முதன் முதலாய் வள்ளலார் பரிச்சயமானது எனது ஆறாம் வகுப்பில்.
தமிழ் ஆசிரியர், சேத்தூர் சிங்கம் என்ற புனைபெயரோடும், பெரிய கடா மீசையோடும் பயமுறுத்திய திரு. நச்சாடலிங்கத்தின் வகுப்பு.
வள்ளலார் பிறந்த ஊரை மருதூர். அதை ’ர’ வராத சின்னச்சாமியிடம் கேட்டு, அவனும் விடாது ’மதுதூர்’ என்றே சொல்ல வெகுண்டு, அவன் காது மடலைத் திருகி, நாலு மொத்து மொத்தி வள்ளலாரின் அறிமுகத்தைத் துவக்கினார்.
வள்ளலாருக்கு ஏற்பற்ற முரணான வழியில் அவரின் அறிமுகம்.
வள்ளலாரின் வாழ்க்கை ஏராளமான ஆச்சர்யங்களும், புதிர்களும் நிறைந்த அளவிற்கு நேர் எதிரான எளிமையோடும், தெளிவோடும் அவரின் தத்துவங்களும், போதனைகளும்.
இன்றைக்கு வள்ளலாரின் சில அற்புதங்களும். சில கட்டளைகளும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோடைகாலத்தில் தரும சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.
ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.
என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.
அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள்.
வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்!
புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வள்ளலார் தரும சாலையின் வெளியே உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.
இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது.
இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் பிள்ளை என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.
ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ்வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.
உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகம் பிள்ளையை எழுப்பி, "இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!" என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.
அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.
வள்ளலார் கரம் பட்டதும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கேள்வி: மரம், செடி, கொடி ஆகிய தாவரங்களும் உயிர்கள்தானே! அவற்றை ஆகாரமாக உட்கொள்வதும், உயிர்க்கொலை போலத்தானே?
வள்ளலாரின் பதில்: தாவரங்களும் உயிர்கள்தான். ஆனால், அவை தோன்றும் வித்துகள் வெறும் ஜடங்களே.
அவற்றை நாமே விதைத்து, உயிரூட்ட முடியும். அப்படி நாமே உயிரூட்டிய அந்த உயிர்களைக் கொல்லாமல், அந்தத் தாவரங்களில் உயிரின்றி, உயிர் தோன்றுவதற்குத் தகுதியுள்ள ஜடங்களான வித்துகளையும், காய்களையும், கனிகளையும், பூக்களையும், கிழங்குகளையும், தழைகளையுமே ஆகாரமாகக் கொள்கிறோம். தாவரங்களை வேருடன் பிடுங்கி ஆகாரமாகக் கொள்வதில்லை.
வளர்ந்த தாவரங்களின் விதைகள், காய், கனிகள் ஆகியவற்றைப் பறிக்கும்போது, மனிதர்களின் நகம், முடி ஆகியவற்றை அகற்றும்போதும் துன்பம் உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் துன்பம் உண்டாவதில்லை.
தவிர, மனிதர்களுக்கு மட்டுமே உரிய மனம் தாவரங்களுக்குக் கிடையாது என்பதால், அது உயிர்க்கொலையும் அல்ல; துன்பம் உண்டுபண்ணுவதும் அல்ல. எனவே, இது ஜீவகாருண்ய விரோதமாகாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சன்மார்க்க சங்கத்தார்களுக்கு வள்ளலார் 18 தருணங்களில் கட்டளைகள் பிறப்பித்திருக்கிறார். அவற்றில் ஒரு மாதிரிக்காக மூன்று வித்யாசமான கட்டளைகள் உங்கள் பார்வைக்கு. நூற்றி இருபது வருஷங்கள் தொலைவில் மிக நெருக்கமாக இருக்கிறது வள்ளலாரின் உரைநடை மொழிப்ரயோகம்.
26.10.1871ல் அன்பர்களுக்கு இட்ட தருமச் சாலைக் கட்டளை:
உ
திருச்சிற்றம்பலம்
அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடனறிவிப்பது.
ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள். என்னா லுங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னுங் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில் வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள்.
திருச்சிற்றம்பலம்.
09.03.1872ல் தருமச் சாலையிலுள்ளவர்களுக்கு இட்ட ஒழுக்கக் கட்டளை:
உ
சிவமயம்
அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு,
இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப் புண்டாகிறது. அந்தச் சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையிலிருக்கிறவர்க ளெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்.
பிரஜோற்பத்தி
மாசி மீ உஅ
சன்மார்க்க சங்கத்தாருக்கு வள்ளலார் இட்ட இறுதிக் கட்டளை:
“நான் உள்ளே பத்துப் பதினைந்து தின மிருக்கப்போகிறேன். பார்த்து அவநம்பிக்கையடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார்.”
ஸ்ரீமுக வருஷம் தை மாதம் 19ஆம் நாள், புனர்பூசமும், பூசமும் கூடும் நன்னாளில் 1874-ஆம் வருடம் ஜனவரி 30ம் தேதி வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்களான கல்பட்டு ஐயாவும், தொழுவூர் வேலாயுதமும் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.
11 கருத்துகள்:
ஜீவகாருண்யம் பற்றி வள்ளலாரின் ஆழ்ந்த கருத்துகள் நிறைவளித்தது.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
சில நம்பிக்கைகளை ஒரு வட்டத்துக்குள் வைக்க வேண்டியிருக்கிறது. வள்ளலார் பற்றிய அறியா வட்டம்.
அருட்பெரும் ஜோதி! அருட்பெரும் ஜோதி! தனிப் பெரும் கருணை!அருட்பெரும் ஜோதி!!
"எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி வேறொன்றறியேன் பராபரமே" என்றவரும் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவருமான வள்ளலார்தான் வள்ளல்!!
அவரருகில் இருப்பது எம் பேறு!
பல விஷயங்கள் தெரிந்துகொள்ள இந்த வயது போதாது. பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.
நல்லதொரு நாளில் சிறப்பான பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல... தொடருங்கள்...
intha nachchaadalingam sir-yenakkum theriyumo???
neenga thalavaaipurathil-aa padicheengaa??
:)
ஆமாம் ரசிகை.
தளவாய்புரம் பு.மூ.மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் ஆறாவது வகுப்பு மட்டும் கற்க நேர்ந்தது.
மறக்க முடியாத விளையாட்டு மைதானமும், எண்ணிக்கையற்ற மரங்களும் என்னால் மறக்க இயலாதது.
வள்ளலார் பற்றிய செய்திகள் குறைவாய்த்தானிருக்கிறது என்றிருந்தேன்.
இல்லை என்னிடம் தான் தேடுதல் குறை இருந்திருக்கிறது என 'தூங்கா நெருப்பாய்" சுட்டு விட்டீர்கள். அப்ப, நீங்க தான் அந்த "சிங்க" அடைமொழி 'கடா'மீசை கொண்ட ஆசிரியராகிறீர்கள் எனக்கு.
வணக்கம்
அரிய தகவல்கள் , அறிய வேண்டிய தகவல்கள்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
nachchadalinga sir from meenatchiyaapuram...
is it so???
sir oorukku vaanga...
:)
கருத்துரையிடுக