22.5.12

கலியுகத்தின் எதிர்காலம்-I

























”தக்ஷிணாயனம்” நாவல் எழுதத் தொடங்கியவுடனேயே எனக்கு நீண்ட நாட்களாக நட்பிலிருக்கும் தஞ்சாவூர்க்கவிராயர், நா.விச்வநாதன், காஸ்யபன், எஸ்.வி.வேணுகோபாலன் மற்றும் ஹரணி ஆகியோர் கொடுத்த சாதகமான உற்சாகமான அங்கீகாரம் என்னை மேலும் எழுத வைப்பதற்குப் பதிலாக நிறுத்தவைத்தது.

எழுதுவதை நிறுத்திவிட்டு வால்மீகி ராமாயணம்,8300 பக்கங்களில் 10 பாகங்களில் நந்தலா வெளியிட்டுள்ள வ்யாசரின் முழுமையான மஹாபாரதம் , மனுஸ்ம்ருதி, கௌடில்யரின் அர்த்த சாஸ்த்ரம், சரபோஜியின் சரித்ரம், தனிப்பாடல் திரட்டு, சாந்தோக்யோபநிஷத், ஸெல்மா லாகர்லோஃபின் க.நா.சு. மொழிபெயர்த்த ”மதகுரு” இவற்றையெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறேன்.

எத்தனை அற்புதமான இதிகாசங்கள் நம்முடையவை! எத்தனை எத்தனை தத்துவ விசாரங்கள்! எத்தனை எத்தனை நீதிக்கதைகள்! மூழ்கினாலும் தேடிப்பிடிக்க முடியாத முத்துக்கள் இவை.

ஒரு கட்டத்துக்குப் பின் மீண்டும் எழுதலாம் என்ற உந்துதல் கிடைக்கும் வரை எதையும் எழுதப் போவதில்லை என எனக்குள் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக உறங்கும் நேரம் தவிர்த்து கிடைக்கும் நேரமெல்லாம் இப்படிப் படித்து வெகுகாலமாயிற்று. இழந்திருந்த வாசிப்பின் சுகத்தை மீட்டெடுத்து விட்டேன்.

மஹாபாரதத்தின் மார்க்கண்டேய சமஸ்யா பருவத்தைக் கடக்கும் போது கலியுகத்தைப் பற்றிய செய்திகளைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.

வைசம்பாயனரும், யுதிஷ்டிரரும் கலியுக மனிதர்களின் பராக்கிரமங்கள் பற்றியும், அவர்களுடைய ஆகாரம், பொழுதுபோக்கு, ஆயுள், ஆடை-அணிகள் பற்றியும், ப்ரளய காலம் பற்றியும் அதன் பின் துவங்கயிருக்கிற சத்ய யுகம் பற்றியும் அறிய விரும்ப அவர்களுக்கு மார்க்கண்டேய மஹரிஷி கூறுகிறார்.

1. ஒரு பசுவின் வடிவில் திகழும் தர்மதேவதை சத்ய யுகத்தில் கபடமோ, ஏமாற்றமோ, டம்பமோ அற்று நான்கு கால்களோடும், த்ரேதா யுகத்தில் மூன்று கால்களோடும், த்வாபர யுகத்தில் இரண்டு கால்களோடும், கலியுகத்தில் ஒரே காலோடும் தள்ளாடிக்கொண்டிருக்கும்.

2. ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் ஆயுளும், வீரியமும், அறிவும், பலமும், தேஜஸ்ஸும் வரிசையாகக் குறைந்துகொண்டே செல்லும்.

3. மக்கள் அனைவரும் கபட தர்மப்படி நடப்பார்கள். தர்மமெனும் வலையை விரித்து மற்றவர்களை ஏமாற்றிக்கொண்டிருப்பார்கள். தன்னைப் பண்டிதன் என்று கருதும் மக்கள் சத்யத்தைத் துறந்துவிடுவார்கள்.

4. சத்யம் அழிவதால் அவர்களுடைய ஆயுள் குறையும். ஆயுள் குறைவதால் தன் வாழ்க்கை நிர்வாகத்திற்குத் தகுந்த வித்தையைப் பெற வாய்ப்பிருக்காது. வித்தையின்றி, இல்லாத ஞானத்தால்பேராசை அவர்களை அழுத்திக்கொள்ளும்.

