எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
1977ல் எனக்குப் பன்னிரண்டு வயது. இந்திரா தோற்றது நள்ளிரவில் செய்தியாக வெளியாகிறது. பகலிரவாக செய்திகள் ஆகாசவாணியில் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.
ஒரு கோமாளியை நினைவுபடுத்தும்-உ.பி.யைத் தவிர இந்தியாவில் யாருக்கும் அறிமுகம் இல்லாத ராஜ்நாராயண் இந்திராவைப் படுதோல்வி அடையச் செய்த நிமிடத்தை அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொண்டது இந்தியா. அந்த முடிவு உடனே வெளியிடப்படவில்லை.
அன்றைக்கு ஆகாசவாணியைத் தவிர அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு எதுவுமில்லை. எமெர்ஜென்ஸியின் மிச்சமாக செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டன. பத்திரிகைகள் தணிக்கை செய்யப் பட்டு வெளிவந்தன. ராம்நாத் கோயங்கா-கரஞ்சியா-குல்தீப் நய்யார்-சோ போன்ற சிலரே மக்களின் குரலைப் பிரதிபலித்தார்கள். மற்றெல்லோரும் பின் சென்றனர்.
முழுமையாய் காங்கிரஸ் தோற்று ஜனதா அமோகமாய் வெற்றி பெற்று ஜெயப்ரகாஷ்நாராயணன் கிருபளானி ஆகியோரின் வழிகாட்டுதலில் மோரார்ஜி தேசாய் தலைமையில் அடல் பீஹாரி வாஜ்பாய்- ஹெ.என்.பகுகுணா- ஜெகஜீவன்ராம்- சரண்சிங்-மது லிமாயி-மது தண்டவதே- ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் போன்ற எளிய பின்னணி கொண்ட இந்திராவின் அடக்குமுறைக்கு ஆளான தலைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியமைக்கிறார்கள்.
சர்வாதிகாரத்தையும் படாடோபத்தையும் கண்டு சலித்த மக்களுக்கு இந்தத் தலைவர்களின் எளிய அணுகுமுறையும் மக்களுக்கு நெருங்கிய முடிவுகளை அதனதன் மதிப்பீட்டில் தீர்மானித்த வேகம் எல்லாம் புதுமையாக இருக்கிறது. ஆட்சியில் இருந்த குறுகிய நாட்களில் ரேஷன் முறையை ஒழித்து வெளிச்சந்தையில் உணவுப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தார்கள்.ஒவ்வொரு சாதாரண மக்களிடமும் நாட்டுக்கு மறுமுறை சுதந்திரம் கிடைத்ததான சந்தோஷம் கரைபுரள்கிறது.
நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து போனது. அத்தியாவசியமான சேவைகள் முறையாக நடைபெறவில்லை. குற்றங்களின் எண்ணிக்கை கட்டுங்கடங்காது போயிற்று என்று தான்தோன்றித் தனமான முதிர்ச்சியற்ற சரியான வழிகாட்டுதலற்ற ஒரு முடிவை எடுத்து அவசர நிலைச் சட்டத்தைப் பிரகடனப் படுத்தி எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களையும் விசாரணையின்றி சிறையிலடைத்து இருபது அம்சத் திட்டம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத்தனமான மிகவும் பொருந்தாத திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தார்.
ஜனார்த்தன் பூஜாரி நிதிமந்திரியாய் காங்கிரஸ்காரர்களுக்கெல்லாம் வங்கிகள் உடனடிக் கடன் கேள்விகள் ஏதுமின்றிக் கொடுக்க லோன் மேளாக்களால் உதவினார். இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உழுதுகொண்டிருந்த விவசாயிகளை செயற்கை உர உபயோகத்துக்கு மாற ஊக்குவித்ததைப் பசுமைப் புரட்சி என்றும் பால் உற்பத்தியில் குஜராத்தை ஈயடிச்சான் காப்பியடித்து அமுல் பாணியில் எல்லா மாநிலங்களிலும் வெண்மைப் புரட்சிக்கு முயன்றதும் இன்றைய சீரழிவின் துவக்கங்கள். நீர் ஆதாரங்கள் குறித்தும் அவற்றை எப்படி அடுத்த பல தலைமுறைகளுக்கு உபயோகமாகப் பயன்படுத்துவது பற்றியும் திட்டமிடவில்லை. பல பகுதிகளில் வெள்ளச் சாவுகளும் பல பகுதிகளில் வறட்சியால் சாவுகளும்- வெந்ததைத் தின்று விதிவந்தால் செத்த படி.
பஞ்சாபில் லோங்கோவாலை சமாளிக்க பிந்தரன்வாலேயை ஊக்குவித்ததும், என்ன செய்கிறோம் என்று தெரியாது ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற முரட்டு நடவடிக்கையால் சீக்கியர்களின் மதநம்பிக்கைகளுக்கு எதிர்திசையில் நின்றதையும், அதே பிந்தரன்வாலே இந்திராவுக்கெதிராய்த் திரும்பியதையும் காலம் கவனித்துக் கொண்டிருந்தது.
மக்களின் சம்மதமில்லாத போதே கட்டாயப்படுத்தி குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் ஏராளமான ஆண்களுக்கு வாஸெக்டமி செய்து சாதனை படைக்க அவரின் அருமந்த புத்திரன் சஞ்சய் முன்னிலை வகித்தார். இந்திராவின் மற்றொரு மகன் ராஜீவ் சோனியாவைக் காதலித்தபடி விமானம் ஓட்டிக்கொண்டிருந்தார்.
