மரம் நட மண்ணைத் தேர்வு செய்து பண்படுத்தி கன்றை நட்டுப் பராமரிப்போம். இயல்பாய் அது வளர உரமிட்டு நீர் பாய்ச்சிப் பாதுகாப்போம். ஐந்து வருடங்கள் கழித்து அதன் முதல் இளநீரைப் பருகுவோம். தென்னைக்குக் காத்திருக்கும் நம்மால் தேசத்திற்குக் காத்திருத்தல் கூடாது போகுமோ?

நான் நாமாகக் காத்திருக்கிறேன்.

நிறைய மறுபடியும் எழுதுவேன்.

23 கருத்துகள்:

பாரத்... பாரதி... சொன்னது…

உண்மை தான். இன்றைய அரசியல் சூழல் என்பது இப்போது இந்த கட்சி சரியில்லை. அதனால் அந்த கட்சி என- எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளியை எடுத்து தலையில் சொறிந்துக்கொள்ளலாம் என்ற நிலையிலேயே உள்ளது.

பாரத்... பாரதி... சொன்னது…

//முதலடி எடுத்து வைக்க முனைவோம். நாட்டை நேசிப்பவர்களை இணைப்போம். அடுத்த தலைமுறைக்கான விடுதலைப் போராட்டமாக இது இருக்கட்டும்.

//

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

இதோ நான் வந்துட்டேன்னு குதிக்கிறேன்... என்னால் முடிந்தவரை ஒரு அணில் மாதிரியாவது உதவ தயார்... நான் காத்திருக்கிறேன்... எது முதலடி என்பது குறித்து நானும் யோசிக்கிறேன்... நாம் பேசும் வார்த்தை... எதாவது மாற்றத்தின் புன்னகையாய் இருக்கட்டும்.

அன்புடன்
ராகவன்

vasan சொன்னது…

சுந்த‌ர்ஜி, க‌ட‌ந்த‌ சில/ப‌ல‌ ப‌திவுக‌ளில் சுனை நீராய், நீருற்றாய், சிற்ற‌ருவியாய் இனித்து வ‌ழிந்த‌
க‌விதை, மெல்ல‌, மெல்ல‌ பொங்கி பிர‌வாகமாக மாறி வ‌ருவ‌தை உண‌ர்ந்து விய‌ந்து அவ‌தானித்துக் கொண்டிருந்தேன். ச‌ரியானது செய்ய‌ நாம் முனைவோம். ஒத்த ம‌னவோட்ட‌முள்ளவ‌ர‌கள், கருத்திற்கு முக்கிய‌ம‌ளித்து, த‌றுக்கு க‌ளைந்து, முத‌ல் க‌ல்லை எறிவோம். புதுச்சுட‌ர் ப‌ர‌வி எரிய‌. நீங்க‌ள் ரெடி. நானும் ரெடி.

சுந்தர்ஜி சொன்னது…

ஆஹா! எத்தனை பரவசம் எனக்குள்.
நான் நேரில் கூடப் பார்த்திராத சகோதரர்கள் தரும் ஆதரவு களிப்பூட்டுகிறது.

பாரத் பாரதி! நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

அய்யோ! சந்தோஷத்தில் இந்த அய்யோ!

நிச்சயம் மாற்றத்தின் வருகையை வடம் பிடித்துத் தேரில் அமர்த்திக் கொணருவோம் ராகவன்.

யோசித்து விவாதித்து ஒரு பொது வலைத்தளம் உருவாக்கி செயல்படுவோம்.

எந்தத் தகவல் பரிமாற்றமும் இல்லாத காலத்தில் நிகழ்ந்த அற்புதங்களை மறுபடியும் மீட்டெடுப்போம்.

ஒரு மணிக்குப் போட்ட இடுகைக்கு கென்யாவில் உட்கார்ந்தபடி ஒன்பதே நிமிடத்தில் இதோ இருக்கிறேன் என்று தோள் கொடுக்கும்போது எதுவும் முடியும் ராகவன்.

சுந்தர்ஜி சொன்னது…

வாங்க வாசன்! என்னாச்சு இத்தனை நாள் இடைவெளி? நலமாய் இருக்கிறீர்களா?

எரிதழலைத்தான் எதிர்பார்த்தபடி இருந்தேன். சுடச்சுட ரெடி என்று குரல் கொடுக்கும்போது வேறென்ன வேண்டும் வாசன்?

