6.2.12

நூறு வார்த்தைகளுக்கு மிகாமல்.

தெருவில்
பள்ளம் தோண்டி
தன் தோழர்களுடன்
கிட்டிப்புள்
ஆடிக்கொண்டிருந்தான்
பெரியவன்.

ஆற்றங்கரையில்
விறைக்கும் நீரில்
நீந்திக் குளித்ததோடு
தன் மகனையும்
திக்குமுக்காட்டிக்
குளிக்க வைத்தார்
அப்பா.

புளிக்கோதும்
வற்றலின் காம்பும் ஆய்ந்து
வீடெல்லாம் தும்மவிட்டு
பல்லாங்குழி
ஆடிக்கொண்டிருந்தாள்
பாட்டி.

துணிப்பைகள் 
ஒருகையிலும்
எண்ணைத் தூக்குவாளி
மற்றொரு கையிலும்
மாட்டி சைக்கிள்
ஓட்டிவந்தார்
தாத்தா.

சுற்றிலும் குழந்தைகள்
அமர்ந்திருக்க
கற்சட்டியில் பிசைந்த
பழைய சோற்றைக்
கைகளில் இட்டாள்
பெரியத்தை.

காட்சிப்பிழை 
(அல்லது)
கடந்த காலம்
குறித்து 
நூறு வார்த்தைகளுக்குள்
எழுதும்படிக்
கேட்டுக்கொண்ட
கவிதை
இத்துடன்
நிறைவடைந்தது.

2 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

முற்றிலும் காட்சிப் பிழை என்று கருத முடியாது. காட்சிப் பிழையாக கடந்த கால எல்லைக்குள் மறைந்து கொண்டு வருகிறது என்று வேண்டுமானால் கொள்ளலாம். வாழ்வில் சில பரிவின் இசைகள் மறைந்து வருதலின் ஏக்கம் கவிதையில் தெரிகிறது சுந்தர்ஜி.

சக்தி சொன்னது…

ஏன் நினைவுப்பூக்களை உலுக்கிவிட்டீர்கள் சுந்தர்ஜி
மூச்சுத் திணறுகிறது....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...