இங்கே தமிழ்நாட்டில் இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்ற வசனத்தைக் கிளிப்பிள்ளை போல் உளறிக்கொண்டிருந்த தி.மு.க. ஆட்சி ஊழலைக்காரணம் காட்டி 356பிரிவின் படிக் கலைக்கப்பட்டது. எமெர்ஜென்ஸியின் போது தி.மு.க.வுக்கு எதிரான அத்துமீறலகளுக்கு மதுரைக்கு வந்த இந்திரா மீது கொலைவெறித் தாக்குதலில் தி.மு.க.வினர் ஈடுபட்டபோது பழ.நெடுமாறன், சித்தன் போன்றோரால் ரத்தம் சிந்திக் காப்பாற்றப் பட்டார். மறுபடியும் அரசியலின் கூச்சங்கள் ஏதுமின்றி நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக ப்ளீஸ் என்று கெஞ்ச இந்திராவும் தன் மீது ஏவப்பட்ட தாக்குதலையும் ஊழலாட்சி என்ற மத்திய ஆட்சியில் தன்னால் பரிந்துரைக்கப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டதையும் மறந்து ஆயிரம் நாட்களுக்குள் அதே தி.மு.க.வுடன் கூட்டுச் சேரத் தயாரானதும் மக்களைக் கடைந்தெடுத்த மடையர்களாக நினைத்ததன்றி வேறென்ன? பாவம் நெடுமாறனும் சித்தனும்.
சொல்லித் தீரவில்லை. சொல்வேன் இன்னும்.
16 கருத்துகள்:
நல்ல துவக்கம்.தொடர்ந்து எழுதுங்கள்.
கடந்த காலத்தை ஒரு முறை திரும்பிப் பார்க்கும் அனுபவம். ரேஷன் பொருட்கள் எல்லாம் சுலபமாய்க் கிடைத்து.. தங்கம் கூட மலிவாய்.. அப்போது. நம் நாட்டில் இரு வித அனுபவங்கள் எப்போதும். ‘இப்படிக்கூட ஆட்சி செய்யலாம்’ என்றும் ‘எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யலாம்’ என்றும். இவ்வித இரு முரண்களுக்கு இடையே தான் இந்தியா எப்போதும்.. மன்னராட்சியிலும் மக்களாட்சியிலும்.
சொல்லி முடிவதில்லை
துயரத்தின் கதை.
பேச்சைக் குறைப்பீர்,பெருக்குவீர் உற்பத்தியை என்று கட்டாய வாசகம் அந்தக்காலத்தில் எங்கு பார்த்தாலும் தென்படும்.பின்னாட்களில் தான் தெரிந்தது அது மறைமுக வாய்ப்பூட்டுச்சட்டம் என்று.
திமுகவில் ஊருக்கு ஒரு 'மிசா' தியாகி இருப்பார்கள்.
அவர்கள் எல்லாம் எப்போதோ அடைமொழியை அழித்துவிட்டார்கள்.
யாரைத் தான் நம்புவதோ பேதை உள்ளம்!
அரசியலின் ஊழல் களமும், காட்சிகளும் இன்றும் மாறாமல் தொடர்கிறது..
நாயகர்களும்,பார்வையாளர்களும் மாறிவிட்டனர்.
சொல்லித் தீராது. தீரும் வரை சொல்லித்தான் ஆக வேண்டும் காஷ்யபன் அய்யாவின் பதிவைப் படிப்பது போல் உள்ளது, உங்கள் பதிவு. வேறன்ன சொல்ல?
வாருங்கள் சுந்தர் ஜி!அவசரநிலைக்காலத்தில் ஜொதிபாசுவையும்,இ.எம்.எஸ் அவர்களையும் தவிர மற்றவர்களை பிடிதுப் போட்டார்.கேரளத்து ராஜன்,தமிழகத்தில் சீராளன்,வங்கத்து கம்யூனிஸ்டுகள் என்று கோன்று குவித்தார். பத்திரிகைகள் எழுதாது.நம் போன்றவர்கள் தான் எழுத வேண்டு ம்.எழுதுங்கள்---காஸ்யபன்
நன்றி சைக்கிள்.
அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து எழுதுவேன்.
எதிர்காலத்தைப் பார்க்கிறேன் நான் ரிஷபன்.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் மாற்றங்கள் தென்படுகின்றன ரிஷபன்.
நிச்சயம் அது புது வர்ணங்களோடும் வாசங்களோடும் மலரும்.
சொல்லாமல் துவங்குவதில்லை புதிய அத்தியாயம்.
அப்படித்தானே மது?
நம் விடலைப் பருவத்தின் அரசியல் கசப்பு இன்னும் கசக்கிறது நினைத்தவுடன்.
மிசாவெல்லாம் சாமியாகிவிட்டார்கள்.
பகிர்வுக்கு நன்றி காமராஜ்.
உண்மையை நம்புவோம்.
உண்மைக்காகக் காத்திருப்போம் ராமமூர்த்தி ஸார்.
மாறுதலை நாம்தான் ஏற்பௌத்தப் போகிறோம் திருநாவுக்கரசு.
வரும் தலைமுறை அதைக் கொண்டாடும்.
ஐய்ய்யோ சிவா.
காஸ்யபன் சாரெங்கே? நானெங்கே?
அவரின் அனுபவத்திலும் முதிர்ச்சியிலும் வெகு தொலைவில் இருக்கிறேன் நான்.
ஆனால் தீரும் வரை சொல்லுவேன்.அதில் மாற்றமில்லை.
நீங்கள் செல்லும் பாதையில் நான் பின்தொடருவேன் காஸ்யபன் ஸார்.
மாறுதல் ஏற்படுத்துவோம். எழுத்துக்களின் முயற்சியால்.
எண்ணங்களின் முயற்சியால்.
கருத்துரையிடுக