23.12.10

சித்தர்கள் யார்?


தமிழின் பழைமைக்கு ஈடாக சொல்லக் கூடிய ஒரு விஷயம் இருக்குமானால் சித்தர்களின் இருப்பைச் சொல்லலாம். இவர்களின் தொன்மை நமது கலாச்சாரம், நம் தத்துவ விசாரம் குறித்த அறிவு, மருத்துவத் துறையில் மேதைமை, பல புதிய ஆராய்ச்சிகள் ஆகியவற்றோடு தொடர்புள்ளதாகவும் இருக்கிறது.

அவர்களின் இருப்பு, கடவுள் குறித்த தத்துவங்களையும், நமக்கு அருகிலேயே இருக்கும் மூலிகைகளைக் கொண்டு எத்தனையோ வியாதிகளைக் குணப்படுத்தக் கூடிய மருத்துவ முறைகளைப் பற்றியும் ரசவாதம் எனப்படுகிற இரும்பைத் தங்கமாக மாற்றும் ஆராய்ச்சிகளையும், வெளிப்படையான தன்மை குறித்தும் தொடர்புடையதாக இருக்கிறது.

வழக்கமான வாழ்க்கைமுறையைத் துறந்து தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும் உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது.

இந்து மத சன்யாசிகளைப் போல் தோற்றம் தரப்பட்டாலும் இஸ்லாமிய சூஃபித் தத்துவங்களின் நிழலும் சமண புத்த மதத் தாக்கங்களும் இவர்களின் கருத்துக்களில் தெரிகிறது.

இன்னும் சொல்லப்போனால் சித்தர்களில் மிகவும் பிரபலமான போகர் சீனாவைச் சேர்ந்தவர் என்ற ஆராய்ச்சிக்குட்பட்ட கருத்தும் உண்டு.

சித்தர்களின் இடைவிடாத ஆராயும் மனம் பல நாட்டின் அறிவுஜீவிகளுக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைமுறையாகவும் நம் நாட்டு மக்களுக்கு அபோரிஜின்ஸ் என்று ஒதுக்கக் கூடிய காட்டுமிராண்டி வாழ்க்கை முறையாகவும் தெரிவதில் வியப்பில்லை.

இன்றும் சித்த வைத்தியம் என்றவுடன் பழனி காளிமுத்து என்கிற டாக்டரை மையப்படுத்திய ஜோக்குகளுடன் ஒவ்வொரு ஊரிலும் எந்தெந்த லாட்ஜ்களில் அவர் தங்குகிறார் என்பதும் விடாமல் எப்படி இவர் ஊர் ஊராகச் சுற்றுகிறார் என்றும் கவலைப் படுவதுடனும் நம் சித்த வைத்திய ஆராய்ச்சி முடிவுறுகிறது.

இந்தச் சித்தர்களின் கருத்துக்களின் தாக்கம் ஹிப்பி இயக்கங்களிலும் தென்பட்டது. சித்தர்களுக்கு மரணமில்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் வாழ்வது சாத்தியம் என்றும் அவர்களின் ஆராய்ச்சியில் குறிப்பிடுகிறார்கள்.

சித்தர்களின் கடும் உழைப்பால் கிடைத்த வாத வித்தையே இன்று பலவித
அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருக்கிறது. உலோகங்கள்,
பாஷாணங்கள், உப்பு, வேர்கள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை,கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவற்றின் குணங்களை இவர்கள்தான் முதன் முதலில் வெளியே சொன்னவர்கள்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் பல கடினமான ஆராய்ச்சிகளையும் ”இதென்ன பெரீய்ய ஜுஜ்ஜுபி” என்று சவடால் விடாமல்
ஜஸ்ட் லைக் தேட் சாதித்திருக்கிறார்கள். என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

திருமூலர், போகர், கருவூரார், புலிப்பாணிச் சித்தர், கொங்கணர், அகப்பேய்ச் சித்தர், சட்டைமுனி சித்தர், சுந்தரானந்தர், அகத்தியர், தேரையர் சித்தர், கோரக்கர், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர், உரோமமுனி, காகபுசுண்டர், இடைக்காட்டுச் சித்தர், குதம்பைச் சித்தர், பதஞ்சலி முனிவர் இப்பிடி ஒரு பதினெட்டுப் பேரும் ஒரு கலக்குக் கலக்கியிருக்காங்க.

