29.5.12

5.ப்ரஜோற்பத்தி- தக்ஷிணாயனம்.



ஸந்தப்தாயஸி ஸம்ஸ்திதஸ்ய பயஸோ நாமாபி ந ச்ரூயதே 
முக்தாகாரதயா ததேவ நளினீ பத்ரஸ்திதம் த்ருச்யதே
அந்த்த: ஸாகர சுக்திமத்யபதிதம் தன்மௌக்திகம் ஜாயதே
ப்ராயேணாதம மத்யமோத்தம ஜூஷாம் ஏவம் விதா வ்ருத்தய:

ஒரு துளி நீரை எடுத்து நன்றாகக் காய்ந்த இரும்பின் மீது விட்டால் அத்துளி இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறது. அதே துளி தாமரை இலை மீது முத்துப் போலக் காணப்படுகிறது. அதேபோல அந்தத் துளி நீரானது கடலின் நடுவிலுள்ள சிப்பியில் விழுமானால் அது நிஜமாக முத்தாகவே மாறிவிடுகிறது.

(நீதி சாஸ்த்ரம்)
---------------------------------------------------------------
அன்புள்ள ஸ்ரீ. பத்மநாபனுக்கு-

சமீபத்தில் பாண்டிச்சேரியிலிருந்து திருவனந்தபுரம் திரும்பியபின் நான் உங்களுக்கு எழுதும் இரண்டாவது கடிதம். முதல் கடிதத்தை நேற்று எழுதி முடித்துவிட்டேன். ஆனால் தபாலில் சேர்க்கவில்லை. அதைத் திருத்தி எழுதவும் மனமில்லை. என்னிடமே வைத்துக்கொண்டேன். இதுபோல எல்லோருக்கும் எழுதும் முதல் கடிதங்களுக்கு நேர்வதில்லை எனும்போது உங்களுக்கான இரண்டாவது கடிதம் விசேஷமானதாகிறது. போகட்டும்.

நீங்கள் படும் மனவேதனையை நானும் எல்லா நேரமும் சுமந்துதிரிகிறேன். தனிமையாய் நான் இருக்கும் வேளைகளில் உங்கள் துயர் சுடரும் மனமும், அதை வெளிக்காட்டாது முகம் நிறைந்த சிரிப்பும் எல்லோருக்கும் முடிவதில்லை. நம்மிருவருக்குமான தொலைவு உங்களை உடனடியாக உற்சாகப் படுத்தவும் ஆறுதலளிக்கவும் முடியாதும் வைத்திருக்கிறது.

உங்களுடன் என்னைப் பற்றிய சில விவரங்களை நான் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.நீங்கள் அனுபவித்து வரும் துயரத்தை அது சிறிது தணிக்கக் கூடும்.

என் தாயாருக்கு நான் முதல் பிள்ளை. மிகவும் ஊனமான ஒரு பிள்ளை. ஐந்து வயசுக்குப் பின்னால்தான் என்னால் மெதுவே சுவற்றின் துணையோடு நிற்க முடிந்தது. நான் ஊனமாகிப் பிறந்து விட்டதால் என் தாய்க்கு என் மீது அதீதமான வெறுப்பு. ஒரு தாலாட்டைக் கூட நான் கேட்டதில்லை. எப்போதும் வெறுப்பைப் பாலாய்க் குடித்து மேலும் என் கால்கள் சூம்பிப் போயின.

ஒரு நாள் என் தாயின் மூத்த சகோதரியும், அவர் கணவரும் எங்கள் வீட்டுக்கு வந்தர்ர்கள். அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போது, நான் என் அம்மாவின் சகோதரியைப் பின்தொடர்ந்து தவழ்ந்து சென்றேன். திரும்பிப் பார்த்த அவள் என்னைத் தூக்கி முத்தமிட்டு இடுப்பில் உட்கார்த்தி வைத்துக்கொண்டாள். அவளுக்குப் பிறந்த குழந்தைகள் ஐந்து ஆனாலும் அவளுக்குக் குழந்தைகள் கிடையாது.