உங்களின் அனுபவமும் முதிர்ச்சியும் பெரிய அலவில் கைகொடுக்கும்.

உங்கள் மனதில் இருப்பதை சொல்லத் தொடங்குங்கள்.

ஒவ்வொரு துறையும் சிறக்க என்ன செய்யலாம் என்று அந்தந்தத் துறையின் மக்களை அழைத்து ஆலோசனைகள் கேட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்குவோம்.

ஒவ்வொரு செங்கல்லும் முக்கியம் புது மாளிகை எழுப்ப.

அப்பாதுரை சொன்னது…

தொடர்கிறேன். கொஞ்சம் குழப்பத்துடன்.
இலக்கு என்னவென்று தெரியாத குழப்பத்துடன்.

சுந்தர்ஜி சொன்னது…

என்ன அப்பாதுரை சார் அதுக்குள்ள அவசரப்படறீங்க?

நாம் இருக்கும் காலத்துக்கொவ்வாத எல்லாவிதமான ப்ரொடோகால் சமாச்சாரங்களையும் மாற்றுவதும்- கட்சி அரசியலிலிருந்தும் ஓட்டு அரசியலில் இருந்தும் விடுதலைக்கு முயல்வதும்தான்.

தொடர்ந்து கருத்துக்களை எழுதுவதுடன் எல்லோரிடமும் கலந்துதான் இதைச் சாதிக்க முடியும்.

நூறு கோடி சமாச்சாரம் சார்.

dineshkumar சொன்னது…

வணக்கம் ஜீ
நாங்கள் குதித்துவிட்டோம் சாக்கடையை தூர்வார துணிந்து http://thamizhththenral.blogspot.comஉங்களுடன் சேர்ந்து கலமிரங்கவும் தயார் நிலையில் நாங்கள்

Harani சொன்னது…

அனபுள்ள சுந்தர்ஜி...

தொடர்ந்து அரசியலின் மூன்று பதிவுகளையும் படித்து வருகிறேன். மிகுந்த சிந்தனைவயப் பட்டிருக்கிறேன். என்ன செய்வது என்பது குறித்து ஒரு தெளிவான அதேசமயம் பின்வாங்காத ஒரு செயலை தர்மத்தின் வழியில்தான் எடுக்கவேண்டும் என்கிற உறுதியுடனும் நான் இருக்கிறேன். சிலவற்றை வெளிப்படையாகப் பேசவேண்டிய தருணம் வந்துவிட்டது. இதில் நான் வெட்கப்படவும் இல்லை. சிறு வயது முதலே எங்கேனும் ஒரு சண்டையைப் பார்த்தால்கூட நமக்கேன் வம்பு என்று வளர்த்துவிட்ட சூழலில் வளர்ந்தவன்நான். அது நான் பெரியவனாகி இன்றுவரையிலும் தொடர்கிறது. மனசு கொப்பளிக்கிறது சமூகத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் பார்க்கிறபோது. மனிதனுக்குரிய தகுதியும் அரசியல்வாதிக்குரிய தகுதியும் ஒருதுளியும் இல்லாதவர்கள்தான் இன்றைக்கு அரசியலிலும் அதிகாரத்திலும் பெருச்சாளிகளாய் உலவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களையும் இவர்களின் ஊழல்களையும் ஒரு காசோய்க்கிருமிகளைத் தீயிட்டுக் கொளுத்துவதுபோல எரித்து இந்த தேசத்தை சுத்தப்படுத்தத்தான் வேண்டும். அதுவும் உலகின் மிகப்பெரும் சக்தியான அகிம்சை வழியில் சத்திய வழியில் இது நிச்சயம் சாத்தியமே. ஆனாலும் என்னை நம்பி குடும்பம் என்கிற அமைப்பிருக்கிறது. அதற்கு நான் முதலிலி சரியானவனாக இருக்கவேண்டும். இருந்து வருகிறேன் இன்றுவரை. இது முக்கியம். இருப்பினும் பாரதியைப் போல நமது எழுத்துக்களையே இந்தத் தேசத்தைத் துர்ய்மைப்படுத்துகிற காரியத்தைச் செய்யமுடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எனவேதான் என்னுடைய கவிதைகளையும் சிறுகதைகளையும் வேறு வடிவத்திற்கும் வலுவான எதிர்விளைகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக மாற்றுவதற்கு வெகுவாக சிந்தனை கொண்டிருக்கிறேன். உங்களுடைய சிந்தனைகள் என்னை நிரம்பவும் பாதிக்கின்றன. நிச்சயமாக ஒன்று உறுதி கூறுவேன். சத்தியத்தின் வழியில் நீங்கள் நினைப்பதற்கு நிச்சயம் நான் கைவிலகாத துணையாக நிற்பேன். இன்னும் யோசிக்கிறேன் சரியான இலக்கிற்காக. தொடர்கிறேன்.

