ஒரு யுத்தம்
துவங்கும்போதே
வெளிப்பட்டு விடுகிறது
அதற்கான காரணங்கள்.
சில சமயங்களில்
பயிற்சியை
நினைவுபடுத்திக்கொள்ளவும்-
சில சமயங்களில்
தன்னை நிறுவிக்கொள்ளவும்-
வேறு சில பொழுதுகளில்
வேறு சிலருக்காகவும்-
பல நேரங்களில்
எந்தக் காரணமின்றியும்.
பாதங்களை நகர்த்துதலிலும்
பதுங்கி விலகுதலிலும்
வீச்சின் லாவகத்திலும்
உக்கிரமாக வரையப்படும்
ஓவியத்தின் வர்ணங்கள்
அத்தனை களிப்பூட்டுவதாய்
இல்லாவிட்டாலும்
யுத்தங்களுக்கான
காரணங்களைத் தேடி
உறைகளில் புழுங்கியபடி
நாட்களைக் கழிக்கின்றன
பளபளக்கும் உடைவாட்கள்.
6 கருத்துகள்:
padam,superb.....sundarji.
படமும் கவிதையும் ஒன்றுக்கொன்று ஜோடி சேர்ந்த அழகு..
யுத்தங்களின் காரணங்கள் எதுவாயிருப்பினும் பின் விளைவுகள் ஒன்றே..
அன்பு சுந்தர்ஜி-
வணக்கம்.. உங்கள் வலைப்பூவில் நுழைந்தேன்.
களரி வாசித்தேன்...
கவிதை அருமை...அருமை....
அதைப் படித்தவுடன் கிளர்ந்தெழுந்த சில வரிகளைக் கீழே கொடுத்திருக்கிறேன்....
போர்கள் மனிதர்கள் தங்களை நேரடியாக அழித்துக் கொள்வது போதாதென
அடுத்தவர்களின் தயவை, தங்களை அழிப்பதற்காக எதிர்பார்த்து உருவாக்கிக் கொண்டது.
போர்களுக்குக் காரணங்கள் இருக்கலாம், இல்லாது ஒழியலாம்
போர்கள் கூடாதென சொல்வதற்கு ஒரு காரணம் போதுமானது
யாருக்கும் அடுத்த யாரையும் கொல்லும் உரிமை கிடையாது.
அடுத்தவர் சாவில் இன்புறும் பிறவி மனிதத்தில் சேர்த்தி கிடையாது.
அடுத்தவர் சாவின் தேதி குறிக்கவோ, அதில் தமது சாவையும் உள்ளடக்கிய அபாயத்தை வீரம் என்று கருதவோ
ஒரு நாகரிகம் இங்கே தேவைப்படவில்லை
போர்களை உருவாக்கியவர்கள்
கதாநாயகர்களைப் பற்றிப் பேசினார்கள்
களத்தில் பேரே தெரியாமல்
அசட்டு விசுவாசத்துடன்
அல்லது அரைக்காசு சம்பளத்துடன் (அரண்மனை வேலை..)
வரலாறு அற்று மரித்துப் போகும் எந்தப் பாமரன் குறித்தும் பேசியதில்லை
அப்போதும் சரி இப்போதும் சரி.
போரில் இப்போது வெல்பவர்கள்
எதிர்காலத்திலும் வெல்ல வேண்டிய நிர்பந்த அச்சுறுத்தலோடு வாழ்கின்றனர்
தற்போது தோற்றவர்கள்
அடுத்த சந்தர்ப்பத்தின் நாளுக்காகத் தயாராகிக் கொண்டிருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்
போரைத் தொடங்க மட்டுமே முடியும்
அதை முடிப்பது
ஒரு போதும் தொடங்கியவர்களது கைகளில் இருப்பதில்லை
வன்மத்தை ஊட்டி இழுக்கிறது போர்
பேதங்களைக் காட்டி அழைக்கிறது யுத்தம்
பெருஞ்சிரிப்பு ஒன்றின் உக்கிரத்தில்
அறிவிக்கப்படும் போர்க்களத்தின்
ஒவ்வொரு முனையிலும்
ஓலங்களும், ஒப்பாரிகளும், நிரந்தர அழுகைகளும்
தணிக்கை செய்யப்பட்டுவிடுகின்றன வரலாறுகளில்.
போரின் வெற்றி ஊர்வலத்திலும்
ஆரோகணித்தவனை இழந்த குதிரைகளும்
நண்பர்களைப் பறிகொடுத்த காலாட்களும்
இடம்பெறும் தவிர்க்க முடியாமல்....
எஸ் வி வேணுகோபாலன்
தங்கள் கவிதையும் சரி திரு. S.V. வேணுகோபாலன் அவர்களின் வார்த்தைகளும் சரி அருமை!
யோசிக்க வைத்ததற்கு நன்றி.
அன்பு சுந்தர்ஜி,
ரொம்பவே அழகான கவிதை இது... கடைசி வரிகள் அற்புதம்... வேணுகோபால் அவர்களின் பின்னூட்டமும் அருமை...
இது போல பிறரை எழுத வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய கவிதை... எனக்கும் கைகள் நம நமவென இருக்கிறது...
அன்புடன்
ராகவன்
கருத்துரையிடுக