எல்லோரும் பிறப்பதே இறப்பதற்காக என்றெண்ணிக்கொண்டிருந்த வேளையில் அவை ஐந்தும் இறக்கவே பிறக்க வேண்டிதாயிற்று. அவை தங்கள் அம்மாவைப் பார்ப்பதற்கு முன்னே இறந்துபோய்விட்டன. தனக்கு இனிமேல் குழந்தைகள் பிறக்க வாய்ப்பில்லாததாக அதிகாலை கண்ட ஒரு கனவிலிருந்து தெரியவந்த அதேநாள் அவளுடைய கணவர் இனியும் இறப்பதற்காகவே பிறக்கும் குழந்தைகளால் தான் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் இனியும் குழந்தைகள் உருவாக்கும் முயற்சியைக் கைவிட்டு விட்டதாகவும் தன் மனைவியிடம் தெரிவித்தார்.

அதுமுதல் அவர்களிடம் நானும் என்னிடம் அவர்களும் ஒட்டிக்கொள்ள அவள் எனக்கு இன்னொரு தாயாகவும், அவர் எனக்கு இன்னொரு தந்தையாகவும் ஆனார்கள். சில காலத்துக்குப் பின் அவர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்து போனார்கள். ஆனால் அவர்கள் உயிருடன் இருந்த நாள் வரையிலும் என் ஆன்மாவுக்குக் கிடைத்த பரிவை பத்திரமாக மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறேன்.

என்னுடைய தந்தை என் தாயின் கடைசித் தங்கைக்கு திருமணம் ஆகாமலே போய்விடவே அவளை மணந்து கொண்டார்.பத்து வருடங்களுக்குப் பின் ஒருமுறை மக்கள்தொகை கணக்குகளுக்காக வீடு தேடிவந்த ஒரு அதிகாரி சிறிது குழப்பமுறும் அளவுக்கு என் சித்திக்கு என் அப்பாவின் மூலமாக ஐந்து பெண் குழந்தைகளும், இரு ஆண் குழந்தைகளும் பிறந்தன. என் தாய் வீடெங்கும் குழந்தைகளாய் நிரம்பி வழிந்ததைக் காணச் சகியாமல் போய்ச்சேர்ந்தாள். நானும் அந்த ஏழு குழந்தைகளுடனும் சேர்ந்தே வளர்ந்தேன். வீடெங்கும் நாய்க்குட்டிகள் போல விதவிதமான வடிவங்களில் குழந்தைகள் திரிந்தன.

எனது தந்தை ஓரளவு வசதி படைத்தவர். அவர் இறந்தபின் அவருடைய சொத்து அவருடைய மனைவிக்கும் அவருடைய குழந்தைகளுக்குமாக பாகப் பிரிவினை செய்யப்பட்டது. எல்லோரும் ஒருமனதாய்த் தீர்மானித்து ஒரு லட்ச ரூபாயை எனக்குக் கொடுக்கலாம் என முடிவெடுத்தார்கள். ஒரு லட்ச ரூபாயை மொத்தமாகப் பார்த்தபோது எனக்கு எல்லோருக்கும் உண்டாவது போல் மலைப்பு உண்டாகவில்லை. ஆனால் ரூபாய் நோட்டுக்களை எடுத்து முகர்ந்து பார்க்கப் பிடித்திருந்தது.

எனக்குத் தெரிவிக்காமலே எனக்காய் ஒதுக்கப்பட்ட அந்தச் சொத்து என் சித்தியின் மூலம் பிறந்த என் சகோதரி சகோதரர்களுக்கு கண்களை உறுத்துவதாக இருந்தது. சகோதரி கணவர்களின் கண்கள் விஷப் பாம்பின் கண்களை மிஞ்சுவதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக என் சித்தியை அவளின் பிள்ளைகள் சொத்து கைக்கு வந்தபின் துரத்திவிட்டார்கள். இதை அறிந்த நான் -அப்போது 35 கி.மீ.தொலைவில் தனியே யாரின் துணையுமின்றி திருவனந்தபுரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன்- என் சித்தி தெருவில் நிராதரவாக விடப்பட்டதை அறிந்து ஒரு மாட்டு வண்டியைப் பூட்டிக்கொண்டு அவளைச் சந்திக்கப் புறப்பட்டேன்.