”பால் மாறினா மாறிக்கோ. ஒழுக்கம் மட்டும் மாறக்கூடாதுபா” என்கிறார்கள் சித்தர்கள். சொன்னா நம்பமாட்டீங்க. பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் இதெல்லாம் மட்டும் வுட்டுட்டீங்கன்னா ரொம்ப நாளைக்கி வாழ முடியும். யோகப் பயிற்சி அதுக்கு உதவும்னும் சித்தர்கள் பல பாடல்கள் மூலமாச் சொல்லியிருக்காங்க.

இவர்கள் தமிழுக்கும் தமிழ்ச் சிந்தனை மரபிற்கும் கிடைத்த..... என்ன சொல்லலாம்... ம் பெருங்கொடை. இவங்க தமிழ் ஆர்வமும் மெய்யறிவு தேடியலஞ்ச பயணமும் இன்னிக்கும் புதுசாவும் செறிவாவும் அதோட சிலிர்க்கவும் செய்யுதுங்கோ.

இவர்கள் பாடல்களின் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு தன்மையையும், பாடலில் இவர்கள் கையாண்ட பல்வேறு சமாச்சாரங்களையும் நீங்கள் இப்போதே கொட்டாவி விடுவதால் மற்றுமொரு பதிவில்.

18 கருத்துகள்:

dineshkumar சொன்னது…

அண்ணா சித்தர்களை பற்றிய தகவல்கள் மறைந்து புதைந்து கிடைக்கிறது அறியாதகவல்கள் ஆயிரம்கோடி அறிந்தவரும் அவரோடு மறைந்து போகும் எண்ணம் நம்மிடையே..........

தங்கள் எழுத்துக்களில் சித்தர்களை தேடும் தமிழ்பித்தனாக காத்திருக்கேன்

ரிஷபன் சொன்னது…

//என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.//

நமது பல அற்புதங்கள் அறியப்படாமலே போய் விட்டன.
சில சமயங்களில் கேள்விகள் உண்மைக்கு வெளியே நம்மைத் துரத்தி விடுகின்றன. அப்படியே ஏற்கும் குணம் வாய்த்தால் சில முன்னேற்றங்கள் சாத்தியமாகியிருக்கக் கூடும்.

காமராஜ் சொன்னது…

//வழக்கமான வாழ்க்கைமுறையைத் துறந்து தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும் உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது.//

அன்பின் சுந்தர்ஜி.என்ன அருமையான பதிவு இது. சென்ற வாரம் நீயா நானா வில் சித்த மருத்துவ மேதை மருத்துவர்.தெய்வநாயகம் அவர்களின் உறை கேட்டேன்.3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மருத்துவம் வெறும் முந்நூறு வருட பகட்டுக்குப்பலியாகிப்போவது எவ்வளவு பெரிய்ய கேவலம்.

என் மனைவிக்கு ஒரு மாதம் காய்ச்சல் விடவில்லை.பரிச்சோதனை செய்தவண்ணமே தொடர்ந்தார்கள் பயந்து போய் ஹோமியோ மருத்துவரை அனுகினேன்.ஒரே நாள் மருந்து எழுந்து நடமாட வைத்துவிட்டது.

நாம் பகட்டுக்கு அடிமையாகி நெடுங்காலம் ஆகிவிட்டது.சித்தர்கள் சாமியார் மாதிரி,பிச்சைக்காரர்கள் மாதிரித்தோற்றமளிப்பதால் நாம் நம்ப மறுக்கிறோம்.இழப்பு நமக்குத்தானே ?

நிறைய்ய எழுதுங்கள்....ஆர்வமாக இருக்கிறேன்.

G.M Balasubramaniam சொன்னது…

சித்தர்களைப்பற்றி நான் அதிகம் தெரிந்தவனல்ல. உங்கள் பதிவைப் படித்து தெரிந்து கொள்கிறேன்.

பத்மா சொன்னது…

waiting for more

Harani சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...

சிந்தை தெளிந்தவன் சித்தன். பல அரிய உண்மைகளை உலகிற்கு தங்களின் பாடல்களின் மூலம் அறிவித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் பேசாத தத்துவம் இல்லை. கூறாத மருத்துவம் இல்லை. வெளிப்படுத்தாத அறிவியல் உண்மையும் இல்லை. எல்லாம் தெரிந்தவர்கள் அதனால் தெளிந்தவர்கள். வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் உரசிப் பார்த்தவர்கள். அதனால் பரதேசியாய் வாழ்ந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். பல மாய சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தினார்கள். அதனாலேயே பிறவா யாக்கை பெரியோனாகிய சிவனே பெரிய சித்தன். அதனாலே அவன் சத்து சித்து ஆனந்தனாக (சச்சிதானந்தன்) இருப்பவன். மன்னர்களும் அரச வாழ்வைத் துறந்த சித்தர்களாகிய வரலாறு உண்டு. மன்னர்களை துச்சமாக மதித்த சித்தர்களும் உண்டு. நிறைய எழுதலாம் சித்தர்கள் பற்றி. உங்கள் பதிவு அருமை சுந்தர்ஜி. எழுதுங்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி தினேஷ் குமார்.தொடர்ந்து எழுதுவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

தேவையற்ற இடங்களில் நம் சந்தேகங்களும் தேவையான இடங்களில் அவநம்பிக்கையும் நம் பயணத்தை இலக்கை அடையமுடியாமல் தடுத்துவிடுகின்றன ரிஷபன்.