dineshkumar சொன்னது…

பாட்டு ஒன்று கேக்குதையா
பழந்தமிழர் எங்கு சென்றார்
பணத்தாசை கொன்றதுவோ
மனம் கொன்று சென்று விட்டார்
துடியாய் துடிக்குதையா
தூயவனம் காத்திடவே
தூசு தட்டி ஏற்றிடுவோம்
தூயவளின் ஒளிவிலக்கை
திரியாக நானுமிங்கு
தீ கொணர்ந்து ஏற்றுமையா
காத்திருக்கேன் ............

சிவகுமாரன் சொன்னது…

நான் எந்த கட்சியையும் சாராதவன்.எல்லா ஓட்டுப் பொறுக்கிகளின் மீதும் வெறுப்பாய் இருப்பவன். ஏதும் செய்ய இயலாத கையாலாகாதவனாய் இருப்பதை எண்ணி என்னையும் ஏன் என் கவிதைகளையும் வெறுப்பவன். தேடிக் கொண்டிருப்பது கிடைக்கப் போவதாய் ஒரு வெளிச்சம் உங்கள் எழுத்துக்களில் .

ரிஷபன் சொன்னது…

என்ன செய்யப் போகிறோம்?

G.M Balasubramaniam சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,என்னென்னவோ செய்ய வேண்டும் என்று எண்ணிய பொழுதெல்லாம், எதையும் செய்ய விடாமல் எதேதோ தடுத்தது.சூழ்நிலைக்கைதிகளாய் நடக்கும் அவலங்களுக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கக்கூடத் திராணியற்ற நிலைமையில் நான் இருந்த நிலையில்,என்னைப்போல் இருப்பவர்களும் ஏராளமாகத்தான் இருக்கவெண்டும்.உள்ளத்தின் ஒரு மூலையில் புகைந்து கொண்டிருக்கும் உளைச்சல்களைப் பகிர்ந்து கொள்ளவே எழுதுகிறேன்.சமுதாய மாற்றத்தைக் கொண்டுவரும்போது கூடவே சுய மாற்றமும் அத்தியாவசியம்.சாதி மத இன உணர்வுகளின் மேல் ஏறி அட்டகாசமாக சவாரி செய்பவர்களைத் தோற்கடிக்கநம்மிடமும் மன மாற்றம் தேவை.மந்தை குணம் அகல வேண்டும்.சிறியதாய் துவங்கிப் பெரிதாய் வெடிக்கும் நேரமும் காலமும் வரவேண்டும்,என்று காத்திருப்பதைவிட அந்நேரத்தையும் காலத்தையும் கொணர்தல் அவசியம்.அரசியல் சாக்கடையைத் தூர் வாருபவர் யார்.?நம்மில் பெரும்பாலோரே சாக்கடையின் காரணாம்,சாக்கடையை நிரப்புபவர்கள் .நாம் நல்லவர்களாக இருக்க முதல் முயற்சி வேண்டும்.நம்மில் உள்ளகுறையை உணர உண்மை உள்ளம் வேண்டும்.நம் தலைமுறையில் முதலில் நாம் திருந்துவோம்.அடுத்த தலைமுறையை அழகாக வளர்ப்போம்.முயன்றுவிட்டீர்கள். வெற்றி கிட்டும்.வாழ்க, வளர்க.

சுந்தர்ஜி சொன்னது…

ஹோ! நன்றி தினேஷ்குமார்.உத்வேகமான உங்கள் வரிகளில் எத்த்னை நம்பிக்கை எத்தனை உற்சாகம்!

நிச்சயம் பழையன கழித்துப் புதியன கொணர்வோம்.

உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் நம்மை உறுதியுடன் மு நகர்த்தும்.

சுந்தர்ஜி சொன்னது…

ஹரணி!எத்தனை அழகான வார்த்தைகளில் என் எண்ணத்தோடு ஒத்திருக்கிறது உங்களின் எண்ணமும்!

எந்த விடுதலைக்கும் அல்லது மாற்றத்துக்கும் வன்முறையோ முன்யோசனை இல்லாத செயல்முறையோ தீர்வாகாது.