தெருவில் தன் நிலையால் நிலைகுலைந்துபோயிருந்த என் சித்தி தன் உடைகள் கலைந்துபோயிருப்பது கூடத் தெரியாமல் ஒரு பெட்டியைத் தலைக்கு வைத்தபடி உறங்கிக்கொண்டிருந்தாள் ஊருக்கு வெளியிலிருந்த ஒரு கோயில் மடத்தில். எனக்கே அவளை அடையாளம் காணச் சிறிது நேரம் பிடித்தது. வண்டியை அவளருகே நிறுத்தி தவழ்ந்து சென்று அவளை உலுக்கினேன்.

சற்று நேரத்துக்குப் பிறகு எழுந்த அவள் என்னைப் பார்த்து சிறிது நேரம் உட்கார்ந்திருந்தாள். பிறகு சிரிக்க ஆரம்பித்தாள். ஒரு பெட்டிக்குள் வைத்திருந்த பணக்கட்டுக்களில் சில கட்டுகள் அவளைத் தெருவுக்கும், சில கட்டுகள் அவளை என்னுடைய வீட்டுக்கும் துரத்தும் என்று நினைக்கவில்லை என்று மெதுவாகச் சொன்னாள். பக்கத்திலிருந்த வீட்டிலிருந்து ஒரு சொம்பு தண்ணீரை வாங்கி அவளுக்குக் குடிக்கக் கொடுத்தேன். மிச்சமிருந்த நீரில் அவள் முகத்தைக் கழுவச் செய்தேன்.

தெருமக்கள் தங்களுக்குள் ”இந்தப்பிள்ளை தன் அம்மாவின் அந்திம காலத்தில் எப்படிப் பராமரிக்கப் போகிறதோ?” என்று பேசிக்கொள்ள மாடுகளின் ஓய்வைக் கலைத்து வண்டியைப் பூட்ட சித்தியை வண்டியில் ஏற்ற சிறிது சிரமப் பட வேண்டியிருந்தது. நானும் பெரும் பிரயத்தனத்தோடு வண்டியில் தாவி ஏறிக்கொண்டேன்.

காளைகள் என் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கின.என் சித்தி வீட்டுக்கு வந்த பின்னும் எப்போதும் சிந்தனை வயப்பட்டவளாகவே இருந்தாள். அவளுக்கும் சேர்த்து நான் சமைக்கக் கற்றுக்கொண்டிருந்தேன். எப்போதாவது என்னுடன் பேசும் போது காலை உபயோகித்து கொஞ்சம் நடந்து பார்க்கச் சொல்வாள். என்னால் இனிமேல் நடப்பது சாத்தியமில்லை என்று சொல்லும் பதிலைக்கூட கவனிக்காமல் வாசல் புறம் போய் உட்கார்ந்து கொள்வாள்.

அவளை நான் நன்றாக கவனித்துக் கொள்வதாகவே தெருவில் இருந்தவர்கள் என் காதுபடப் பேசிக்கொண்டார்கள். அவளின் எண்பத்தாறு வயது வரை அவள் வாழ்ந்தாள். ஒருநாள் மிகுந்த சோர்வுடன் மூச்சு விடுவதற்கு சிரமப் பட்டபோது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.

டாக்டர் அவளைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு ஊசி போட்டார். ஊசிக்குப் பின் சற்று முன்னேற்றம் தென்பட்டதாக செவிலியர்கள் சொன்னார்கள். சூடாக காஃபி வேண்டுமென்று கேட்க காஃபி வாங்கிக்கொடுத்தேன். காஃபி சூடாக-நன்றாக இருப்பதாகச் சொன்னவள் தூக்கம் வருகிறதென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். உறக்கத்திலேயே அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் உயிர் பிரிந்ததை என்னால் பார்க்க முடிந்தது..