சித்தர்கள் விஷயமும் அப்படித்தான்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் தொடர் வாசிப்பு எனக்கு தெம்பளிக்கிறது காமராஜ்.

நம் பெருமையை நாம் என்றோ புதைத்துவிட்டோம்.

இப்படி ஒரு மிக நீண்ட சரித்திரமும் அனுபவமும் வேறெந்த நாட்டுக்கும் கிடையாது.

உலகின் மூத்த குடி நாம்.இன்று?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி பாலு சார். நீங்கள் வாசிப்பது எனக்குப் பெருமை.

சுந்தர்ஜி சொன்னது…

எழுதுவேன் பத்மா.

சுந்தர்ஜி சொன்னது…

என் பதிவைத் தூக்கிச் சாப்பிட்டுவிட்டது உங்கள் பின்னூட்டம் ஹரணி.

நீங்கள் வாசிப்பது என் பேரானந்தம்.

kashyapan சொன்னது…

தெய்வநாயகம் மருத்துவமனை தாம்பரத்தில் இருக்கிறது. பாதரசத்தை மூலிகையோடு சேர்த்து மருந்தாக்கினார். அது பரிசோதனைக்காக வெளிநாடு அனுப்பப் பட்டது.ஆரய்ச்சியாளர்கள் அதில் பாதரசம் கலக்கப்படவில்லை என்று சத்தியம் செய்தார்கள்..பாதரசத்தின் உலோகத்தன்மையை மூலிகை மாற்றிவிட்டது.திருமங்கலம்-மதுரை அருகில் மெட்டல் பவுடர் கம்பெனி உள்ளது. த ங்கத்தை பொடியாக்கி தருகிறார்கள்.. நண்பர் மகளின் ஆராய்ச்சிகாக வாங்கியிருக்கிறேன். விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம்.வெள்ளியை நூலாக இழக்கும் வித்தை தெரிந்த குடும்பம் சூரத்தில் இருக்கிறது. இதற்கான ஆரய்ச்சி ஹைதிராபாத்தில் ந்டந்துவருகிறது. .இவற்றை ஒருங்கிணத்து செய்ய ஏற்பாடு இல்லை.தென் அமேரிக்க பழங்க்குடிகளை எமாற்றி மூலிகைகள் பற்றி விபரங்களைச் சேகரிக்க கொடிக்கணக்கில் செலவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து பெற்று அவர்களிடமே மருந்து விற்கப் போகிறார்கள்---காஸ்யபன்

vasan சொன்னது…

நம்மின் திற‌ம் அறியா தற்குறிக‌ள் நாம். கேட்டால், அனும‌ருக்கே அவர் ப‌ல‌ம் அடுத்த‌வ‌ர் சொல்லித்தான் தெரியுமாம் என்ற‌ ப‌ழைய‌ பல்ல‌வி.

சுந்தர்ஜி சொன்னது…

அருமையான தகவல்கள் காஸ்யபன் சார்.என்றைக்கு நம் பலம் உணர்வோமோ தெரியவில்லை.சுற்றியிருப்பவர்கள் நம்மைச் சுற்றி வந்து இன்னும் மிஞ்சியிருப்பதையும் கோட்டை விடப் போகிறோம்.

சுந்தர்ஜி சொன்னது…

அதேதான் வாசன்.

சொல்லிப் புலம்ப இந்த ஒரு வாயும் ஒரு வாழ்க்கையும் போதாதுன்னு நினைக்கிறேன்.

Matangi Mawley சொன்னது…

T.N. Ganapathy avargal ezhuthiya siththar varalaaru sila puththagangalai rasiththu padiththirukkum en appa thangaludaiya intha post-ai neengal ezhuthiyirukkum ovvoru variyaiyum aamothiththu rasiththaar.

thangaludaiya mozhi aalumaiyum miga appropriate-aaka irukkirathu. ithu oru very good series aaka irukku endru ethirpaarkkiren...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.//
very true.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...