இன்றைக்கு நாம் யோசிக்கும் மாற்றங்களைச் செயல்வடிவம் கொடுக்கும் முன் கூட்டான ஒத்த சிந்தனையோடுதான் இதைச் செய்யப் போகிறோம்.அஹிம்சைதான் ஒரே ஆயுதம்.சுதந்திரத்துக்குப் பின் எத்தனை வகையான ஆட்சியையும் தலைவர்களையும் பார்த்திருக்கிறோம் ஹரணி.அவர்களிடம் நாம் அனுபவித்ததை விட மோசமான தண்டனையாக இந்த அறப் போராட்டம் இருக்காது என்பதும் கண்கூடாகத் தெரிகிறது.

தொடர்ந்து எழுதிக்கொண்டும் ஒரே திசையில் யோசித்தும் பொதுக் கருத்து உருவாக்குவோம்.

இன்று நூறு பேர் ஒருவருடத்துக்குள் ஆயிரங்களில் மாறத் தொடர்ந்து நான் எழுத இருக்கும் பதிவுகள் பதில் கூறும்.

உங்களின் தார்மீகமான துணை என்றும் என்வசம் இருக்கும் ஹரணி. நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

என் கண்கள் கலங்குகின்றன சிவா.இப்படி எத்தனை மக்கள் ஏங்கிகொண்டிருக்கிறார்கள் தெரியுமா?தெளிவான சிந்தனையும் பொறுப்பான தளத்தில் இருக்கும் உங்களுக்கே இத்தனை அதிருப்தியும் நாட்டின் போக்கில் வருத்தமும் இருக்கும்போது யோசிக்கத் தெரியாது சொன்னதைச் செய்வதன்று வாழ வழியற்றுத் தவிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு நிச்சயம் மாற்ரத்தை ஏற்படுத்துவோம் சிவா.

உங்களின் ஆதரவை ஒருபோதும் கைவிடமாட்டேன் சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

என்ன ரிஷபன் நானா சொல்லணும் நாமென்ன செய்யப் போகிறோம்னு?

நீங்களெல்லாம் என் ஆத்ம பலம்.நான் சொல்வதைத் தொடர்ந்து வாசியுங்கள். திருத்துங்கள். நாம் சேர்ந்த்து இழுக்கப்போகும் வடமிது.

மலைப்பாகத்தான் இருக்கும்.நம்பிக்கை வையுங்கள். மாற்றுவோம்.

சுந்தர்ஜி சொன்னது…

அற்புதம் பாலு சார்.

தனி மனிதன் ஒழுக்கம் பற்றித்தான் இன்று எழுதிக் கொண்டிருக்கிறேன்.தனி மனிதனின் அக்கறையின்மைதான் இத்தனை அழுக்குகளுக்கும் காரணம்.சொல்லைப் போல செயலும் இருக்கும் மாற்றத்தை முதலில் கொண்டுவருவோம்.

இந்தச் சிந்தனையை ஒரு இயக்கமாக மெதுவாய் மாற்றுவோம்.

தொடர்ந்து ஆலோசனை தாருங்கள்.

மாற்றத்தை ஏற்படுத்துவோம்.

பாரத்... பாரதி... சொன்னது…

//நான் எந்த கட்சியையும் சாராதவன்.எல்லா ஓட்டுப் பொறுக்கிகளின் மீதும் வெறுப்பாய் இருப்பவன். ஏதும் செய்ய இயலாத கையாலாகாதவனாய் இருப்பதை எண்ணி என்னையும் ஏன் என் கவிதைகளையும் வெறுப்பவன். தேடிக் கொண்டிருப்பது கிடைக்கப் போவதாய் ஒரு வெளிச்சம் உங்கள் எழுத்துக்களில் .//

senthil சொன்னது…

Dear sundar ji,

Today only i read your blogs. Fine. As you say, yes! we need change.

Note : How can i write comments in Tamil

- Senthil Kumar

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி செந்தில்.

கூகிளில் NHM WRITER free downloadனு தேடுங்க.

அதை சேவ் பண்ணிட்டு அதுலயே கீபேட் மாதிரியும் இருக்கும்.அது மூலமா பொறுமையா தட்டிக்கிட்டே இருந்தீங்கன்னா அடுத்த தடவை உங்க பெயரை senthil னு எழுதாம செந்தில்னே எழுதிடமுடியும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...