அவளின் ஈமச்சடங்குகளை எல்லாம் நானே செய்துமுடித்தேன். தகவல் தெரிவித்தும் அவளின் மகன்களோ மகள்களோ யாரும் வரவிரும்பவில்லை. அவள் தன்னுடன் வைத்திருந்த பெட்டியைத் திறந்து பார்த்தேன். பெட்டி நிரம்பப் பணமிருந்தது. எவ்வளவோ மன ரீதியிலும் உடல் ரீதியிலும் துயரை அனுபவித்த எனக்குக் கடவுளின் கருணைதான் இந்த உதவி என நினைத்துக்கொண்டேன்.

ஊனமான பிறவியாய்ப் பிறந்திருந்த நான் மெதுமெதுவே எனக்கு மிகவும் பிடித்த இட்லி வியாபாரம் செய்யத் துவங்கினேன். சிறிய அளவில் தொடங்கி ஒரு குறுகிய காலத்தில் ஒரு நல்ல வசதியான நிலையை அடைந்தேன். எல்லாவற்றிற்கும் கடவுளின் கிருபைதான் காரணம் என்று யார் கேட்டாலும் என்னால் சொல்லமுடிந்தது.

ஆனால் இப்போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உருவ வழிபாட்டில் உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும் காற்றைப் போல கடவுள் வியாபித்திருப்பதையும் அதன் தொடர்ச்சியாக கடவுளை எனக்குள்ளேயே உணர்வதாயும் இருக்கிறது ஒவ்வொரு நாளும்.

ஏதோ ஒரு சக்தி அல்லது ஒளிமயமான நிழல் என் வாழ்க்கையில் குறுக்கிட்டு அடிக்கடி வழிநடத்துகிறதாய் உணர்கிறேன். என்னைக் குறித்து மற்றவர்கள் செய்த கெடுதல்களெல்லாம் எனக்கான வரப்ரசாதங்களாகவே மாறியது. போன வருடம்தான் இன்னுமொரு கிளையைத் தொடங்கினேன் .

என் கடிதம் மிக நீளமாயிருந்தாலும் அது தற்போது நீங்கள் அனுபவித்து வரும் மனவேதனைக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும் என்ற நம்பிக்கையே என்னை இன்னும் தொடர வைக்கிறது. இக்கடிதத்தை நீங்கள் கவனமாகப் படித்துக்கொண்டு வருகிறீர்கள் என நம்புகிறேன். ஒரு சமீப கால அநுபவத்தையும் நான் உங்களிடத்தில் சொல்ல வேண்டும்.

எண்பத்தைந்து வயதான ஒருவர் நோயின் வசம் சொல்லமுடியாத துன்பத்தை அடைந்திருந்தார். அவருடைய சக்தியெல்லாம் குறைந்துகொண்டே வந்தது. கடுங்குளிரின் பிடியில் அகப்பட்டவரைப் போல இந்தச் சித்திரையின் கடும் வெயிலிலும் அவர் நடுங்கியபடி இருந்தார்.

அவரின் படுக்கைக்குக் கீழே கதகதப்புக்காக கோணிச் சாக்குகளை நாலைந்து அடுக்குகளாக விரித்து படுக்கை போட்டிருந்தார்கள். தகவல் தெரிந்தும் சவூதியிலிருக்கும் அவர் மகன் ஒரு கம்பளி கூட வாங்கி அனுப்பவில்லை.

அவர் ஒருவிதத்தில் எனக்கு தூரத்து உறவினர். நான் என்னிடமிருந்த நல்ல கம்பளிப் போர்வை ஒன்றை எடுத்துவைக்கும்படி என் சிப்பந்தியிடம் சொல்லி வைத்திருந்தேன். அவரும் அதைக் கட்டித்தர என் மேஜையின் பக்கத்திலிருந்த அலமாரியில் கண்ணில் படும்படி வைத்திருந்தேன்.