5. லோப, க்ரோத வசப்பட்ட மூட மனிதர்கள் ஆசைகளில் சிக்கி, தங்களுக்குள் பகைமை கொள்வார்கள். ஒருவர் ஒருவரைக் கொல்லும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பார்கள். எல்லா ஜாதியும் ஒன்றாய்க் கலந்து எல்லோரும் சமமாகிவிடுவார்கள்.

6. சணலில் செய்த ஆடைகளை நல்லதென்று கருதுவார்கள்.

7. தான்யங்களில் தினைக்கு மதிப்பிருக்கும்.

8. யுகம் அழியும் சமயம் ஆண்கள் பெண்களோடு மட்டுமே நட்புக் கொள்வார்கள்.

9. பலரும் மீன் மற்றும் மாமிசத்தால் வாழ்க்கையைக் கழிப்பார்கள். பசுக்கள் குறைந்து ஆடுகளின் பாலைக் கறந்து குடிப்பார்கள். விரதம் தரிப்பவர்கள் லோபியாகி விடுவார்கள். ஒருவரை ஒருவர் கொள்ளை இடுவார்கள். கொல்லுவார்கள். யுக முடிவில் அனைத்து மனிதர்களும் நாத்திகர்களாகவும், திருடர்களாகவும் இருப்பார்கள்.

10. நதிக்கரை பூமியைத் தோண்டி தானியங்களை மக்கள் அங்கு விதைப்பார்கள். அதிலும் யுக முடிவின் காரணத்தால் மிகக் குறைந்த பலனையே காண்பார்கள்.

11. கலியுகத்தின் முடிவில் தந்தை மகனின் படுக்கையையும், மகன் தந்தையின் படுக்கையையும் பயன்படுத்துவார்கள். சாப்பிடக் கூடாத பதார்த்தமும் உணவாகக் கருதப்படும்.

12. விரதங்களையும், நியமங்களையும் கடைப்பிடிக்கப்படாது வேதத்தை நிந்திக்கத் தொடங்குவார்கள். வெறும் தர்க்கவாதத்தில் மயங்கி மிகவும் கீழ்த்தரமான காரியங்களில் முய்ற்சி செய்வார்கள். மனிதன் தாழ்ந்த பூமியில் விவசாயம் செய்வான். பால் தரும் பசுக்களை பாரம் சுமக்கும் வேலைக்குப் பயன்படுத்துவான். ஆண்டு முழுவதும் கன்றுகளைக் கூட ஏரில் உழுவான்.

13. தந்தை மகனையும், மகன் தந்தையையும் வதம் செய்யக் கவலைப் பட மாட்டார்கள். தன் புகழுக்காக மக்கள் பெரிதாய் டம்பமடித்துக்கொண்டாலும் சமுதாயத்தில் அவர்கள் நிந்தனைக்குள்ளாக மாட்டார்கள்.

14. மக்கள் தீனமான உதவியற்ற விதவைகளின் சொத்தைக் கூட சுருட்டிக்கொள்வார்கள். அவர்களின் சரீர பலமும், பராக்கிரமும் குறைந்துவிடும்.

(தொடரும்)

4 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

சத்யம் அழிவதால் அவர்களுடைய ஆயுள் குறையும். ஆயுள் குறைவதால் தன் வாழ்க்கை நிர்வாகத்திற்குத் தகுந்த வித்தையைப் பெற வாய்ப்பிருக்காது. வித்தையின்றி, இல்லாத ஞானத்தால்பேராசை அவர்களை அழுத்திக்கொள்ளும்.

நல்முத்துக்களைத் தேடி பிடித்து பகிர்ந்திருக்கிறீர்கள்

விஸ்வநாத் சொன்னது…

என்றோ சொன்ன சொற்கள் - இன்று
எல்லாம் உண்மை;

மோகன்ஜி சொன்னது…

அற்புதம்! இந்த லிஸ்டில் விடுபட்டுப் போனவை:
1. மெகா சீரியல்கள் முடியும் நாளே கலியின் கடைசி நாள்.

2.காகிதம் தின்னும் மாடுகள்.

3. மணம் புரிந்தவனிடம் காதல் இருக்காது. காதல் புரிந்தவனோ மணமுடிக்க மாட்டான்.

4. தீக்குளிக்கக் கூட பெட்ரோல் கிடைக்காது.

சிவகுமாரன் சொன்னது…

அரைகுறையாய் நான் அறிந்த விசயங்கள்.
உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...