சில வாரங்களாக அது கொண்டுசெல்லப்படாமல் அங்கேயே இருப்பதைக் கண்ட சிப்பந்தி நான் மறந்துவிட்டேனோ என நினைத்து என்னிடம் அது யாருக்குக் கொடுக்கவேண்டியது என கேட்க நானும் விபரத்தைக் கூறினேன். பின் ஏன் அவருக்குக் கொண்டுபோய் கொடுக்கவில்லை என்று கேட்க நான் கொண்டு போய்க்கொடுத்தால் அடுத்தநாளே அவருடைய ஆன்மா அவரை விட்டுப் பிரிந்துவிடும் என்றேன். 

மனதில் ஏதோ அறிகுறிகள் தென்பட, போன வாரம் ஒருநாள் மாலையில் அவருடைய வீட்டுக்குப் போர்வையை எடுத்துக்கொண்டு போனேன். அவர் மனைவியிடம் இன்னமும் நடுங்கிக்கொண்டிருந்த அவர் மேல் அந்தப் போர்வையைப் போர்த்திவிடும்படியும், அவரை இனி எழுப்பவேண்டாம் என்றும் சொல்லிவிட்டு ஊருக்கு வந்துவிட்டேன். மறுநாள் காலையே அவர் இறந்துவிட்டதாகத் தந்தி வந்து சேர்ந்தது.

நிற்க. பாண்டிச்சேரி எப்போதும் என் மனதிலேயே இருக்கிறது. பாண்டிச்சேரியிலேயே வாழ்ந்து இறக்கவேண்டும் என்ற என் ஆசையை அங்கு வந்திருந்தபோது ராஜவேலுவிடமும், மார்த்தாண்டத்திடமும் கடிதம் மூலமாகத் தெரிவித்திருக்கிறேன். ஆனால் இது நடக்கிற காரியமில்லை.

ஆகவே ஒரு ஜாடி நிறைய பாண்டிச்சேரியில் சேகரித்த மண்ணையும், அதன் சமுத்திரத்திலிருந்து காய்ச்சப்பட்ட உப்பையும் என் நண்பர்கள் எனக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அதை நான் தினமும் வணங்குவேன். நான் மரணித்தபிறகு என் கல்லறை மேல் அந்த மண்ணும் உப்பும் தூவப்படவேண்டும்.

இது இப்படியிருக்க, உங்கள் துன்பத்தைக் கடவுள்தான் போக்கமுடியுமெனவும், எதற்கும் கவலைப்படவேண்டாமெனவும் கூற விரும்புகிறேன். பாரஞ்சுமப்பவர்களைப் பற்றி ஜீஸஸ் சொன்ன வேத வாக்கியம் எனக்கு முழுமையாய் நினைவில் இல்லை. ஆனால் முடியுமானால் ஏசுவின் மலைப் ப்ரசங்கத்தை வாசிக்கவும்.

ஏதாவது ஒரு காரியம் நல்லவிதமாக நடக்கவேண்டுமென்று விரும்புகிறேன். நீங்கள் இன்னும் பலகாத தூரம் நடக்க வேண்டும் - திலக மகரிஷியும், ஸ்ரீ அரவிந்த கோஷும் விட்ட இடத்திலிருந்து மோகன்தாஸ் காந்தி- சுதந்திரத்துக்காகக் கடந்து கொண்டிருக்கும் தொலைவு போல.

துயரை எதிர்த்துப் போராடினால் அது மறைந்துவிடும். அதை நான் அனுபவபூர்வமாய் உணர்ந்திருக்கிறேன்.

மற்றபடி வேறு எழுத எதுவும் தோன்றவில்லை.

வேணும் க்ஷேமம்.

இப்படிக்கு,
விதேயன்,
S.ராமச்சந்திரன்.
21/02/1932

(தொடரும்)

11 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

முழுவதும் நிறுத்தி நிதானமாக ரஸித்துப்படித்தேன்.

80 ஆண்டுகளுக்கும் முன்பு எழுதப்பட்டுள்ள மிகவும் சுவாரஸ்யமான நல்லதொரு கடிதம்.

அந்தக்கால மனிதர்களைப் பற்றி நன்கு அறிய முடிகிறது.

பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இன்று வலைச்சரத்தில் உங்களின் இந்தப்படைப்பு, திரு அப்பாதுரை அவர்களால் புகழ்ந்து பேசப்பட்டுள்ளது.

அதற்கும் என் அன்பான வாழ்த்துகள்.

சே. குமார் சொன்னது…

இன்று வலைச்சரத்தில் உங்களின் இந்தப்படைப்பு, திரு அப்பாதுரை அவர்களால் புகழ்ந்து பேசப்பட்டுள்ளது.

அதற்கும் என் அன்பான வாழ்த்துகள்.



ஐயா சொன்னது போல் அப்பாத்துரை அவர்கள் சொல்லியவிதம் அருமை. அதே இந்தக் கட்டுரை வாசிக்கும் போதும் மனதுக்குள் வந்து அமர்கிறது...

RVS சொன்னது…

ஜி! ரொம்ப நாளுக்கப்புறம் இந்தப் பக்கம் வருகிறேன். கொஞ்சநாட்களாக முகப்புத்தக மோகத்திலிருந்தேன். அடடா! தங்களது எழுத்துக்களில் அற்புதமான ஒரு கதை... இல்லை.. கடிதம்... இல்லை காவியம்...

வேணும்,
ஆர்.வி.எஸ்.

மோகன்ஜி சொன்னது…

அட பிரம்ம ராக்ஷசா!!

இன்னமும் கூட இரண்டு முறை படிப்பேன். புதிய கதவுகள் சில திறக்கும் போலுள்ளது. அன்பு.

சுந்தர்ஜி சொன்னது…

ரொம்ப சந்தோஷம் வை.கோ. சார்.

நீண்ட இடைவெளிக்கப்புறம் இன்னிலேருந்து பின்னூட்டத்துக்குப் பின்னூட்டம் இட முடிகிறது. இனி இந்த ஒழுங்கைக் காப்பாற்ற நினைக்கிறேன்.

நீங்க சொன்னது போல தக்ஷிணாயனம் நாவலின் ஒரு அத்யாயத்தை 80 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கடிதத்தின் தொனியில் எழுத நினைத்தேன்.

உங்கள் பதிலில் கிடைத்த த்ருப்தி என்னைத் த்ருப்திப் படுத்துகிறது.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி சே.குமார்.

இதுக்கு முன்னாடியே போன வருஷத்துல என் ப்ளாக்கில் உங்களைப் பார்த்ததாய் ஒரு நினைவு.

வலைச் சரத்தின் மூலம் இங்கு உங்களை வரவழித்த அப்பாதுரைக்கு நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

அப்புறம் குமார். சொல்ல விடுபட்டுவிட்டது.நாவலுக்கு ஒரு புது உத்தியாய் நான் ஒரு முயற்சியில் இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் போது முந்தைய மூன்று அத்யாயங்களை வாசிக்கவும்.

சுந்தர்ஜி சொன்னது…

ஹாய் ஆர்.வி.எஸ்.

எத்தனை நாளாயிற்று நாம் பேசிக்கொண்டு?

எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை அந்த மொகப்பொஸ்தக ஆர்.வி.எஸ்ஸை.

முன்னமேயே நான் பலதடவை சொல்லிவிட்டேன் உம்ம எழுத்தின் வீச்சு சேதாரப்படும் என.

பொஸ்தகத்திலிருந்து பூவுக்குத் திரும்பிவந்து கலக்கும் ஓய்.

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

நாலாவிதமாய் தக்ஷிணாயனத்தை ரசித்தமைக்கும் ஒரு பெஸல் தேங்ஸ் ஆர்.வி.எஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

ஆயிரம் சொல்லும் குரு.

உங்க கையால குட்டு வாங்கிக்கற சுகம். ஹா!அது தனி வரம்.

நீங்க ரெண்டு மூணு தரம் வாசிக்கறது என் பாக்யம்.

நேரம் வாய்த்தால் முந்தின மூணு அத்யாயங்களையும் படியுங்கோ ப்ளீஸ்.

RVS சொன்னது…

//
பொஸ்தகத்திலிருந்து பூவுக்குத் திரும்பிவந்து //

அது.....சுந்தர்ஜி!!!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...